திராவிட இயக்கம் தோன்றுதவற்கு முன் தமிழக்தின் சமூகச் சூழல் எவ்வாறு இருந்தது என்பதையும், திராவிட இயக்கத்தின் தொடக்ககால வரலாற்றையும், மிக விரிவாக எடுத்துரைக்கும் நூலே, “தமிழ் மறுமலர்ச்சியும், திராவிடத் தேசியமும்”.

1976ஆம் ஆண்டு, மறைந்த கு. நம்பி ஆருரன் அவர்களால், முனைவர் பட்ட ஆய்வேடாக, இலண்டன் பல்கலைக்கழகத்தில்,  என்னும் தலைப்பின் கீழ், ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வின் தமிழாக்கமே இந்நூல் ஆகும். இந்நூலை 2009ஆம் ஆண்டு, திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு, பி.ஆர்.முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து, அழகிய தமிழில் மொழி பெயர்த்துள்ளனர்.

இந்நூல் பற்றிய அறிமுகத்திற்குள் நுழைவதற்கு முன், ஒரு செய்தியை அழுத்தமாகக் குறிப்பிட்டாக வேண்டும். திராவிட இயக்கத்தில் உள்ள அனைவரும், ஒரு பாடநூல் போலப் படித்துப் பாதுகாக்க வேண்டிய அரிய நூல் இது என்பதே அச்செய்தி.

1905ஆம் ஆண்டு தொடங்கி, 1944ஆம் ஆண்டு வரையிலான திராவிட இயக்கச் செய்திகள் அனைத்தும் இந்நூலுள் சான்றுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளிவந்த நூல்கள், பருவ இதழ்கள்  ஆகியனவற்றிலிருந்து மட்டுமின்றி, வெளியிடப்படாத கையயழுத்துப் படிகள்  அரசு ஆவணங்கள் போன்றவைகள் மூலமாகவும் சான்றுகள் பெறப்பட்டுள்ளன. 1905ஆம் ஆண்டு தொடங்கி அன்று வெளிவந்த ‘தி மெட்ராஸ் மெயில்’ என்னும் நாளேட்டிலிருந்து பல செய்திகள் எடுத்துத் தரப்பட்டுள்ளன. இன்றைக்கு நாம் ஆவணக் காப்பகங்களில் கூடப் பார்க்க முடியாத பல முதல் தகவல்கள் நூலுள் இடம் பெற்றுள்ளன.600க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நூலில், பிற்சேர்க்கையும், மேற்கோள் நூல்களின் பட்டியலும் மட்டுமே ஐம்பது பக்கங்களைத் தாண்டுகின்றன.

நூலின் உள்ளடக்கத்தை ஆசிரியர் மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளார். 1905-20 காலகட்ட வரலாற்றுச் செய்திகள் முதல் பகுதியிலும், 1920-44 காலகட்ட வரலாற்றுச் செய்திகள் இரண்டாம் பகுதியிலும் இடம் பெற்றுள்ளன. மறைமலை அடிகளாரின் வாழ்க்கைக் குறிப்புகள், அவர் நிறுவிய தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் குறித்த அவருடைய பார்வை ஆகியன மூன்றாம் பகுதியாக அமைக்கப்பட்டுள்ளன.

இன்றைக்குத் ‘திராவிடம்’ குறித்தும், ‘திராவிட இயக்கம்’ குறித்தும், பொருத்தமில்லாத பல விளக்கங்களைப் புதிதாய்ப் புறப்பட்டுள்ள தமிழ்த்தேசியர்கள் பலர் கூறத் தொடங்கியுள்ளனர். திராவிட இயக்க எதிர்ப்பு, இன்றைக்குப் புதிதாகத் தோன்றியிருக்கும் ஒன்றன்று. சிலம்புச் செல்வர் ம.பொ.சி., 1940களின் இறுதியிலேயே அதனைத் தொடக்கினார். அவரைத் தொடர்ந்து மேலும் பலர் அதே முயற்சியில் இறங்கினர். ஆனால் இன்றுவரை அதில் எவரும் வென்றிடவில்லை.

‘திராவிடர்’ என்னும் சொல், பார்ப்பனரல்லாத, பார்ப்பன எதிர்ப்புத் தமிழர்களையே குறிக்கும் என்பதை இந்நூலைப் படிப்போர் தெளிவுறத் தெரிந்து கொள்ள இயலும். எல்லாச் சொற்களுக்கும் அகராதிகளில் மட்டுமே பொருள்தேடிக் கொண்டிருக்கக் கூடாது. நடைமுறையிலும், வரலாற்றிலும் ஒவ்வொரு சொல்லும் புதிய பொருள்களைப் பெறும் என்பதை அறிஞர்கள் அறிவார்கள்.

சமூகநீதிக் கோரிக்கையே, திராவிட இயக்கத்தின் அடித்தள மாகவும், தொடக்கமாகவும் இருந்துள்ளது. எனினும், அதன் வளர்ச்சிப் போக்கில், தமிழ் மொழி, இலக்கிய மறுமலர்ச்சிக்கும் அதுவே பெரும் தூண்டுகோலாக ஆகியுள்ளது.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் திராவிடமே எதிரி என்று சிலர் இன்று உண்மைக்கு முற்றிலும் மாறான செய்திகளை வெளியிட்டுக் கொண்டுள்ளனர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் மறுக்கப்பட்ட தமிழ் மொழிப் பாடத்தை மீண்டும் கொண்டு வந்தவர்கள், நீதிக்கட்சி அரசினரே என்னும் செய்தியை நூல் தருகின்றது. 1909 பிப்ரவரியில், பி.ஆர்.சுந்தரம் அய்யர் என்பவர் கொண்டுவந்த தீர்மானப்படி, சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து, தமிழ்மொழிப் பாடம் நீக்கப்பட்டுவிட்டது. மீண்டும் 1925இல், நீதிக்கட்சியே அதனை மாற்றி அமைத்துள்ளது.

ஜி.யு.போப் போன்ற அறிஞர்கள், தமிழ்ப் பேரகராதி  ஒன்று வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளனர். 1913ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் அத்தகு முயற்சி ஒன்றைக் கையில் எடுத்தது. ஆனால் அதற்குப் பொருளாதாரம் உள்ளிட்ட பல தடைகள் எழுந்தன. “இது வெள்ளை யானையைக் கட்டித் தீனி போடுவது போன்றதாகும். தமிழ் அகராதிக்குச் செலவிடும் தொகையை நிறுத்தி விடலாம். அந்தத் தொகையைத் தென்னிந்திய மொழிகளின் ஆய்வுக்குப் பயன்படுத் தலாம்” என்றார் எஸ். சத்தியமூர்த்தி அய்யர்.

எனினும், அந்த முயற்சிக்கு ஆதரவு கொடுத்து, 1920களில் அப்பேரகராதி வெளிவர நீதிக்கட்சி ஆட்சியே உதவியது. அச்சிடப்பட்ட 2000 படிகளில், 400 படிகளை அரசே பெற்றுக் கொண்டது.
இந்த வரலாற்றை எல்லாம் மறைத்துவிட்டு, சுந்தரம் அய்யர்களும், சத்தியமூர்த்தி அய்யர்களும், தமிழை வளர்த்ததைப் போலவும், திராவிட இயக்கம் தமிழைக் கெடுத்ததைப் போலவும் பேசுகின்ற போலிகள் இன்று பெருகிவிட்டனர்.

இரண்டாம் பகுதியில், நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள், சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், தமிழிசை இயக்க வரலாறு, ஆகியன விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.நீதிக்கட்சி ஆட்சியின் தொடக்கமே, இட ஒதுக்கீட்டுக் கொள்கை சார்ந்ததாக இருந்தது. 1922-23ஆம் கல்வியாண்டில், அரசுக் கல்லூரிகளில் 50% இடம் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. வழக்கம்போல, சத்திய மூர்த்தி அய்யர் அதனைப் பல்கலைக் கழகப் பேரவைக் கூட்டத்தில் எதிர்த்தார். அதற்கு விளக்கம் அளித்த லிட்டில்யஹய்ல்ஸ் என்னும் ஆங்கிலேயர், “சென்ற ஆண்டு, மாநிலக் கல்லூரியில், விண்ணப்பித்திருந்த 167 பார்ப்பன மாணவர்களில் 121 பேர் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள 46 பேரும் வேறு கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். இவ்வாறு, ஒரே பிரிவினர் மட்டுமே கல்வியறிவைப் பெற அரசு ஏன் சம்மதிக்க வேண்டும். பிற வகுப்பினருக்கும் இடமளிப்பது நியாயம்தானே?” என்று பேசியுள்ளார்.

நீதிக்கட்சி ஆட்சியில், 1925இல் நிறைவேற்றப்பட்ட ‘இந்து அறநிலையச் சட்டம்’ எத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்தது என்னும் வரலாற்றை, இந்நூல் படிப்போர் முழுமையாக அறியலாம். பார்ப்பனர்களிடமிருந்தும் இச்சட்ட முன்வடிவிற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

“சட்டமன்றத்தில் இச்சட்ட முன்வடிவம் ஏற்கப்பட்டாலும், நாட்டிலுள்ள 300 இலட்சம் மக்கள் இதனை எதிர்ப்பார்கள்” என்று இந்து நாளேடு (10.04.1924) எழுதியிருந்த விமர்சனத்தை நூல் எடுத்துரைக்கின்றது.

ஒரு கட்டத்தில் நீதிக்கட்சிக்குச் சரிவு ஏற்பட்டது. அப்போதுதான், சிறையில் இருந்த தந்தை பெரியார், அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், அது மீண்டும் வீரியம் கொண்டு எழுந்தது. 1944இல் அறிஞர் அண்ணா அவர்கள் முன்மொழிந்த தீர்மானப்படி, அது ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் பெற்றது.

முரசொலி மாறன் அவர்கள் எழுதியுள்ள ‘திராவிட இயக்க வரலாறு’ நூலின் முதல் பகுதி மட்டுமே வெளிவந்துள்ளது. அது நீதிக்கட்சியின் தொடக்கத்தோடு நிறைவடைந்துவிட்டது. இந்நூல், 1944 வரையிலான வரலாற்றை விவரிக்கிறது.

1944இல் திராவிடர் கழகமும், 1949இல் திராவிட முன்னேற்றக் கழகமும் தோன்றின. அதன்பின்பு, 1950 தொடங்கி, தமிழகம் முழுவதும் திராவிட இயக்க எழுச்சியால் ஈர்க்கப்பட்டது. 1950-67 காலகட்டத்தைத் திராவிட இயக்கத்தின் எழுச்சிமிகு பொற்காலம் என்றே குறிப்பிடலாம். அந்த வரலாறும், அதற்குப் பிந்திய இன்று வரையிலான திராவிட இயக்க வரலாறும், மென்மேலும் விரிவாக எழுதப்பட வேண்டியுள்ளது.

திராவிட இயக்கத்தின் வரலாறும், 20ஆம்,21ஆம் நூற்றாண்டுகளின் தமிழக வரலாறும், பிரிக்கப்பட இயலாமல் பின்னிப் பிணைந்து கிடப்பவை அன்றோ!

Pin It