கதிர்பாரதி கவிதைககள்

கதிர்பாரதி (1983)
இயற்பெயர் ஆ.செங்கதிர்ச்செல்வன். பூர்வீகம் தஞ்சாவூர் மண்.
கம்யூனிசக் கொள்கைப் பற்றும் விவசாய வாழ்வையும் பின்னணியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்.
தற்போது கல்கி வார இதழில் தலைமை உதவி ஆசிரியர் பணி. வசிப்பது சென்னையில்.
 விரைவில் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவர இருக்கிறது
தொடர்புக்கு - செல் : 9841758984

1
வேம்பு கசப்பதில்லை

இரு கார்காலத்துக்கு முன்பாக
தோட்டத்தில் ஊன்றிய வேம்பு
செழித்து வளரும் இந்தக் கோடையில்
நேற்றுக்கும் இன்றுக்குமாக
அலைந்துகொண்டிருக்கின்றன பிஞ்சுக்கிளைகள்
இன்றைத் துளைத்துக்கொண்டு
நாளைக்குள் ஊடுருவும் சல்லிவேரொன்றில்
அவள் பிரியத்தைச் சாய்க்கிறாள்.
ஏறுவெய்யில் நிலம் சலிக்கும் ஒரு முன்மாலையில்
பொன்மூக்குத்தி பூக்களால் சிரிக்கும்
வேம்பின் புண்ணியத்தில்
அத்தனை கசப்பாய் இல்லை
இந்தக் கோடை.

2

குடும்பப் புகைப்படம்

நெடுநாட்கள் கழித்து குடும்பப் புகைப்படம் ஒன்றைப் பார்க்கையில்
சுடர்விடும் அன்பைத் தரிசிக்கிறீர்கள் ஒரு முகத்தில்.
வேறொன்றில் வெறுப்பு மின்னலென ஓடி மறைகிறது.
மற்றொன்றில் சாந்தம் கொண்டலென வீசுகிறது.
பிறிதொன்றில் அசூயையும் ஆற்றாமையும் வழிகிறது.
தளிர்முகமொன்றில் தன் சல்லிவேருக்குப்
பாசநீரைக் கேட்கும் யாசகம் தெரிகிறது.
வயோதிகச் சுருக்கங்களில் காலம் சலசலத்துப் பிரவகிக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாகச் சதியொன்றின் வடுவில்
தடுக்கி விழ நேர்கிறது.
திடுக்கிட்டு மூடிவிட்ட புகைப்படத்தை
மீண்டுமொருமுறை எடுத்துப் பார்க்கிறீர்கள்.
காற்றுக்கு அஞ்சி நடுங்குகிறது தீயின் நாவொன்று.
பனியாலான குறுவாளொன்று குறிபார்க்கிறது.
கரையறுக்கும் வெள்ளத்தில் கருவேலமொன்று சாய்கிறது.
அறுவடைக்கு நிற்கும் நெல்வயலொன்றில் தீ பரவுகிறது.
இறுதி நொடியிலிருக்கும் உயிரின் கரமொன்று
காற்றின் விழுதொன்றில் ஊசலாடுகிறது.
யாவற்றையும் அவதானித்துவிட்டு
புகைப்படக் கலைஞனைப் பாராட்டக் கிளம்பும் நீங்கள்
மாபெரும் ரசிகன் எனில்
அவனைக் கொன்று திரும்பினால்
கடவுள்.

3
நூற்றாண்டின் தூசி

நான்கைந்து நூற்றாண்டுகளின் ரேகைகள் படிந்திருக்கும்
மாளிகைக்குள் நுழைகிறீர்கள் எனில்
அந்தந்த நூற்றாண்டுகளுக்குள் நுழைகிறீர்கள்.
ஒவ்வொரு படியும் உங்களை ஒவ்வொரு வருடமாக
மேல்தூக்கி அழைத்துப் போகிறது.
முன்னிருக்கும் முதல் நூற்றாண்டைக் கடந்துபோகும்போது
ஊஞ்சலாடும் சிறுமிக்கு உதவுகிறீர்கள்.
பாடம் செய்யப்பட்டு அருகருகே மாட்டப்பட்டிருக்கும்
சிங்கத்துக்கும் மானுக்கும் இடையில்
அந்த ஊஞ்சல் மிக லாவகமாக முன்-பின் போய் வருகிறது.
அடுத்த நூற்றாண்டின் உத்தியாவனத்தில் இறங்குகிற நிலவொளியில்
தனிமை ஒரு ராஜகுமாரியாக உலவித் திரிய
அதன் இடது அறையில் தளும்பும் ரகசிய சிணுங்கலொன்றில்
உங்கள் குரல் கேட்டுத் துணுக்குற்று நிற்கிறீர்கள்.
மூன்றாம் அடுக்கிலிருக்கும் நூற்றாண்டின் சன்னல் வழியாக
உற்றுக்கேட்கும்போது தூரத்தில் அதிரும் குளம்பொலிக்கேற்ப
நுணா மரத்தடியில் ஏறி இறங்குகிறது மார்க்கச்சை ஒன்று.
நான்காம் அடுக்கின் நுழைவாயிலில் மாட்டப்பட்டிருக்கும்
வாளிலிருந்து சொட்டும் ரத்தத்துளிகளைப் பார்த்துவிட்டு
சடசடவெனக் கீழிறங்கி வந்துவிடும் நீங்கள்,
செய்யவேண்டியது ஒன்றேயொன்றுதான்.
தலையில் ஒட்டியிருக்கும் காலாதிகாலத்தின் தூசியை
உடனடியாகத் தட்டிவிட்டு விடுங்கள்.

4

அன்பின் வாதை

அன்பு, ஆட்சி செலுத்தும் மிகுபுராதனமான நகரம் இதென்று
சுற்றிக்காட்டினான் அந்தச் சுற்றுலா வழிகாட்டி.
காருண்யமும் வாஞ்சையும் அதன் தலைமைப் பீடமென்று
சொல்லும்போதே அவன் முகத்தில் பெருமை சம்மணமிட்டது.
முதியோர் இல்லங்கள் இழுத்துச் சாத்தப்பட்டு
பிறகு அவை ஆராதனை மையங்களாக மலர்ந்தனவாம்.
விபச்சார விடுதிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களான அன்றுதான்
மழை கொட்டோகொட்டென்று கொட்டி நகரம் செழித்திருக்கிறது.
வாசங்களின் சிம்மாசனமாகத் தரிசனம் தருகிற இந்தப் பூங்கா
கோட்டான்கள் அலறித்திரிந்த கல்லறை மேடாகவும்
செப்பனிடப்பட்ட தானிய சேமிப்புக் கிடங்குகள்
கொள்ளையர்களின் மந்திராலோசனை கூடமாகவும் இருந்தவையாம்.
அல்லவை அனைத்தும் நல்லவையானதற்கு
அன்பு ஆட்சிக்கு வந்ததுதான் காரணம் என்றான்.
அன்பின் கொடுங்குளிரில் பதற்றமும் உதறலும் எடுக்க ஆரம்பித்தது.
எண்கள் அச்சிடப்பட்ட சில தாள்களை
அவன் கையில் திணித்துவிட்டு ஓடிவந்துவிட்டேன்
அதிகாரம் ஆட்சி செலுத்தும் நகரத்தின் வெப்பத்துக்கு.

5

சமாதானத் தூதுவர் = ஹிட்லர்

ஆக...
ஹிட்லரின் அந்தப்புரத்தை சமாதனத் தூதுவர் ஆக்கிரமித்துக்கொண்டார்.
அவனது காதலியையும் பணிப்பெண்களையும் எடுத்துக்கொண்டது
தூதுவரின் இச்சைக்காக என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மேலும் ஹிட்லரின் சிம்மாசனத்தை உதாசீனப்படுத்தி விட்டு
அந்தப்புரத்தை ஆக்கிரமித்ததொன்றும் தற்செயல் நிகழ்வல்ல.
ஹிட்லருக்கு ஆதரவாக எழுந்த நாவுகளைக் கொய்ததும்
அவனாற்றிய நலத்திட்டங்களின் பலன்களை எரித்ததும்
திட்டவட்டமாகத் திட்டமிட்டதுதான்.
வீதிகள்தோறும் நிறுவியிருந்த ஹிட்லரின் சிலையிலிருந்து
மீசையை மட்டும் சிராய்த்ததில்
சிலைகள் தூதுவரின் சாயல்கொண்டதே ஆக்கிரமிப்பின் உச்சம்.
விடிகாலை வீதியில் குழப்பத்தில் தவித்த
ஹிட்லரின் மக்களை நோக்கி
சமாதானத்தின் தூதுவர் பேசிக்கொண்டிருக்கிறார்.
வருந்திச் சுமக்கிறவர்களே சத்தியமாய் நம்புங்கள்
நான் சமாதானத் தூதுவர் அல்ல
ஹிட்லர்.

6

வீட்டை எட்டிப் பார்த்தல்

எருக்கம்புதர்கள் மண்டிக்கிடக்கும்
ஒரு பாழடைந்த வீட்டைக் கடக்கும்போது
உங்கள் இதயத்தால் உற்றுப் பார்க்கிறீர்கள்.
வசீகரமிக்கதாகத் தோன்றுகிறதா
சுடர்கிற ஒளி கண்களைக் கூசப் பண்ணுகிறதா
இப்போது அந்த வீட்டிலிருந்து
ஒரு புறா பறந்து போவதாகத் தோன்றுமே உங்களுக்கு.
அந்தப் புறாவைத் தொடர்ந்து
ஓர் இறகு போல வீடும் மேலெழும்பி
மிதப்பதையும் காண்கிறீர்கள் எனில்
அந்த வீட்டிலிருந்து கொலுசொலி லயத்தோடு
கசிந்து வருவதும் உங்களுக்குக் கேட்டிருக்க வேண்டும்.
ஆர்வத்தின் நிமித்தம் சுற்றுச்சுவர் ஏறிப் பார்க்கையில்
கொல்லைப்புறத் துளசி காய்ந்து காற்றிலாடுவது
உங்களைப் பெருமூச்சிட வைக்கிறது.
அதனால்தான் புறாக்கள் இரையுண்ட
அவ்வீட்டின் கிணற்றடியை எட்டிப் பார்க்காமல் வந்துவிட்டீர்கள்.
ஏனெனில் கிணற்றுக்குள் தளும்புவது தண்ணீரல்ல
ஒரு பெண்ணின் கேவல்கள் என்று
உங்களுக்குத் தெரிய வந்துவிட்டது.
இனி ஒருபோதும் அந்த வீட்டைக் கடந்து
உங்கள் வீட்டுக்குப் போக முடியாது.

7

மழையின் விம்மல்

ஊசித் தூறல்களால் இரவைத் துளைத்துக்கொண்டிருக்கும்
மழையைப் பார்த்துக் குரைக்கிறது ஒரு கருநாய்.
மோதி உடைகிற மின்னல் தாரையின் வாயிலாக
இரவுக்குள் கடும்வாதையாக ஊடுருவுகிறது அந்தக் குரைப்பொலி.
காதுகளை அடைத்துக்கொண்டு யாவற்றையும் விட்டு
வெளியேறத் தொடங்கிவிட்டான் சித்தார்த்தன்.
அவன் கழற்றிவிட்டுப்போகும் அங்கவஸ்திரத்தில்
வாய்ப்பொத்தி விம்முகிறாள் யசோதரை.
அவள் விம்மல்கள்தான் ஊசிஊசியாக இறங்குகின்றன போலும்.
விம்மல்கள் விழுகிற இடங்களிலிருந்து
ஒவ்வொரு கருநாய் எழும்பி ஊளையிடுகிறது.
ஓடத் தொடங்குகிற சித்தார்த்தனின் பின்னோடுகின்றன ஊளைகள்.
ஒரு திருப்பத்தின் முகட்டில் நாயொன்று தன் நாவால்
சித்தார்த்தனின் ஊழ்வினையைப் பலிகொள்ள
கொட்டத் தொடங்குகிறது மழை.
புத்தன் ஜனிக்கத் தொடங்குகிறான்.
துளிர்விட ஆரம்பித்திருக்கும் போதிமரத்தின் வேருக்கு
இந்த விம்மல்கள் போதுமானதாக இருக்கின்றன.

8

மலையின் நடுக்கம்

கோலியாத்தை
பொட்டில் அடித்து வீழ்த்திய
தாவீதின் கவன்கல்
நேற்றுக் கனவில் வந்து
எதைஎதையோ
குறிபார்த்துக் கொண்டிருந்தது.
நேற்றைக்கு முந்தின நாள் வந்த
மலைக்குன்றம் ஒன்று
நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது.

9

கடக்க இயலாத தெரு

தெரு ஒன்றைக் கடப்பதென்பது
உண்மையில் வாழ்வு ஒன்றைக் கடப்பதாகும் போலும்.
விம்மல் கலந்து உதிரும் கண்ணீர்த் துளியொன்றை
விளக்கேற்றி வைக்கும் புன்னகையொன்றை
மெதுமெதுவாய் மடல்விரியும் மலரொன்றை
புறவாசலில் பூத்து மறையும் மின்னலொன்றை
தெருவைக் கடக்கும்போது உணராவிட்டால்
இன்னும் நீங்கள் முழுமையாய் தெருவைக் கடக்கவில்லை.
வாழ்வையும்தான்.
இடமிருந்து வலமாக
குறுக்கிருந்து நெடுக்காக
வடகிழக்கிலிருந்து தென்மேற்காக
மேலிருந்து கீழாக
கடக்க வேண்டிய தெருவும் வாழ்வும்
மிச்சமிருக்கின்றன காலமெங்கும்.
கடக்கவியலாமல் பாதியிலேயே
திரும்ப வைத்த தெரு ஒன்றால்

விட்டத்தில் தொங்குகிறது உயிர் ஒன்று.


10

கனவுக் கொள்முதல்

வசீகரச் செல்வாக்கு மிகுந்த வார்த்தைகளைப் பெய்து
மனத்தை நனைக்குமவன் கனவுகளின் விற்பனைப் பிரதிநிதி.
கண்களின் குணத்துக்கேற்ப கனவுகளை விநியோகிப்பதிலும்
கனவுகளைக் கைமாற்றிவிடுவதிலும் கைதேர்ந்த மொழி
அவன் நாவுக்குச் சொந்தமானது.
கனவுகளைச் சூல்கொள்வதொன்றே கண்களின் பிறவிப் பயனென
அவனுதிர்க்கும் சொல்வாக்கு
சில கண்களில் கனவுகளின் அபிலாசைகளைத் துளிர்விக்கும்.
யாருக்கும் இல்லையென இயம்பாது
இருக்கும் துண்டுக் கனவுகளைக்கூட
குறுக்கும் நெடுக்குமாய்ப் பிணைத்துவிடும்
அவன் சாமர்த்தியத்தில் சாமான்யத்துக்கேற்ப
சலுகைத் திட்டமும் உண்டு.
கனவுகள் அற்றுப்போகும் பின்னிரவுப் புழுக்கத்தில்
அவன் வைத்திருந்த சாத்தானின் கனவுகளை
கொள்முதல் செய்துகொண்டு போன
கடவுளின் கண்களில் ஒளி பெருகத் தொடங்கியது.


மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்

மகிமைசால் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்பதும்
மச்சங்களுக்கு ஒன்றென காதலிகள் மூன்று என்பதும்
சமீபமாகத் தெரிய வந்திருக்கும் செய்தி.
கடனட்டைகளை அதிகமாக விநியோகிக்கும் வங்கியொன்றில்
முதல் காதலிக்கு கஸ்டமர் கேர் அதிகாரி பணி.
ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்றில்
போலியோ சொட்டுகளை வழங்கும் இரண்டாமவளிடம்
மெசியா குறித்த புகார்கள் நிரம்ப உள்ளனவாம்.
பெண்களின் உள்ளாடை நிறுவனத்தில் பொதுமேலாளராகப்
பணி உயர்வு பெற்றிருக்கும் மூன்றாமவள் மீது
உள்ளபடியே மெசியாவுக்கு அதிமோகம் இப்போது.
மூன்று காதலிகள் கிடைத்ததற்குக் காரணமே
தம் மூன்று மச்சங்கள்தான் என்பது அவர் கொள்ளும் கித்தாப்பு.
சிகையலங்காரத்துக்கு நிகராய் மச்சலங்காரத்தில்
மிகுந்த கிளர்ச்சி அடையும் மெசியாவுக்கு
நான்காவதாய் ஒரு மச்சம் அரும்பும் அடையாளம் தெரிகிறது
சந்தோஷப்படுங்கள் அல்லது ஜாக்கிரதையாய் இருங்கள்
நான்காவது காதலி நீங்களாகவும் இருக்கலாம்.


காலாதிபதி

என் மிதவையை யாரோ தொந்தரவு செய்கிறார்கள்.
மேல்நோக்கி எழும்பும் அதன் ஆன்மவேட்கை
அமிழ்த்தி ஆழத்தில் வைக்கவும் யத்தனம் நடக்கிறது.
அலைகளின் இயல்புக்கேற்ப
இறந்தகாலத்தில் தாழ்ந்து எதிர்காலத்தில் உயர்ந்து
நிகழ்காலத்தில் மிதப்பதைப் பகடி செய்வதாக
தங்கள் பதட்டத்தை மறைக்கப் பார்க்கிறார்கள்.
கிலி ஏற்படத்தான் செய்யும்.
அடிவயிற்றில் கார்காலத்தை அடைகாக்கும்
முதுகுப்புறத்தில் வெயில் சுமக்கும் அதன்மேல்
குறுக்குவாட்டாய்க் கிடப்பேன் எப்போதும்
காலாதிபதியாய்.


யானையோடு நேசம்கொள்ளும் முறை

யானையோடு நேசம்கொள்ள எண்ணி இருக்கும் நாம்
முதலில் தந்தத்தை நீவிவிட்டு நேசத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
துதிக்கைக்கு முத்தங்கள் ஈந்தாலும் தப்பில்லை
அதுவும் நேசத்தின் கணக்கில் சேரும்.
தேக்குமரத் தூணையொத்த கால்களைப் பிணித்திருக்கும்
இரும்புச் சங்கிலியை அகற்றுவதும் நல்லதுதான்.
மத்தகத்தைப் பாதிக்கும் அங்குசத்தை தூரதூரத்துக்கு
எறிந்துவிட்டால் போதும்
யானை நம்மை ஒரு குழந்தை போல தூக்கிக்கொண்டு
ஓடிக் களிக்க ஆரம்பிக்கும்.
இப்போது அதன் துதிக்கையில் ஒட்டியிருக்கும்
சப்பாத்திக் கள்ளி முள்ளை எடுத்துவிட்டு
ஏற்பட்டிருக்கும் சிறுகாயத்தின் மீது
நம் கவலையைப் பூசிவிடுகையில் உணர்ந்துவிடும்
நேசத்தின் ஆழத்தை. பிறகு,
அதன் பிரமாண்ட கனவுக்குள் எப்போதும் நமது ஆதிக்கம்தான்.
கவனம் நண்பர்களே,
ஆசீர்வாதம் வாங்குவது இப்போது யானைக்குப் பிடித்திருக்கிறது.

Pin It