கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழ் மாவீரர்களின் புனித நினைவுகளை நெஞ்சிலேந்தி என் கருத்துரையைத் தொடங்குகிறேன்.

இனவழிப்புக்கு இரையானவர்களின் நினைவேந்தலுக்கும் அவர்தம் கண்ணியத்துக்குமான பன்னாட்டு நாளைக் கடைப்பிடிக்க இன்று இங்கே குழுமியுள்ளோம். உலகெங்கிலும் நடந்துள்ள, இன்றளவும் நடந்து வரும் பெருந்திரள் வன்கொடுமைகளுக்குச் சான்று பகர இன்று இங்கே குழுமியுள்ளோம்; “இனி ஒருபோதும் இது நடவாது” என்று உறுதிசெய்து கொள்ள இன்று இங்கே குழுமியுள்ளோம்.

father of the genocide conventionலெம்கின் சொன்னார், இனவழிப்பு என்பது மாந்தக் குலத்துக்கே எதிரான குற்றமாகும். அது ஒரு குழுவைச் சேர்ந்த அனைவரின் வாழ்வுரிமையையும் மறுப்பதாகும் என்கிறது ஐநா பொதுப்பேரவையின் 96(1) தீர்மானம். ருவாண்டாவுக்கான முன்னாள் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயம் அதனைக் குற்றங்களுக்கெல்லாம் குற்றம் என்று முத்திரையிட்டது. அதுவே குற்றங்களுக்கெல்லம் தாய்க் குற்றம். அது குற்றமெனும் கோபுரத்தின் உச்சியிலிருக்கும் குற்றம் என்று முன்னாள் யுகோஸ்லாவியாவுக்கான பன்னாட்டுத் தீர்ப்பாயம் வண்ணித்தது.

1948ஆம் ஆண்டு முழுப்பேரழிப்பின் அடியொற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு இனவழிப்பைத் தடுக்கவும் தண்டிக்கவுமான ஒப்பந்தத்தை இயற்றியது. அதன் உறுப்பு 1 இனவழிப்புக் குற்றத்தைத் தடுப்பதையும் தண்டிப்பதையும் ஒப்பந்தத் தரப்புகளின் மீது ஒரு சட்டக் கடப்பாடாக விதித்தது. உறுப்பு 2 இனவழிப்பாகிய குற்றமாக அமைந்திடும் இனவழிப்புச் செயல்களை இனங்காட்டிற்று. அவையாவன:

 (அ) குழு உறுப்பினர்களைக் கொலைசெய்தல்;

(ஆ) குழுவைச் சேர்ந்தவர்களுக்கு உடலளவிலோ மனத்தளவிலோ கடுங்காயம் விளைவித்தல்;

(இ) குழு முழுமையாகவோ பகுதியாகவோ உடலளவில் அழிவுறும் நிலைக்கு வழிகோலும் திட்டப்படியான வாழ்க்கை நிலைமைகளை வேண்டுமென்றே குழுவின் மீது சுமத்துதல்;

(ஈ) குழுவிற்குள் பிறப்பைத் தடுக்கும் நோக்கங்கொண்ட வழிமுறைகளைத் திணித்தல்;

(உ) குழுவிலுள்ள குழந்தைகளை வலுவந்தமாக வேறொரு குழுவுக்கு மாற்றுதல்.

தமிழ்த் தேசத்தின் சார்பில் நான் விழைவுற்ற படி, இனவழிப்புக் குற்றத்துக்கான பொறுப்புக் கூறலையும், எதிர்கால இனவழிப்பைத் தடுக்கும் வழிமுறைகளையும் ஆய்வு செய்திட சிறிலங்காவில் நடந்த இனவழிப்பை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்கிறேன்.

2009ஆம் ஆண்டு, போரின் இறுதிக் கட்டங்களில் சற்றொப்ப 40.000 மக்கள் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்கிறது ஐநா வல்லுநர் குழு அறிக்கை. ஐநா உள்ளக ஆய்வு அறிக்கையின் படி சற்றொப்ப 70,000 மக்களுக்குக் கணக்குத் தரப்பட வில்லை என்பதற்கு நம்பகமான சான்றுண்டு. நம் நினைவில் வாழும் ஆண்டகை அருள்தந்தை ராயப்பு ஜோசப் அவர்களின் பார்வையில், அந்நேரம் சிறிலங்கா ஆட்சியாளர்களே தந்த தரவுகளின் அடிப்படையில் 1,46,679 மக்களுக்குக் கணக்குச் சொல்லப்படவில்லை. சிறிலங்கா அரசு அந்நேரம் இழைத்த ஐந்து கடுமையான மீறல்களை ஐநா வல்லுநர் குழு அறிக்கை இனங்காட்டிற்று: அவையாவன:

1) பரவலான குண்டுவீச்சினூடாகப் பொதுமக்களைக் கொன்றது.

2) மருத்துவமனைகள் மீதும் மனிதநேய இலக்குகள் மீதும் குண்டுவீசியது,

3) மனித நேய உதவி தர மறுத்து,

4) உள்நாட்டுப் புலம்பெயர்ந்தோர், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற ஐயத்துக்குரியவர்கள் உட்படப் போருக்கு இரையானவர்களும் உயிர்பிழைத்தவர்களும் மனிதவுரிமை மீறல்களுக்கு ஆளானது,

5) போர் வலையத்துக்கு வெளியே நிகழ்ந்த மனிதவுரிமை மீறல்கள், ஊடகங்களிலும் பிறவகையிலும் ஆட்சியாளர்களைக் குறைகூறியவர்களுக்கு எதிரான மனிதவுரிமை மீறல்கள் உட்பட,

ஐநா வல்லுநர் குழு கண்டடைந்த முடிவுகளில் 1. 2. 3 ஆகியவை இனவழிப்பு ஒப்பந்தத்தின் இரண்டாம் உறுப்பின் அ, ஆ, இ ஆகிய உட்பிரிவுகளுக்குப் பொருந்தக் கூடியவை ஆகும். இருப்பினும், இரண்டு ஐநா அறிக்கைகளும் சரி, சிறிலங்கா பற்றிய மனிதவுரிமை உயராணையர் அலுவலக (OISL) அறிக்கையும் சரி, 2009ஆம் ஆண்டு சிறிலங்காவில் நடந்த துயர நிகழ்வுகள் தொடர்பாக இனவழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

அவர்கள் திரும்பிப் பார்த்துச் சொல்லலாம், குற்றமிழைத்தவர்களின் மனநிலையைச் சொல்வது கடினமென்று. இனவழிப்புக் குற்றத்தின் குற்ற நோக்கத்தை நிறுவ வேண்டுமே, அது கடினம் என்று அவர்கள் சொல்லக் கூடும். எந்தக் குற்ற வழக்கிலும் போலவே குற்ற நோக்கத்தை நிறுவ முடியும். நேரடிச் சான்று கொண்டோ சுற்றுச் சான்று கொண்டோ நிறுவ முடியும். புதுமக்காலத் தகவல்தொடர்புப் பொறிகளும் அப்போது கிடைத்த வேவுத் தகவலும் இருக்கும் போது, குற்றங்களுக்குத் திட்டமிட்டதற்கும் அவற்றை நிறைவேற்றியதற்கும் குற்றமிழைத்தவர்களிடையிலான தகவல் தொடர்பிலிருந்து நேரடிச் சான்று திரட்ட வாய்ப்புண்டு. போரின் இறுதிக் கட்டங்களைப் பல்வேறு நாடுகளும் ஐநாவும் செய்மதிகள் வழியாகக் கண்காணித்தன என்பது பரவலாகத் தெரிந்த செய்திதான். நேரடிச் சான்றே இல்லையென்று வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும், பொதுச் சூழல், தாக்குதலின் வீச்சு, இழைக்கப்பட்ட வன்கொடுமைகளின் அளவு, அழிவுச் செயல்கள், பாகுபாட்டுச் செயல்கள் போன்றவை குறித்து சுற்றுச் சான்றினூடாகவும் குற்ற நோக்கத்தை நிறுவ இயலும்.

மேலும், இனவழிப்புக் குற்றம் இழைக்கப்பட்டதாக ஐநா அறிக்கைகள் சொல்லும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. எதிர்பார்க்கப்பட்டதெல்லாம் இனவழிப்புக்குற்றம் இழைக்கப்பட்டதற்கு நம்பகமான சான்று உள்ளதென்ற கூற்று மட்டுமே. ஆனால் ஐநா தன் அறிக்கைகளில் ”இனவழிப்பு” என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. இது தமிழ்ச் சூழலில் தனித்துவமானது மட்டுமன்று, வேறு பல சூழல்களிலும் அப்படித்தான் இருந்துள்ளது. இனவழிப்புக் குற்றத்தை மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் அல்லது போர்க் குற்றங்களாகக் குணங்குறிப்பதே ஐநாவின் முயற்சியாகும். காரணம் என்னவென்றால், இனவழிப்புக் குற்றம் நிறுவப்பட்டால் இனவழிப்பு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்ட தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய சட்டக் கடப்பாடு உள்ளது. ஆனால் புவிசார் அரசியல் கணக்குகளால் நாடுகள் நடவடிக்கை எடுக்க விரும்பாதுள்ளன.

போஸ்னிய முசுலிம்களை செர்பியர்கள் படுகொலை செய்த போது அமெரிக்க அதிபர் மூத்தவர் புஷ் அதனை இனவழிப்பாகக் குணங்குறிக்க மறுத்தார். ருவாண்டா இனவழிப்பின் போது கிளிண்டன் ஆட்சி மனத்தை மயக்கும் சொற்சிலம்பம் ஆடிற்று. விளக்கமாகச் சொல்வதென்றால், அந்த நேரத்தில் அவரது ஊடகச் செயலர் என்ன சொன்னார் தெரியுமா? நூறாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள், இனவழிப்புச் செயல்கள் நடந்து கொண்டிருக்கக் கூடும் என்றார். இதற்கு ஒரு செய்தியாளர் கேட்டார், “எத்தனை இனவழிப்புச் செயல்கள் சேர்ந்தால் ஓர் இனவழிப்பு ஆகும்?” தார்ஃபுர் இனவழிப்பின் போது இளையவர் புஷ் முதலில் இனவழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஆனால் குடியியல் சமூகமும் ஊடகங்களும் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து அவர் இறங்கி வந்தார். குற்றம் எவ்வளவு கொடுமையானது என்பதைப் படம்பிடித்துக்காட்ட ”இனவழிப்பு” தவிர வேறு எந்தச் சொல்லாலும் முடியாது.

இது தொடர்பில் கனடாவைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். ரோகிங்க்யா இனவழிப்பை அறிந்தேற்ற முதல் நாடு அதுவே. சிறிலங்காவில் நடந்த இனவழிப்புக் குற்றம் குறித்துப் பன்னாட்டுப் புலனாய்வு வேண்டுமென்று 2019இல் ஒருமனதாகத் தீர்மானம் இயற்றியமைக்காகவும் கனடாவைப் பாராட்டுகிறேன். ஆனால் அந்தத் தீர்மானம் வெற்றுப் பேச்சாகவே இருந்து வருவதையும் நான் குறிப்பிடத்தான் வேண்டும். இந்தத் தீர்மானத்துக்குப் பொருளூட்டம் தர கனடிய ஆட்சியாளர்கள் ஆவன செய்வார்கள் என நம்புகிறேன். இனவழிப்பு என்ற பெயரை மறுப்பது, இனவழிப்பை இனவழிப்பு என்று அழைக்கத் தவறுவது அக்குற்றத்தைச் சொற்பக் குற்றமாக்கிக் குற்றத்துக்கு இரையானவர்களை இழிவுசெய்வதாகும். சுருங்கச் சொல்லின், அரசியல் அமைப்புகள் இக்குற்றத்தைக் குணங்குறிப்பது சட்டத் தேவைகளைக் காட்டிலும் அரசியல் பார்வைகளைப் பொறுத்ததாகவே உள்ளது. ஒறுப்பச்சமிலாக் குற்றம் (தண்டிக்கப் பெறும் அச்சமில்லாத குற்றம்) எனும் கேட்டை அணுகுவதிலும் அரசியல் பார்வைகளுக்குப் பங்குள்ளது. தமிழினவழிப்புச் சூழலில் இதைப் பார்த்துள்ளோம். ஐநா ஆணையரின் அறிக்கை கலப்புப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்று சொன்னாலும், பின்னர் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பச் சொன்னாலும், ஐநா மனிதவுரிமைப் பேரவைத் தீர்மானங்களை முன்மொழிந்த நாடுகள் பொறுப்புக் கூறல் எனும் பொருட்பாட்டை சிறிலங்காவிடமே விட்டுவிடத் தீர்மானித்து விட்டன.

சிறிலங்கா அரசே, அதாவது அந்தக் கொடுங்குற்றங்களை இழைத்ததாகக் குற்றஞ்சாற்றப் பெற்றுள்ள அந்த அரசே உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்க வேண்டுமெனக் கோருவது அற நோக்கில் நிந்தனைக்குரியது மட்டுமன்று, இயல்பறிவை இழிவு செய்வதும் ஆகும். ஆனால் பொறுப்புக் கூறலை நாடும் போது இதனை அரசுகளின் கையில் மட்டுமே விட்டுவிடுவதற்கில்லை. இன்று குடியியல் சமூகத்துக்குள்ள முக்கியத்துவத்தையும் முதன்மைச் சிறப்பையும் கணக்கில் கொண்டால், குடியியல் சமூகத்தைத் திரட்டி அரசுகளைச் செயல்பட வைக்க முடியும். தமிழினவழிப்புக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில், செல்வாக்குமிக்க குடியியல் சமூகக் குழு ஒன்று அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இயக்கம் தொடங்க அணியமாகி வருகிறது. இந்த நடவடிக்கை தொடர்பாக வரவிருக்கும் நாட்களில் முகன்மையான அமைப்புகளிடமும் பேசுவோம்.

இனவழிப்பால் பாதிப்புற்றுத் துயருற்ற நாமும் சிக்கலை நம் கையில் எடுத்துப் பொறுப்புக்கூறலுக்கான வழிமுறைகளை வடிவமைக்க வேண்டும். இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாதிப்புற்றவர்கள் முன்னெடுக்கும் பன்னாட்டு நீதி என்ற ஒரு முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. அறிந்து கொள்ளும் உரிமை, உண்மையறியும் உரிமை ஆகிய உரிமைகளின் அடிப்படையில் ஐநாவிடம் ஏற்கெனவே இருக்கும் சான்றினைப் பெறும் செயல்வழியில் ஈடுபட்டுள்ளோம். முன்னாள் ஐநா தலைமை வழக்குத் தொடுநர் பேராசிரியர் குரூம் சொல்கிறபடி, சற்றொப்ப 120 நாடுகளில் தனிப்பட்ட குடிமக்கள் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. நான் கவனப்படுத்த விரும்புகிற இன்னொரு செய்தி என்னவென்றால், இந்தக் கொடுங்குற்றங்களைச் செய்தது ஒற்றைத் தனியாள் அல்லது ஆய்தப்படைகளின் ஒற்றைப் பட்டாளம் அன்று. இவை அரசே செய்த குற்றங்கள். மனிதவுரிமை உயராணையர் அலுவலகம் சிறிலங்கா குறித்துச் செய்த புலனாய்வு (OISL) அறிக்கையில் கண்டுள்ள படி, தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் அமைப்புசார் குற்றங்கள் ஆகும். ஆனால் இறைமைசார் சட்ட விலக்குரிமை எனும் திரைக்குப் பின்னால் பதுங்கிக் கொள்ளும் அரசுகள் பன்னாட்டு நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் தவிர மற்றபடி பொறுப்புக் கூறலிலிருந்து தப்பி விடுகின்றன, நாம் உள்நாட்டுத் தீர்ப்பாயங்களில் இந்தக் குற்றங்களுக்காக அரசை எதிர்த்து உரிமையியல் வழக்குத் தொடர முடியாது. ஆகவே, அரசுகள் இறைமைசார் சட்ட விலக்குரிமையைத் தற்காப்பு வாதுரையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாதபடி கனடியச் சட்ட விலக்குரிமைச் சட்டத்துக்கு ஒரு திருத்தம் கொண்டுவருமாறு கனடியச் சட்டமியற்றுநர்களை நாகதஅ கேட்டுக் கொள்கிறது. இந்தத் திருத்தம் அரசுகள் இறைமைசார் சட்ட விலக்குரிமையை ஒரு தற்காப்பு வாதுரையாகப் பயன்படுத்துவதிலிருந்து இனவழிப்புக் குற்றத்துக்கு விதிவிலக்கு அளிப்பதாக இருக்க வேண்டும். தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலகெங்கும் பாதிப்புற்ற மற்றவர்களுக்கும் இதனால் நன்மை விளையும். இவ்வாறு இன்று நாம் ஒரு கூட்டணி அமைத்து இத்திட்டத்தில் பயணம் தொடங்குகிறோம்.

இன்று நாம் பேசிக் கொண்டிருக்கும் போதே சிறிலங்கா அரசு தமிழர்களைக் கட்டமைப்பியல் இனவழிப்புச் செய்வதில் ஈடுபட்டுள்ளது. தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதன் மூலமும் தமிழர் வாழும் தாயகத்தை வன்கவர்வு செய்வதன் மூலமும் அவர்கள் இதனைச் செய்கின்றனர். லெம்கினும் பன்னாட்டுத் தீர்ப்பாயங்களும் சொல்லியிருப்பது போல, பண்பாட்டு இனவழிப்பு என்பது இனவழிப்பு ஒப்பந்தத்தின் எல்லைக்குள் வராது என்னும் போதே அந்தச் செயல்கள் குறிப்பிட்ட தேசத்தை முழுமையாகவோ பகுதியாகவோ உடல்வகையில் அழிக்கும் நோக்கம் குற்றமிழைப்பவர்களுக்கு இருப்பதைத் தெளிவாகக் காட்டுவன ஆகும்.

இனவழிப்புக்கு ஆளான தேசம் பன்னாட்டுச் சட்த்தின் அடிப்படையிலும் அறநெறிகளின் அடிப்படையிலும் ஈடுசெய் நீதிக்கு உரித்துடையது. சுதந்திர அரசின் வடிவிலான ஈடுசெய் நீதிதான் சிறிலங்காவில் எதிர்காலத்தில் இனவழிப்பு நிகழாமல் தடுப்பதற்குள்ள ஒரே வழி என்று நாம் உறுதியாக நம்புகிறோம். ஈழத்தமிழர்களாகிய நமக்குத் தன்தீர்வுரிமை (சுயநிர்ணய உரிமை) என்பது உள்ளார்ந்த பிறப்புரிமை ஆகும். பண்பாட்டு இனவழிப்புக்கும் உடல்வகை இனவழிப்பு நிகழும் ஆபத்துக்கும் எதிராக நம்மைக் காத்துக் கொள்ள நாம் இந்த உரிமையைச் செலுத்த வேண்டும் என்றும் நம்புகிறோம். இனவழிப்பைத் தடுப்பதற்கு வெளிநிலை வடிவில் தன்தீர்வுரிவுரிமையை நாம் செலுத்த வேண்டும். நாம் உடல்வகையில் அழிந்து போகாமல் பிழைத்திருப்பதற்கே கூட இறைமை கொண்ட சுதந்திரத் தனியரசின் வடிவில் தன் தீர்வுரிமையைச் செலுத்த வேண்டும். கனடிய உச்ச நீதிமன்றம் எடுத்துக் காட்டியது போல் வெளிநிலைத் தன்தீர்வும் ஈடுசெய் நீதியும் பின்னிப்பிணைந்தவை ஆகும். இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே.

இனவழிப்பினால் பாதிப்புற்றுத் துயரப்பட்ட மக்களுக்கு நீதி தேடும் முயற்சிக்கு இந்த முக்கியமான நினைவேந்தல் நாளில் நம்மை மீளர்ப்பணம் செய்து கொள்வோம், “இனி ஒருபோதும் இது நடவாது” என்று உறுதி செய்து கொள்வோம்!