gas and petrolஉத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் நாட்டு மக்களுக்குச் சவுக்கடியைப் பரிசாகத் தந்துள்ளது மோடி அரசு.

ரூ.367 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து இன்று வானுயர்ந்து நிற்கிறது. ஏழை எளிய மக்களின் தலையில் மீண்டும் மீண்டும் பேரிடியை இறக்குகிறது மோடி அரசு.

சிலிண்டருக்கு 50 ரூபாய் ஏற்றி தற்போது 967.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது சமையல் எரிவாயு விலை. தேரை இழுத்து வந்து தெருவில் விட்ட கதையாக, மானிய விலையில் கிடைத்து வந்த சமையல் எரிவாயு இன்று மக்களைத் தெருவில் வந்து நிறுத்தியுள்ளது.

இதில் ‘‘137 நாட்கள் விலையை ஏற்றாத வீரிய அரசு” என்று சங்கிகளும், அதன் ஆதரவு ஏடுகளும் தலையங்கம் தீட்டுவது எரிகிற புண்ணில் உப்பைத் தடவுவது போல உள்ளது.

இதுவும் போதாதென்று பெட்ரோல் விலையினை 76 காசுகளும், டீசல் விலையினை 76 காசுகளும் உயர்த்தி மக்கள் மீது மண்ணை வாரித் தூற்றியுள்ளது மோடி அரசு. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.16-க்கும், டீசல் விலை தற்போது ரூ.92.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளது.

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இது குறித்து விதி எண் 267-ன் கீழ் விவாதிக்க அனுமதி கோரி எதிர்க்கட்சிகள் அறிக்கை அளித்தன. திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு எரிபொருள் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து விவாதிக்க வேண்டும் எனக் கேட்டதற்கு உடனே அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

“இந்திய அரசு இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” என்று டி.ஆர்.பாலு கூக்குரலெழுப்பினார். ஆனால், அவைத் தலைவர் அனுமதி தராத காரணத்தால், அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களின் அத்தியாவசியத் தேவைகள் குறித்துப் பேசக்கூட அனுமதி மறுப்பது எதேச்சதிகாரத்தின் கோர முகத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. மக்களின் நலன் கருதும் அரசாக இருந்தால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்.

பெரும்பான்மையாக வெற்றி பெற்ற ஒரு அரசு தனக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதைத் தி.மு.க தலைமையிலான தமிழக அரசைப் பார்த்து ஒன்றிய அரசு கற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு உடனடியாகப் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. இடைக்கால நிதிநிலை அறிக்கையும், நிதிநிலை அறிக்கை – 2021 மற்றும் இப்போது தாக்கல் செய்த 2022 நிதிநிலை அறிக்கையும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட வரிச்சுமையில்லாத நிதிநிலை அறிக்கையாக உள்ளன. இதுதான் மக்களுக்கான அரசு.

மக்களுக்கான முக்கியப் பிரச்சனைகளைக் கூட நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுக்கும் ஒன்றிய அரசின் செயல் பாசிசத்தின் அடையாளம்.

தமிழ் பிரபு

Pin It