‘எந்த ஸ்கூலையும் புடிக்கல, விட்டுடுங்கடா படிக்கல’ என்ற வரிகளோடு விளம்பரப்படுத்தப்பட்டு, மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்திருக்கிறது இயக்குனர் ராமின் “தங்கமீன்கள்” திரைப்படம்.

அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில் கதையின் ஓட்டம் இருக்கிறது. அந்த ஓட்டத்தோடு, தாத்தா, பாட்டி, அத்தை போன்ற குடும்ப உறவுகளின் இயல்பான கோபதாபங்கள், பாசப்போராட்டங்கள் என நாம் அன்றாடம் பார்க்கின்ற குடும்பமும் இணைந்தே வருகிறது.

குழந்தைகளைப் புரிந்து கொள்ள முன்வராத, உளவியல் மனப்பான்மை அற்ற செயல்பாடுகளைக் கொண்ட தனியார் பள்ளிதான் படத்தின் மையக் கருவாகக் காட்டப்படுகிறது. கல்விமுறையைக் கேள்விக்குள்ளாக்குவதுதான் படத்தின் மையக்கரு என்றால், அதை இன்னும் சற்று அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம். காட்சி அமைப்புகளும், குழந்தைகளை நெருங்க விடாமல் விரட்டும் கல்விமுறை பற்றிய பதிவுகளும், செல்லம்மாவாகவும், அவளின் தோழியாகவும் நடித்த குழந்தை களின் நடிப்பும் மிகவும் அருமை.

இன்றைய கல்விமுறை மீதான விமர்சனங்கள், கேள்விகள் என பாராட்டத்தக்க அம்சங்கள் நிறைய இருக்கின்றன படத்தில். தனியார் ஆங்கிலப் பள்ளியில், ‘உனக்கு எதுவுமே வராது’ என்று புறக்கணிக்கப்பட்ட தன் மகள் செல்லம்மாவை இறுதியில் அரசுப் பள்ளியில் சேர்க்கிறார் ராம். அங்கே அவளுக்குப் பிடித்தமான ஆசிரியர், பாடச் சுமையற்ற வகுப்பறை என அமைகிறது. பேச்சுப்போட்டியில் முதல் பரிசு வாங்கும் அளவுக்குச் செல்லம்மாவிடம் முன்னேற்றம் வருகிறது.

2ஆவது படிக்கும் மகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அப்பா ராம் பொறுமையுடன் பதில் சொல்கிறார். பக்குவமாக அப்பா சொல்லும்போது, செல்லம் மாவுக்கு நன்றாகவே புரிகிறது. அப்படியிருக்கும்போது, சரியான கல்வித் தகுதியை வளர்த்துக் கொள்ளாததால் மகளுக்குப் பள்ளிக் கட்டணம் கூட கட்டமுடியாத ஒரு அப்பா, கல்வியின் முக்கியத்துவத்தையும் மகளுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்க முயலவில்லை என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.

அதேபோல், வோடபோன் நாய்க்குட்டி கேட்கும் மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு அப்பா ஆசைப்படுவது நியாயம்தான். ஆனால், அந்த நாயை வாங்குவதற்குத் தேவையான 25,000 பணத்திற்காகக் காடு மேடெல்லாம் உண்ணாமல், உறங்காமல் அலைந்து திரிகிறார் ராம். அப்படிப்பட்டவர், மகளின் பள்ளிக் கட்டணத்திற்காகக் கடன் கேட்டு அலைவதும், கடைசி வரைக் கட்டணம் கட்ட முடியாமல், ஊரை விட்டு வேறு ஊருக்குப் போவதும்... முரணாகத் தெரிகிறது.

குழந்தைகளின் உலகம் நம்பமுடியாத கற்பனைகளைக் கொண்டது என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அதற்காக எல்லா நேரங்களிலும், மிகைப்படுத்தப்பட்ட கற்பனை கலந்தே அவர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று இல்லை. இந்தப் படத்தில் ராம் அப்படித்தான் தன் மகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்.

இன்றைய ஊடக உலகத்தில், குழந்தைகள் எளிதில் பலசெய்திகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது. 2 ஆவது படிக்கும் குழந்தைக்குச் செத்துப் போறதுன்னா என்ன என்று கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். அப்படியிருக்கையில், தன்னுடைய மகளுக்கு ராம் தருகின்ற விளக்கம் வேடிக்கையாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அப்பா சொன்னதுபோல் நாய்க்குட்டியோடு வரவில்லை என்று, தான் தங்க மீனாக மாற, குளத்தில் இறங்கும் குழந்தையின் செயல் அதிர்ச்சியாக இருக்கிறது. கண்டிப்பாக 2ஆவது படிக்கும் குழந்தைகளால் இந்தப் படத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

குழந்தைகளின் உலகத்தைப் புரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதே நேரத்தில், நடைமுறை உலகத்திலிருந்து அவர்கள் தனிமைப்பட்டுப் போய்விடாதபடி பார்த்துக் கொள்வதும் மிக மிக முக்கியம்.

தங்க மீன்களைக் குளத்தின் ஆழத்திலிருந்து, சற்று மேலே வந்து சுவாசிக்கச் சொல்லியிருக்கலாம்.

Pin It