இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பெண்களின் மாதவிடாய் பற்றி பேசினாலே தயக்கமும் கூச்சமும் கொள்ளும் மனநிலையில்தான் பெருன்பான்மை பெண்கள் இருக்கின்றனர். எனவேதான் மாதவிடாய் பற்றி வெளிப்படையாக பேசுவதும், அந்நாட்களில் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சுகாதார உரிமையைப் பறைசாற்றுவதும் ‘தனிநபர் உரிமை‘ என்பதைத் தாண்டி சமூகக் கடமையாக மாறியிருக்கிறது. இதுகுறித்து நகர்ப்புற பெண்கள் மட்டுமல்ல கிராமப்புறங்களில் வாழும் (கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய) பெண்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் மே 28 அன்று, மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நல்ல உடல்நலமுள்ள பெண்ணின் உடலில் ஏற்படும் உயிரியல் செயல்பாடே மாதவிடாய். ஆனால் இயற்கையாக நடைபெறும் ஒன்றை ‘தீட்டாக‘ மாற்றியதன் பின்னணியில் மத ஒடுக்குமுறைகளும் பங்கு வகித்துள்ளன. இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் மாதவிடாய் என்பதை சுத்தமற்ற அதாவது அழுக்கான ஒரு நோய் போலக் குறிப்பிடுவதை இன்றளவும் காண முடிகிறது. “நாங்கள் பாரம்பரிய இந்துக்கள்” என பெருமையாக சொல்லிக் கொள்ளும் சிலர் அதைப்பற்றி பேசுவதையே தீட்டு என்றும் கூறுகின்றனர்.lady and menstrual cycleபெண்கள் மாதவிலக்காகும் 5 நாட்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டும், உப்பு, ஊறுகாய் போன்ற பொருட்களில் கை வைக்க கூடாது, தனியான தட்டு குவளை பயன்படுத்த வேண்டும், ஆண்களைப் பார்க்கக்கூடாது, சமையல் செய்யக்கூடாது மற்றும் கோயில், பண்டிகை போன்ற மத சடங்குகளில் பங்குபெற கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் வழக்கம் இன்றும் அவர்களால் தொடரப்படுகிறது. இப்படிப்பட்ட பிற்போக்குத்தனம் மிகுந்த மோசமான சூழ்நிலைகளில், மாதந்தோறும் பெண்களின் மாதவிடாய் முள்ளின் மேல் நடப்பது போலவே நிகழ்கிறது.

இன்றும் சில கிராமப்புறங்களில் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் தனியாக வீட்டின் கொல்லைப்புறத்தில் (பின்புறத்தில்) தங்க வைக்கப்படுகின்றனர். அவர்கள் தரையில் தான் படுக்க வேண்டும், தலையணை பயன்படுத்தக் கூடாது, எழுந்தவுடன் குளித்துவிட்டுத்தான் வெளியில் வர வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இவ்வாறு கட்டுப்பெட்டித்தனமாக பெண்களை பொத்தி வைத்து, அவர்களுக்கு மனதளவில் அதிக அழுத்தத்தைக் கொடுப்பதால், ‘தான் ஏன் ஒரு பெண்ணாக பிறந்தோம்‘ என எண்ணி தன்னைத்தானே வெறுக்கும் மனநிலைக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள். உலகமே மாதவிடாய் விழிப்புணர்வு நாளைக் கொண்டாடினாலும், “நீ உள்ளே போ! உனக்கு மாதவிடாய், நீயெல்லாம் கொண்டாட வேண்டாம்” என பெண்களை பின்னுக்கு இழுக்கும், பாரம்பரிய பெருமை பேசுகின்ற குடும்பங்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.

பெரும்பாலும் பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் வேலை பார்க்கும் இடங்கள்- இவற்றில் பெண்களுக்குத் தேவையான அடிப்படை சுகாதார வசதிகள் முறையாக இருக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கான தனி கழிப்பறைகள், அவற்றில் தடையில்லா தண்ணீர் வசதி, மாதவிடாய் நேரங்களில் பயன்படுத்திய நாப்கின்களை அகற்றும் தொட்டிகள் (disposal bins) இருக்க வேண்டும்.

நாப்கின்களை அப்புறப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் பல அரசு பள்ளிகளில் சுகாதாரமற்ற கழிவறைகளே இருக்கின்றன. மேலும் துர்நாற்றம் வீசக்கூடிய இந்தக் கழிப்பறைகள் இலவச தொற்றுநோய் வழங்கும் கூடமாகவே மாறியிருக்கின்றன. பெண்களின் வளர் இளம்பருவத்தில் இது போன்ற நோய்கள் பல சிக்கல்களை உருவாக்கி விடுகின்றன. நோய்த்தொற்றைக் கண்டுணர்ந்து சரியான மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் இது இனபெருக்க பாதை நோய்களுக்கு ஊற்றுக்கண் போல் ஆகிவிடுகிறது. இந்த காரணத்திற்காகவே இன்று மாணவிகள் மாதவிடாய் சமயத்தில் 5 நாட்கள் பள்ளி செல்ல விரும்பாமல் வீட்டில் இருப்பதை விரும்புகிறார்கள். பெண் குழந்தைகள் இவ்வாறு மாதம் 5 நாட்கள் பள்ளி செல்லாமல் இருப்பதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

மேலும் பள்ளியில் நடைபெறும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றனர். (இதற்குக் காரணம் அவர்கள் வலிமை இழப்பதால் அல்ல, “மாதவிடாய் நாட்களில் உன்னால் முடியாது, இப்படித்தான் இருக்க வேண்டும்” என சொல்லி சொல்லியே அவர்களை மூலையில் உட்கார வைத்துவிடுகிறார்கள்.)

அறிவியல் முன்னேறியுள்ள காலத்திலும் பெண்களுக்கு சவாலாக இந்த சுகாதாரத் சிக்கல்கள் அமைந்து விடுகின்றன. இன்னும் விரிவாக மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து சில பெண்களிடம் கேட்டறிந்தோம். பணிக்கு செல்லும் பெண்ணாகிய திருமதி ரேவதி அவர்கள் கூறும் போது, “நான் ஒரு வட இந்திய (மார்வாடி) தனியார் கடையில் வேலை செய்கிறேன். மாதவிடாய் இருந்த மூன்று நாட்களும் என்னை பணிக்கு வரவேண்டாம் என சொல்லி விட்டார்கள். நான்காம் நாள் வேலைக்கு செல்லும்போது கடைமுதலாளியையும் உடன் வேலை பார்க்கும் ஆண்களையும் பார்க்கும் போது மிகவும் அறுவருப்பாக இருக்கும். நான் பீரியட்ஸ் ஆகி மூன்று நாள் கழித்து வேலைக்கு வருவது மற்ற ஆண்களுக்கு நானே என் மாதவிடாயை கட்டாயம் தெரிவிப்பது போல் இருக்கிறது. ஒரு வித குறுகுறுப்புடன் ஆண்கள் பார்க்கும் போது என்னை நானே வெறுக்கிறேன். பெண்களுக்கு இது ஒரு இழிநிலையாகவே பார்க்கிறேன்” என்றார்.

அதுமட்டுமின்றி “கடையில் பெண்களுக்கு என தனியாக கழிப்பறை கிடையாது. இது போன்ற நேரங்களில் ஆண்கள் உபயோகிக்கும் கழிவறையே நாங்களும் உபயோகிப்பதால் ஒருசில மாதங்களில் சிறுநீர் பாதையில் ஒவ்வாமை (infection) வந்து வயிற்று வலியும் வருகிறது. மேலும் பயன்படுத்திய நாப்கின் போடும் குப்பைதொட்டி (dustbin) தனியாக இல்லை. நாங்கள் அனைவரும் பயன்படுத்தும் உணவு கழிவுகளை கொட்டும் தொட்டியில் இதை போட அனுமதி இல்லை. அதனால் வீட்டிலிருந்து காலை கிளம்பும் போது பொருத்திய நாப்கின் நனைந்து விட்டது போல் உணர்ந்தால் அதற்கு மேலேயே மற்றொரு நாப்கின் வைத்துக்கொள்வேன்.

மீண்டும் வீட்டுக்கு கிளம்பும் முன் இன்னொரு நாப்கினை அதற்கு மேல் வைத்துக்கொண்டு கிளம்புவேன். இதனால் எனது தொடையின் இருபுறமும் நாப்கின் உரசி உரசி வீடு போய் சேர்வதற்குள் சில நேரங்களில் தோல் தேய்ந்து இரத்தமே வந்துவிடும். அவமானத்தில் தோன்றும் இரணத்தை விட இது ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை” என தனது வேதனையை தெரிவித்தார். மருத்துவர் அறிவுரைப்படி நான்கு மணி நேரத்திற்குள் நாப்கினை மாற்றி விடுவதுதான் நல்லது என்கிறார்களே என்று நாம் கேட்டதும், “அது நன்கு படித்து, வசதி படைத்த பெண்களுக்கு. நல்ல, பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே அவ்வாறு சுகாதாரமாக வாழ முடியும். என்னைப் போன்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இது போன்ற சூழல் கிடைக்காது” என வெளிப்படையாகக் கூறினார்.

குறைந்த வருமானம் உள்ள நடுத்தர குடும்பப் பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் சுகாதாரமான நாப்கின்களை வாங்குவது இயலாததாகிறது. கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் இது போன்ற நேரங்களில் தனது தாயின் பழைய கிழிந்த புடவைகள், அப்பாவின் நைந்து போன வேட்டிகள் இவற்றை உபயோகப்படுத்துகின்றனர். அதை ஒருமுறை பயன்படுத்துவதே சுகாதாரக் கேடு. அவற்றை சுத்தம் செய்து உலர்த்தி மீண்டும் பயன்படுத்துவது மேலும் சுகாதார சீர்கேடுகளையே விளைவிக்கும். இதனால் பெண்ணுறுப்பின் வழியாக இனப்பெருக்க உறுப்பில் ஒவ்வாமை (infection) ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமின்றி அசௌகரியமாக இருக்கும். நல்ல உடைகளை உடுத்த இயலாது. சுலபமாக தரையில் அமர இயலாது, எங்கே இரத்தம் கசிந்து அடுத்தவர் பார்த்து விடுவார்களோ என்ற அச்சம் இருக்கும்.

இந்தியா முழுவதும் நல்ல தரமான நாப்கின்கள் அதிக விலை கொடுத்து வாங்க இயலாத நடுத்தர வர்க்கப் பெண்கள் பெரும்பாலும் பழைய துணிகளையே மாதவிடாய் நாட்களில் பயன்படுத்துகின்றனர். கடந்த 2014ல் நடந்த ஆய்வின்படி, மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு பற்றியும், நாப்கின் பற்றியும் அறியாத பெண்கள் இந்தியாவில் 42% என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நடுத்தர வர்க்கப் பெண்களின் நிலை இவ்வாறிருக்க வங்கதேசத்தில் தினக்கூலியாக செல்லும் பெண்கள் பழைய தரைவிரிப்புகளை கூட மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்துகிறார்கள் போன்ற செய்திகள் வேதனை தருகின்றன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்களுக்கே இந்நிலையென்றால் வீடுகள் இல்லாது சாலை ஓரங்களில் வசிக்கும் பெண்ககளின் நிலை இதைவிட மோசமாக இருக்கிறது. காரணம் அவர்களால் மாநகராட்சி பொது கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. அங்கே மோசமான நிலையில் கழிப்பறைகளும் தண்ணீர் தொட்டிகளும் இருப்பதால் அவர்களின் மாதவிடாய் நாட்களில் மிகவும் துயருறுகிறார்கள். இவ்வாறு ஏழை, எளிய பெண்களுக்கு வாழ்கையில் பணம் மட்டுமே சிக்கலில்லை, அவர்களின் சுகாதார உரிமையும் சிக்கலாகவே இருக்கிறது. இன்றும் எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்கபெறுவதில்லை. சுகாரத்திலும் ஏற்றத்தாழ்வு நிலையே இன்னுமும் நிலவுகின்றது என்பதே வேதனைக்குரிய செய்தி.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவியர்களுக்கு மாதம் தோறும் நாப்கின்களை வழங்குவது செயல்பாட்டில் இருக்கிறது. அது வரவேற்கத்தக்கது. இருந்தாலும், பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் போதுமானதாக இருக்கிறதா? தண்ணீர் சரியாக வழங்கப்படுகிறதா? குப்பை தொட்டிகளை சரியாக சுத்தம் செய்து பராமரிக்கிறார்களா என்பதையும் கவனத்தில் கொண்டு கூடுதல் கவனம் செலுத்தினால் நோயற்ற இளந்தலைமுறையினரை உருவாக்கலாம்.

தெருவோரம் மற்றும் மருத்துவமனை அருகே இருக்கும் மாநகராட்சி பொதுக்கழிப்பறை சுகாதாரம் என்பது மிகவும் சுத்தமற்ற துர்நாற்றம் வீசக் கூடியதாகவும், தண்ணீர் சேகரித்து வைக்கும் தொட்டியும் சுழற்சி முறையில் சுத்தப்படுத்தாமல் பாசியும் கண்ணுக்கு புலப்படாத சிறு பூஞ்சைககளும் படிந்து விடாமல் பராமரிப்பது மிகவும் அவசியம். வீடுகளின்றி வீதிகளில் வசிக்கும் ஏழை பெண்கள், குழந்தைகள் இது போன்ற பொது கழிப்பறைகளையே உபயோகபடுத்துவதால் இவர்களது சுகாதாரத்திலும் அரசு கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.

இன்று “பெண்களின் மாதவிடாய் என்பது தீட்டல்ல. அது உடலில் இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வுதான்” என்பது விழிப்புணர்வு செய்தியாக ஓரளவு மக்களிடையே பரவியிருக்கிறது. ஆனால் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் சுகாதாரச் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வு இன்னும் வீரியமாக ஏற்படவில்லை என்பதே மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்த விழிப்புணர்வை அரசே உருவாக்க வேண்டும். ஆனால் சனாதனத்தை உயர்த்திப் பிடிக்கின்ற பாஜக அரசோ, மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் அடையும் வலிகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதில்லை என்பதற்கு கடந்த பாஜக அரசின், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இராணி பேசியதே சான்றாக இருக்கிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடனான விடுப்பு வழங்கப்படுவது குறித்து அரசுத் திட்டம் என்ன? என்று நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு ‘மாதவிடாய் என்பது ஊனம் கிடையாது. அதனால் ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கு எந்த தேவையும் இல்லை’ என்று சொன்னார். அவரும் பெண் என்றாலும் உயர் வர்க்கமாக, ஓய்வு எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கும் 1% பெண்களின் சார்பில் நின்று பேசுகிறார். ஆனால் 99% பெண்கள் குடும்பத்தின் வறுமைக்காக ஓடி உழைக்கும் பெண்கள். சனாதனவாதிகள் என்றுமே பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக நிற்பதில்லை என்பதையே ஸ்மிருதி ராணியும் நிரூபித்தார்.

சனாதனம் பெண்களின் மேல் திணித்த பாரம்பரிய வழக்கங்களை, பெண்களுக்கு ஏற்படும் எந்த வலிகளையும் தாங்கியாவது இயல்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஸ்மிருதி இராணி பேச்சிலும் வெளிப்பட்டது. அவர்களுக்கு நாம், மாதவிடாய் விடுப்பு என்பது பெண்களுக்கு அளிக்கும் சலுகை அல்ல, அது அவர்களின் உரிமை என அனைவரும் ஒங்கி குரல் எழுப்ப வேண்டும்.

காலங்காலமாக சாமியார்கள் வேடம் தரித்து உபன்யாசம் செய்பவர்களும், இயற்கையாக நிதமும் மாதவிலக்கை பெண்களின் மேல் நிகழும் பெரும் சாபமாகவே கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘மாதவிலக்கு நேரங்களில் சமைத்தால், அடுத்த பிறவியில் பெண்கள் நாயாக பிறப்பார்கள்‘ என்று வடநாட்டு சாமியார் ஒருவன் பேசினான். சனாதனப் பரப்புரையாளர்களாக இந்த சாமியார்கள் வலம் வரும் வரை, அவர்களின் சனாதன சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் அரசு ஆட்சியில் இருக்கும் வரை பெண்கள் மீது சுமத்தும் பிற்போக்குத்தனங்கள் ஓயாது.

மாதவிடாய் என்ற உடலியல் சார்ந்த இயற்கையான நிகழ்வை வைத்து பெண்களை இழிவாகப் பார்க்கும் கண்ணோட்டம் மாற சமத்துவம் என்னும் சிந்தனையை அனைத்து வகையிலும் ஆண், பெண் இருபாலருக்கும் சிறு வயதிலிருந்தே கற்பிக்க வேண்டும். வளர்ந்த நாடுகளில் மாதவிலக்கு என்பது பெண்களின் உடல் வலியும், சுகாதாரப் பிரச்சனைகளும் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. ஆனால் சனாதனத்தை போற்றும் இந்தியாவில்தான் மாதவிலக்கு என்பது பெண்களின் உளவியலுக்கும் சேர்த்து வலியைக் கொடுக்கும் பிரச்சனையாக இருக்கின்றது. இது மாற்றப்பட வேண்டும். சுகாதார விழிப்புணர்வு மட்டுமல்ல, மதவாதம் திணித்த பாரம்பரிய பழக்கங்களிலிருந்து விடுபடும் விழிப்புணர்வும் ஏற்படுவதே பெண்களின் வலிகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.

- மே பதினேழு இயக்கம்

Pin It