தமிழ்நாட்டில் இன்றைய ஆட்சியின் எதிர்காலம் குறித்து, இரண்டு விதமான கருத்துகள் கூறப்படுகின்றன!

ஒன்று, அனுபவம் அற்ற முதலமைச்சர், அமைச்சர்களிலும் பலர் அனுபவம் அற்றவர்கள், சிலர் குற்றப் பின்னணி உடையவர்கள்! இந்த நிலையில் இந்த ஆட்சி ஆறு மாதம் கூடத் தாங்காது என்பது!

vijay 457இன்னொன்று, முதலமைச்சர் விஜய் மீது தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களும், இளம் பெண்களும் ஒரு விதமான வெறி கொண்ட பற்றுதலோடு இருக்கிறார்கள். எனவே இன்னும் 10, 15 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான் தமிழ்நாட்டில் தொடரும் என்பது!

எண்ணிப் பார்த்தால், இரண்டுமே அவரவர் விருப்பம் சார்ந்த கருத்துகளாகவே இருக்கின்றன!

ஓர் ஆட்சியின் எதிர்காலம் குறித்துக் கணிப்பதற்கு, இரண்டு வாரங்கள் என்பது மிக மிகக் குறுகிய காலம்! இன்னும் சில மாதங்களாவது கழிந்த பிறகுதான், யாரும் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியும்!

இப்போதைக்குப் பிரிந்து வந்த 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நம்பாமல், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருப்பது ஒரு புத்திசாலித்தனம்.

முதலில் அந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு, தங்களுக்கான பெரிய வலிமை என்றும், அவர்களின் ஆதரவு கிடைத்து விட்டதால், இனிமேல் விடுதலைச் சிறுத்தைகள், பொதுவுடமைக் கட்சியினர், முஸ்லிம் லீக் ஆகியோரை நம்பி இருக்க வேண்டியதில்லை என்றும் தவெக முதலில் கருதி இருக்கக்கூடும்! அதனால்தான் அந்த 25 பேரை, முதலமைச்சர் நேரில் பார்த்து, பொன்னாடை எல்லாம் போர்த்தி மகிழ்ந்தார்!

பிறகு அவர்களை நம்புவதில் இருக்கும் ஆபத்து, விஜய் அவர்களுக்குப் புரிந்திருக்கக் கூடும்! பிரிந்து வந்தவர்கள், அந்தக் கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கைக்கும் குறைவாக இருப்பதால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி (Anti-defection law) எந்த நேரமும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கக்கூடும் என்பதை உணர்ந்து இருப்பார்!

இனிமேல், தேர்தல் பரப்புரையில், யாரைத் தீய சக்தி என்று விஜய் குறிப்பிட்டாரோ, அந்தத் தீய சக்தியின் ஆதரவில் வெற்றி பெற்றவர்களை நம்பித்தான் காலத்தை ஓட்ட வேண்டும்! இருப்பினும் அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டது ஒரு விதமான பாதுகாப்பு!

என் போன்றவர்களின் பார்வையில், அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டது, ஆளுங்கட்சிக்கு வெற்றி! விடுதலைச் சிறுத்தைகளுக்கும், முஸ்லிம் லீக் கட்சிக்கும் தோல்வி என்றுதான் கூற வேண்டும்! அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக நாங்கள் வரவில்லை. ஆளுநர் ஆட்சி வர வேண்டாம் என்பதற்காகவே ஆதரவு தந்தோம் என்று கூறியிருந்தால், அது ஒரு தனி மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கும்! எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களிடமும், அய்யா காதர் முகைதீன் அவர்களிடமும் நாம் எதிர்பார்த்தது அந்தத் தலை நிமிர்ந்த தன்மானத்தைத்தான்!

அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த 25 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, மாபெரும் தோல்வியும், அதிர்ச்சியும் கிடைத்துள்ளது என்றே கூறலாம்! (குறிப்பாக, சி.வி.சண்முகம் போன்றோரின் கனவு தகர்த்து சுக்குநூறாக ஆகிவிட்டது என்கின்றனர். சிவிஎஸ் தன் எம்.பி. பதவியை விட்டு விலகி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இப்போது அமைச்சர் கனவும் கலைந்து, எம்எல்ஏ பதவியும் போய்விடும் போலத் தெரிகிறது)

ஆளுங்கட்சியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர், தலைமைச் செயலகத்தில், தன் இருக்கையில் அமர்ந்து, மதிய உணவு உண்ணும் காட்சியில் இருந்து (அது வெறும் Al), அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி, சொத்து மதிப்பு வரையிலான பல பொய்கள் இப்போது வெளியாகி உள்ளன!

மேடைகளில் வீரம் கொப்பளிக்க பேசிய விஜய், முதலமைச்சர் ஆன பிறகு சட்டமன்றத்தில், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஏதும் பேசத் தெரியாதவராக அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம்.

அப்படியானால், மேடையில் அவ்வளவு வீரமாகப் பேசினாரே, அது எப்படி? வேறொன்றுமில்லை, அது "கேமரா, ஆக்சன்" என்பதுதான் எனப் புரிகிறது!

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவிட்ட முதலமைச்சர், பதவி ஏற்றவுடன், 10 லட்சம் கோடி கடனா இருக்கிறது என்று கேட்பது, அப்பாவித்தனம் இல்லை, அறியாமையின் வெளிப்பாடு!

அறிவிக்கப்படாத மின்வெட்டு, இன்று பல ஊர்களில் நடைமுறையாகி இருக்கிறது! பல மணி நேரம் மக்கள் இருளில் தவிக்கின்றனர்!

இவற்றை எல்லாம் சமாளிப்பதற்கு, இந்த அமைச்சரவையில்தான் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் எண்ணிக்கை கூடுதல், நான்கு பெண்கள் அமைச்சர்கள் ஆகியிருக்கின்றனர் என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறார்கள்!

இவற்றை நாமும் பாராட்டுகிறோம். ஆனால் இவை மட்டுமே ஒரு நல்லாட்சிக்குப் போதுமானவை அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!

பிரதமர் மோடி போன்றவர்களும், இது போன்ற வித்தைகளை ஏற்கனவே செய்து காட்டி இருக்கிறார்கள்! 2019 மக்களவைத் தேர்தலில், பாஜகவின் 33 எம்பிகளில் -

113 பேர் OBC

53 பேர் SC

43 பேர் ST

பிரிவைச் சேர்ந்தவர்கள்! அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவில் எம்.பி.க்களில் 68.9% அவர்கள் இருந்தனர். ஆனால் நடைமுறையில் அவருடைய ஆட்சி என்னவாக இருக்கிறது, யாருடையதாக இருக்கிறது?

இவற்றையெல்லாம் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். எண்ணிக்கை என்பது வெறும் அடையாளம் மட்டுமே! அந்த எண்ணிக்கையைத் தாண்டி ஓர் அரசு யாருக்காகச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே, அது பற்றிய மதிப்பு ஏற்படும்!

இன்னொன்றையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்! முதலமைச்சர் பேசா மடந்தையாக இருப்பதும், ஆதவ் அர்ஜுனா ஒரு நிழல் முதலமைச்சரைப் போலச் செயல்படுவதும், அரசுக்கும், நாட்டுக்கும் நல்லதில்லை! ஆனால் அவ்வளவு பெரிய அறிவாளிக்கு, திருமாவளவன் தோள் மீது கை போட்டுக் கொள்ளத் தெரிகிறதே தவிர, அறநிலையத்துறை அமைச்சர் எந்த ஜாதி என்று தெரியவில்லையாம்! 60 நாள்களில் ஊழலை ஒட்டுமொத்தமாக ஒளித்து விடுவாராம்!

அவர் உருவம் மட்டுமில்லை, அவர் பேசும் தொனியிலும், ஆணவம் உயரமாகத்தான் இருக்கிறது!

அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறவர்கள் யார் என்று, நம் ஊர்ப் பழமொழி நமக்குச் சொல்லி இருக்கிறது!

மக்கள் வாக்களித்திருப்பது ஆட்சி செய்வதற்குத்தான், அராஜகம் செய்வதற்கு இல்லை.

- சுப.வீரபாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.