ஈழத்தில் நடைபெற்ற இறுதிகட்டப் போரின் போதும், அதற்குப் பின்னரும் இலங்கை இராணுவத்தால் அங்கு நிகழ்த்தப் பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்ய, ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஏழுநாள் பயணமாக இலங்கை சென்றிருந்தார்.

அவரின் பயணத்தையும், அறிக்கையையும் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நமக்கு அது பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்திவிட்டது.

ஈழப்போரின் போது இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பெற்ற அத்துமீறல்கள், வீசப்பட்ட நச்சுவாயு குண்டுகளால் கூட்டம் கூட்டமாக உருகி மடிந்த அப்பாவி மக்கள், அவர்களைக் குவியல், குவியலாகப் புதைகுழியில் தள்ளிப் புதைத்த இலங்கை அரசு, அதன் இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் உலகம் அறியும்.

இதனைக் கண்டு கொதித்துப் போன நாடுகளின் கண்டனங்கள் பதிவாகி இருக்கின்றன. ஐ.நா.அவையின் கதவுகளை அவை தட்டி இருக்கின்றன.

அப்படி இருந்தும் நவநீதம்பிள்ளை தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது சாற்றியிருக்கும் கடுமையான குற்றச்சாட்டு, அல்லது விமர்சனம் கடும் கண்டணத்திற்கு உரியது.

ஈழத்தமிழ்ப் பெண்கள் மீது இராணுவத்தினரால் நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை குறித்தும், ஈழத்தில் பெருமளவில் காணாமல் போன தமிழ் இளைஞர்கள் குறித்தும் தகவல் இல்லாமலிருப்பது நெருடலைத் தருவதாகச் சொல்லும் அவர், இது குறித்து இலங்கை அரசிடம் பேசியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

அதே அறிக்கையில், அவர் முல்லைத் தீவு, திருகோணமலை போன்ற பகுதிகளுக்குச் சென்று வந்தபின் அப்பயணம் மன உளைச்சலைத் தருவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

காரணம், நவநீதம் பிள்ளை அப்பகுதிக்குப் போகும்முன்பு, காவல் துறையினரும், இராணுவத்தினரும் சென்று இப்படித்தான் பேச வேண்டும், இதைத்தான் பேச வேண்டும், வேறு எதையும் சொல்லக்கூடாது என்று மிரட்டிவிட்டு வந்ததாகவும், நவநீதம்பிள்ளை அங்கு சென்று மக்களைச் சந்தித்துவிட்டு வந்த பின்னர், மீண்டும் அவர்கள் அங்கே சென்று என்ன பேசினாய், என்ன சொன்னாய் என்று கேட்டு மிரட்டியதாகவும் தன் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதேநேரத்தில் நான்கு லட்சத்து 50 ஆயிரம் பேர்கள் வீடு திரும்பிவிட்டார்கள், சாலை, பாலங்கள் பராமரிப்புப்பணி விரைந்து மேம்பாடடைந்து வருகின்றன என்றும் கூறுகின்றார்.

போருக்குப் பின்னர் ஈழமண்ணில் அளவுக்கு அதிகமாக இராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது, அவர்களுக்காகவே கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் கூறுகிறார். இலங்கைச் சிங்கள அரசு எவ்வளவு மோசமான நிலையில் ஈழமக்களை வைத்திருக்கிறது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில்தான் வரும் நவம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற உள்ளது. ஈழமக்களின் கோரிக்கைகளும், நம் குரல்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

மனித உரிமை ஆணையமாவது தன் கடமையை சரியாகச் செய்ய வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

Pin It