“உணரச் செய்தான் உன்னை & அவன்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும்

உணரச் செய்தான் உன்னை” என்று திராவிடக் கவிஞர் பாரதிதாசன் உணர்த்தியதை, தமிழ்நாட்டின் எல்லைகளுக்கப்பாலும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தாய் மொழி உயிர்த்திருப்பதன் அவசியத்தை, பிற மொழித் திணிப்பின் கேடுகளை, தேசிய இன உணர்வை, மாநில உரிமைகளை உணரவும், அதற்காக உரத்துக் குரல் கொடுக்கவும் தலைப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளாவும், கர்நாடகாவும் வெளிப்படையாக உரிமைக் குரல்களை எழுப்பத் தொடங்கியுள்ளன. மேலும் சில வட மாநிலங்களும் எப்போது வேண்டுமானாலும் வெடித்துக்கிளம்பும் கொதிநிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

இந்தியை அழித்த தமிழ்நாட்டுத் ‘தார்’, கர்நாடகாவிலும் தன் வேலையைத் தொடங்கியிருக்கிறது. இந்தித் திணிப்பை எதிர்க்கும் போராட்டங்கள் அங்கே வீறுகொண்டு எழுந்துள்ளன. இந்தி எழுத்துகள் தார் பூசி அழிக்கப்படுகின்றன. இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கம் கர்நாடகாவில் கட்டப்பட்டு வருகிறது. முதல்வர் சித்தராமையா, இந்தி பேசாத மாநிலமான கர்நாடகாவில் இந்தியில் பெயர்ப்பலகைகள் தேவையில்லை என்று கூறியிருக்கிறார். இந்தித்திணிப்பு மாநில மக்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது என்றும் சொல்கிறார்.

இதில் என்ன முரண் என்றால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான், பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடம் என்றது...மத்திய காங்கிரஸ் அரசுதான் இந்தியை ஆட்சி மொழியாக்க முயன்றது...அன்றைக்குக் காங்கிரசை எதிர்த்துதான் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன...இன்றைக்கு அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தாமையா இந்தித் திணிப்பை எதிர்க்கிறார். அப்படி ஒரு ‘நல்ல’ காலச் சூழலை மத்திய பாஜக அரசு உருவாக்கித் தந்திருக்கிறது. தென் மாநிலங்களில் & ‘திராவிட தேச’த்தில் & மீண்டும் மாநில உரிமை முழக்கம் புத்துயிர் பெறத் தொடங்கியிருக்கிறது.

2014, மே மாதம் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது முதலே, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் குவிப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது. சங்பரிவார் கும்பல்களின் அடிப்படை செயல்திட்டமான ‘அகண்ட பாரத’த்திற்கு ஆழமான அடித்தளம் அமைக்க ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்த ஒப்பந்ததார்களே, மோடியும், அமித்ஷாவும். ஆரிய நாகரிகமே இந்தியாவின் கலாசார அடையாளம், இந்துத்துவமே இந்தியாவின் மதக்கோட்பாடு, இந்தியே இந்தியாவின் மொழி என்று நிறுவி, இந்தியத் துணைக்கண்டத்தை ‘பாரத வர்ஷ’மாக்கும் முறைகெட்ட வேலையை, அதிகாரத்தின் துணை கொண்டு செய்து வருகிறது பாசிச பாஜக அரசு.

அதன் ஒரு பகுதியாக இந்தித் திணிப்பையும், அதன் வழி சமற்கிருத மேலாண்மையையும் நிலைநாட்ட முயல்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்குத் திட்டமிட்டு, சமற்கிருதத்தில் பெயர் சூட்டப்படுகிறது. தீன்தயாள் உபாத்தியாயா போன்ற ஆர்எஸ்எஸ் அடிப்படைவாத சித்தாந்திகளின் பெயர்களில் திட்டங்களும், சிறப்பு நாள்களும் அறிவிக்கப்படுகின்றன. மாநில அரசின் பங்களிப்புள்ள திட்டங்களிலும் இந்தி திணிக்கப்படுகிறது. இப்போது கர்நாடகாவில் நடப்பதும் அதுதான்.

அந்த மாநிலத்தின் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தியில் பெயர்ப்பலகைகளை வைத்துள்ளது ரயில்வே துறை. மெட்ரோ ரயில்களிலும் இந்தியை இடம்பெறச் செய்துள்ளனர். கன்னடமும், ஆங்கிலமும் இருக்கும்போது, தேவையற்ற இந்தியைத் திணிப்பது ஏன் என்ற கேள்வியுடன், கன்னட மக்கள் களத்தில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். கர்நாடக ரக்சன வேதிகே என்ற அமைப்பு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறது. அது மட்டுமின்றி, இந்தி பேசாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மகாராட்டிரம் உள்ளிட்டவற்றின் மாநிலக் கட்சிகளைக் கொண்ட இந்தி எதிர்ப்பு முன்னணியை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

முதற்கட்டமாக மொழி உரிமை, தேசிய இன உரிமை, சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிவரும் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பிற்கு கன்னட அமைப்பு அழைப்பு அனுப்பியிருக்கிறது. இந்த சந்திப்பு செப்டம்பர் 15ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில், இந்தித் திணிப்பு எதிர்ப்பை அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்றாகக் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடாக மாநில திமுக பொறுப்பாளர் திரு இராமசாமி மூலமாக திமுகவின் தலைமைக்கு செய்தி அனுப்பியிருப்பதாக, கர்நாடக ரக்சன வேதிகே அமைப்பின் மூத்த உறுப்பினர் சன்னீரப்பா தெரிவித்திருக்கிறார். மொழி உரிமைப் போராட்டத்தில் கரம் கோத்துச் செயல்பட திமுக எப்போதும் முன்னணியில் நிற்கும் என்பதை, திரு இராமசாமியின் வழியாக திமுகவும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

அஇஅதிமுகவுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் ஒட்டு மொத்த உரிமைகளையும் மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்துத் தெண்டனிட்டுக் கிடக்கும் ஆளும் அதிமுக, மொழி உரிமையில் மட்டும் என்ன செய்துவிடப் போகிறது?

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநில உரிமையைத் தீவிரமாகப் பேசி வரும் நவ நிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கும் செப்டம்பர் 15 கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடகாவிற்கு, தமிழ்நாட்டுடன் காவிரி நதி நீர்ச்சிக்கல் இருப்பதைப்  போன்று, மகாராஷ்டிராவுடன் நீண்டநாள்களாகத் தீராத எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. ஆனாலும், இப்போதைய உடனடித் தேவை, மத்திய பாஜக அரசின் பாசிசப் போக்கை எதிர்ப்பதுதான் என்ற முடிவுக்குக் கர்நாடகா வந்திருக்கிறது என்பதையே, அங்கு நடைபெறும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் காட்டுகின்றன.

மொழியே ஓர் இனத்தின் அடையாளம் என்பதை எப்போது ஒரு தேசிய இன மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்களோ, அடுத்தடுத்து ஒவ்வொரு கட்டுகளையும் வெட்டி எறிந்து, தன்னாட்சியை நோக்கி நகரத் தொடங்குவார்கள். கர்நாடகா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. மாநிலத்திற்கென்று தனிக்கொடி வேண்டும் என்ற கருத்து அங்கே வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது. இதிலும் தமிழ்நாடு கர்நாடகத்திற்கு முன்மாதிரியாக இருப்பதை வரலாறு சொல்கிறது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர், மாநிலத்திற்குத் தனிக் கொடி வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார். இந்திய தேசியக் கொடி மேல்புறத்திலும், அதற்குக் கீழே வலது புறத்தில், தமிழ்நாடு அரசின் இலச்சினையும் பொறிக்கப்பட்ட ‘மாதிரி’ கொடியை, 1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி டெல்லியில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் கலைஞர் வெளியிட்டார். மாநிலங்களுக்குத் தனிக்  கொடி என்பதைப் பரிசீலிப்பதாக பிரதமர் இந்திராகாந்தியும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய ஒன்றியத்தை ஒரு மொழி, ஒரு கொடியின் கீழ் கொண்டுவர, தேசிய கீதம், பாரத் மாதாகீ ஜே, வந்தே மாதரம், தேசப்பற்று..எனப் பல உத்திகளையும் சங்பரிவார் கும்பல்கள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. அதேநேரம், பாஜகவின் அதிகார பலத்தால், பற்ற வைக்கப்படும் தேசப்பற்று பற்றி எரிய எரிய, அந்த வெப்பத்தில் மாநில உரிமைகள் வெடித்துக் கிளம்புவதையும் பார்க்க முடிகிறது.

கடந்த ஆண்டு, கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் திருநாளை, பாஜக தலைவர் அமித்ஷா ‘வாமன ஜெயந்திக்யாக்கி வாழ்த்துத் தெரிவித்தார். தங்களின் நல்வாழ்வுக்காகத் தன்னையே தியாகம் செய்த தங்கள் மன்னன் மாவலியின் வருகையைக் கொண்டாடும் நன்றிமிகுந்த பண்டிகையைக் கொச்சைப்படுத்திய பாஜகவிற்கு எதிராகக் கேரள மக்கள் கொதித்தெழுந்தனர். நாங்கள் ‘திராவிடர்கள்’ ஆரியப் பண்டிகைகளைக் கொண்டாட மாட்டோம் என கேரளம் உரத்து முழங்கியது. சமூக வலைத்தளங்களில், திராவிட நாடு ஹேஷ்டேக் முதல் இடத்தைப் பிடித்தது. கேரள மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திய அமித்ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார் முதல்வர் பினராய் விஜயன். திராவிட நாடு முழக்கம், ஆரியத்தை குலை நடுங்கச் செய்தது. மன்னிப்புக் கேட்டார் அமித்ஷா,, பதற்றத்தைத் தணிக்க, அவருடைய கூட்டாளி, பிரதமர் மோடி, ஓணம் கொண்டாடினார்.

தமிழ்நாட்டில் திமுக மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், பாஜகவின் மதவாத அரசியலை முறியடிக்கவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இணக்கமான கொள்கைகளை உடைய கட்சிகளை, மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஒன்று திரட்டி வருகிறார், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். பிரிவினைவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது, ‘திராவிட நாடு கோரிக்கையை இப்போது கைவிடுகிறோம். ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன’ என்றார் பேரறிஞர் அண்ணா. காரணங்கள் வலுப்பெற்றுக் கொண்டே வருகின்றன. இந்தித் திணிப்பு எதிர்ப்பை நோக்கிக் கேரளமும், திராவிட நாடு முழக்கத்தை நோக்கி கர்நாடகமும், இந்த இரண்டையும் நோக்கி ஆந்திரமும் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.   

Pin It