அனல் தெறிக்கும் பேச்சாளர், தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர் போராட்டத்தில் வா.உ.சியுடன் தன்னையும் தேசாபிமான சங்கத்தில் இணைத்துக் கொண்டு, வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடியவர்தான் சுப்பிரமணிய சிவா.

09.03.1908 அன்று சிவாவிற்கும், வ.உ.சிக்கும் பிரித்தானிய ஆட்சியாளர்கள் பேசத் தடை விதித்தனர். தடையை மீறி மக்களைச் சந்தித்து மேடையில் உரையாற்றியதால், 12.03.1908இல் வ.உ.சி., சிவா, பத்மநாபன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். சுப்பிரமணிய சிவா தங்குவதற்கு இடம் தந்தமைக்காக ஓர் ஆயுள் தண்டனையும், பிரித்தானிய அரசை எதிர்த்ததற்காக இன்னோர் ஆயுள் தண்டனையுமாக இரண்டு ஆயுள் தண்டனைகள் வ.உ.சிக்குத் தரப்பட்டன.

சேலம் சிறையில் அடைக்கப்பட்ட சிவா, சிறையில் இருந்து வெளிவரும் போது, சிறைக் கொடுமை அவருக்குத் தொழுநோயைத் தந்து அனுப்பியது. அதனால் அவர் தொடர் வண்டியில் கூட பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கட்டை வண்டியிலேயே பயணித்து விடுதலை உணர்வை பரப்பினார்.

சுப்பிரமணிய சிவா ஆன்மீகப் பற்றுடையவர் ஆயினும், அவருடைய தியாகத்தை மதிக்கும் பொருட்டு, வருங்காலச் சமூகத்திற்கு வரலாற்று அடையாளமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், திராவிட இயக்க வரலாற்றின் அடியயாற்றித் தன்னைத் தகவமைத்துக் கொண்ட கலைஞர், தனது ஆட்சிக் காலத்தில்(2010), அவர் பிறந்த ஊரான தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் நினைவுச் சின்னமாக மணிமண்டபம் எழுப்பினார்.

ஆனால் தற்பொழுது அதனைத் தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதா அம்மையார் காணொளி(வீடியோ கான்ஃபரன்ஸ்) மூலமாகக் கூடத் திறக்காமல், திறந்து விட்டதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனைவிட வேதனை வேறென்ன இருக்க முடியும்? சிவம் பேசினால் சவம் எழும் என்பார்கள். அத்தகைய சுதந்திரப் போராட்ட வீரருக்கு ஜெயலலிதா அரசு தரும் மதிப்பு இதுதானா?

Pin It