ops and mkstalin 650தேர்தல் நேரத்தில் புதிய புதிய கூட்டணிகள் உருவாகும்! பழையன சில கலையும்! சிலர் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவார்கள். இவையெல்லாம் இயல்பாக நடக்கக் கூடியன!

ஆனால், முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் திமுகவில் ஓர் உறுப்பினராகத் தன்னை இப்போது இணைத்துக் கொண்டிருப்பதை, இந்த வரிசையில் வைத்து நாம் பார்க்க முடியாது, பார்க்கக்கூடாது! இது இன்னொரு அரசியலின் தொடக்கம்!

திமுகவை சேர்ந்தவர்களே கூட, அதிமுக என்று ஒரு கட்சி எதிர் வரிசையில் இருக்க வேண்டும் என்று விரும்புவதுண்டு. அது அதிமுகவின் மீது கொண்ட பாசத்தினால் அன்று, திரும்பத் திரும்ப நம் கொள்கை எதிரிகள், இரண்டு திராவிடக் கட்சிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பது கவனத்திற்குரியது! ஆளுங்கட்சியாக ஒரு திராவிடக் கட்சியும், எதிர்க்கட்சியாக இன்னொரு திராவிட கட்சியுமே இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் திமுகவிலேயே உண்டு! பொது எதிரிக்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த விருப்பம்!

ஆனால் இப்போது நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன! பாஜக, அதிமுகவை அரவணைத்து அழித்து விட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறது. எடப்பாடியும், கட்சி எக்கேடு கெட்டால் என்ன, தான் மட்டும் பிழைத்தால் போதும் என்னும் எண்ணத்திற்கு வந்து விட்டார்!

அதிமுகவை அழித்து விட்டால், அக்கட்சியில் உள்ள அனைவரும் தங்களிடம் வந்து விடுவார்கள் என்பது அமித்ஷாவின் கணக்கு! ஆனால் அதிமுகவிற்கு ஆபத்து வரும்போது, அங்கே உள்ளவர்களில் மிக மிகக் குறைவானவர்கள் மட்டுமே பாஜக பக்கம் நகர்வார்கள்! பெரியார் அண்ணா மீது பற்றுள்ள பெரும்பான்மைக் கட்சிக்காரர்கள், தங்கள் தாய்க் கழகத்திற்கு வந்து விடுவார்கள்!

ஓபிஎஸ் அவர்களின் வருகையை அப்படித்தான் பார்க்க வேண்டும்! இது புதிய அரசியலின் தொடக்கம்!

ஒன்றை நாம் முடிவு செய்து கொள்ளலாம். உண்மையான எதிரியைக் களத்தில் சந்திக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது! எதிரி மாதிரித் தோற்றம் தரும் ஒருவரோடு எத்தனை காலம்தான் சண்டை போட்டுக் கொண்டிருப்பது?

எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் அரசியலில் நம் முன்னால் வந்து நிற்கப் போகிற வினா ஒன்றே ஒன்றுதான் - காவியா, கருப்பா? நீங்கள் எந்தப் பக்கம் ?

- சுப.வீரபாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.