பிராமணரல்லாதவர்களுக்காகவே தாங்கள் பாடுபடுவதாக வேஷ மும் போட்டு, சமயம் வருகிற காலத்தில் இம்மாதிரி மோசம் செய்வதும் அதற்கு ஏற்ற மாதிரி ஒரு கட்சியை அமைத்துக்கொண்டு பொது நன்மைக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தால் எத்தனை காலத்திற்கு ஜனங்கள் ஏமாறு வார்கள்.                        

- தந்தை பெரியார், குடிஅரசு, 05.07.1925

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் புனித நூல் என்று மக்களவையில் வாய்கிழியப் பேசிய மோடி அரசு (தி இந்து ஆங்கிலம், 28-.11.-2015) இன்று அரசியலமைப்புச் சட்டத்தைக் குப்பைத் தொட்டியில் போடும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது. ‘சொல்வது ஒன்று, செய்வது மற்றொன்று’ என்பது பாஜக வின் முக்கிய கொள்கைகளுள் ஒன்று.

அண்மையில், நடுவண் அரசின் பத்து அமைச்சகங்களில் இணைச் செயலாளர் தகுதியுள்ள பத்துப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் செய்துள்ளது, மோடி அரசு.

நடுவண் அரசின் பல்வேறு பதவிகளுக்கும், U.P.S.C. எனப்படும் மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் பல படிநிலைகளில் தேர்வுகளை நடத்தி ஆட்களைத் தேர்வு செய்கிறது. இது ஓர் அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும். அரசியலமைப்பின் 308 முதல் 314 வரையிலான பிரிவுகள் குடிமைப்பணிகளுக்கான தேர்வு முறை விதிகளைப் பற்றிக் கூறுகின்றன.

நடுவண் அரசின் மேற்கண்ட அறிவிப்பின் மூலம், தனியாரை நேரடியாக அரசின் இணைச் செயலாளர் பதவி அளவிற்கு நியமனம் செய்யப்படும் பேராபத்து எழுந்துள்ளது. இதன் மூலம் தனது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள, தனக்கு வேண்டியவர்களை அரசு நியமிக்கும். இது அரசியலமைப்புச் சட்டத்தையும், தன்னாட்சி பெற்ற மத்தியக் குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இட ஒதுக் கீட்டை ஓரங்கட்டி, தனக்கு வேண்டிய ஆர். எஸ். எஸ். இந்துத்துவவாதிகளை அரசுப்பணிகளில் நியமித்து, அதன் மூலம் சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் இஃதென்பது வெள்ளிடை மலை. கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரமுள்ள முக்கிய பதவிகள் இவ்வாறு நிரப்பப்படும் போது, இந்தியாவின் நிர்வாகக் கட்டமைப்பு சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்படும்.

ஏற்கெனவே, யூ. பி. எஸ். சி. தேர்வு முறையில் மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டம் நடைபெறும் வேளையில், இவ்வாறு ஓர் அறிவிப்பினைச் செய்திருப்பது, மோடி அரசு அரசியலமைப்புச் சட்டத்தைக் கிஞ்சித்தும் மதிப்பதில்லை என்பதையே காட்டுகிறது.

Pin It