கருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 22, 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.

 

 

Pin It

ஏழாண்டு காலம் -

எத்தனை இழி சொற்கள், கட்சியின் மீது எத்தனை தாக்குதல்கள், எத்தனை தோல்விகள்!

எல்லாம் கடந்து இன்று நிமிர்ந்து நிற்கிறது நீதி! “அறம் வெல்லும், அநீதி வீழும்“ என்று அருமைத் தலைவர் கலைஞர் அன்றே எழுதிய தொடர், இன்று எல்லோர் நெஞ்சிலும் எழுந்து  நிற்கிறது.

2009 ஆம் ஆண்டிலிருந்தே 2ஜி விவாதம் தொடங்கிவிட்டது என்றாலும், அதனை ஊதிப்  பெருக்கி உலகையே மிரள வைத்தவர், அன்று தலைமைத் தணிக்கை மற்றும் கணக்காளராக (சிஏஜி) இருந்த வினோத் ராய்தான். 2010 நவம்பரில், அவர் விடுத்த அறிக்கைதான், “1.76 லட்சம் கோடி ஊழல்” என்னும் பொய்யான அவதூறு நாடெங்கும் பரவக் காரணமாக இருந்தது.

kanimoli 600அந்தத் தொகை வெறும் கற்பனைக் கணக்கு. ஆதாரம் இல்லாமல் கட்டப்பட்ட அநியாயப் பொய். அன்று ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை, ஒரு மெகாஹெட் 276 கோடி ரூபாய் வீதம், 52.75 மெகாஹெட் அலைக்கற்றை  விற்பனை செய்யப்பட்டது. அதன்மூலம் அரசுக்கு ஏறத்தாழ 16000 கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால், முதலில் வருபவருக்கு முதலில் என்று இல்லாமல், அலைக்கற்றையை ஏலத்தில் விட்டிருந்தால்,  ஒரு மெகாஹெட் 3,350 ரூபாய்க்கு விலை போயிருக்கக்கூடும் என்று அவராக ஒருகற்பனையில் கணக்கிட்டு, அதன்படி அரசுக்கு 1.76 லட்சம் கோடி (52.75 பெருக்கல் 3350 = 1.76 லட்சம் கோடி) வருவாய் வந்திருக்கும் என்றார்.இதற்கு எந்தச் சான்றும் இல்லை. ஆனால்  இதனை நாடே நம்பியது. ஏதோ, 1.76 லட்சம் கோடி ரூபாயை ராசா கொள்ளையடித்து விட்டார் என்பது போல் ஒரு பழி திட்டமிட்டுச் சுமத்தப்பட்டது.

அந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் என்பதும் லஞ்சம், ஊழல் என்று விநோத்ராய் கூட  அறிக்கையில் எங்கும் சொல்லவில்லை. அரசுக்கு வருவாய் இழப்பு என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் நாடு முழுவதும், 7 ஆண்டுகளாக, ராசாவின் மூலம் திமுக 1.76 லட்சம் கோடி ரூபாய்யைக் கொள்ளையடித்து விட்டது என்றுதான் பேசினார்கள்.

இப்போது நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. குற்றச்சாற்றை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு ஆதாரத்தைக் கூட சிபிஐ தரவில்லை என்று நீதிபதி சொல்லியிருக்கிறார்.  ஆதாரத்தைக் கொடுக்கத்  தவறிவிட்டார்கள் அதிகாரிகள் என்று குறைப்பட்டுக் கொண்டுள்ளார் சு.சாமி. பாவம், அதிகாரிகள் என்ன செய்வார்கள்? ஆதாரம் இருந்தால்தானே கொடுக்கமுடியும்?

வினோத் ராய் கூற்றுப்படியே, 2014இல் 3ஜி அலைக்கற்றைகள் ஏலத்திற்கு விடப்பட்டன. அப்போது 350 மெகாஹெட் அலைக்கற்றைகள் விற்பனையாகின. ஒரு மெகாஹெட் வெறும் 297 கோடி ரூபாய்க்குத்தான் விற்பனை ஆகியது. ராசாவின் காலத்திற்குப் பிறகு, 6 ஆண்டுகள் கழித்து, வெறும் 21 கோடிதான் கூடுதல் விலை போயுள்ளது. 3350 கோடி ரூபாய்க்கு விலை போகவில்லை. அவ்வளவு விலைக்குப் போயிருந்தால், 11லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு கிடைத்திருக்கும். எனவே இதனை 11 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று கூறலாமா?

எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லை. ஆனால் ராசா 15 மாதங்களும், கனிமொழி 12 மாதங்களும் சிறையில் இருந்துள்ளனரே, அதற்கு யார் நியாயம் வழங்குவது? அவர்கள் மீதும், கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட பழியை யார் துடைப்பது? இந்த அவதூறு பரப்பப்பட்ட காரணத்தால், இரண்டு பொதுத் தேர்தல்களில் தி. மு. கழகம் வெற்றி வாய்ப்பை இழந்ததே, அதனை எப்படி ஈடு செய்வது?

மனசாட்சி உள்ளவர்கள் விடை சொல்லட்டும்!

Pin It

nayanthaara 450அண்மையில் வெளிவந்துள்ள சில தமிழ்த் திரைப்படங்கள் பல புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளன.

அம்மா-பிள்ளை, அண்ணன்-&தங்கை, முக்கோணக் காதல், பழிக்குப் பழி வாங்கும் கதாநாயகன் போன்ற வழக்கமான வட்டத்தை விட்டு வெளியே வந்து, சமூகச் சிக்கல்களை இப்படங்கள்  முன்வைக்கின்றன.

குறிப்பாக இரண்டு படங்கள் -

1. அறம்

 2. அருவி.

இரண்டு படங்களும் இன்றைய சமூகச் சிக்கல்களைப் பேசுகின்றன. இரண்டு படங்களிலும் கதாநாயகிக்கே முதன்மை தரப்பட்டுள்ளது.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த ஒரு குழந்தையைச் சுற்றிச் சுழல்கிறது அறம். பொதுநலம் பற்றிய அக்கறையே இல்லாதவர்கள் பொதுவாழ்வில் பெரும் பொறுப்புகளில் இருக்கும் அவலத்தையும், கடமை உணர்வுள்ள ஓர் அதிகாரியையும் படம் பிடித்துக் காட்டுகிறது இப்படம்.  

மூடாமல் விடப்படுகின்ற ஆழ்துளைக் கிணறுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணரக்கூடிய அளவில் படம் அமைந்துள்ளது. கொஞ்சம் தவறினாலும், ஆவணப் படமாக ஆகியிருக்கும். ஆனால் சலிப்பே இல்லாமல் படம் நகர்ந்து செல்கிறது.

இன்றைய ஊடகங்களில் உள்ள போலித்தனத்தையும், சமூக அவலங்களையும் ஒரு சேரத் தோலுரிக்கிறது “அருவி”.  அதே நேரம்.

இளைஞர்களின் உணர்வுகளைச் சற்றும் புரிந்து கொள்ளாமல், உடனடியாக அவர்களைத் தீவிரவாதிகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் காவல்துறையின் போக்கையும் இப்படம் எடுத்துக்காட்டுகிறது.

மிகவும் அழுத்தமான ஒரு கருத்தை, மிகவும் எளிமையாக, நகைச்சுவையுடன் கூறியிருக்கும் இயக்குனரின் திறன் வியப்புக்குரியதாக உள்ளது.

இவை போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு என்ன செய்ய வேண்டும்? இப்படங்களைத் திரையரங்கிற்குச் சென்று மக்கள் பார்க்க வேண்டும்.

Pin It

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரின் கடைசி காலத்தில், அப்பலோ மருத்துவமனையில் மர்மமான முறையில் சிகிச்சை பெற்றார், 75 நாள்கள்.

அவரின் நோய் என்ன? அளிக்கப் பட்ட சிகிச்சை முறை என்ன? மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த நிலை என்ன?  என்பது குறித்துத் தெளிவான விளக்கம் இன்னும் வரவில்லை.

அரசு தரப்பில் இருந்தும், சுகாதாரத் துறைச் செயலாளரிடம் இருந்தும் எந்த வித விளக்கமும் இதுவரை இல்லை.

ஒரு புகைப்படம், ஒளிப்படம் கூட வெளியிடப்படவில்லை.

மருத்துவமனை இயக்குநர் பிரதாப் ரெட்டி முன்னுக்கு பின் முரணான விளக்கம் தந்துகொண்டிருக்கிறார்.

ஓர் ஆண்டுக்குப் பின், ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி டி.டி.வி. தினகரன் அணி வெற்றிவேல், ஜெயலலிதா குறித்த ஓர் ஒளிப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

ஜெயலலிதா சிகிச்சை பெறும் பொழுது கலைஞர் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டபோதும், ஓர் ஒளிப்படம் அல்லது நிழல்படம் கூட வெளியிடப்படவில்லை.

இப்பொழுது வெளியிட்டு இருக்கும் இந்த ஒளிப்படம் பல்வேறு ஐயங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றது.

இந்த ஒளிப்படம் எப்போது எடுக்கப்பட்டது? எங்கே எடுக்கப்பட்டது? யாரால் எடுக்கப்பட்டது? ஏன் இதுவரை இப்படம் வெளியிடப்படவில்லை? இதுகுறித்த விளக்கங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டியனவாக உள்ளன.

இந்த படம் எடுத்தது சசிகலா என்கிறார் டி.டி.வி.தினகரன்.

அன்றைய முதல்வர் ஓ.பி.எஸ்.க்கும், இன்றைய முதல்வர் எடப்பாடிக்கும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இந்த ஒளிப்படம் குறித்து நன்றாகத் தெரியும். அவர்கள் இதை ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள் என்கிறார் வெற்றிவேல்.

நாட்டின் முதல்வர் என்ற அடிப்படையில் ஜெயலலிதா சிகிச்சையை, அன்றைய முதல்வர் ஓ.பி.எஸ்., சுகாதாரத்துறை அமைச்சகம் மூலம் பார்த்திருக்க வேண்டும். காரணம் முதல்வர் தமிழக மக்களுக்கு உரிமையானவர்.

ஆனால் சசிகலா என்ற ஒரு பெண்மணியே ஜெயலலிதாவை முழுமையாக மறைத்துக் கொண்டு, அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் எந்தச் செய்தியையும் வெளிவராமல் பார்த்துக் கொண்டார்.

இதற்கு அன்றைய முதல்வர் ஓ.பி.எஸ். உடந்தையாக இருந்திருக்கிறார்.

இன்று சசிகலாவுக்கு எதிராக ‘தர்ம யுத்தம்’ நடத்துவதாகச் சொல்லும் ஓ.பி.எஸ்., அன்று சசிகலாவுடன் கூட்டுச் சதியில் இருந்திருக்கிறார் என்பது வெற்றிவேலின் வாக்குமூலத்தால் தெரியவருகிறது.

இப்பொழுது வெளியாகியுள்ள ஒளிப்படத்தில் ஜெயலலிதாவின் முகம் தெளிவாக இல்லை. அவருக்குத் தெரிந்து அப்படம் எடுக்கப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை.

இது உண்மையில் அப்போலோவில் எடுத்த படம் தானா? அல்லது வேறு எங்கேனும் எடுத்த படமா?

இந்த படம் குறித்து அப்போலோ நிர்வாகம் ஏன் இன்னும் மௌனம் காத்துக்கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா மறைவையொட்டி நடைபெறும் தில்லு முல்லுச் செயல்களும், மர்மங்களும் அவருடன் நெருக்கமாக இருந்தவர்களாலேயே தொடர்வது ஆரோக்கியமாக இல்லை.

ஜெயலலிதா ஒளிப்படம் பின்னாள் இருக்கும் மர்மங்கள் இன்னும் விலகவில்லை என்பது மட்டும் புரிகிறது.

Pin It

அரசியலில், அரசியல் கட்சிகளுக்கு வெற்றி மட்டுமே பிரதானமென்பது உண்மை தான்.

stalin 450 copyஅதேசமயம், அப்படிப்பட்ட வெற்றி பல அரசியல் கட்சிகளைக் காணாமலடித்திருக்கிறது. அதையெல்லாம் உடைத்தெறிந்து மக்களோடு மக்களாக, மக்களுக்காகப் பல தோல்விகளுக்குப் பின்பும் நிமிர்ந்து எழுந்து  திமுகவால் நிற்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் திமுகவின் தோற்றம். அதற்கு அண்ணாவும் கலைஞர் அவர்களுமே கொள்கை என்கிற உரமிட்டு வளர்த்தார்கள்.

இப்படி நான் எழுதுவதற்குக் காரணம், மிகப்பெரிய பேரழிவிலிருந்து தமிழக மக்களைக் காக்க தற்போது திமுக எடுத்திருக்கும் முயற்சி. ஏதோ போகிற போக்கில் நன்றி மட்டும் சொல்லிவிட்டுப் போவதற்காக அல்ல.

சுயநலமில்லா பலநூறு அறிஞர்கள், சுயநலமில்லா பல இயக்கங்கள், பல அரசியல் கட்சிகள்கூட, கூடங்குளம் அணு உலை என்பது தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம். அணு உலை என்பது பாதுகாப்பானதல்ல.  பலநாடுகள் மக்களின் நலன்கருதி அணுஉலைகளைக் கைவிட்டு விட்டன என்று தன்னால் இயன்ற அளவு குரல் கொடுத்து வந்தது நாம் அறிந்த ஒன்றுதான்.

துவக்கத்தில் திமுக இந்த விடயத்தில் சற்றுப் பின்தங்கியே இருந்தது என்பது உண்மை தான் என்றாலும், தற்பொழுது, நான் பலநூறுமுறை எழுதியிருக்கிறேன் திமுக என்பது மக்களுக்கான இயக்கம் என்று. அதற்குச் சான்றளிக்கும் விதமாக தளபதி அவர்கள்  கூடங்குளம் அணு உலை என்பது துவக்கத்தில் இருந்தே பல பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருக்கிறது.

தரமில்லாத உபகரணங்களை உபயோகித்த காரணத்தால் இன்றுவரை அடிக்கடி பழுது ஏற்பட்டு,

அதன் கொடூரங்கள் மறைக்கப்பட்டு வந்ததைத் தளபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதும்,

அதன் தீவிரத்தை உணர்ந்த தளபதி அவர்கள் அணு உலை 1 & 2 இவற்றின்  நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பது கண்டு, அரசியலும் அரசும் தலையிடாவண்ணம், அணு உலை பற்றி அறிந்த விஞ்ஞானிகள்,

அரசு சாரா அறிஞர்கள்குழு பரிசோதிக்க வேண்டும் என்று, சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதி, அதற்கு மேலும் முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் போற்றுதலுக்குரிய திரு.திருச்சி சிவா,ஆலந்தூர் திரு.பாரதி அவர்கள்  தலைமையில் நேரடியாக எதிர்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் கடிதத்தை கொடுத்து தங்களின் வேதனையை, மக்களின் பயத்தை, தமிழக மக்கள் சார்பாக அளித்திருக்கிறார்கள்.

எத்தனையோ இயற்கைப் பேரிடர்கள் வந்திருக்கின்றன. மக்களும் பாதிப்படைந்திருக்கிறார்கள். அதையெல்லாம் கூட அந்தந்த அரசுகள் சமாளித்திருக்கின்றன.

ஆனால் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த கூடங்குளம் அணு உலையில் அணு உலையால் பாதிப்பு ஏற்பட்டால் காக்கை, குருவி ஏன் புல் பூண்டு கூட மிஞ்சாது.

இந்த நிலையறிந்த தளபதி அவர்கள், அதுவும் அடுத்து ஆட்சி அமைக்கப் போகும் நிலையில், முதல்வராகப் பொறுப்பு ஏற்க இருக்கும் நிலையில், இதன் முக்கிய காரணகர்தா பூவுலகின் நண்பர்கள் மற்றும் எம் போன்றோர் கத்திய கதறலுக்குச் செவிமெடுத்திருப்பது ஒரு திருப்பு முனையே ஆகும். இதுகூட தளபதி அவர்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. தமிழகம் ஒரு மிகப்பெரிய பேராபத்திலிருந்து  காப்பாற்றப்படப் போகிறது என்கிற உள்ளார்ந்த நன்றியின் வெளிப்பாடே.

திமுக  சப்தமில்லாமல் செய்திருக்கும் இந்தச் செயல்  இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது.

ஏனெனில் ஆபத்தை எல்லோராலும் அறிந்து கொள்ள முடியாதுதான். கூடங்குளம் அணு உலையால் என்னென்ன, எந்தெந்த விதத்தில் ஆபத்துக்கள் வருமென்பதும், அதைத் தடுக்க எந்த மனித சக்தியாலும் முடியாதென்பதால் அதன் தீவிரம் அறிந்து நடவடிக்கைகளை எடுத்திருக்கிற திமுக இன்றல்ல என்றும் மக்களின் காவலனே. சிங்கராயர் போன்றவர்கள் மட்டுமல்ல தமிழ்தாயும்  வாழ்த்துவாள்.

தளபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

 

Pin It