நிலுவைத்தொகையை வசூலிக்க
அவனது இல்லத்தை அணுகியவர்கள்
பறவையின் விழியைப்போலான
அழைப்பு மணி பொத்தானை
இடைவிடாது அழுத்தியதில் வெளிப்பட்ட
பறவையின் பதற்றக்குரல்
துரோகத்தின் நிழலோடு விளையாடித் தோற்றவனை
வந்தடைய
உயிர்நோகக்கதறுமதனை
விடுவிக்கவென
ஹேங்கருக்கு நேரெதிர் விட்டத்தில்
கழற்றாமலேயே தொங்கவிடுகிறான்
கடைசிச் சட்டையை.

0

விரும்பும் உலகம்

ஒன்பதாம் வயதின் தொடக்கத்திலேயே
தொழிற்சாலையொன்றினில்
அடகு வைக்கப்பட்டவனின்
மதிய உணவிற்கென
டிபன் கேரியல் வாங்கப்பட்ட கடையை
பிறிதொரு தினத்தில் கடந்து போனவன்
அதன் முகப்பில் விதவிதமாய்த்தொங்கிய
சிறுவர்களின் தலைகளைக்கண்டு
டிபன் கேரியல்களே
விற்பனை செய்யப்படாதவொரு உலகினை
தெருமுனை ஓவியனிடம் வரையக்கூறியவன்
முற்றுப்பெறாத ஓர் ஓவியத்தின் முன்
மூப்படைந்து அமர்ந்திருக்கிறான்.
0

மழை

195 நாளான தன் குழந்தைக்கு
பெருவியப்பொன்றை பரிசளிக்க எண்ணி
சமையலறையினுள்ளிருந்து
தன்னைப்பிடுங்கிக்கொண்டு முற்றத்திற்கு வந்து
கொட்டிக்கொண்டிருக்கும் மழையை
முதல் முறையாய்
காண்பிக்கிறாள்
விளையாட்டு பொம்மையென.
புதிய உயிரொன்று
புன்னகையுடன் பார்த்ததில்
சிலிர்த்த மழை
அக்குறுநகையை மேலும் பெறவிரும்பி
விட்டு
விட்டு
சிணுங்கிக்கொண்டிருக்கிறது
ஒரு குழந்தையென.

0

கைக்கு அகப்படா கனவு

அவனது கனவில்
சில
கனிமரங்களைக்கண்ட பேருந்து
கனியொன்றினை பறித்துவரச்சொல்லி
ஏவியதில்
கைக்குச்சிக்காக ஒன்றிற்காய்
கனவிற்கும்
நனவிற்குமான இடைவெளியில்
பயணவழி நெடுக
எம்பிக்கொண்டேயிருக்கிறான்
கடைசி இருக்கைக்காரன்.

0

கடக்க முடியாத தினம்

மிக அழகிய பொழுதொன்று
உதிப்பதைப்போலத்தோன்றினாலும்
அதன்
மறுபுறம் படிந்திருக்கும் சூன்யத்தின் நிழல்
முந்தைய அழுகையை புதுப்பிக்கவென
தயாராகிறது.
மிச்சமிருக்கும் கண்ணீரை
காணத்துடிக்கும் ஆவலில்
கடக்கவியலாதுயரின் துர்வாடையை
என்மீது பிரயோகித்து
இன்றையதினம் முழுவதுமாய்
அதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து
முடிவில்
விட்டு விலகுவதாய் நடித்து முடித்து
என் காலடியிலேயே
பதுங்கிக்கொள்கிறது.

0

14-ஙியில் பயணிப்பவனின் தற்கொலை முயற்சி

நெடுநாட்களாய்
சிறைபட்டுக்கிடந்த பாடல்
பேருந்து
வேகத்தடையில்
ஏறியிறங்க முற்பட்டபோது
விடுதலையில் குதித்துவிடலாமென
முதல்வரியை தலையென வெளியே நீட்டியதும்
கூடவே உதட்டசைத்துப்பாடும்
பழக்கமுடையவர்களால் இழுக்கப்பட்டு
பறத்தல் சாத்தியமற்றது என்ற வரியினை மட்டும்
விசும்பலோடு கசிந்துவிட்டு
சிறைக்குள் உறையத்தொடங்குகிறது
மீண்டும்.

0

வாழ்தல் குறித்தான அறிவுரையுரைப்பவர்

என் மேஜையின் எதிர்புறம்
அனுமதியின்றி அமர்ந்து
மதுவைச் சிந்தச்சிதற
பெரும் பதற்றத்திற்கு உட்பட்டவராக கோப்பையில் ஊற்றி
பற்களால் கிழித்தெடுத்த தண்ணீர் பொட்டலத்தை
அதில் பீய்ச்சியடிக்கிறீர்
உங்களது முகத்தில்
ஈரம் படும்படியாய்.

மாமிசத்துண்டொன்றை
இடதுகையில் தயாராய் வைத்துக்கொண்டு
கடுமையான வயிற்றுவலிக்காரனின் முகத்தோடு
ஒரே மூச்சில் கவிழ்த்துவிட்டு
காறி உமிழ்கிறீர்
வாந்திக்கான ஒத்திகையாய்.

ஒழுங்கு கலையப்பட்டதாய்
நீங்கள் நினைத்துக்கொள்ளும் என் உலகத்தை
சீர்திருத்த முயன்று
குடிப்பது குறித்தான
உபதேசங்களை வழங்குகிறீர்
புட்டத்தை
பீடமொன்றினில் இருத்தியபடி.

என் மதுவை எனக்குக்குடிக்கத்தெரியும்
துளித்துளியாய்
எனக்குத்தெரிந்தவரை
அதன் கசப்பு ருசித்துக்கொண்டுதானிருக்கிறேன்.

0

எனது சொற்கள்

இன்றிரவு
இதை எழுதுவதின் மூலம்
நான்
உங்களோடு உரையாடிக்கொண்டிருக்கிறேன்.
கடந்துபோகும் இரவின் நிழல் படிந்த
எனது சொற்களை
நிகழ்காலத்துப்பகலின் ஒளியில்
எதிர்கொள்ளலாம் நீங்கள்
நாளையோ
மற்றொரு நாளிலோ.

0
பசியால் அழும் குழந்தையின் முகம்

நீலப்படத்தில் நடிப்பதெனத் தீர்மானித்துவிட்டபின்
முகமே அவளுக்கு
எதிரியென உருவெடுக்க
அதைத் தொலைத்துவிடுதலில்
முயன்று முயன்று தோற்றவள்
பசியால் அழும் தனது
குழந்தையின் முகம்போலான முகமூடியைத்தேடி
பெரு நகரத்தின் அத்தனை வணிக வளாகங்களிலும்
அலைந்து திரிந்து அயற்சியுற்றவள்
காமிரா வெளிச்சத்தின் முன்
தன் முகத்தையே
குழந்தையின் முகமாய்
மாற்ற முனைந்து கொண்டிருக்க
நீலப்படம் பார்க்கும் எவர் விழிகளுக்கும்
அம்முகத்தை மாத்திரம்
தெரிவிக்க மறுத்துவிடுகிறது
காமம்.

0

நிலாதினம்

மொட்டைமாடிக்குச்செல்லும்
மூன்று வளைவுகளைக்கொண்ட படிக்கட்டுகளையும்
அதில்
முத்தமொன்றை முன்வைத்து
துள்ளலுடன் விரையும் ஒருவனையும்
முத்தத்திற்குச்சம்மதித்த வெட்கப்புன்னகையுடன்
பின் தொடரும் ஒருத்தியையும்
வானத்தில்
முழுநிலா ஒன்றையும் வரைந்து முடித்தவன்
மதுவிடுதியொன்றில் நுழைகிறான்.
தன் வாழ்வையே
சித்திரமாய் நகலெடுத்து விட்டவனின்
நிகழாத முத்தத்தை
நித்தமும் பார்த்துக்கொண்டிருக்கிறது
நிலா.

0

முதலும் இறுதியுமான சொல்

சிறு கல்லில் உறைந்திருந்த
மழையில் இறுகிய மௌனம்
சிறுமியின் கை தொட்டதில்
தளர்ந்து தாழ் விடுபட
ஒற்றைச்சொல்லில்
அவளைப் பரவசப்படுத்தவெனவே
மரணிக்கத்துணிந்தது
கிணற்று நீரில் விழுந்து.

Pin It