அ.தி.மு.க.வினால் தே.மு.தி.க.வில் இருந்து இழுக்கப் பெற்ற சட்டப் பேரவை உறுப்பினர் தமிழழகன்,பேரவையின் கேள்வி நேரத்தில் பேசியபோது,எதிர்ப்புத் தெரிவித்த தே.மு.தி.க. உறுப்பினர்கள் அவரைப் பேசவிடாமல் தடுத்ததுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

பொதுவாக நாடாளுமன்றமானாலும், சட்டப்பேரவை என்றாலும் ஆவேசப் பேச்சுகள், கூச்சல் குழப்பங்கள்,சில நேரங்களில் மோதல்களும் ஏற்படத்தான் செய்கின்றன.பேரவைத் தலைவருக்கு அவைகளின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு.

நாக்கைத் துருத்திப் பேசினார்,விரலை நீட்டிப் பேசினார் என்றெல்லாம் பேரவை உறுப்பினர்களைப் பேரவைத் தலைவர் இடை நீக்கம் செய்ததும்பேரவையை விட்டு வெளியேற்றிய வரலாறும் இருக்கத்தான் செய்கிறது.இந்த இடைநீக்கம் எல்லாம் ஒரு வாரம்,இரண்டு வாரம் அல்லது பேரவைக் கூட்டத்தொடர் முடியும் வரை என்றே இதுவரைப் பார்க்க முடிந்தது.

இப்பொழுது ஆறு தே.மு.தி.க. உறுப்பினர்கள் ஓர் ஆண்டுவரை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் ஆறு மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. தம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய தொகுதி மக்களுக்குப் பணி செய்யவிடாமல் அவர்கள் தடுக்கப்பட்டி ருக்கிறார்கள்.

முதல்வர்கள் மாநாடு தில்லியில் நடந்தபோது, அங்கே தமிழக மக்கள் பிரச்சனை குறித்துப் பேச எனக்குப் போதிய நேரம் தரப்படவில்லை என்று கூறி மாநாட்டை விட்டு வெளியே வந்தார் ஜெயலலிதா. இங்கே தொகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச, எந்த ஒரு வழியும் இல்லாமல்,ஆறு மாதங்களுக்கு ஆறு தொகுதி மக்களின் உரிமைகளைப் பறித்துவிட்டார்.

இதைக் கண்டித்து, தி.மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் கூட வெளிநடப்புச் செய்து எதிர்ப்பைக் காட்டியது.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவையில் அமைதியாகவே இருந்துள்ளனர். எதிர்வரும் ஜுலை திங்களில் மாநிலங்கள் அவைக்கான தேர்தல் வருகிறது. ஒருவேளை மாநிலங்களவைப் பதவிக்காகக் கூட இருக்கலாம்.

தமிழகத்தில் இருந்து 6 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். எதிர்க் கட்சியான தே.மு.தி.க.வின் உறுப்பினர் பலத்தைக் குறைப்பதன் மூலம், மாநிலங்களவைத் தேர்தலில் அக்கட்சியில் இருந்து உறுப்பினர்கள் தேர்வாகிவிடாமல் தடுத்து,அ.தி.மு.க.வே பெரும்பான்மை உறுப்பினர்களைத் தக்க வைத்துக் கொள்ள குறுக்குச்சால் பாய்ந்திருப்பது நன்றாகவே தெரிகிறது.

தி.மு.க., ஆட்சியில் நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்த போது, அதைப் பிடுங்கிக் கிழித்து எறிந்த ஜெயலலிதாவை பேரவையில் இருந்து,கலைஞர் இடைநீக்கம் செய்ய விரும்ப வில்லை.ஏனெனில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் பேரவையில் கடமையாற்ற வேண்டும் என்று எண்ணினார்.ஆனால் ஜெயலலிதாவோ இன்று எதிர்க்கட்சியினர் பேரவையில் கடமையாற்ற முடியாதபடி இடைநீக்கம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

இடிப்பார் இல்லாத ஆட்சியை விரும்புவோர் சர்வாதிகாரப் பாதையில் பயணிக்க விரும்பும் மனப்போக்கு உடையவர்கள் என்பது வரலாறு சொல்லும் உண்மை.தமிழகத்தையும் சர்வாதிகாரப் பாதையில் அழைத்துச் செல்ல விரும்புகிறார் ஜெயலலிதா என்பதையே அவரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.

இது கண்டிக்கத்தக்க சனநாயகப் படுகொலை என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

Pin It