manushyaputhiran 300கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். உலகில் மனிதநேயம் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்குச் சாட்சியாக கேரள மக்களுக்கு அனைத்துத் தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மறுபடியும் இது போன்ற இயற்கைப் பேரிடரை எப்படிப் பாதிப்பின்றி எதிர்கொள்வது என்று அறிவியலின் துணை கொண்டு அறிஞர்களும், அரசுகளும் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், மனிதாபிமானமும் இல்லாமல், மதியுமில்லாமல் சபரி மலையில் பெண்களை அனுமதிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்திருப்பதால் தான் அய்யப்பனின் கோபத்திற்கு உள்ளாகியிருக்கிறோம் என்றும் மாட்டுக் கறி உண்ணுவோர் அதிகம் இருப்பதால் தான் இந்தப் பேரழிவு என்றும் சிலர் பேசித் திரிகின்றனர். புறக்கணித்துவிட்டு போகக் கூடியவர்களா அந்தச் சிலர்? உலகின் பெரிய குடியரசு நாடான இந்தியாவை ஆளும் வர்க்கத்தினரல்லவா அந்தச் சிலர். இன்றைய படித்த இளைஞர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கூட இதனைக் கேட்டுச் சிரிக்கின்றனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பதை நாம் பார்க்கிறோம். அதனால் இதனை நாம் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.

மக்கள் தொகைப் பெருக்கம், தொழிற்கூடங்களின் பெருக்கம் இவற்றோடு இயற்கைக்கும் இடர்ப்பாடு இல்லாமல் இயங்குவது குறித்து உலக நாடுகள் எல்லாம் திட்டங்கள் வகுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் இங்கு நம்மை ஆளுவோரின் சிந்தனையும் செயலும் இப்படி இருக்கிற போது, எப்படி இந்தச் சமூகம் முன்னேறும் என்கிற கேள்வி எழுகிறது.

கேரளத்தின் நிலை இப்படி இருக்க, இங்கு தமிழ்நாட்டில் அதைப் பயன்படுத்தி எப்படியாவது சில கொலைகளை நிகழ்த்திவிட வேண்டும் என்று துடிக்கின்றனர். வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகளைப் பற்றிக் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய ஒரு கவிதைக்கு மத உள்நோக்கம் கற்பித்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர். குறிப்பாக பா.ஜ.க. வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. இன்றைக்கு நாகரிகம் கருதி எந்த மேடையிலும் பேச்சாளர்கள் அவர் பெயரைக் கூட உச்சரிப்பதில்லை. இந்த அளவிற்குப் பெயர் கூட புறக்கணிக்கப்படும் நபர் வரலாற்றில் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். இவ்வளவு கண்டனங்களுக்கு உள்ளான போதிலும் அந்தக் கட்சி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறதென்றால் அதில் எவ்வளவு பெரிய ஆபத்து இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். பொதுவாக அரசியல் கட்சிகள் குழப்பத்தை விளைவிக்கும் என்று விமர்சகர்கள் சொல்வதுண்டு. ஆனால் தாங்கள் கால் ஊன்றுவதற்கு எப்படியாவது கொலைகளை நடத்தத் துடிக்கும் அரசியல் கட்சி பா.ஜ.க மட்டும் தான். பா.ஜ.க வின் வரலாறே அதற்குச் சான்று.

ஊடகப் பெண்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகரைக் கைது செய்யக்கோரி எத்தனை வழக்குகள், எத்தனை போராட்டங்கள். கோவிலில் இருக்கும் உற்சவர் பவனி வருவதைப் போல ஒரு நாள் நீதிமன்றத்திற்குப் பவனி வந்து சென்றுவிட்டார். கவிஞர் மனுஷ்ய புத்திரன், தனக்கு மிரட்டல் விடுபவர்களின் விபரங்களையும், அதற்குத் தூண்டுபவர்களைப் பற்றியும் காவல் துறையிடம் புகார் அளித்தும் அவர்கள் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மூளையெங்கும் மூடத்தனம், செய்வதெல்லாம் சர்வாதிகாரம் இதுவே இன்றைய மத்திய அரசை ஆளும் பா.ஜ.கவின் பணி. இந்த நாட்டைப் பிடித்த பிணி.

Pin It