ஆதிகாலம் தொட்டு இற்றை வரை, மதம் இனம் பண்பாடு களுடன் இணைந்த சமூக மறுப்புகளும் அதன் வரையறைகளும் பெண்களுக்கெதிரான இறுக்கமான கட்டுப்பாட்டு நிலையைத் தோற்றுவித்தன. பெண் இருப்பும் அதன் இயங்கு நிலையும் ஆண் அதிகாரத்துக்குட்பட்டுச் செயற்படும் ஒன்றாகவே காணப்பட்டது. உடல், உளம், உணர்வுநிலை, மொழிவயப்பட்ட அதன் கருத்தியல், இருப்பு என ஒரு பெண்ணின் அத்தனை கூறுகளையும் இயக்கும் சூத்திரதாரியாக ஆண்மையக் கோட்பாடே செயற்பட்டது. இதன் விளைவாகப் பெண்ணைப் பெண்ணாகப் பார்க்கும் நிலை மாறிப் பெண்ணைத் தம் அடிமையாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டது. இக்காலப் பகுதியில் பெண்கள் தாம் அடிமைப்பட்டுக் கிடக்கின் றோம் என்னும் உணர்வின்றிப் பெண்கள் அதிகார மையத்துக்கு உட்பட்டு அடங்கி ஒடுங்கி நசுங்கி வாழ்ந்தனர்.

 ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளை வாகவும் பெண்கல்வியின் தாக்கத்தாலும் சமூகப் பொருளாதார, மத, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் பெண்மீதான மரபுசார்ந்த சமூகக் கட்டுமானம் தகர்க்கப்பட்டுப் பெண், பெண்ணியம், பெண்ணுரிமை குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படத்தொடங்கின. இதன் ஆதார சுருதியாக ஐக்கியநாடுகள் சபை 1975ஆம் ஆண்டை மகளிர் ஆண்டாக அறிவித்ததையும் 1975 தொடங்கி 1985 வரையான பதினொரு ஆண்டுகளை அனைத்துலக மகளிர் ஆண்டாகக் கொண்டாடத் தீர்மானித்ததை யும் கூறலாம். இதனையடுத்துப் பெண்களுக்கான, பெண்களை மையமிட்ட, பெண் பிரச்சனைகளை வெளிக்கொணரும் எழுத்துக்களின் தேவை பெண் எழுத்தாளர்களாலும் சிறு சஞ்சிகையாளர்களாலும் உணரப்பட்டன.

 சமூக பேதங்களை மையமாகக் கொண்டு பெண்ணடிமையின் பரிணாமங்களை விளக்கும் பொருட்டும்; சமூக தரிசனங் களூடாகச் சமூக அவலங்களை வெளிக்கொணரும் வகையிலும் பெண்ணிலை வாத எழுத்தாளர்களால் ஆக்க இலக்கியங்கள் பல இக்காலப் பகுதியில் படைக்கப்பட்டன. சமூக மதிப்பில் இழிந்த நிலை, சமய தத்துவநோக்கில் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலை, கல்வி உரிமை மறுக்கப்பட்ட நிலை, அறியாமை மூடத்தனத்திலும் அமிழ்ந்தநிலை, பெண்சிசுக் கொலை, பால்யவிவாகம், பெண் தனிமையாக்கப்படல், ஆண்களின் பலதாரத்திருமணம், தேவதாசித் திருமணம் (பொட்டுக்கட்டல்), கைம்பெண் மறுமணமறுப்பு, உடன்கட்டைஏறல், பெண்உரிமை மறுப்பு எனப் பிரச்சனைகள் பலவற்றை உள்வாங்கிப் பெண் எழுத்துகள் உருவாகின. கருத்தியலற்ற சூன்ய வாதத்துக்குள் முடங்காத இவ்வெழுத்துகள் சமூகப் பிரக்ஞை மிக்க உயிர்த்துடிப்புள்ள இலக்கியங்களாகப் பரிணமித்தன. இவ்விலக்கிய முயற்சிகள் கண்ணீர்க் கதையாகவோ, கவின் கதையாகவோ அன்றி எளிய மொழியில் காயம்பட்ட அநுபவத்தைக் கனத்த வாத்தையால் வெளிப்படுத்தின. அநுபவச் சூட்டில் மிளிரும் உணர்வுகளை ஆத்ம சுத்தியுடன் உரத்த குரலாக வெளிப்படுத்தக் கவிதையே முக்கிய ஊடகமாகப் பெண்களால் கையாளப்பட்டது.

பெண்ணின் நுண்ணுணர்வுத் தளத்தில் கட்டுருவாக்கம் பெறும் அன்பு, கருணை, வேட்கை, வலி, கனவு ஆகியன உள்ளிட்ட இன்னோரன்ன அகநிகழ்வுகள், கவிதை அழகியல் சார்ந்து பெண் சொல்லாடலுக்கூடாக வெளிப்படும்போது, நவீனக் கவிதை பெண்ணுக்கேயான பிரத்தியேக மனப்படிமங்களை உள்வாங்கிப் பெண்மொழியைச் சாத்தியப்படுத்துகிறது. இவ்வகையில் நுட்பமான அந்தரங்க வெளிப்பாடுகளை மொழியசைவுடன் அதீதப் புனைவாக நடப்பியலுக்கேற்ப வாசகனுக்கு எடுத்துரைக்கும் ஈழத்துப் பெண் கவிதைகள் 1980களுக்குப் பின், அமைப்பாலும் அனுபவ வெளிப்பாட்டாலும் மொழி நடையாலும் மாற்றம் கண்டன. இம்மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களாக ஆயுதப் போராட்டம், தமிழ்த்தேசியத்தின் எழுச்சி, பெண்நிலைவாதச் சிந்தனைக்கூடாக ஏற்பட்ட விழிப்புணர்வு, ஊடக சுதந்திரம், கல்வித் தகைமைக்கூடான தொழில்சார் நிலையின் மீள் உருவாக்கம் போன்றவற்றைக் கூறலாம். இக்காலகட்டத்தில் வெளிவந்த பெண் விடுதலை, தாகம், தோழி, விளக்கு, செந்தழல், சுதந்திரப் பறவைகள், நங்கை, மருதாணி, நிவேதினி, பெண் போன்ற ஈழத்துப் பெண் சஞ்சிகைகளும், நமது குரல் (ஜேர்மனி), கண் (பிரான்ஸ்), சக்தி (நோர்வே) போன்ற புகலிடப் பெண்நிலைவாதச் சஞ்சிகைகளும் பெண்ணியக் கருத்துகளை உள்வாங்கி வெளிவந்ததுடன் ஆளுமைமிக்க பெண்ணிலக்கியப் படைப்பாளிகளையும் ஈழத்திலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தன.

1980களுக்குப் பின் ஈழத்தின் பல்வேறு பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கி வெளிவந்த தொகுப்புகளாகச் ‘சொல்லாத சேதிகள்’ (1986), ‘மறையாத மறுபாதி’ (1992), ‘கனல்’ (1997), ‘உயிர்வெளி’ (1999), ‘எழுதாத உன் கவிதை’ (2001), ‘வெளிப்படுத்தல்’ (2001), ‘பெயல் மணக்கும் பொழுது’ (2007), ‘மை’ (2007), ‘இசை பிழியப்பட்ட வீணை’ (2007), ‘ஒலிக்காத இளவேனில்’ (2009), பெயரிடாத நட்சத்திரங்கள் (2011) போன்றவற்றைக் கூறலாம்.

இத்தொகுப்புகளில் பெண்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் கருத்துகளையும் ஈழத்தில் முதன்முதலில் வெளிப்படுத்திய தொகுப்பாகச் ‘சொல்லாத சேதி’ காணப்படுகிறது. பெண்கள் ஆய்வு வட்டத்தால் வெளியிடப்பட்ட இச்சிறுதொகுதி அ.சங்கரி, சி.சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, ஒளவை, செல்வி, பிரேமி, மசூறா, ஏ.மஜித், ஊர்வசி உள்ளிட்ட பத்துப் பெண் கவிஞர்களின் இருபத்தி நான்கு கவிதைகளை உள்ளடக்கியது. பெண்கள் தொடர்பான சிந்தனைகள் குறித்த ஆய்வை நவீனத் தமிழுலகு வேண்டி நின்ற காலத்தில் காத்திரமான கவிதை மொழிக்கூடாகப் பெண்களின் பெண்ணிய உணர்வுகளை நிதர்சனமாக வெளிப்படுத்திய தொகுப்பு இது எனலாம். ஈழத்துப் சிந்தனையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய, சொல்லாத சேதிகள் ‘ஈழத்துப் பெண்களின் சமூகப் பார்வையிலும் சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவும் அவர்கள் தமது சிந்தனைகளையும் உணர்வுகளையும் ஒளிவுமறைவின்றிச் சுதந்திரமாக வெளிக்கொணரவும் அவர்களது சிந்தனைகளைத் தூண்டக்கூடிய அல்லது புடம் போடக்கூடிய தகுந்த முன் மாதிரிகளை அடையாளங் காட்டவும்’ இத்தொகுப்பு முக்கிய நிலைக்களனாக விளங்கியது எனலாம்.

சொல்லாத சேதிகள் சுவட்டில் வெளியான ‘மறையாத மறுபாதி’ புகலிடத்திலிருந்து பதினெண் பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கி வெளிவந்தது. பெண்களின் ஒடுக்கு முறைக்கெதிரான உணர்ச்சிக் குரலாய் எழுந்த இத்தொகுப்பு பேராசிரியர் சி. சிவசேகரம் கூறுவதைப் போன்று ‘இதுவரை ஈழத்தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் எழுதத் தயங்கிய விஷயங் களையும் எழுப்பத் தவறிய கேள்விகளையும் இதிலுள்ள கவிதைகள் எழுப்புகின்றன.’ பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆணாதிக்க வழி வந்த பழமைக்கோட்பாட்டின் வகுப்புவாத ஏற்றத்தாழ்வுகளையும் முகமாக எழுந்த மறையாத மறுபாதி பெண்ணுரிமை, பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், ஆணாதிக்க எதிர்ப்பு, சீதனக்கொடுமை முதலான இன்னோரன்ன விடயங்களையும் பேசுகின்றன. உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமை களையும் அதிலிருந்து விடுபடுதலையும் விளக்கி நிற்கும் இந்நூல் பெண்ணியக் கருத்துகளினூடாகப் பெண் மனஉணர்வுகளையும் அதன் எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

தமிழகத்திலிருந்து முதன்முதலில் வெளிவந்த இலங்கை, இந்தியப் புலம்பெயர் பெண் கவிஞர்களின் தொகுப்பாக ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ காணப்படுகிறது.ஐம்பத்திரண்டு பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கி வந்த இத் தொகுப்பு பெண்ணிருப்பைத் தனக்கான இயக்க வெளிக்குள் மொழி யினூடாகச் சாத்தியமாக்கியுள்ளது. சமூக மறுதலிப்பும் நிராகரிப்பினூடாக எழும் வலியும் ஆற்றாமையின் துயர்களாக இத்தொகுப்பெங்கும் விரிந்து செல்கின்றன. காவ்யாவால் வெளியிடப்பட்ட இத்தொகுப்பின் தொகுப்பாசிரியர் க்ருஷாங்கினி, உதவியாசிரியர் மாலதி மைத்ரி ஆவார். ஆயினும் இத்தொகுப்பு மலின எழுத்துப் பிழையுடனும் ஆள்மாறாட்டக் கவிதைகளுடனும் (சிவரமணியின் ‘வையகத்தை வெற்றி கொள்ள’ என்னும் கவிதை கவனக் குறைவால் சன்மார்க்காவின் கவிதை எனப் பிரசுரிக்கப்பட்டது) வெளிவந்தது. இத்தொகுப்பில் ஆழியாள், ஊர்வசி, ஒளவை, சங்கரி, சன்மார்க்கா, சிவரமணி, சுமதிரூபன், செல்வி, ரஞ்சனி போன்றோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

பெண் எழுத்தின் ஆளுமைகளை வெளிக்கொணரும் வகையில் புலம் பெயர் நாட்டிலிருந்து வெளிவந்து அதிகக் கவனத்தைப் பெற்ற தொகுப்புகளாக மை, ஒலிக்காத இளவேனில் முதலான வற்றைக் கூறலாம். முப்பத்தைந்து கவிஞைகளின் கவிதைகளைத் தாங்கி வெளிவந்தமை, உள்ளுணர்வின் தடத்தில் எழும் பெண்ணுக்கேயான மனப் படிமங்களைப் பெண் சிந்தனாவழித் தனித்துவ அடையாளங்களுடன் எடுத்துரைக்கிறது. சமகால வாழ்வியலுக்கூடாகப் பகிர்ந்த, பகிரப்படாத பெண் அனுபவங்களை வெளிக்கொணர்ந்த தொகுப்புகளில் முக்கிய ஒன்றாக ஒலிக்காத இளவேனிலைக் கூறலாம்.வடஅமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பரவலாக அறியப்படாத 19, பெண் கவிஞைகளின் தொகுப்பாக அமைந்துள்ள இது, புதிய இடத்தில், புதிய சூழ்நிலையில் தனிமைப் பிறழ்வுக்குள்ளான பெண்ணின் மன உணர்வுகளை வெகு துல்லியமாகப் பதிவு செய்கிறது. சமூகப் பிரக்ஞையுடைய இளம் தலைமுறையினரின் தொகுப்பாக வெளிவந்த இந்நூல் புதிய பாய்ச்சலுக்கூடாக நவீனத் தமிழ்க் கவிதைக்கு வளம் சேர்க்கின்றது எனலாம்.

மலையக மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளைப் பெண்மொழிக் கூடாக வெளிப்படுத்திய தொகுப்புகளில் மிகச்சிறந்த தொகுப்பாக ‘இசை பிழியப்பட்ட வீணை’ கருதப்படுகிறது. மலையகத்தில் மிக அருகிப்போன பெண் எழுத்துக்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியாக வெளிக்கொணரப்பட்ட இத்தொகுப்பு, 45 பெண் படைப்பாளிகளின் கவிதைகளைத் தாங்கி நிற்கிறது. ஆளும் வர்க்கத்தினராலும் அரசியல்வாதிகளாலும் முதலாளிமார் களாலும் உடல்,உள,பொருளாதார ரீதியில் சுரண்டப்பட்டு, அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு,வஞ்சிக்கப்பட்ட மலையக மக்களின் வாழ்வியல் அவலங்களை மென்னுணர்வுத் தளத்தில் வெளிப்படுத் தும் இந்நூல், அம்மக்களின் பண்பாட்டு, கலாச்சார வாழ்வியல் அம்சங்களையும் அதன் வகைமாதிரிகளையும் எடுத்துரைக்கிறது.

ஈழத்தின் போராட்டச் சூழலில் இருபத்தாறு பெண்களின் அநுபவங்களை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய தொகுப்பாக ‘எழுதாத உன் கவிதை’யைக் கூறலாம்.போராளிகளின் போரியல் வாழ்வையும் போருக்குள் வாழ்பவரின் வாழ்வாதாரப் பிரச்சனை களையும் எடுத்துரைக்கும் இந்நூல், கட்டிறுக்கமற்று எளிமையான மொழி நடையில் இயல்பான நடைமுறை வாழ்வை அவாவி நிற்கிறது. உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை அரசியல் நெடி கலந்து வெளிப்படுத்தும் இத்தொகுப்பு, ஈழத்துப் பெண்கவிஞர்களின் பிறிதொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

பெண்ணிருப்பின் அடையாளத்தை வெளிப்படுத்தி நிற்கும் பிறிதொரு தொகுப்பாக ‘பெயல் மணக்கும் பொழுது’ காணப்படுகிறது. ஈழத்தில் யுத்தம் உக்கிரமடைந்த காலகட்டத்தில் அதன் அகோரத்தையும் அதன் விளைவுகளையும் போரின் வன்முறைக்கூடாக வெளிப்படுத்தும் இத்தொகுப்பு ஈழத்து நவீனக் கவிதையின் வீச்சைப் புடமிட்டுக்காட்டுகிறது.புதிய சுதந்திரமான வாழ்வைப் பற்றிய கனவும் பெண்ணின் சுயம் சார்ந்த வேட்கை, அதன் ஏக்கம், பரிதவிப்பு என்பனவற்றை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இத்தொகுதி பெண்ணுடல், மனம், அவள் அகப்புற அநுபவங்கள், அவ்அநுபவங்களுக்கூடாக விளையும் உணர்வுகள், கிளர்ச்சிகள் என்பவற்றைக் காட்சிப் படுத்துகிறது. ஆமிரபாலி போன்ற ஆண் கவிஞர்களும் இத்தொகுப் பில் பெண் கவிஞைகளாக அடையாளப் படுத்தப்பட்டிருப்பதும் இங்குச் சுட்டிக்காட்டத்தக்கது. அண்மையில் 26 போராளிக் கவிஞைகளின் 70கவிதைகள் ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’எனும் பெயரில் வெளிவந்துள்ளது. ஊடறு மற்றும் விடியல் வெளியீடு ஆகியவை இணைந்து இத்தொகுப்பைக் கொண்டுவந்துள்ளன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிஞைகள் யாவரும் போராளிகள் ஆவர்.

1990களின் பின் தனித்துவ அடையாளங்களுடனும் ஆளுமைகளுடனும் ஈழத்தில் வெளிவந்து என் பார்வைக்குக் கிடைத்த பெண் கவிஞர்களின் தொகுப்புகளாக ‘வானதியின் கவிதைகள் (1990), கஸ்தூரியின் ஆக்கங்கள் (1992), பாரதியின் காதோடு சொல்லிவிடு (1992), சிவரமணி கவிதைகள் (1993), தூயவளின் நிமிர்வு (1993), சுல்பிகாவின் விலங்கிடப்பட்ட மானிடம் (1995), உயிர்த்தெழல் (2001), செல்வி - சிவரமணி கவிதைகள் (1997), ஒளவையின் எல்லை கடத்தல் (2000), ஆழியாளின் உரத்துப் பேச (2000), துவிதம் (2006), நாகபூசனி கருப்பையாவின் நெற்றிக்கண் (2001), தர்மினியின் உதயத்தைத் தேடி (2002),மைதிலியின் இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் (2003), மைத்ரேயியின் கல்லறை நெருஞ்சிகள் (2004), அனாரின் ஓவியம் வரையாத தூரிகை (2004), எனக்குக் கவிதை முகம் (2007),உடல் பச்சைவானம்(2009), அம்புலியின் மீண்டும் துடிக்கும் வசந்தம் (2004), ஆதிலட்சுமி சிவகுமாரின் என் கவிதை (2000), ஃபஹீமா ஜஹானின் ஒரு கடல் நீரூற்றி (2007), அபராதி(2009), ஆதித்துயர்(2010), பெண்ணியாவின் என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! (2006), இது நதியின் நாள்(2008), றஞ்சனி கவிதைகள் (2005), மலராவின் புதிய இலைகளால் ஆதல்(2009), வி.கலைமகளின் முடிவில்லாப் பேச்சுக்கள்(2007), யோ.கார்த்திகாவின் ஆணிவேராகிடுமோ நளாயினிதாமரைச்செல்வனின் நங்கூரம் (2005), உயிர்த்தீ, லுணுகலைஹஸீனாபுஹாரின் மண்ணிழந்த வேர்கள்(2003), ரிஷானாபாரூகின் என் விழியில் தங்கிய நினைவுகள், சுதாகினி சுப்ரமணியத்தின் அடையாளம்(2005) போன்றவற்றைக் கூறலாம்.

தொகுப்புகள் வெளிவரா நிலையில் சிற்றிதழ்கள் ஊடாகவும் இணையத் தளங்கள் ஊடாகவும் அடையாளம் காணப்பட்டுத் தனி முத்திரை பதித்த கவிஞர்களாகப் பிரதீபா தில்லைநாதன் தான்யா, துர்க்கா, ராசு, கலா, ஆகர்ஷியா, ரி. உருத்திரா, வினோதினி, தமிழ்நதி, றபீக்கா, உலகமங்கை, லரீனா. ஏ. க, விஜயலட்சுமி சேகர் (சினேகா), தில்லை, ஜெயந்தி தளையசிங்கம், கற்பகம், யசோதரா, யாழினி, ரேவதி, நிவேதா, கமலாவாசுகி போன்றோரைக் குறிப்பிடலாம்.

 இக்காலப் பகுதியில் ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இருந்து வெளிவந்த சிறு சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் பெண்களின் ஆக்கபூர்வமான கவிதைகளுக்கு அடித்தளமிட்டன. 1990களின் முற்கூற்றில் ‘திசை’ வழியே அறிமுகமாகும் மைதிலி கவிதை, உள்ளம், களம், சரிநிகர், சக்தி, காலச்சுவடு போன்ற சிற்றிதழ்களுக்கூடாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். மூன்றாவது மனிதன், சரிநிகர் ஆகிய சிறு சஞ்சிகைகள் பெண்ணிலக்கிய ஆக்க கர்த்தாக்களின் பிரதான பிரசுர தளமாக இயங்கின. இவ்விரு இதழ்களுக்கூடாகச் சிறப்பாக அறியப்பட்டவர்களாகப் பெண்ணியா, ஒளவை, ஆழியாள், அனார், கலா, ஃபஹீமா ஜஹான் போன்றோர் விளங்குகின்றனர். இதனைத்தவிர ஒளவைக்குத் தோழி, சக்தி, புதுசு, தூண்டில் போன்ற சிற்றேடுகள் பிரசுர களமாய் விளங்கியதைப் போன்று ஆழியாளுக்குக் கணையாழி, உயிர் நிழல், பத்மநாப ஐயரின் இன்னொரு காலடி, யுகம் மாறுது போன்ற சிற்றிதழ்களும் பிரசுர களமாய் இயங்கின. பிரதீபா தில்லைநாதன், தான்யா, துர்க்கா, சுமதிரூபன் ஆகிய புலம்பெயர் படைப்பாளிகளுக்குக் காலம், உயிர்நிழல், கண்ணில் தெரியுது வானம், அற்றம் ஆகிய இதழ்கள் களம் அமைத்துக் கொடுத்ததைப் போன்று ஈழத்துப் பெண் கவிதை சொல்லிகளின் பிரதான படைப்பியல் தளமாக மூன்றாவது மனிதன், சரிநிகர், யாத்ரா, வெளிச்சம், சுதந்திரப் பறவை, கலைமுகம், களம், ஞானம், மறுபாதி, கவிதை, ஜீவநதி போன்ற சிறு சஞ்சிகைகளும் வீரகேசரி, தினக்குரல், சுடர்ஒளி, ஈழநாதம் போன்ற வாரப் பத்திரிகைகளும் களம் அமைத்துக்கொடுத்தன.

வன்னிநில வாழ் மக்களின் வாழ்வியல் அவலங்களைப் பெண் அல்லது பெண்ணியவாதப் படைப்புக்களுக்கூடாக வெளிக் கொணர்ந்த இதழ்களில் முக்கிய இதழ்களாக வெளிச்சம், சுதந்திரப்பறவை, எரிமலை, ஈழநாதம் (வெள்ளி வாரமலர்) போன்றன காணப்படுகின்றன. அம்புலி, ஆதிலட்சுமி சிவகுமார், கஸ்தூரி, மலைமகள், தமிழவள், தமிழ்க்கவி, சுதாமதி, நாமகள், தூயவள், செந்தணல், பிரேமினி சுந்தரலிங்கம், மன்னார் ரூபி மாக்கிரெட், சோழநிலா, அலைஇசை போன்றோர் சிற்றிதழ்களின் ஊடாக மாத்திரம் அறியப்பட்டவர்கள் அல்ல. வெளிச்சம் கவிதைகள் (1996), காலம் எழுதிய வரிகள் (1994), ஆனையிறவு (2000), வானம் எம்வசம் (1995), செம்மணி (1998) ஆகிய கவிதைத் தொகுப்புகளினூடாகவும் அறியப்பட்டவர்கள். போரையும் போரியல் வாழ்வையும் பாடும் இவர்கள் போரின் பங்காளிகளும் ஆவர். தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று அனுபவங்கள் இவர்களின் கவிதையின் பாடுபொருளாயின.

ஆயுதம் தரித்த போராளிகளாக மாறித் தமிழ் ஒழுக்கவியல் கோட்பாடுகளைச் சாடுமிவர்கள் கவிதைகள், பெண் விழிப்புணர்வுக் கூடாகப் பெண் விடுதலையைச் சாத்தியமாக்கு கின்றன. இவர்களின் பெரும்பாலான கவிதைகள் செப்பனிடப் படா வார்த்தைப் பிரமாணங்களுக்குள் சிக்கி, உணர்வுத் தளமற்றுக் கருத்துருவாக்கங்களுக்குள் சிதைந்து போவதாகக் காணப்படுகின்ற போதிலும் பெண்ணியல் அனுபவங்களுக்கூடாக விரியும் பெண்ணிய மொழி ஆங்காங்கே வீரியம் மிக்க சிறந்த கவிதைகளையும் தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்துள்ளது. ஈழத்து நவீனக் கவிதைப் பரப்பில் 1980கள் முக்கியமான காலகட்டமாகும். 14--05--1976 வட்டுக் கோட்டை மாநாட்டில் ‘சுதந்திர இறைமை உள்ள மதச்சார்பற்ற சோசலிசத் தமிழீழத்தை அமைத்தல்’ என்று எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடுத்து 1980களில் தாயக விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெறுகிறது. இக்காலப்பகுதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் (21--07--1977), யாழ் நூலக எரிப்பு (01--06--1981), இனக்கலவரம் (24--07--1983), குமுதினிப் படகுப் படுகொலை (15--05--1985) எனத் தமிழருக்கு எதிரான வன்முறைகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. போரினை அவாவி நின்ற இளைஞர், யுவதிகளின் மனம் அரசியல் ஓர்மைக்குள் தம்மைக் கட்டமைத்துக் கொண்டது. இவ்வரசியல் சூழ்நிலையே பல்வேறு இயக்கங்களின் தோற்றுவாய்க்கும் கால்கோளிட்டது. இக்காலப் பகுதியில் விடுதலை இயக்கங்களைச் சார்ந்தும் சார்பற்றும் உருவாக்கப்பட்ட பெண் அணிகள் பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையில் பெண் சமத்துவம், பெண் விடுதலையைக் கோரி நின்றன. இச்சூழ்நிலையில் பெண் தன்னிருப்பை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவையேற்பட்டது. இதன் ஊற்றே ஈழத்தில் நவீனக் கவிதைக்கு வித்திட்டது.

பெண் சுயத்துவத்துக்கூடாகப் பெண்ணிருப்பை முன்னிறுத்தி ‘முரண்’ என்னும் சரடு வழியே மென்னுணர்வுத் தளத்தில் இயங்கும் ஈழத்துப் பெண்மொழி தனக்கெனத் தனித்துவ அடையாளங் களைக் கொண்டது. பாலின நடத்தையாலும் நியதியாலும் வடிவமைக்கப்பட்ட பெண்ணிருப்பியலின் இவ் அனுபவ வெளி எளிமையானது, நேர்த்தியானது, சொற் சிக்கனத்துக்கூடான உள்ளுணர்வுத் தளத்தில் இயங்குவது. விரிந்த தளத்தில் கனதியான ஆய்வை வேண்டி நிற்கும் பெண் கவிதைகள் ஈழத்தின் முறையான விமர்சனங்களோடோ மதிப்பீடுகளோடோ முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. தமிழகத்தோடு ஒப்பிடும்போது ஈழத்து நவீனப் பெண் கவிதைகள் பற்றி வெளிவந்த ஆய்வுகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளன. எனவே, ஆக்கபூர்வமான விமர்சனங்களும் மதிப்பீடுகளும் ஈழத்துப் பெண் கவிதைகளைப் பிறிதொரு தளத்துக்குக் கொண்டு செல்லும் .

உசாத்துணை நூல்கள்

       சிவகுமார், ஆர்., பிரம்மராஜன், (2001) அவ்வை மண்ணில் பெண் எழுத்தாளர்கள், மருதா, சென்னை

       சிவசேகரம், சி., (1995), விமர்சனங்கள், தேசிய கலை இலக்கியப் பேரவை, சென்னை

       யோகராசா, செ., (2007) ஈழத்து நவீனக் கவிதை, குமரன் புத்தக இல்லம், சென்னை, - கொழும்பு

       விஜயலட்சுமி, ச., (2002), தமிழ்க் கவிதைகளில் பெண்ணுரிமை, தி. பார்க்கர், சென்னை.

கட்டுரைகள்

       ஐங்கரன், பெரிய., (வைகாசி ஆனி 2008), ‘பெண்மொழி’ ஜீவநதி, யாழ்ப்பாணம்.

       ஒளவை, (1996 - 1997) ‘நவீனத் தமிழ்க்கவிதைகள் ஒரு பெண்ணிய நோக்கு’, நிவேதினி, கொழும்பு

       சேரன், உ., (அக்டோபர் - 2007), ‘பெயல் மணக்கும் பொழுது’ காலச்சுவடு 94வது இதழ், நாகர்கோவில்

       பஹீமா ஜஹான், (2002) ‘பெண்மொழி’ யாத்ரா இதழ் 8, கொழும்பு

       மித்ரா (மே - ஜூன், 2007) ‘நீரளவேதானா நீராம்பல்’, சரிநிகர், கொழும்பு

       யோகராசா, செ., (2005) ‘ஈழத்துக்கவிதை’, தமிழ் இனி, 2000, இருபதாம் நூற்றாண்டு

Pin It