“கல்யாணம் என்கின்ற பேரால் ஆணுக்குப் பெண்ணை அடிமையாக்குவதை கிரிமினல் ஆக்க வேண்டும். எப்படி தாசி முறை கிரிமினல் ஆக்கப்பட்டுவிடவில்லையா? அதுபோல அடிமை முறையையும் கிரிமினல் ஆக்க வேண்டும். ஆணுக்கு உள்ள அத்துணை உரிமையும் பெண்களுக்கு வரவேண்டும். பெற்றோர்கள் பெண்களை 22 வயது வரை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். பிறகு அவர்களுக்கு ஒரு தொழிலும் கற்றுக் கொண்டு ஒரு வேலைக்கு லாயக்கு உள்ளவர்களாகச் செய்ய வேண்டும். பிறகு அவர்களாகப் பார்த்து தங்களுக்கு ஏற்றவனைத் தெரிந்து எடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்களாகப் பார்த்து பிணைத்துப் பிணக்கக் கூடாது." - தந்தை பெரியார் (விடுதலை 20.09.1973)

woman liberationபெரியாரின் இந்தக் கருத்துகள் இன்றளவும் இந்தச் சமூகத்தால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத அதிர்வுகளைத் தருவன. ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பில் பெண்கள், திருமணம் என்னும் கூண்டுக்குள் அடைக்கப்படுகிறார்கள். எதற்காக ஒரு பெண்ணுக்குத் திருமண உதவி தேவைப்படுகிறது? ஏன் ஆண்களுக்கு திருமண உதவி தேவைப்படுவதில்லை?

பெண்ணுக்குத் திருமண உதவி என்பது அரசாங்கச் சட்டமாகத் தொடர்வது என்பது, அந்தச் சமூகத்தில் பெண்களின் நிலை அடிமைகளாக இருப்பதையே சுட்டும். இதுபோன்ற திருமண உதவித் திட்டங்கள் உருவாக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து சமூகம் முன்னேறி நகர்ந்து வருகிறது என்றால், திருமண உதவித் திட்டங்கள் மாற்றப்பட்டு, பாலினச் சமத்துவச் சட்டங்களாக மாற்றம் அடைய வேண்டும். அதுவே பெண் விடுதலைக்கான காலமாகும். பாலின சமத்துவச் சமூகத்தை அமைப்பதில் முன்னோடியாக, திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசு செயல்படுகிறது.

1989இல் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதிமுக அரசு அத்திட்டத்தில் மாற்றங்கள் செய்து நடைமுறைப்படுத்தியது. இன்று தி.மு.கழக அரசு அதனை உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றி இருக்கிறது.

 “பெண்களுக்குக் கல்விதான் நிரந்தரச் சொத்து அதனால்தான் மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் தொகை திட்டத்தை உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றியுள்ளோம்" என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்திருப்பது, பெண்கள் உயர்கல்வியைத் தொய்வின்றித் தொடர்வதற்கு வழிவகை செய்யும். குடும்ப அமைப்பில் பெண்ணின் திருமணத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்பது பெண்ணின் உயர்கல்விக்குக் கொடுக்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் இது போன்ற சட்டங்கள் பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்வதோடல்லாமல், திருமணம் என்கின்ற நிபந்தனையின் அடிப்படையில் உயர்கல்வி ஊக்குவிக்கப்பட்ட நிலையை ஒழிக்கின்றன.

கடந்த 1989 முதல் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. ரூபாய் 5000 நிதி உதவி வழங்கப்பட்டது. 2009இல் ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. முதலில் ஒருமுறை இந்தத் திருமண உதவித் திட்டத்தை நிறுத்திய அதிமுக அரசு இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு 2011இல் ஆட்சிக்கு வந்தபோது தொகையை ரூபாய் 50 ஆயிரமாக உயர்த்தி, தாலிக்குத் தங்கம் 4 கிராம் என்பதை 8 கிராம் என்று உயர்த்தி 2016 முதல் நடைமுறைப்படுத்தி வந்தது. அதிமுக ஆட்சியில் பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களைத் தற்போது ஆய்வு செய்தபோது அதில் 24.5 சதவீதம் பேர் மட்டுமே தகுதியான பயனாளிகள் என்று கண்டறியப்பட்டது.

உயர்கல்வியில் பெண்கள் சேர்வது 46 சதவீதம் மட்டுமே இருப்பதால், அதைச் சரிசெய்து கல்வியே நிரந்தரச் சொத்து என்ற உயரிய நோக்கில்தான் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் தற்போது ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் திட்டமாக திமுகழக அரசால் மாற்றப்பட்டுள்ளது. திருமண உதவித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பெண்கள் பயனடைந்தனர். ஆனால் இந்த ரூபாய் 1000 கல்வித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஆறு லட்சம் மாணவிகள் பயன் அடைவார்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சமூகநீதி வரலாற்றில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் புரிந்து வரும் திமுக அரசு மேலும் ஒரு சாதனையைப் பெண் விடுதலை வரலாற்றில் செய்திருக்கிறது. இந்தத் திட்டம் என்பது இந்தியாவிற்கு மட்டும் முன் மாதிரியல்ல, உலக அளவில் கூட முன் மாதிரியானது.

உதயகுமார்

Pin It