‘திருத்தம்’ என்ற சொல்லுக்குப் பொதுவான பொருள், தவறாக இருப்பதைச் சரிசெய்வது என்பதாகும். ஆனால் மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசோ, சரியாக இருப்பனவற்றையெல்லாம் தவறானவையாக மாற்றித் ‘திருத்தம்’ என்ற சொல்லுக்கான பொருளையே திருத்தியிருக்கிறது. 

rti 400நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பா.ஜ.க அரசு அவசர அவசரமாகச் செய்திருக்கும் சட்டத் திருத்தங்கள் யாவும் மக்களுக்குத் தேவையற்றவைகளாகவே இருக்கின்றன. ஆனால் அவை சங்பரிவாருக்குத் தேவைப்படுகின்றன. இச்சட்டத் திருத்தங்கள் மக்களுக்குத் தேவையற்றவைகளாக மட்டுமன்று, பேராபத்தை விளைவிப்பனவாகவும் இருக்கின்றன. 

அண்மையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘Chief Information Commissioner’ என்று சொல்லப்படும் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் ‘Central and State Information Commissioners’ என்று சொல்லப்படும் மத்திய மாநிலத் தகவல் ஆணையர்கள் அனைவருக்குமான பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவற்றைத் தீர்மானிக்கும் உரிமையை மத்திய அரசு இச்சட்டத் திருத்தத்தின் மூலம் எடுத்துக் கொண்டிருக்கிறது. 

இதற்கு முன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் படி மத்தியத் தலைமைத் தகவல் ஆணையருக்குத் தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அதிகாரத்தை மத்திய அரசு பறித்துக் கொண்டுள்ளது. தன்னாட்சி பெற்ற தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் காவியாட்சி நடைபெறுவதை நாம் சென்ற தேர்தலிலும், தேர்தல்களை அறிவிக்கும் போக்கிலும் பார்த்தோம். தற்போது அந்த உரிமையும் இல்லாமல் போனால் நேரடியாகத் தாங்களே ஆணையத்தை நடத்திக் கொள்ள எளிதாக இருக்குமல்லவா?

ஆட்சியைத் தொடங்குகிறார்கள், அதனால் முதலிலேயே பிரச்சினை தருவனவற்றையெல்லாம் எளிதாக்கிக் கொண்டால் ஆட்சியில் பிரச்சினைகள் ஏற்படாது அல்லவா? பிறகு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் பற்றி யாராவது கேட்பார்கள். பார்ப்பனர்களே நிரப்பப்பட்டுள்ளனர் என்று அவர்களே வாக்கு மூலம் கொடுக்க வேண்டும். அதனால் சட்டத்தையே தங்கள் கைக்குள் வைத்துக்கொள்ள இந்த ஏற்பாட்டினைச் செய்துகொண்டார்கள். எதுவும் வெளிச்சத்திற்கு வந்துவிடக் கூடாது என்று யார் நினைப்பார்கள் என்பதை நாம் அறிவோம்.

மாநிலத் தகவல் ஆணையர்களுக்கு மாநில அரசு ஊதியம் கொடுக்கிறது. ஆனால் நிர்ணயமும் நியமனமும் மட்டும் மத்திய அரசு செய்யும். போகிற போக்கில் மாநில உரிமைகளையும் சேர்த்துப் பெயர்த்துக் கொண்டு போவது. வரவு, அதிகாரம் என்று வரும் போது அதனை முழுமையாக எடுத்துக் கொள்வது. செலவு என்று வரும் போது மட்டும் அதனை மாநிலங்கள் தலையில் கட்டி விடுவது. இவ்வளவு அற்பமான அரசைப் பார்ப்பது அரிதினும் அரிது. 

இந்தத் திருத்தங்களால் தகவல் ஆணையத்தின் சுதந்திரம் பாதிக்கப்படுவதோடு, மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதிக்கப்படுகின்றன. இந்த சட்டத்திருத்தத்தினால், மற்ற அரசுத்துறைச் செயலாளர்கள் தகவல் ஆணையத்தின் ஆணையை மதிக்காத நிலைதான் உண்டாகும் என்று மத்திய தகவல் ஆணையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்காகத்தானே ஆசைப்பட்டது பா.ஜ.க.

சூத்திரர்களுக்கு கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று சொன்னவர்கள், அவர்களுக்கு இருக்கும் தகவல் அறியும் உரிமையை மட்டும் விட்டுவைப்பார்களா? கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று சொன்னவர்கள், கணக்குக் கேட்டால் விட்டுவைப்பார்களா?

அதனால் தான் வந்ததும் வராததுமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போக வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள்.

Pin It