இரண்டு நாட்களுக்குமுன் விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூருக்கு அருகேயுள்ள மண்டபம் கிராமத்தில் வாழும் இருளர் பழங்குடி இனத்தைச் சார்ந்த ஏழை மக்கள் மீது திருக்கோவிலூர் காவல்நிலையத்தைச் சார்ந்த காவலர்கள், ஒரு திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்குக் காசி என்ற இளைஞரைக் கூட்டிச் சென்று காவல்நிலையத்திலேயே அடைத்து வைத்துள்ளனர். இதையறிந்த காசியின் தாயார் வள்ளி காவல்நிலையம் சென்று தனது மகனை விடுவிக்குமாறு வேண்டியுள்ளார்.
அதற்கு திருக்கோவிலூர் காவல்நிலைய அதிகாரிகள் உங்கள் உறவினர்கள் அனைவரும் இங்கு வரவேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திவிட்டு அனுப்பி விடுகிறோம் என்று கூற சரி என்று கூறிவிட்டு ஏழை தாய் வள்ளி வீடு திரும்பி விட்டார்.
பின்னாலேயே போலீஸ் வேனில் சென்ற காவலர்கள் வேனை நிறுத்தி வள்ளியை ஏற்றிக்கொண்டு காசியின் வீட்டுக்குச் சென்று காசியின் தம்பி மனைவி லட்சமி (வயது 18), காசியின் மனைவி கார்த்திகா (வயது 20), காசியின் தங்கை ராதிகா (வயது 17) மற்றொரு உறவினர் பெண் மகேஸ்வரி (வயது 20) ஆகியோரை வண்டியில் ஏற்றிக்கொண்டு 22.11.2011 இரவு முழுவதும் அருகில் உள்ள தைல மரக்காட்டுக்குள் கொண்டு போய் வைத்து, வள்ளியின் கண் எதிரிலேயே 4 காவலர்கள் அந்தப் பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளனர். அய்யா நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்னை ஒன்றும் செய்யாதீர்கள் என்று லட்சுமி எவ்வளவோ கெஞ்சிக் கதறியும் அந்தக் காமக் கொடூரன்கள் விடாமல் சிதைத்துச் சீரழித்துத் தங்கள் காமவெறியைத் தணித்துக் கொண்டதோடல்லாமல், சிறு பெண் ராதிகாவை நிர்வாணமாக்கி ஆடைகளையும் பறித்துக் கொண்டு, இதை நீங்கள் வெளியே சொன்னீர் களானால் இன்னும் பல வழக்குகளில் வெளியே வரவே முடியாத கேஸ் போட்டு உள்ளேயே கிடக்கச் செய்து விடுவோம் என்று மிரட்டிச் சென்றுவிட்டனர்.
இதனை அபலை லட்சுமி மற்ற ஊர்க்கா ரர்கள் உதவியுடன் விழுப்புரம் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கூறியுள்ளார். வன்புணர்ச்சிக்கு ஆளான அந்தப் பெண்களும் நடந்தவற்றைக் கூறியதோடு, மலைவாழ் மக்கள் பாதுகாப்புச் சங்கத்தினரிடம் கூறி அந்த அமைப்பும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
திருச்சியிலிருந்து பன்னீர்செல்வம் என்ற மேலதிகாரி இடத்துக்கு விரைந்துள்ளாராம்!
இதிலே வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால், காவல்துறை அதிகாரிகள் அந்தப் பாதிக்கப்பட்ட அபலைப்பெண்களிடம், இரவில் காட்டுக்குள் கற்பழித்த காவலர்களை அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்டுள் ளார்கள். இங்கேதான் காவல்துறையினரின் போக்கு புரிகிறது.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் தைல மரக்காட்டுக்குள், அங்கும் ஓர் மறைவிடத்தில், இளம் பெண்கள் நால்வரையும் வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டுப் பாலியல் வன்முறை நிகழ்த்தியவர்களை அந்தப் பெண்கள் நிதானமாக அங்க மச்ச அடையாளங் கண்டு மனதில் வைத்திருந்து கூற வேண்டுமாம் ! எப்படி ஜெயலலிதா போலீஸ்? என்னாகும் இந்த வழக்கு?
சென்னையில் ஒரு புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞரின் மகன் இளம் வழக்கறிஞர் சதீஸ் குமாரின் படுகொலையிலேயே சி.பி.சி.ஐடி, சி.பி.ஐ., ஆகிய புலனாய்வுப் புலிகளால் துப்புக் கண்டுபிடிக்க முடியவில்லை. உயர்நீதிமன்றமே கடுமையாகக் கண்டித்த பிறகும், உச்ச நீதி மன்றமே உத்தரவிட்ட பின்னும் நமது சி.பி.ஐ.யின் கூர்மையான புலனாய்வுத் திறன் சந்தி சிரிக்கிறது. இந்த நிலையில் திருக்கோவிலூர்க் காவலர்களை விழுப்புரம் மாவட்டக் காவல்துறை என்ன செய்யப் போகிறது?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏடான தீக்கதிர் தனது தலையங்கத்தில், தனது ஆட்சி வரும் போதெல்லாம் காவல்துறை அத்துமீறல் நடப்பது ஏன் என்பதை முதலமைச்சர் இப்போதாவது தன் மனதைச் செலுத்தட்டும். வழக்கை இழுத்தடித்துக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலும் பழைய வழி முறைகளைக் கைவிடட்டும். விரைவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு அந்த விசாரணை முறையா நடைபெறத் தோதாக வன்கொடுமைக் குற்றத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உரிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வதும் அவசியம். (தீக்கதிர்: 28.11.2011)
என்று குறிப்பிட்டுள்ளது.
ஜெயலலிதா ஆட்சியில் மட்டும்தானே இப்படிக் கூட்டுப் பாலியல் வன்முறைகள் நடந்து வருகின்றன.
வாச்சாத்தி, சின்னாம்பதி
சிதம்பரம் - அண்ணாமலை நகர்
முண்டியம்பாக்கம், திருக்கோவிலூர்
- இப்படித் தொடர்கிறது ஜெ. அரசின் சாதனை! ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் காவல்நிலையங்கள், காமவெறியாட்டங்களின் களங்களாகி விடுகின்றனவே, ஏன்?
எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கினால் போதும், மற்றபடி காவல்துறை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறாரா முதலமைச்சர்?