பவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம் - 10

images_280புத்தர் பல செய்தி களை நேரடியாகப் பேசியிருக் கிறார்.சில பல செய்திகளை மறைபொருளாக விட்டுவிடுகிறார். இதை அனுமானம் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

பொய்-காமம்-களவு-மது-கொலை இத்தீய ஒழுக்கத்தைத் தவிர்க்கும்படிப் புத்தத் துறவிகளுக்குக் கட்டளையிடும் புத்தர்,அதை இல்லத்தாருக்குக் கட்டாயமாக்கவில்லை.அவர்கள் விரும்பி ஏற்கலாம் என்கிறார்.இவ்வேறுபாட்டிற்கானக் காரணத்தை அவர் சொல்லவில்லை.அது மறைபொருள்.அனுமானத்திற்கு உரியது என்பது அம்பேத் கரின் கருத்து.

பஞ்சசீலத்தை மனிதர்களுக்குப் போதிப் பதனால் மட்டுமே சமூகத்தில் நல்ல நெறி களை உருவாக்கிவிட முடியாது. ஒரு குறிக் கோளுடன் செயல்படும் சமூகத்தைப் (ஆரியம்) படம் பிடித்துக் காட்டவும்,அதை மக்களுக்கு உணர்த்தவும்,புத்தர் முயன்றுள்ளார் என்ற அம்பேத்கரின் சிந்தனை கருதத்தக்கது

ஆரியர்கள் தங்களைப் படித்த மேதாவிகளாகவும்,அறிவில் மேலானவர்களாகவும் கூறிக் கொள்கிறார்கள்.

புத்தர் சொல்கிறார்,“அறிவின் பயன் பாடு ஒழுக்கத்தைப் பொறுத்தது.ஒழுக்கத் திற்குப் புறம்பான அறிவு பயன் அற்றது.”

அம்பேத்கர் சொல்கிறார், “புத்தர் கால ஆரிய சமுதாயத்தின் சமூக, சமய, ஆன்மீக ஒழுக்கம் பெரிதும் தரங்கெட்ட நிலைக்குத் தாழ்ந்து போய்க் கிடந்தது.”

உண்மைதான்.உண்மைகளைப் பேசுவதைவிடப் பொய்களைப் பேசுவதில் ஆரியம் தரம் தாழ்ந்து போனது - இன்றுவரை!

பஞ்சசீலத்தின்,பொய் பேசக்கூடாது என்பது குறித்துப் பவுத்தத்தின் பார்வை என்ன? ஆரியத்தின் வேலை என்ன?முதலில் பவுத்தம் -ஒரு கொடியவன் ஒரு பெண்ணை விரட்டிக்கொண்டு வருகிறான்.அவன் நோக்கம் அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க வேண்டும் என்பது. ஒருவேளை அது கொலையிலும் கூட முடிந்துவிட வாய்ப்பு உண்டு.

அவனிடம் இருந்து தப்பித்து ஓடிவரும் பெண்ணை எதிரில் வந்த பவுத்தத் துறவி ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். “ஏனம்மா இப்படி ஓடி வருகிறாய்?” - துறவி கேட்கிறார்.

“ஐயா! அவன் என்னைக் கெடுக்க வருகிறான். கொன்று விடுவதாக மிரட்டு கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்” பதற்றத் துடன் சொல்கிறாள் பெண்.துறவி அவளைப் பக்கத்தில் மறைவாக ஒளிந்திருக்கச் சொல்கிறார்.அப்பெண்ணும் ஒளிந்து கொள்கிறாள். அந்தப் பெண்ணைத் துரத்திக் கொண்டு வந்த கொடியவன்,துறவியைப் பார்த்துக் கேட்கிறான், “இந்தப் பக்கம் ஒரு பெண் ஓடி வந்தாளே... பார்த்தீரா?”

“ஆமாம், பார்த்தேன்!”

“எங்கே அவள்?”துறவி சொல்கிறார், “இதோ இந்தப் பக்கம்தான் வேகமாக ஓடுகிறாள். நீயும் வேகமாக ஓடினால் பிடித்து விடலாம் ” - அவர் வேறொரு திசையைக் காட்டுகிறார். அந்தக் கொடியவனும் அந்த வழியில் ஓடுகிறான் - பெண் காப்பற்றப்படுகிறாள்.

ஒரு பெண்ணை ஒரு கொடியவனிடம் இருந்து காப்பாற்றும் பொருட்டு இங்கே ஒரு பவுத்தத் துறவி பொய் பேசி இருக்கிறார்.புத்தர் சொன்னார் என்பதற்காக இவர் உண்மையைப் பேசி,அந்தப் பெண்ணைக் காட்டிக் கொடுத்திருந்தால்,அவள் சிதைந்து போயிருப்பாள்.

இங்கே ஒரு பவுத்தத் துறவி பொய் பேசி இருக்கிறார். இது சரியா, தவறா?

திருக்குறளில் அறத்துப்பாலில் துறவற இயலில்,வாய்மை என்ற அதிகாரத்தில் பொய் பேசக்கூடாது என்பதை அழுத்தம் திருத்த மாகக் கூறும் திருவள்ளுவர்,பொய்ம்மையும், வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் -அதாவது பிறருக்குத் தீங்கு ஏற்படாமல் நன்மை செய்வதாக இருந்தால் பொய் பேசலாம். அந்தப் பொய் பொய்யா காது, மாறாக வாய்மை(உண்மை) என்றே கருதப்படும் என்று ஒரு விதிவிலக்கு தருகிறார்.

இதுவே பவுத்தத்தின் நிலைப்பாடு. அதனால்தான் பவுத்தத் துறவிகள் பொய் பேசக் கூடாது என்று சொன்ன புத்தர்,இல்லறத்து மக்கள் அதை(பஞ்சசீலம்)விரும்பி ஏற்கலாம் என்று விட்டுவிட்டார்.

புத்தர் உலகியலையும் மக்கள் வாழ்வியலையும் புரிந்து கொண்டவர்.மாறாக பொய் சொல்பவன் மீள முடியாத நரகத்தில் சென்று உழல்வான் என்ற அங்குத்தர நிகாயத்தின் விளக்கம் புத்தருக்கு ஏற்புடையதன்று. அது ஆரிய மகாயானத்தின் திணிப்பு வேலை-திரிப்பு வேலை.

பொய் பேசக் கூடாது, இதோ அரிச்சந்திர மகாராஜா பொய்யே பேசவில்லை என்று புராணப் பித்தலாட்டம் செய்யும் வேலை யைத் தவிர, பொய் பேசக் கூடாது என்பதில் நேர்மையான உடன்பாடு ஆரியத்திற்கு இல்லை.

வேதங்கள் புனிதமானவை குறைகள் அற்றவை என்பது பொய்.இந்தப் பிரபஞ் சத்தை, உலகத்தை,மனிதர்களைக் கடவுள் படைத்தார் என்பது பொய்.ஆன்மா உண்டு என்பது பொய். அது மறுபிறவி எடுக்கும் என்பது பொய்.அப்படி மறுபிறவி எடுக்காமல் தப்பிக்க யாகவேள்வி,மதச்சடங்கு செய்ய வேண்டும்,ஆரியனுக்குத் தானம் வழங்க வேண்டும் என்பது பொய். புரு­னில் இருந்து சதுர்வர்ணம் (நான்கு வர்ணம்) தோன்றிய தாகச் சொன்னது பொய்.ஆரியன் பிறப்பால் உயர்ந்தவன் என்றது பொய்.சூத்திரன் பிறப்பால் தாழ்ந்தவன் என்றது பொய். தீண்டாமை என்றது பொய்.பெண்கள் ஆண்களின் அடிமைகள் என்றது பொய். பெண்களுக்குச் சமூக உரிமை இல்லை என்றது பொய்.பேய்,பிசாசு என்றது பொய். அவைகளை ஓட்ட மந்திரச் சடங்கு பொய்.சகுணங்கள் பொய்.பலாபலன்கள் பொய். சுபமுகூர்த்தம் பொய். அதற்கான கால நேரம் குறித்தல் பொய் - திரிபிடகத்தின் “பிரம்ம ஜல சுத்தா” சொல்கிறது, கவுதமர்(புத்தர்) இது போன்றவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

இந்தப் பொய்கள் தனிமனிதனுக்காக ஆரியம் சொன்ன பொய்கள் இல்லை. சமூகம் சார்ந்து, இனம் சார்ந்து, ஆரிய இனச் சமூகம் சார்ந்து அதன் நன்மை, வளர்ச்சி, ஆதிக்கம் சார்ந்து ஆரியத்தால் சொல்லப்பட்ட பொய் களே இவைகள்.

அதனால்தான் பஞ்சசீலம் குறித்துப் பேசும்போது, ஒரு குறிக்கோளுடன் செயல் படும் ஒரு சமூகத்தை(ஆரியம்)படம்பிடித்துக் காட்டவும்,அதை மக்களுக்கு உணர்த்தவும் புத்தர் முயன்றுள்ளார் என்று அம்பேத்கர் தெளிவாகக் கூறி இருந்தார்.

ஆரியர்களின் இந்தப் பொய்கள் திராவிடர்களை -சூத்திரர்களை,சமூக நீதியில் பலவீனப்படுத்தவும், ஒடுக்கவும், சுரண்டவும், ஒடுக்கு முறையில் வைத்திருக்கவும் சொல்லப் பட்டவை.

பஞ்சசீலத்தில் பொய்சொல்லக் கூடாது என்று புத்தர் சொன்னதைத் தனிமனித ஒழுக்கத்தைவிட, சமூக ஒழுக்கமாகப் பெரிதும் கருத வேண்டும். புத்தரின் மறை பொருள் செய்தியில் இதுவும் ஒன்று.ஆனாலும் ஆரியப் பொய்களைப் புத்தர் உரிய இடங்களில் சுட்டிக்காட்டவும் தவறவில்லை.

ஒரு வகையில் ஆரியத்திற்கு எதிரானத் திராவிடப் பவுத்தத்தின் பண்பாட்டுப் போரில் இதுவும் அடங்கும்.

திருடக்கூடாது என்கிறார் புத்தர். இதுவும் ஐந்து ஒழுக்கங்களில் ஒன்று.

பண்டைய தமிழ் மரபில், “ஆநிரை கவர்தல்” என்று ஒன்று உண்டு. ஒரு மன்னன் மற்றொரு மண்ணில் ஆநிரைகளை (கால்நடைகளை)க் கவர்ந்து சென்று விடுவான். கவர்தல் என்பது இங்கு களவு என்றே பொருள்படுகிறது. இது ஒரு வகை யான திருட்டுதான். ஆனால், எதிரி மன்னன் உடனே களவு இடப்பட்ட ஆநிரைகளை மீட்டுக் கொண்டும் வந்து விடுவான். பண்டையத் தமிழ் மன்னர்களின்போர் நெறிகளில் இதுவும் ஒன்று என்பதைப் புறநானூற்றில் பார்க்கலாம்.

தலைவன் தலைவி இடையே காதல்.பெற்றோர் இதனை விரும்பமாட்டார்கள்.எனவே தலைவன் தலைவியை யாருக்கும் தெரியாமல் களவாடி அழைத்துச் செல்வான்.இதை “உடன்போக்கு” என்கிறது அகத்துறை.

முதலில் சொன்ன புறத்துறைக் களவு மன்னர்களின் வீரத்தைப் பறைசாற்றுகிறது. அதனால் தனிமனித ஒழுக்கமோ, சமூக ஒழுக்கமோ பாதிப்படையவில்லை. இரண்டா வது சொன்ன அகத்துறைக் களவு இரண்டு உள்ளங்களை இல்லறத்தில் இணைக்கிறது. இந்தக் களவாலும் எப்பாதிப்பும் இல்லை.

புறநானூறு சொன்ன ஆநிரை திருட்டும்,அகத்துறை சொன்ன காதல் திருட்டும் தமிழர்களின் வரலாறும், பண்பாடும் ஏற்றுக்கொண்ட திருட்டு - ஏற்றுக்கொண்ட களவு.

ஆரியத்தின்திருட்டுஅப்படிஅன்று.சூத்திரனின் பசுக்களை ஆரியர்கள் திருடிக் கொள்ளலாம்.சூத்திரர்களின் வாரிசு இல்லாச் சொத்துகளை ஆரியர்கள் கவர்ந்து கொள்ள லாம் என்கிறது மனுஸ்மிருதி.இந்தத் திருட்டு இனம் சார்ந்து தனிமனி தர்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைத் திருட்டு. வேறொரு திருட்டும் இருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் தமிழர்களுக்கே உரிய தமிழிசை,தமிழர்களின் நடனக்கலை கூத்து இவைகளைப் பற்றி வரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.இன்று பரதக்கலை என்றும் அதை பரதன் உருவாக்கினான் என்றும்,கர்நாடக சங்கீதம் என்றும் சாஸ்திரிய சங்கீதம் என்றும் ஆரியம் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக் கும் இவை எல்லாம் தமிழர் கலைகள் அல்லவா?

தமிழர்களின் கலையை ஆரியம் திருடிக் கொண்டு விட்டது. சூத்திரர்களின் பசுக்களை யும், செல்வங்களையும் திருடச் சொல்லி மனு சொல்வதும், திராவிடர்களின் கலை பண்பாட்டுக் கூறுகளை ஆரியம் திருடுவதும் அநாகரிக மான கீழ்த்தரமான திருட்டு.

திருடக்கூடாது(பஞ்சசீலம்) என்று பவுத்தம் சொல்வதில் இதுவும் அடங்கும்.

- தொடரும்

Pin It