சசிகலா சிறையில் சகஜமாக இளவரசியுடன் வலம் வரும் காட்சியும், மற்றும், அவருக்குப் பரப்பன அக்ரஹாரத்தில் ,பெங்களுரு சிறையில் தரப்பட்ட வசதிகள் (ஐந்து அறைகளில்) அனைத்தும் ஊடகங்களில் வலம் வந்து, தமிழகத்தின் பெருமையை உலகத்துக்கே பறைசாற்றுகின்றன.

sasikala 255ஒடுக்கப்பட்ட இராம்குமார் போன்றோருக்கு மரணத்தைப் பரிசளிப்பதும், மனித உரிமை மீறல்களுக்குப் பெயர்போன இந்திய சிறைத்துறைகள், ஊழல் பெருச்சாளிக்கு ஐந்து நட்சத்திர விடுதிகளைப் போல் வசதி செய்து கொடுப்பதும், சிறைத்துறையே ஊழலில் திளைப்பதும், சனநாயக அமைப்பு முறையையே கேலிக் கூத்தாக்கும் செயலன்றோ.

மேலும் இப்படிப்பட்ட அநீதிகளை மக்களிடம் துணிந்து அம்பலப்படுத்தும் அதிகாரிகளின் நிலையோ அந்தோ பரிதாபம்!

இக் கொடுமைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்த டி.ஐ.ஜி. ரூபா இன்று போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2கோடி கொடுத்து 5 நட்சத்திர ஓட்டல் வசதியுடன் தவவாழ்க்கையா?

ஒருவேளை இதுகூட தி.மு.க வின் சதியென கூப்பாடு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! அவர்கள் வீட்டு அடுப்படியில் பூனை அழுதாலும் ஸ்டாலின் கிள்ளியிருப்பாரோ எனும் மனநோய் பீடித்த மைய அரசின் அடிமைச் சங்பரிவாரமாய் மாறிப்போய் நிற்கிறது அ.தி.மு.க.

அதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தின் ஊழல்களோ நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, கல்வி, போக்குவரத்து, பத்திரப்பதிவு, மதுவிலக்கு, வணிகவரி, உள்ளாட்சி, வேளாண்மை, சுகாதாரம், தொழில் என்று ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டிப் பறக்கிறது. தமிழகத்தையே அ.தி.மு.க கூவாத்தூராய் மாற்றிக் கூத்தடிப்பதும் காவி மைய அரசிற்குத் தெரியாதா?

தங்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பவர்களின் மீது மட்டுமே ரெய்டு நடத்துவதும், மிரட்டிப் பணிய வைப்பதுமாகத் தங்களுக்கான ஓர் பினாமி அரசை நிறுவ முயல்கிறது பா.ஜ.க. தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியை தி.மு.கழகம் எக்காலத்திலும் நிறுவிடக் கூடாதெனப் பார்ப்பனீய மோடி அரசு செயல்படுகிறது.

சமூக நீதியை முன்னெடுக்கும் கலைஞரின் ஆட்சிதான் ஊழல் பெருசாளிகளை ஒழிக்க ஒரே வழி என்பதைத் தமிழக மக்கள் உணர்ந்துவிட்டதைக் கண்டு பதறும் பா.ஜ.க எத்தனைக் காலம்தான் சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருக்க முடியும்?

அடக்குமுறைகளால் மக்களின் போராட்டதை ஒழித்து விடலாம் என நினைப்பவனே உலகில் மிகப்பெரிய முட்டாள்!

ஒருபக்கம் சசிகலாவை கைது செய்து இராஜ மரியாதையோடு வைத்திருப்பதும், இன்னொரு பக்கம் தமிழக அமைச்சர்களுக்குள் சிண்டு முடித்துக் கொள்ளைக் கூட்டத்தைத் தனக்காக வழி நடத்துவதும்தான் ஆரியத்தின் தன்மையாகும்.

இந்தியாவின் பல மாநிலங்களைத் தன்னுள் செரித்துக் கொண்ட பார்ப்பனீயம், இதுவரை வாலாட்ட முடியாத தமிழகத்தை அ.தி.மு.க என்னும் பினாமி அடிமைகளை வைத்துக் கொண்டு சின்னாபின்னமாக்கி சிதைத்து விட என்னும் எண்ணம் ஒருக்காலும் பலிக்காது.

Pin It