கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

“வடக்கு, தெற்கு இடையே ஓர் பரந்த வேறுபாடு உள்ளது. வடக்கு பழமைவாதத்தை கொண்டிருக்கிறது, தெற்கு முற்போக்கானது. வடக்கில் மூடநம்பிக்கை உள்ளது, தெற்கில் பகுத்தறிவு உள்ளது. தெற்கு கல்வி ரீதியாக முன்னோக்கி உள்ளது, வடக்கு கல்வி ரீதியாக பின்தங்கியுள்ளது. தெற்கின் கலாச்சாரம் நவீனமானது. வடக்கின் கலாச்சாரம் பழமையானது” என்றும், “தென் மாநிலங்களுக்கென தனி தலைநகர் ஒன்றை அமைக்க வேண்டும்” ன்றும் பரிந்துரைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்.

இன்றும் வடக்கு- தெற்குக்கு இடையிலான இந்த பாகுபாடு அப்படியேதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வடமாநில மக்களின் தாய்மொழியை அழித்து இந்தியை பொதுமொழி ஆக்கியதுபோல, தென்னிந்தியாவில் மாற்றிவிட இயலவில்லை. மத ரீதியாக வடக்கில் வேரூன்றிய பாஜகவால், தென்னிந்தியாவில் வேரூன்ற முடியவில்லை. கல்வி - வேலைவாய்ப்பு - சுகாதாரக் கட்டமைப்புகளில் தென்னிந்தியாவுக்கு நிகராக வட இந்தியாவால் முன்னேற முடியவில்லை.

ஆனால் “வடக்கு வேறு, தெற்கு வேறு... என்று தென்னகத்தில் இருந்து குரல் எழும்போதெல்லாம் அதைப் பிரிவினைவாதம் என்கிறது பாரதிய ஜனதா கட்சி. உண்மையில் இந்த பிரிவினையை ஏற்படுத்துவது யார் என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.

பிப்ரவரி ஒன்றாம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி, ஒட்டுமொத்த தென் மாநிலங்களுக்கும் 1.92 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களே முன்மொழியப்பட்டுள்ளன. ஆனால் உத்தரப் பிரதேசத்துக்கு மட்டும் 2.18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. உ.பி., பீகார், ம.பி., ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களுக்கு மட்டும் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் முன்மொழியப்பட்டிருக்கின்றன.

தென் மாநிலங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் இடையில் ஏன் இந்த பாரபட்சம்? ஏற்கெனவே வரிப்பகிர்விலும் தென் மாநிலங்களை வஞ்சிக்கும் போக்குதான் கடந்த 10 ஆண்டுகளாக நிலவிக் கொண்டிருக்கிறது. 2014 முதல் 2023 வரையிலான பாஜக ஆட்சியின் முதல் 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிடம் இருந்து நேரடி வரியாக 6.23 லட்சம் கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது ஒன்றிய அரசு. ஆனால் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தொகையோ 2.46 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.

நம்மிடம் இருந்து செல்லும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் 29 காசு மட்டுமே திரும்பி வருகிறது. கர்நாடகா 15 காசை மட்டுமே திரும்பப் பெறுகிறது. கேரளாவுக்கு 25 காசு மட்டுமே திரும்பி வருகிறது. ஆனால் உத்தரப் பிரதேசம் 2.73 ரூபாயையும், பீகார் 7.06 ரூபாயையும் பெறுகின்றன. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள் 2014 முதல் 2023 வரையிலான 9 ஆண்டுகளில் 2.33 லட்சம் கோடி ரூபாயை கொடுத்துவிட்டு, 15.35 லட்சம் கோடி ரூபாயைப் பெற்றிருக்கின்றன.

ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் ஆண்டொன்றுக்கு 2,000 கோடி ரூபாயை தமிழ்நாடு இழந்து கொண்டிருக்கிறது. மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கக் கூட வடமாநிலங்களுக்கு 10,000 கோடி ரூபாய்க்கு மேல் எளிதாகக் கிடைக்கிறது. ஆனால் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு தமிழ்நாட்டுக்கு 3,500 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் கூறியிருந்தார். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பங்கேற்கும் திட்டங்களில், ஒன்றிய அரசின் பங்கை தொடர்ச்சியாகக் குறைத்துக்கொண்டே வருகிறார்கள். நம்மைப் பார்த்து பிரிவினைவாதிகள் என்கிறது.

மிக்ஜாம் புயல், தென்மாவட்ட பெரு மழைக்கு நிவாரணமாக ஒன்றிய அரசால் ஒரு ரூபாய் விடுவிக்கப்படவில்லை. மாநில நிதியில் இருந்தே பேரிடரில் இருந்து மக்களை மீட்டிருக்கிறது திமுக அரசு. இப்படி தென் மாநிலங்களையும் வட மாநிலங்களையும் பிரித்து நிதிப்பகிர்வில் வஞ்சித்துக்கொண்டிருக்கும் பாஜக அரசு.

இப்போது மாநிலங்களுக்கான கடன் வழங்கும் அதிகாரங்களையும் நசுக்கத் துணிந்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது. ஆனால் அதில் தற்போது ஒன்றிய அரசு தலையிடத் துணிந்திருப்பது, நிதிக் கூட்டாட்சிக்கு சவால் விடும் ஆபத்தான போக்கு.

இதனைக் கண்டித்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது. தலைநகர் டெல்லியில் (08.02.2024) அன்று கேரள அமைச்சரவை சார்பில் கருஞ்சட்டை அணிந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிற திமுக அரசு, ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுப்பதாகவும், சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்பதாகவும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கேரள அரசின் போராட்டத்திற்கு ஒருநாள் முன்னதாக, பிப்ரவரி ஏழாம் தேதி டெல்லியில் கர்நாடக அரசும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.

2018ஆம் ஆண்டில் இதேபோல நியாயமற்ற வரிப்பகிர்வைக் கண்டித்து தென் மாநிலங்கள் ஒருமித்துக் குரல் எழுப்பின. அரை நூற்றாண்டுக்குப் பிறகு திராவிட நாடு கோரிக்கைகள் எழ ஆரம்பித்தன. அந்த ஒருமித்த குரல், இப்போது இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் ஆர்ப்பாட்டமாக வலுப்பெறுகிறது. தென் மாநிலங்களின் குரலை ஒன்றிய பாஜக அரசு, மீண்டும் அலட்சிப் போக்கோடு அணுகாமல் வரிப்பகிர்வில் நியாயமாக நடந்துகொள்ள முன்வர வேண்டும், கூட்டாட்சிக்கு சவால் விடும் போக்கு இந்திய ஒன்றியத்துக்கே பேராபத்தை விளைவிக்கும் என்பதை பாஜக அரசு உணர வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்