தமிழ்நாட்டில் கொலைகள் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன என்பதைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, திருப்பாச்சேத்தி அரிவாள்கள் உற்பத்திக்குத் தடை விதித்துள்ளது.

சாதியை ஒழிக்கத் தவறிய மத்திய அரசு,சாதி வாரிக் கணக் கெடுப்பை மட்டும் ஒழித்து விட்டதைப்போல, கொலைகளைத் தடுக்கத் தவறிய தமிழக அரசு, இன்று அரிவாள்களுக்குத் தடை விதித்துள்ளது.

அரிவாள்களால் மட்டும்தான் கொலை செய்ய முடியும் என்று கூறமுடியாது.தடிகளால் தாக்கிச் சில கொலைகள் நடந்திருக்கின்றன.அதற்காகத் தடிகளை எல்லாம் தடை செய்ய முடியுமா?கைகளாலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிடுகிறவர்கள் உண்டு. அதற்கு எந்த மாற்று வழியை அரசு மேற்கொள்ளப் போகிறது?

இன்னொரு கோணத்திலும் இதனை நாம் பார்க்க வேண்டும். மதுரைக்கும், மானாமதுரைக்கும் இடையில் திருப்பாச்சேத்தி என்னும் ஊர் உள்ளது. அந்தப் பகுதி முழுவதும் வேலிக்காத்தான் செடிகள் மண்டிக்கிடக்கின்றன.அந்தச் செடிகளை வெட்டுவதற்கு அப்படி ஒரு நீளமான அரிவாள் தேவைப்படுகிறது.அதுமட்டுமின்றி,காய்ந்து கிடக்கும் அந்த மண்ணில் வேலிக்காத்தானை வெட்டித்தான்,ஏழை மக்கள் பலரின் வாழ்க்கை நடக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத தமிழக அரசு, அரிவாள்களைத் தடை செய்வதன் மூலம் மக்களைக் காப்பாற்றிவிட முடியாது.

Pin It