மனிதர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தவும், ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவும், சகமனிதர் களைச் சகோதரர்களாகப் பாவிக்கவும், அன்புகொள்ளவும், கருணைகொள்ளவும் எழுதப்பட்ட எந்த வேதங்களும் படிக்க வேண்டும் என்று போதிக்கவில்லை அல்லது எழுதப்படவில்லை. தமிழர்களின் திருமறையான திருக்குறள் ஒன்று மட்டும்தான், தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றணைத் தூறும் அறிவு என படிப்பின் மகத்துவத்தை உணர்த்தியது. அந்த மறையை இப்போது யாரும் படிக்க ஆர்வம் காட்டவில்லை என்பது வேதனையான செய்தி.

படிப்பின் மகத்துவத்தை அவசியத்தை வேதங்களே சொல்லாதபோது வியாபாரமயமாய்விட்ட சினிமா சொல்லிவிடுமா என்று ஏங்கித் தவித்த வேளையில் அந்த ஏக்கத்துக்கு ஆதரவாக மருந்தாக அத்திபூத்தாற்போல் தோனி என்ற ஒரு திரைப்படம் பூத்துள்ளது.

நடுத்தர மக்களின் உணர்வுகளையும், வேதனைகளையும், பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்குப் பெற்றவர்கள் படும்பாட்டையும் மிக நேர்த்தியாக சமூக அக்கறையோடு சொல்லியிருக்கும் தோனி என்ற திரைப்படத்தைப் பார்க்கும்போது, ஒரு நடுத்தர மனிதன் சுமக்கும் தகப்பன் என்ற பாரம் அவசியம்தானா என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியாது. தோனி போல ஆக வேண்டும் என்கிற ஆர்வத்தோடு மட்டைப்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தும் மகனுக்கு, தன் மகன் படிக்க வேண்டும் அதுவும் முதல் மாணவனாக வரவேண்டும் என்கிற யதார்த்த கற்பனை உள்ள தகப்பன். நேர் எதிர் வினைகள் ஒரே இடத்தில் இருக்கும்போது, அங்கு போர் மூளுவதுதானே யதார்த்தம், அந்தப் போரே மகனுக்கும் தகப்பனுக்கும் என்றால், அங்கு பாசப் பிணைப்புகள் எல்லாம் அற்றுப்போவதுதான் இயல்பு.

அவ்வியல்பை நடுத்தர மக்களின் வாழ்வியலோடு பிணைத்துச் சொல்லியிருக் கும் நடிகர் பிரகாஷ்ராஜ் இதில் இயக்குனரா கவும் முத்திரை பதித்துள்ளார். பிரகாஷ்ராஜ் போல் உள்ள தகப்பன்கள்தான் நம் நாட்டில் அதிகம் பேர் உள்ளனர். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களையே பார்ப்பதுபோல் ஏற்படும் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாது.

மாதச் செலவைச் சமாளிக்க அவர் படும்பாடுகளில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. கதையின் களம் பிரகாஷ்ராஜின் மகனைப் பற்றி இருந்தாலும் படம் முழுவதும் நிறைந்திருப்பது பிரகாஷ்ராஜும் அவரின் இயல்பு மாறா நடிப்பும்தான்.

அவருக்கு ஏதாவது பிரச்சினை தலைதூக்கும்போது, நம்மை அறியாமல் அவர் செலவுக்கு என்ன செய்வார் என்று பார்ப்பவர்களைக்  கணக்குப்போட வைக்கும் காட்சிகள், நம்மைப் படத்தோடு ஒன்றச் செய்கின்றன. அவருடைய பெண் பூப்பெய்தியவுடன், அய்யோ அடுத்த செலவா எனப் பார்ப்பவர்களைக் கவலை கொள்ளச் செய்யும் காட்சி அமைப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது.

தன்னுடைய மகன் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்பதை அறிந்து பள்ளியில் முதல்வரிடமும் ஆசிரியர்களிடமும் என் பையன் எப்படியாவது படிச்சிடுவான் என்று கெஞ்சுவது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகப்பனுக்கும் ஏற்படும் அனுபவம்... இப்படி ஒரு சங்கடத்தைத் தகப்பனுக்கு ஏற்படுத்தக் கூடாது என்று மகன்களும், மகள்களும் நினைக்க வேண்டுமே என மனம் ஏங்குகிறது. தங்கள் பள்ளியின் நூறு சதவிகித வெற்றிக்காகவும் அதே சமயம் வியாபார நோக்கத்திற்காகவும் பள்ளியின் நிர்வாகம் நடந்துகொள்ளும் முறையைத் தெளிவாகக் காட்டியதுடன் சாட்டையால் விளாசியிருப்பதும் கல்வியை வியாபாரமாக்கும் கயவர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையே.

படத்தின் இயக்குனர் பிரகாஷ்ராஜ், இசையில் தன்னுடைய தனி முத்திரையைப் பதித்திருக்கும் இசைஞானி இளையராஜா உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

குழந்தைகளை மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக்கி வைத்திருக்கும் கல்வி முறை, அவர்களின் உரிமைகளை மிகக் கடுமையாக ஒடுக்குகிறது என்பதை உணர்ந்தே, கல்வியாளர்கள் பலரும் இன்றைய கல்வி முறையை மாற்றக் கோரிவருகின்றனர். இன்றைய கல்வி முறையானது சிறந்த மனிதர்களை உருவாக்குவதாக இல்லை. மாறாக, மருத்துவர்களையும், பொறியாளர்களையும் வடிவமைத்துச் சந்தைக்கு அனுப்புகின்ற தொழிற்சாலைகளாகவே கல்விச் சாலைகள் இருக்கின்றன. குடும்ப உறவுகள், சமூகத் தோழமை, மனித நேயம் இவற்றின் நிழல் கூடப் படியாத இளைய சமுதாயத்தை அவை உருவாக்கி வருகின்றன.

குழந்தைகளின் இயல்புகளுக்கு மாறாக, அனைத்தையும் அவர்களிடத்தில் திணிக்கும் கல்வி முறையை விமர்சிக்கும் மற்றொரு படம் நண்பன் (இந்தியில் த்ரீ இடியட்ஸ்). அந்தப் படத்தில் இறுதிக் காட்சியில் காட்டப்படும், விஜய் நடத்தும் பள்ளி மாற்றுக் கல்விக்கு ஒரு மாதிரிப் பள்ளி. அப்படிப்பட்ட மாற்றுப்பள்ளிகள், மனித நேயமிக்க சமூக கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கும்.

திணிக்கப்பட்ட கல்வியே ஆசிரியர் உமாமகேஸ்வரியின் கொலைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. 

Pin It