சேலம் ஆத்தூரைச் சேர்ந்த 72 வயதான கண்ணையனும், 65 வயதான கிருஷ்ணனும் வங்கிக் கணக்கில் ரூ.500 பணம் வைத்துக் கொண்டு, மாநில அரசின் முதியோர் ஓய்வூதியத் தொகை வாங்கிக் கொண்டு, தமக்கிருந்த சொற்ப நிலத்தில் பாடாற்றி வந்த விவசாயப் பெருமக்கள்.
அவர்களுக்குக் கடந்த 2023, ஜூன் மாதம், 26 அன்று, ஜூலை 5 சென்னைக்கு வருமாறு அமலாக்கத்துறையின் அழைப்பாணை வந்துள்ளது! அமலாக்கத்துறை என்றால் ஏதோ, அம்பானிகளுக்கும், அமைச்சர்களுக்கும் தான் வரும் என்று அன்றாடங்காய்ச்சிகள் அக்கடா என்று இனி இருக்க முடியாது. அந்த அழைப்பாணையில், முகவரியில், அவர்கள் பெயரோடு அவர்களின் பட்டியலின சாதி அடைமொழி வேறு சேர்க்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் குணசேகரனின் கண்ணசைவில், அவர் சொன்னதை அப்படியே எழுதி, அந்த முதியவர்களை அச்சுறுத்தியிருக்கிறது அமலாக்கத் துறை. அந்த விவசாயிகள் அஞ்சி, அமலாக்கத் துறை அலுவலகம் வந்தபோது, வழக்கறிஞரை அனுமதிக்காமல், அவர்கள் குணசேகரனுக்குத் தர மறுத்த காராமணித்திட்டு, ராமநாயக்கன்பாளையத்தில் இருக்கும் தங்கள் 6.50 ஏக்கர் நிலம் பற்றி கேட்டு மிரட்டியிருக்கிறார்கள் அதிகாரிகள். 2020இல் அவர் மீது கிருஷ்ணன், கண்ணையன் சகோதரர்களால் போடப்பட்ட வழக்கை முறியடிக்க, இப்படி ஒரு பஞ்சாயத்தை நடத்தி அத்துமீறி இருக்கிறது அமலாக்கத் துறை.
வழக்கறிஞர் பிரவீணாவை இது தொடர்பாக, டிசம்பர் 31 அன்று விடிய விடிய கேள்வி கேட்ட நுங்கம்பாக்கம் காவல் துறை, மீண்டும் ஜனவரி 2 அன்று சேலம் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அந்த விவசாயிகளை வரச் சொல்ல, அப்போதுதான் பிரவீணா இவர்களின் விசமத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி இருக்கிறார். இதில், மலை அடிவாரத்தில் இருக்கும் 600 ஏக்கர் நிலத்தை அபகரிக்க பெரும்புள்ளிகளின் பின்னணியும் இருக்கலாம் என அவர் சந்தேகப்படுகிறார். இப்போது அவர்கள் மீது சேலம் வனத்துறையை வைத்து அரிய விலங்குகளைக் கொன்றார்கள் என புதிய வழக்கைப் பதிய முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.
கடந்த டிசம்பர் 1 அன்று அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டது நம் நினைவுகளில் இருந்து இன்னும் நீங்கவில்லை. வருவாய்த் துறை துணை ஆணையரான பாலமுருகன், இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, அமலாக்கத் துறையின் அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பதவி நீக்கம் செய்யும்படி, காட்டமாகக் கடிதம் எழுதி இருக்கிறார்.
நிர்மலா அம்மையாருக்குத் துறைகள் கொடுத்திருப்பதே அவற்றைக் கபளீகரம் செய்து, ஆன மட்டும் தங்கள் ஆசாபாசங்களுக்குப் பயன்படுத்திவிட்டு, மூடுவிழா நடத்தவே என்பதால், இதற்கெல்லாம் குடியரசுத் தலைவர் அசையப் போவதில்லை. மொத்தமாகப் பார்த்து மக்கள் வழி அனுப்பி விடுவதைத் தவிர வேறு வழியுமில்லை.
- சாரதா தேவி