“அறன் இழுக்காது அல்லவை நீக்கி

மறன்இழுக்கா மானம்உடையது அரசு”

அதாவது நேர்மையான அறநெறிச்செயலில் தவறாமலும், அவை யற்றதை விலக்கியும் நடத்தப்படுவது தான் மானம் உள்ள அரசு என்கிறார் திருவள்ளுவர்.

நேர்மையான அறச்செயல் - நேர்மையற்ற செயல், எப்படிப் பார்ப்பது?

இராணுவத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கிவந்த தலைமைச் செயலகத்தை மாற்றித் தமிழக அரசின் நேரடிக்கட்டுப்பாட் டிற்குள் கொண்டுவர முனைந்த கலைஞர், ஓமந்தூரார் தோட்டத்தில் சிறப்பு வாய்ந்த நவீன தலைமைச் செயலகத்தை உருவாக்கினார். இது மக்கள் வரிப் பணத்தினால், மக்களுக்காகக் கட்டப் பட்ட நேர்மையான அறச்செயல்.

அந்தக் கட்டடத்தில் கால்வைக்க மாட்டேன். அரசு அலுவலகப் பணிக்கான வடிவமைப்பில் அது கட்டப்பட்டு இருந்தாலும், அதை மருத்துவமனையாகத்தான் மாற்றுவேன் என்பது எப்படி அறச் செயல் ஆகும்?

அனைவருக்கும் சமமான கல்வி என்பது சமச்சீர்க் கல்வி. இதைக் கொண்டு வந்தது தி.மு.க.அரச. இது நேர்மையான அறச்செயல்.

சமச்சீர்க் கல்வியை ஒழிக்க முனைந்த அ.தி.மு.க. அரசு நீதிமன்றத்திடம் குட்டு வாங்கி, அதன்பிறகு சமச்சீர்க்கல்வியை நடைமுறைப்படுத்துவது என்பது எப்படி அறச்செயல் ஆகும்-? வறட்டுப் பிடிவாதத்தால் மூன்று மாத காலம் பாடப்புத்தகங்களே இல்லாமல் பள்ளிகளில் பிள்ளைகளை அமர வைத்தது எப்படி அறச்செயல் ஆகும்?- மூன்று மாதங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட பாடநூல்களிலும், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் படத்தை தாள் ஒட்டி மறைத்தது எப்படி அறச்செயலாகும்?

நூலகத்தின் பயனுறு மாண்பை அறிந்தவர் தலைவர் கலைஞர். பேரறிஞர் அம்பேத்கரும், கார்ல் மார்க்சும் இலண்டன் நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்தியவர்கள் என்று உலகம் பெருமையாகப் பேசுகிறது. யாழ் நூலகம் எரிக்கப்பட்ட போது உலகமே அதிர்ந்து போனது. நூலகத்தின் பெருமைக்கு இவை சான்று.

தென்கிழக்கு ஆசியாவில் நவீன தொழில்நுட்பத்துடன் இணையற்ற ஒரு நூலகத்தை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமாக உருவாக்கிய அரசு தி.மு.க.அரசு. இது நேர்மையான அறச்செயல்.

தி.மு.க.ஆட்சியில் கட்டப்பட்ட நூலகம் என்பதற்காகவே, அதை திருமண மண்டபம் போல ஆக்கி, உருக்குலையச் செய்வதோடு, அங்கு பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு அரசு ஊதியம், அரசு சலுகைகள் என்று எதையும் தராமல் இழுத்தடிப்பது எப்படி அறச் செயலாகும்? அதனால்தான் அங்கு பணி யாற்றும் தொழிலாளர்கள் அண்மையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தித் தம் எதிர்ப்பை அ.தி.மு.க. அரசுக்குக் காட்டியிருக்கிறார்கள்.

தமிழகத்தின் வடகிழக்கில் அமைந்திருக்கும் சென்னைத் துறைமுகம் ஏற்றுமதி, இறக்குமதி என்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் ஒரு பெரிய துறைமுகம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றும், பல நூறு சரக்குந்துகள் போய்வந்து கொண்டு இருக்கும் நெருக்கடியான போக்குவரத்து மிகுந்த பகுதி இது.

மத்திய மாநில அரசுகளுக்குப் பெரும் வருவாயை ஈட்டித்தரும் துறைமுகம் இச்சென்னைத் துறைமுகம்.

இப்படிப்பட்ட துறைமுகப் பகுதியின் போக்குவரத்து நெரிசலை, இடைஞ்சலை சரிசெய்யும் நோக்கில், கடந்த தி.மு.க. ஆட்சியில் இப்பகுதியில் திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்டது இராயபுரம் துறைமுக மேம்பாலத் திட்டம். மத்திய அரசு இதற்கு நிதி ஒதுக்கிப் பணிகளும் தொடங்கி பாதி முடிந்துவிட்டது-. இது நேர்மையான அறச்செயல்.

ஆனால் இப்பாலம் முழுமை பெற்றால், அதன் பெருமை தி.மு.க. வுக்கும், அதன் தலைவர் கலைஞருக்கும் போய்விடும் என்பதால், மக்கள் வரிப்பணம் வீணாகிறதே என்னும் கவலை சிறிதும் இன்றி, கூவம் ஆற்றைக் காட்டித்திட்டம் நிறைவேறாமல் தடுக்க முனைவது எப்படி அறச்செயலாகும்?

மக்களுக்கும் நாட்டுக்கும் பயன் தரும் சேதுக்கால்வாயை உருவாக்கிட தி.மு.க. அரசு எடுத்த முயற்சியும், அதனால் நடந்து முடிந்த பணிகளும் நாடு அறியும். இது நேர்மையான அறச்செயல்.

தொடக்கத்தில் “ஆடம்ஸ்” பாலம் என்று சொன்ன அ.தி.மு.க. தலைவி, தமிழக முதல்வர் ஆனதும் அதை ராமர்பாலம் என்று சொல்லி, சேதுக் கால்வாய்த் திட்டத்தைத் தடுத்து நிறுத்திட முயல்வது எப்படி அறச் செயல் ஆகும்?

பத்து ஆண்டுகளுக்கு முன்னரே கவனிப்பார் அற்று இருக்கும் நரிக் குறவர் சமூகத்தைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று சொன்னவர் தலைவர் கலைஞர். இது நேர்மையான அறச்செயல்.

இப்பொழுது அக்கோரிக்கையை தான்தான் முதன்முதலாக முன்னெ டுப்பது போல ஜெயலலிதா பேசுவது எப்படி அறச்செயல் ஆகும்?

ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மக்கள் நலப்பணியாளர்கள் என்னும் பெயரில் பல்லாயிரக்கணக் கானவர்களை அரசுப் பணியில் அமர்த்தி அவர்களுக்குக் கலைஞர் அரசு உதவியது. இது நேர்மையான அறச்செயல்.

அந்த மக்களின் வாழ்நிலை பற்றியோ, எதிர்காலம் பற்றியோ எண்ணிப்பாராமல், அவர்கள் கலைஞரால் நியமிக்கப் பட்டவர்கள் என்னும் ஒரே காரணத்திற்காக, அந்தப் பதின்மூவாயிரம் ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறது இன்றைய அரசு. எத்தனையோ போராட்டங்கள் நடத்திய பின்பும், அவர்களில் சிலர் இறந்தே போன பின்பும் கூட, தன் மக்கள் விரோத நிலையை மாற்றிக் கொள்ள மறுக்கிறது ஜெ.அரசு. இது எப்படி அறச் செயலாகும்?

அறம் வெல்லும், அறம் அற்றவை வீழும் - வள்ளுவரின் வாய்மொழி.

Pin It