பிபிசி ஊடக நிறுவனம் எடுத்துள்ள, ‘இந்தியாவின் மகள்’ என்னும் ஆவணப்படம் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தியத் தலைநகர் தில்லியில் மருத்துவ மாணவி ஜோதி சிங் (நிர்பயா) - இதுதான் அவருடைய உண்மையான பெயர் - ஓடும் பேருந்தில் கொடூரமான பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி, மரணமடைந்த நிகழ்வு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தக் கோர நிகழ்வை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப் படம்தான் இந்தியாவின் மகள். அந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான, முகேஷ் சிங்கின் நேர்காணலையும், ஜோதி சிங்கின் நண்பர், பெற்றோர் ஆகியோரின் கருத்துகளையும் உள்ளடக்கியது அந்த ஆவணப்படம். அந்த சமயத்தில் நாடு முழுவதும் நடைபெற்ற தீவிரமான போராட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இடையிடையே குற்றாவளிகள் தரப்பு- வழக்கறிஞர்களின், ‘ஆணாதிக்க - ஆதிக்க சாதி’ பேச்சுகளும் இடம்பெற்றுள்ளன.

bbc 340கலாச்சாரம், பண்பாடு என்றுசொல்லி, இந்துத்துவக் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் உலக அரங்கில் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த, இந்தியாவின் உண்மை முகம் என்னவாக இருக்கிறது என்பதை உலக நாடுகள் தெரிந்து கொண்டுவிடக்கூடாதே என்று, இந்த ஆவணப்படத்திற்கு அவசர அவசரமாகத் தடை விதித்தது இந்திய உள்துறை அமைச்சகம். ஆனால் இதையும் மீறி பிபிசி ‘இந்தியாவின் மகளை’ ஒளிபரப்பி, இந்தியாவின் மகன்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள், நடத்துகிறார்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

‘அவள் கண்களில் பயம் தெரியவில்லை. அது எங்கள் கோபத்தை அதிகமாக்கியது - கடுமையாக நடந்து கொண்டோம்’ என்கிறான் முகேஷ்சிங். ஒரு ஆணைப் பார்த்தவுடன், ஒரு பெண்ணுக்கு அச்சமும், நாணமும் வரவேண்டும். அதுதான் இந்த நாட்டுக் கலாச்சாரமும், பண்பாடும் வகுத்து வைத்திருக்கின்றன பெண்ணிற்கான இலக்கணம். அந்த இலக்கணத்தை மீறும் பெண்களை, இந்த நாட்டு ஆண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதைத்தான் நாங்களும் செய்தோம் என்னும் தொனிதான், முகேஷ்சிங்கின் பேச்சில் காணப்படுகிறது.

முகேஷ்சிங் உள்ளிட்ட குற்றவாளிகளின் பெற்றோர்களும் இதில் பேசுகின்றனர். தில்லியின் ஆர்.கே.புரம் என்னும் சேரிப்பகுதியில் அவர்களின் வீடுகள் உள்ளன. அந்தப் பகுதியிலும் இந்தப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள் ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த காலங்களில் தொடர்ந்து, பல வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவில் இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளைத் தொடர்ந்து, ‘இந்தியாவிற்குப் பெண்கள் யாரும் தனியாக சுற்றுலாவுக்குப் போக வேண்டாம்’ என்று அந்த நாடுகள் எச்சரித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். அண்டை நாட்டு மகளுக்கு மட்டுமன்று, இந்தியாவின் மகளுக்கே இங்கே பாதுகாப்பில்லை என்பதை, ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படம் தெளிவாக்குகிறது.

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஆவணப் படம்.

Pin It