கருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 30, 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.

 

 

Pin It

கடந்த 25 ஆம் தேதி, இந்தியப் பிரதமர் மோடி, ‘சௌபாக்கியா யோஜனா’ என்னும் மின்னொளித் திட்டத்தை அறிவித்தார். 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் எல்லா கிராமங்களிலும் மின் இணைப்பைக் கொடுப்பதாகத்  திட்டம்.

இத்திட்டத்தை செப் 25 ஆம் தேதி அறிவித்ததற்கும் ஒரு காரணம் உண்டு. அது தீனதயாள் உபாத்தியாயாவின் பிறந்த நாள். 1916 செப் 25 அன்று உ.பி.யில் பிறந்தவர் அவர். 20 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில்  தன்னை இணைத்துக் கொண்டவர். 1967&-68 இல் அவ்வியக்கத்தின்  தலைவராகவும் இருந்தவர்.  அதாவது அவர்கள் கட்சியில் அவர் ஒரு தலைவர். அவ்வளவுதான். ஆனால் அவரை நாட்டின் தலைவர் போல ஆக்கி, அவர் பிறந்தநாளில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் பிரதமர்.

india rural electrification

இந்த அறிவிப்பைப் பார்த்தவுடன், இது தமிழகத்திற்கு மிகவும் பழையது என்பதைச் சுட்டிக்காட்டி என் கீச்சகத்தில் (ட்விட்டர்) ஒரு பதிவை நான் ஏற்றினேன். 1976ஆம் ஆண்டு மார்ச் மாதமே, தமிழகத்தில் 99.2% மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது என்னும் செய்தியைப் பதிவு செய்தேன்.

உடனே காவிப்  படைகள் வெகுண்டெழுந்து நான் பச்சைப் பொய் சொல்வதாக மறு பதிவு இட்டன. அவற்றுள் மிகச் சில மட்டுமே  சற்று நாகரிகமான பதிவுகள்  என்று சொல்ல வேண்டும். ஆபாசம், வன்முறை ஆகிய இரண்டு மட்டுமே அவர்களின் பதிவுகளில் எப்போதும் தலைதூக்கி  நிற்கும். அவர்களுக்காக அன்றி, பொதுவான மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்  என்பதற்காகச் சில சான்றுகளை இங்கே தந்துள்ளேன்.

1976இல் நூறு விழுக்காடு மின் இணைப்பு பெற்ற  மாநிலமாக ஹரியானா மட்டுமே இருந்தது. இரண்டாம் இடத்தில் இருந்தது தமிழ்நாடு. அடுத்து கேரளா. 1980களின் தொடக்கத்தில், ஹரியானா, பஞ்சாப், தமிழகம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களும் 100% மின் இணைப்பைப் பெற்றன. இதுதான் உண்மைச் செய்தி!

எப்போதோ தமிழகம் நம் தலைவர் கலைஞர் ஆட்சியில் செய்து முடித்தவைகளை, இப்போது தன்  சாதனைத் திட்டமாக வெளியிட்டுக்  கொண்டுள்ளது மோடி  அரசு.                                                  

Pin It

“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” இப்படி நயமாகச் சொல்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

உலகத்தில் பயங்கரமான ஆயுதம், நிலை கெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்கு என்று கோபமாக அடையாளம் காட்டுகிறார் பட்டுக்கோட்டையார்.

தமிழகத்தின் அம்மா ஜெயலலிதாவாம். இந்தியாவின் அம்மா மோடியாம்.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராசனின் நாவன்மையில் விழுந்த ‘பொன்மொழி’ இது.

ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை கூடத் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் இவர்.

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து, மத்திய அரசுக்கு எதிராக அவதூறுகளைச் சொல்லி வருகிறாராம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் & சொல்கிறார் தமிழிசை.

அது அவதூறு இல்லை, உண்மை!

பா.ஜ.க.வைத் தவிர அனைத்துக் கட்சித் தலைவர்கள், அறிஞர் பெருமக்கள், தொல்லியல் விற்பனர்கள், மக்கள் என எல்லோரும்தான் கீழடிக்காக மத்திய அரசைக் கண்டித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சிந்து சமவெளி நாகரிகத்தைப் பார்ப்பன நாகரிகமாகக் காட்டப் பல பொய்களைச் சொன்னார்கள் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வினர்.

இல்லாத சரஸ்சுவதி நதியை இருப்பதாக நா கூசாமல் பொய் சொல்கிறார்கள்.

வால்மீகியே சொல்லாத இராமன் பாலத்தை இருப்பதாகச் சொன்ன இவர்களின் பொய்யை நாசா ஆய்வுப் படம் தகர்த்தெறிந்தது.

ஆனாலும் பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று கோயபல்ஸ் பின்னால் நிற்கிறார்கள்.

“பொய்” - அது நமக்குத் தொழில் என்பது பா.ஜ.க.விற்குப் பொருந்தும். ஊடக விவாதங்களில் பா-.ஜ.க.வினரிடம் இதைப் பார்க்கலாம்.

கருப்புப் பணத்தைப் பிடுங்கி ஆளுக்கு 15 லட்சம் தருகிறேன்  என்றும், நாட்டை முன்னேற்றப் போகிறேன் என்றும் சொன்ன மோடியின் பொய் இதுவரை நின்றபாடில்லை.

பொய் சொன்ன வாய்க்கு போசனம் கிடைக்காது என்பார்கள் மக்கள்.

உண்மை பேசாவிட்டாலும் பரவாயில்லை.

இனியாவது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வினர் (மற்றவர்களை தூற்றிப்) பொய் பேசாமல் இருப்பது நல்லது.

முதலில் இனிமையாகப் ‘பேசுவதற்குக்’ கற்றுக்கொள்ள வேண்டும்.

Pin It

அடுக்குமொழி அண்ணாதுரை!

பேரறிஞர் அண்ணா அவர்களை, ஒருகாலத்தில்  மக்கள் ‘அடுக்குமொழி அண்ணாதுரை’  என்று அழைத்தனர். அவர் வெறும் அடுக்குமொழிக்குச் சொந்தக்காரர் மட்டுமில்லை, சமூக அடுக்குகளைச் சாய்க்க வந்த சமூகப் போராளியும் கூட என்பதைப்  பிறகு நாடு புரிந்துகொண்டது.

(27.09.17 அன்று சென்னை பாடியில் நடைபெற்ற தி,மு.க. பொதுக்கூட்டத்தில் சுபவீ)

***

பாவம் சிவாஜி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத் திறப்பு விழாவிற்கு (அக்.1) ஓர் அமைச்சர்தான் வருகிறாராம். வட்டச் செயலாளர் யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது!

(ட்விட்டரில் சுபவீ)

***

குதிரை பேர அரசும், குதிரை தேடும் அரசும்!

நாட்டின் அரசியலை எதிர்கொள்ள  நமக்கு இன்று பெரியாரின் துணிவு தேவைப்படுகிறது. அந்தத் துணிவும் இருவகைப்பட்டது. ஒன்று, தமிழக ஆளுங்கட்சியின் இன்றைய அரசியல்  கூத்தைச் சகித்துக் கொள்ளும் துணிவு. இன்னொன்று, நம்மை நோக்கி வந்துகொண்டுள்ள காவி ஆபத்தைச் சந்தித்து வீழ்த்தும் துணிவு!

இங்கே உள்ள அரசு,  குதிரை பேர அரசு என்பார் நம் தளபதி. அங்கே உள்ள அரசோ, இங்கே ஆட்சி அமைப்பதற்குப் பெரிய நடிகர் யாரேனும் கிடைக்க மாட்டார்களா என்று தேடிக் கொண்டிருக்கிறது. ஆம், இது குதிரை பேர அரசு, அது குதிரை தேடும் அரசு!

- குன்றத்தூர் போதுக் கூட்டத்தில் சுபவீ.

Pin It

சென்ற இதழ்த் தொடர்ச்சி...

1953 இல் இந்தியப் பிரதமர் நேருவும், மியான்மரின் பிரதமர் யூபனாவும் நாகாலாந்தின் சில பகுதிகளுக்குப் பயணம் செய்தனர். அப்போது NNC பிரதிநிதிகள் “நாகாலாந்தைப் பிரிக்கக் கூடாது” என்ற கோரிக்கையை முன்வைத்து மனு அளிக்க முயன்றனர். ஆனால் இரு பிரதமர்களும் அம்மனுவை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டனர். இதனால் நாகா மக்கள் இருபிரதமர்களின் வருகையையும் புறக்கணித்தனர். 12,000 பேர் கூட வேண்டிய விளையாட்டுத் திடலில் ஒரு சில அரசு அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் இல்லை.

இந்தப் புறக்கணிப்பிற்குப் பிறகும் இரு நாட்டுப் பிரதமர்களும் நாகாலாந்தை இரண்டாகப் பிரித்தனர். நாகாலாந்தின் பெரும்பகுதி மியான்மருக்குச் சென்றது. இந்தியாவில் மணிப்பூர், அசாம் மற்றும் அருணாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்கள் நாகாலாந்தில் இருந்தது.

இந்திய அரசு NNC தலைவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், பின் தொடரவும், கைது செய்யவும் துணை இரானுவப்படையை அனுப்பியிருந்தது. 1958 இல் நாகாலாந்து மக்களுக்கு எதிராக இந்திய அரசு Armed Forces Special Power Act, ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் இயற்றியது. மூன்று பேருக்கு ஒரு இரானுவ வீரர் என்ற விகிதத்தில் இராணுவம் குவிக்கப்பட்டது. பின்னர் துணை இராணுவப் படையின் அட்டூழியம் அதிகமானது. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். ஆண்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். பலர்கொல்லப்பட்டனர். இதனால் வேறு வழியின்றி, இதுவரை மனுக்கள் மட்டும் அளித்து வந்த NNC தலைவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டியிருந்தது. நாகாலாந்தில் வன்முறை தொடங்கியது. நாகா இனத்தை முற்றிலுமாக ஒழித்துவிடும் எண்ணத்தோடு துணை இரானுவம் செயல்பட்டது.

Article 371A:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வன் முறைக்குத்தீர்வு காணவிரும்பிய சில படித்த நாகா மக்கள் ‘Naga People’s Convention’ (NPC) என்ற ஒரு அமைப்பை உருவாக்கி இந்திய அரசிற்கும், NNCக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தியது. 1960இல் NPC இந்திய அரசுடன் 16 அம்ச ஒப்பந்தம் ஒன்றைக் கையொப்பமிட்டது. இதன் படி நாகாலாந்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் இரண்டாவது அம்சத்தின் படி நாகாலாந்து இந்திய வெளியுறவுத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

வருமான வரிவிலக்கு போன்ற அம்சங்களும் இதில் அடங்கும். இந்த 16 அம்ச ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு ‘Article371A’’ உருவாக்கப்பட்டது.

ஆனால் 1973ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் தன்னிச்சையாக வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குக் கீழ் இருந்த நாகாலாந்தை உள்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வந்தது. நாகாலாந்து சட்டமன்றத்தில், மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வரவேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1975இல் இந்திய அரசிற்கும் NNCக்கும் இடையே ஷில்லாங்கில் ஒரு உடன் படிக்கை கையெழுத்தானது. இதில் பலர்அதிருப்தி அடைந்தனர். அதனால் NNC ஒன்பது குழுக்களாக உடைந்தது. 1980இல் NSC-IN என்கிற வலுவான அமைப்பு உருவாகியது. இவ்வமைப்பை இந்திய அரசு அங்கீகரித்து பேச்சு வார்த்தை நடத்தியது. இப்படிப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

2012இல் நாகாலாந்தின் 60 சட்ட மன்ற உறுப்பினர்களும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கும் பதவி விலகல் கடிதத்தை அனுப்பினர். பல ஆண்டுகளாக போராடிவரும் தங்களுக்குத் தீர்வு வேண்டி இந்நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. காங்கிரஸ் அரசைத் தொடர்ந்து பா.ஜ.க அரசிலும் இப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று முதல் சட்டகம் (Framework 1) உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் அம்சங்கள் மிகவும் இரகசியமாகப் பேணப்பட்டு வருகிறது.

இதை போல் மியான்மரிலும் 1988 இல் NSC-IM என்ற அமைப்பு உருவானது. 2012 ஆம் ஆண்டு மியான்மர் அரசிற்கும் NSC-IM அமைப்பிற்கும் இடையே 6 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் தங்கள் உரிமைப் போராட்டங்களில் இது வரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிர்களை நாகா மக்கள் இழந்திருக்கின் றனர். தொடர்ந்து நம்பிக்கையோடு உரிமை மீட்பிற்காகத் தளராது குரல் எழுப்பி வருகிறார்கள்.

நிறைவாக கேள்வி பதில் அமர்வில், நாகா மக்கள் போராட்டத்தின் விழுமியமாக எது இருக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குத் திரு.வபாங் தோஷி அளித்த பதில் - மனிதநேயம்!                        

Pin It