2011ஆம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து, தமிழ் மொழிக்கும், தமிழர் நலனுக்கும் எதிரான போக்கினையே ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு கடைப்பிடித்து வருகிறது.

பாரதிதாசன் செம்மொழி நூலகம்,அண்ணா நூற்றாண்டு நூலகம், சமச்சீர்க் கல்வி என நீண்ட, அ.தி.மு.க.அரசின் ஆக்டோபஸ் கரங்கள்,பயிற்று மொழியில் ஆங்கிலத்தைத் திணிப்பது வரை தொடர்கிறது.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விப் பிரிவுகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை 10.05.2013 அன்று, பள்ளிக்கல்வித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அத்துறையின் அமைச்சர் திரு வைகைச் செல்வன் வெளியிட்டிருக் கிறார்.

சமச்சீர்க்கல்வியில் கைவைத்த ஜெயலலிதா, இப்போது கல்வி மொழியிலேயே கைவைத்துவிட்டார்.

பயிற்றுமொழி என்பது குழந்தைகளின் உளவியல் மற்றும் கற்றல் திறன் ஆகியவற்றோடு தொடர்புடையது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.மொழி என்பது ஒரு இனம் தன்னுடைய இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான, தக்க வைத்துக்கொள்வதற் கான உயிர்நாடி என்பது சரித்திரம் சார்ந்த உண்மை.

சரி, இந்த உண்மை எல்லாம் இன்றைய ஆட்சியாளருக்குத் தெரியாதா?

தெரியும். இருந்தும் ஏன் இந்த அறிவிப்பு? மற்ற தனியார் பள்ளிகளைப் போன்று, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கிலத்தில் புலமை பெற வேண்டும் என்பதற்காக அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்படும் என்று காரணம் சொல்லப்படுகிறது.

ஒரு தொடர்பு மொழியில் புலமை பெற வேண்டுமானால் அந்த மொழியை ஆழ்ந்தும், ஆராய்ந்தும் படிக்க வேண்டும். அதைவிடுத்து, அந்த மொழிக்குத் தொடர்பில்லாத, வேற்று மொழியினரின் வரலாறுகளையும்,பொதுவான அறிவியல் செய்திகளையும்கூட அதே மொழியில் படித்தால்தான் புலமை பெற முடியும் என்பது எத்தனை முட்டாள்தனமான வாதம்.

மொழிப்புலமைக்கும்,அறிவுத் திறனுக்கும் உள்ள வேறுபாட்டை அறிய முடியாதவர்களா இன்றைய ஆட்சியாளர்கள்?

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும், புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்களும் தங்கள் தொடக்கக்கல்வியை தாய்மொழியில் கற்றவர்கள் அல்லவா? அதனால்தானே, தொடக்கக்கல்வி தமிழ்வழியில் வழங்கப்பட வேண்டும் என்று பல்லாண்டுகளாகத் தமிழ்நாட்டில் போராட்டங்களும், கோரிக்கைகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

குழந்தையாக இருக்கும்போது தாய்ப் பால் மட்டுமே அக்குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு ஏற்ற உணவு. வளர்ந்த பிறகு பிற உணவுகளைக் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. அதுபோல,தொடக்கல்வி என்பது தாய்மொழியில்தான் கண்டிப்பாக கொடுக்கப் பட வேண்டும். அதன் பிறகு, எத்தனை மொழிகளை வேண்டு மானாலும் கற்றுக்கொடுக்கலாம். அப்படிச் செய்தால், தாய்மொழி மட்டுமன்று, எந்த மொழியும் எளிதில் வசப்படும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பிரச்சினை ஆங்கில மொழிப் பாடம்தானே தவிர,பயிற்று மொழி அன்று.ஆங்கில ஆசிரியர்களே இல்லாத அரசுப்பள்ளிகள் தமிழ்நாட்டில் ஏராளம் இருக்கின்றன. பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் பட்டம் பெற்றவர் களையே மொழிப் பாடத்திற்கான ஆசிரியர் களாக நியமிக்கின்றனர்.ஆனால்,இங்கே அறிவியல் ஆசிரியரே ஆங்கில ஆசிரியராகவும் அவதாரம் எடுக்கிறார்.

உண்மையிலேயே அரசுப்பள்ளி மாணவர்கள் மீது இந்த அரசுக்கு அக்கறை இருக்குமானால், ஆங்கில மொழிப் பாடத்தில் தகுதி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்துப் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதற்கு, ஆங்கிலம்தான் காரணமா? பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் சற்றே மேம்பட்டதாக இருக்கிறது.போதுமான இருக்கைகள், கழிவறைகள்,ஆய்வுக்கூடங்கள்,நூலகங்கள்,விளையாட்டு உபகரணங்கள் என மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், அரசுப் பள்ளிகளில் இருப்பதில்லை. பெரும்பாலான அரசுப் பள்ளிகள் பரந்த அளவிலான மைதானங்களைக் கொண்டிருப்பினும், விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

இவையயல்லாம்கூட தனியார் பள்ளிகள் மீதான மோகத்துக்குக் காரணங்களாக இருக்கின்றன.இவற்றைச் சரிசெய்வதை விட்டுவிட்டு,ஆங்கில வழிக்கல்வியைத் தொடங்குவோம் என்பது, சோத்துக்கு இல்லாட்டி போகுது, தோசைக்குப் போடுடி செல்லாத்தா என்று சொல்வதைப் போல உள்ளது.

ஜெயலலிதா அம்மையாரின் உச்சகட்ட இனவெறுப்பின் வெளிப்பாடான ஆங்கில வழிக்கல்வித் திணிப்பை எதிர்ப்பதில் கூட மென்மையைக் கடைப்பிடிக்கின்ற,அடக்கி வாசிக்கின்ற தமிழ்த் தேசியவாதிகளைப் பார்க்கின்ற போது,மொழியில் கைவைத்தால் தமிழகம் பொங்கி எழும் என்பதெல்லாம் பழைய வரலாறாகி விட்டதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.மொழியில் என்ன தலையில் கைவைத்தால் கூட இவர்கள் அசைய மாட்டார்கள் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவுக்குத் தரப்பட்டிருக்கிறது.

தமிழைக்காப்பதைவிட,இதில் கலைஞர் மீது குற்றம் சுமத்த என்ன வழி என்று காரணத்தைத் தேடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இதற்கு முந்தைய தி.மு.க. ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்குவதற்கு முடிவெடுக்கப் பட்டது என்று சிலர் சொல்லித் திரிகின்றனர்.

அது அவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. தி.மு.க. ஆட்சியில், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. பன்னிரெண்டாம் வகுப்புவரை தமிழ் வழிக்கல்விப் பிரிவுகள் மட்டுமே இருந்தன. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் செயல்படும் சுயநிதிப் பிரிவுகளில் மட்டுமே ஆங்கிலவழிக் கல்விப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. இதற்கு அரசுப் பணம் ஒரு ரூபாய்கூட செலவிடப்பட வில்லை. உண்மைநிலை இப்படியிருக்க, பிரச்சினையின் போக்கினை மடைமாற்றி, எதிர்ப்பின் தீவிரத்தைக் குறைக்கின்ற செயல்களில் ஈடுபடுவது என்ன நியாயம்?

ஏற்கனவே, ஆங்கிலத்துக்குப் பயந்துதான் கிராமப்புற மாணவர்கள் படிப்பை இடையிலேயே நிறுத்திவிடுகின்றனர்.ஒரு மொழிப்பாடமாக ஆங்கிலம் இருக்கும்போதே இந்த நிலை என்றால், அனைத்துப் பாடங்களையுமே ஆங்கிலத்தில்தான் கற்க வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடாதா?இந்த அரசு அதைத்தான் எதிர்பார்க்கிறதா?

அரசுப் பொதுத் தேர்வுகளில், அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் அளவும்,தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக இருப்பதைப் பார்க்கிறோம்.பல நேரங்களில் அரசுப் பள்ளி மாணவர்களும்,தமிழ்வழியில் பயிலும் மாணவர்களும் முதல் இடத்தில் வெற்றி பெறுகின்றனர்.இதெல்லாமே,தனியார் கல்வி முதலாளிகளுக்கு ஒருவிதமான நெருக்கடியை ஏற்படுத்துகிறது.இதற்கான ஒரு மறைமுகமான தீர்வாகவே அரசின் இந்த அறிவிப்பு தெரிகிறது.

அடித்தட்டு மக்களின்,உழைக்கும் மக்களின் பிள்ளைகள்தான் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர்.ஆங்கில மொழிப்பாடத் திற்குத் தகுதியான ஆசிரியர்கள் இல்லாத நிலையிலும், ஏன் ஆங்கில ஆசிரியர்களே இல்லாத நிலையிலும், மிகவும் இன்னல்பட்டு பள்ளி இறுதி வகுப்புவரை அந்தப் பிள்ளைகள் தேர்ச்சி பெற்று, குறைந்த அளவு அடிப்படைக் கல்வித் தகுதியைப் பெற்றுவருகின்றனர்.இதிலும் கூட,தொடக்கபள்ளியிலிருந்து, நடுநிலைப்பள்ளிக்கு,நடுநிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளிக்கு, மேல்நிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளிக்கு என வரும்போது,படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. காரணம், இடைநிற்றல் அதிகமாகிறது. அதற்கு ஆங்கில மொழிப் பாடமும் ஒரு காரணம்.

நகரங்கள், பெருநகரங்களில் படிக்கும் மாணவர்கள், மேல்தட்டு மாணவர்கள் தங்களுடைய கற்றலை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள்,பள்ளி ஆசிரியர்களை மட்டுமே நம்பியிருக்கின்றனர். அரசின் இந்த முடிவு கல்வி தொடர்பான சிக்கல் மட்டுமன்று, சமூகநீதிக்கு எதிரானதும் கூட.

ஏற்கனவே மாநகராட்சிப் பள்ளிகளில் மழலையர் நிலையில் ஆங்கிலப் பிரிவுகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன.தொடக்க நிலையிலேயே ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கக்கூடாது என்னும்போது,மழலையர் நிலையில் ஆங்கிலம் என்பதையும் ஏற்றுக்கொள்ள இயலாது. இந்த நிலையும் மாற்றப்பட வேண்டும்.

மண்சார்ந்த அறிவும்,மக்கள் மீதான பற்றும் தாய்மொழிவழிக் கல்வியால் மட்டுமே உருவாக்கப்படும். அந்நிய மொழியில் வழங்கப்படும் கல்வியால், பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க முடியாது.

‘தமிழாய்ந்த தமிழரே முதலமைச்சாய் வருதல் வேண்டும்’ என்று பாரதிதாசன் சொன்னதன் காரணத்தை, இன்று தமிழ்நாடு உணரத் தொடங்கியிருக்கிறது!

Pin It