மத்திய அமைச்சரவை பதவி ஏற்று இப்போதுதான் ஒரு மாதம் நிறைவடைந் திருக்கிறது. அதற்குள் ஒவ்வொரு அமைச்சரும் ஆளுக்கொரு சிக்கலை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

smriti iraniஜம்மு - காஷ்மீர் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இணையமைச்சர், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்குவது பற்றிப் பேசினார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான நஜ்மா ஹெப்துல்லா, இசுலாமியர்கள் இந்தியாவில் சிறுபான்மையினர் இல்லை என்று உண்மைக்கு மாறான ஒரு செய்தியை வெளியிட்டார்.

இப்போது, இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, புதிய விவாதம் ஒன்றைக் கிளப்பி இருக்கிறார். பாடப்புத்தகங்களில் திருத்தம் செய்ய வேண்டுமாம். வேதகால நாகரிகத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்கிறார்.

அது என்ன வேதகால நாகரிகம்? சிந்து சமவெளி நாகரிகத்தைப் போல, கட்டிடக் கலையில், வாழ்க்கை முறையில் உயர்ந்திருந்த நாகரிகமா? அது என்ன நாகரிகம்? வருணாசிரம அடுக்கு முறையை மீண்டும் முழுமையாக நடைமுறையில் கொண்டுவர வேண்டும் என்பதைத்தான் அமைச்சர் வேறு சொற்களில் கூறியிருக்கிறார்.

ரிக், யஜுர், சாம, அதர்வண என்பன நான்கு வேதங்கள். அவற்றுள் ரிக் வேதமே காலத்தால் முந்தியது. அந்த வேதத்தின் 10ஆவது அத்தியாயம், புருஷசூக்தம் என்பது. அதில்தான் பிரம்மத்தின் தலையிலும், தோளிலும், தொடையிலும், காலிலும் நான்கு வருணங்களைச் சார்ந்த மனிதர்கள் தோன்றினர் என்னும் கருத்து இடம் பெற்றுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான், ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட, பார்ப்பனர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு வருணங்கள் இங்கே கற்பிக்கப்பட்டன.

வருணங்களில் இருந்து சாதிகளும், சாதிகளிலிருந்து உட்சாதிகளும், உட்சாதிகளிலிருந்து கிளைச் சாதிகளும் தோன்றின. இப்போது நான்காயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் இந்தியாவில் உள்ளன. இனிமேல் ஒருவரோடு ஒருவர் இணையவே முடியாது என்னும் அளவுக்கு, ஆளுக்கொரு அடுக்கில் மக்கள் பல்வேறு திசைகளில் தூக்கி எறியப்பட்டார்கள்.

நான்கு வருணங்களையும் தாண்டி, அவருணத்தார் என்று கூறி, பஞ்சமர்கள் என்னும் பிரிவினரையும், அதன்பின் சண்டாளர்கள் என்னும் அவர்களுக்கும் கீழ் அடுக்கில் இன்னொரு பிரிவினரையும் சமூகம் உருவாக்கிற்று.

சமமற்ற இச்சமூக அடுக்கை எதிர்த்தே 20ஆம் நூற்றாண்டில் சுயமரியாதை இயக்கமும், அதன் தொடர்ச்சியாக திராவிட இயக்கமும் தமிழகத்தில் தோன்றி நிலைத்தன. மீண்டும் வருணாசிரமத்தை, வேதகால அநாகரிகத்தைக் கொண்டு வர வேண்டும் என்னும் அமைச்சரின் கூற்றை ஒருநாளும் பெரியார் மண் ஏற்காது.

Pin It