ஒரு சட்டமுன்வடிவை அவையின்முன் வைக்கும்போது அதுகுறித்துப் படித்துப் பார்க்கவும், பேசவும், விவாதிக்கவும் கால அவகாசம் கொடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி செயல்பட வேண்டும், அதுதான் நேர்மையான செயல்.

மழைக்காலக் கூட்டத் தொடர் முடியும் இறுதி நாளில் 130ஆவது திருத்தச் சட்ட முன்வடிவை அவையில் வைத்து, அதைப் படிக்கக்கூட நேரமில்லாமல் செய்யும் நேர்மையற்ற செயலை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டித்திருக்கிறார். அது என்ன சட்டத்திருத்தம்?

முதலமைச்சரோ, பிற அமைச்சர்களோ கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் போதும், அவர்கள் பதவி பறிக்கப்படும். இதுதான் அந்தத் திருத்தச் சட்டம்.

அதாவது ஒருவரை அமலாக்கத்துறை மூலம் கைது செய்தால் அவர் குற்றவாளியா, இல்லையா என்று நீதிமன்றம் உறுதி செய்துதான் தண்டனை கொடுக்கும். அது 30 நாள்களில் நடந்துவிடாது.

கைது செய்தவரைப் பிணையில் எடுப்பதற்கே சிலவேளை ஏறத்தாழ 30 நாள்கள் ஆகிவிடும். அதற்குள் பதவி பறிக்கப் படுமானால், அது சம்பந்தப்பட்ட அமைச்சரை வாக்களித்துத் தேர்ந்தெடுந்தத் தொகுதி மக்களை அவமானப் படுத்துவதாக அல்லவா இருக்கும்?

ஆர்எஸ்எஸ் காவிக் கும்பலுக்குப் பிடிக்காத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இச்சட்டம் வலிந்து திணிக்கப்படும் அபாயமும், ஆபத்தும் இதில் இருக்கிறது. இது மக்களுக்கான சட்டமன்று. காவி மகாராஜாக்களுக்கான சர்வாதிகாரச் சட்டம்.

உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கலைப்பது, கலவரம், ரதயாத்திரை, புறக்கடை வழியாக நுழைந்து ஆட்சியைக் கலைக்க முடியாத தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இத்திருத்தச் சட்டம் தலைவிரித்து ஆடுவதற்கும் வாய்ப்பு இல்லாமல் இல்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது போல இதுவொரு கருப்புச் சட்டம். இச்சட்டம் இப்போது ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியிருந்தாலும், நாளை அது நடைமுறைக்கு வந்துவிடக் கூடாது. அந்தத் திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும். அல்லது எதிர்கட்சிகளின் போராட்டம், அதைச் செய்ய வைக்க வேண்டும்!

- கருஞ்சட்டைத் தமிழர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.