ஓவியமரபும், கதைசொல்லல் மரபும் இணைந்த வடிவமாகத் தஞ்சை சோழர்கால ஓவியங்களும், இராமநாதபுரம் நாயக்கர் கால ஓவியங்களும் விளங்குகின்றன. இவை, ஒரு கதையினை அல்லது நிகழ்வினைப் பிறருக்கு எடுத்துச் சொல்லும் எடுத்துரைப்புத்தன்மை கொண்டவை. மூன்றாம் நபரின் குரலாக, இவை கட்டங்களுக்கு வெளியே ஒலிக்கின்றன. ஆனால் சித்திரக்கதை என்பது காலம், இடம், சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் தானாக நகரும் தன்மை கொண்டது. எனவே காட்சிகளோடு உரையாடல் களும் இணைந்த ஒரு இயக்கத் தன்மையே சித்திரக்கதைகளின் அடிப்படை. 

சித்திரக்கதை என்பது நான்கு சட்டங்கள், அதற்குள்ளான ஓவியம், பலூன், உரையாடல் ஆகிய அனைத்தும் சேர்ந்த ஒரு காட்சி ஊடகம். இதனுள் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு அர்த்தமுண்டு. இவற்றில் மொழி என்பது, சட்டகங்களுக்குள் இருக்கும் அனைத்துக்கூறுகளையும் உள்ளடக்கியது. வார்த்தை வர்ணனை களுக்கு இடமளிக்காத, குறைந்த அளவிலான சொற் பிரயோகங்களும், உரையாடல் வசனங்களும் சித்திரக்கதைக ளின் சிறப்புக் கூறுகளாகும். சித்திரக்கதையினை வடிவமைப் பதில் சில நுட்பங்கள் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தகுந்தது, ஒரு சித்திரக்கதையின் உரையாடல்களை மட்டும் ஒருசேர தொகுத்து வைத்துப் படித்தால், கதையின் சூழலினை நம்மால் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியாது. அப்படி நம்மால் ஒரு கதையை உள்வாங்க முடியுமேயானால் அக்கதை வடிவமைப்பில் சிக்கல் உள்ளதென்று அர்த்தம். எனவே சித்திரக்கதைகளுக்கான மொழிப்பயன்பாடு என்பது கவனத் துடன் செய்யவேண்டிய ஒன்று. சித்திரக்கதையினைப் பொருத் தளவில், மொழி பாதிபங்கு மட்டுமே வகிக்கிறது. மீதியை ஓவியங்களே விளக்குகின்றன. இப்படி உருவாக்கப்படும் சித்திரக்கதைகளால் வாசிப்பில் தொய்வை ஏற்படுத்தாமல், வாசகரிடையே தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்க முடியும். 

சிறுவர் மற்றும் வெகுசன பத்திரிகைகள், நீதிக்கதைகளை யும், மாயாஜாலக் கதைகளையும், குடும்பம் சார்ந்த கதைகளை யும் சித்திரக்கதைகளாக வெளியிட்டன. இத்தகைய வழக்க மான கதைகளையே படித்துப் பழக்கமான தமிழ் வாசகர் களுக்கு; மொழிமாற்றக்கதைகளாக அறிமுகமான சாகசநாயகர் களின் கதைகள், மர்மக்கதைகள், துப்பறியும் கதைகள், அறிவி யல் புதினங்கள், கௌபாய் கதைகள் போன்றவை சித்திரக் கதைகளுக்கான ஒரு புதிய போக்கினை உருவாக்கின. பிறமொழிக்கதைகள் தமிழில் வரத்தொடங்கிய திலிருந்து தமிழ்ச் சித்திரக்கதைகளுக்கான களமும் மாற்றம்பெறத் தொடங்கின. மொழிமாற்றக்கதைகள், 1970களுக்குப் பிறகு பரவலாக வெளிவந்து, வாசகரிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றன. இதனை உணர்ந்த பத்திரிகை நிறுவனங்கள் தமது பத்திரிகைகளில் பிறமொழிச் சித்திரக் கதைகளின் பதிப்புரிமை யினை வாங்கி, அக்கதைகளைத் தமிழில் மொழிமாற்றம் செய்து (குமுதம் - முகமூடி (லீஃபால்க்)) வெளியிடத்தொடங்கின. மேலும், சித்திரக்கதை களுக்கெனத் தனி இதழ்களையும் தொடங்கின.

அவற்றில் முழுக்க முழுக்க மொழிமாற்றக்கதை களை மட்டுமே வெளியிட்ட சில இதழ்களும் உண்டு (ராணி காமிக்ஸ் 1984 - ராணி சிண்டிகேட்). அதுபோல், மேலை நாட்டுக் கதைகள் போன்ற சாயலிலான கதைகளையே உருவாக்கி வெளியிட்ட சில இதழ்களும் உண்டு. (பொன்னி காமிக்ஸ் - கலைப் பொன்னி). பத்திரிகை நிறுவனங்கள் சார்ந்து மட்டுமல்லாமல், தனிநபர் மற்றும் பதிப்பக முயற்சி களாகப் பல சித்திரக்கதை இதழ்கள் வெளிவந்தன. அவை, புதிய கதைகளை உருவாக்கி அவற்றைச் சித்திரக்கதைகளாக வெளியிடும் முயற்சியையும் (அனு காமிக்ஸ், கஸ்தூரி காமிக்ஸ்), ஒருசில இதழ்கள் பிறமொழிக்கதைகளின் பதிப்புரிமை பெற்று அவற்றை தமிழ்ச் சித்திரக்கதைகளாக வெளியிடும் முயற்சியை யும் (ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் - எஸ். ராமஜெயம்), இன்னும் சில இதழ்கள் மேலைநாட்டுக் கதாநாயகர்களின் சாகசங்கள் போன்றவற்றைத் தழுவி, அவர்களைப் போலவே ஒருசில கதாப்பாத்திரங்களை உருவாக்கி வெளியிட்டன (பார்வதி சித்திரக்கதைகள் - ஓநாய்க் கோட்டை, சிலந்திமனிதன் - சூப்பர் காமிக்ஸ்). மேலும், பத்திரிகைகளில் வெளியான சித்திரக்கதைகளைத் தொகுத்து சித்திரக்கதை இதழ்களாக வெளியிடும் முயற்சியும் நடந்துள்ளன (பார்வதி சித்திரக் கதை கள் - கல்கி, கோகுலத்தில் வெளியான சித்திரக்கதை களின் தொகுப்பு).

vedalam_370போதனை ஊடகமாகப் பார்க்கப்பட்ட சித்திரக்கதைகள், மொழி மாற்றக்கதைகள் வரத்தொடங்கியவுடன் மரணம், வன்முறை, மர்மம், கொலைகள் போன்றவற்றைக் கொண்டாடத் தொடங்கின. எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், பொழுதுபோக்கிற்கானத் தன்மையை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இக்கதைகள் வெளிவரத்தொடங்கின.  இவற்றில் எந்தவிதமான வாசக எல்லை யையும் (எந்த வயதின ருக்கானது) வரையறுக்காமல், சாகசங்களும் மர்மங்களும் நிறைந்த எந்தக் கதையாக இருந்தாலும் அவற்றை வெளியிடுவது என்னும் நோக்கோடு சித்திரக்கதைகள் வெளியிடப் பட்டன.

மொழிக்கூறுகள்

பொதுவாக சித்திரக்கதைகளில் வாசகரின் ரசனைக்கேற்ப மொழி யினை உபயோகிப்பது மட்டுமல்லாமல், கதையின் களத்திற்கேற்ப வும், கதைமாந்தர்களுக்கேற்பவும் மொழி பயன் படுத்தப்படுகிறது. மொழிபெயர்ப்புக் கதைகளாக இருப்பின், சொல்லுக்குச்சொல் மொழி பெயர்த்தல், சூழலினை அடிப்படையாகக்கொண்டு மொழிபெயர்த்தல் எனப் பல நிலைகளில் சித்திரக் கதைகளுக்கான மொழி கட்டமைக்கப்படுகிறது. கதைக்குத் தேவையான சிறுசிறு வசனங்கள், கதை யின் மர்மத்தை வெளிப்படுத்தாத ஆர்வமூட்டும் உரையாடல் கள், இடையிடையே எழுப்பப்படும் ஒலிகள், உணர்ச்சிகளுக் கான ஒலிகள், குறியீடுகள் எனச் சித்திரக்கதை மொழிக்கான சிறப்புக் கூறுகள் பல உண்டு.

1965களில் தமிழில் சித்திரக்கதைகளுக்கான சில கலைச் சொற்கள் அறிமுகமாகின. கலைச்சொற்கள் என்று இங்கு குறிப் பிடுவது சித்திரக்கதைகள் என்றாலே சில சொற்கள் அதில் கண்டிப்பாக இருக்கும், இருக்கவேண்டும் என்ற ஒரு எழுதப் படாத நியதி. அதனடிப்படையில், சித்திரக்கதைகளின் மொழி யினை உரையாடல்கள், உணர்ச்சிக்கான ஒலிக்குறிப்புச் சொற் கள், சூழலை விளக்கும் குறியீடுகள் என்னும் மூன்று நிலை களில் பகுக்கலாம். இப்பகுப்பு சித்திரக்கதை மொழியின்  குறிப்பிட்ட சில தகுதிகள் அல்லது வரையறைகள் மட்டுமே. 

1. சித்திரக்கதைகளில் உரையாடல், கதையினை அடிப் படையாகக் கொண்டு கட்டமைக்கப்படுகின்றது. அதாவது, ஒரு கதை துப்பறியும் கதையாகவோ, மாயாஜாலக் கதை யாகவோ இருக்குமாயின் அதற்கேற்பவும் அக்கதை உருவான காலத்திற்கேற்பவும் அதில் வரும் கதைமாந்தர்களின் தகுதி நிலைகளுக்கு ஏற்பவும் இந்த உரையாடலின் தன்மை வரைய றுக்கப்படுகின்றது. இதுவே, பத்திரிகைகளில் வரும்போது அப்பத்திரிகையின் தன்மைக்கு ஏற்பவும் இருக்க வேண்டும் என்பது அதன் கூடுதல் நிலைப்பாடு.  

2. ஒலிக்குறிப்புச் சொற்கள், சித்திரக்கதைகளைப் படம்+ கதை என்ற தளத்திலிருந்து படம்+ஒலி+கதை என்ற வேறொரு வாசிப்பு உணர்விற்கு வாசகர்களைக் கொண்டு செல்கின்றன. டமார், டுமீல் டுமீல், சதக், தொபுக் போன்ற ஒலிக்குறிப்புச் சொற்கள் தமிழ்ச்சூழலில் உருவாக்கப்பட்ட சித்திரக்கதை களில் (மொழிபெயர்ப்புக் கதைகளில் இருக்கும் அளவிற்கு) பெரும் பான்மையாகப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, ஆரம்பகாலச் சித்திரக்கதைகளில் இந்த ஒலிக்குறிப்புச் சொற்கள் உரையாடல்களுடன் சேர்ந்திருந்தன. தமிழில் மொழி பெயர்ப்புக் கதைகளின் வருகையிலிருந்து இவை தனித்து நின்று உணர்ச்சி வெளிப் பாட்டின் தீவிரத்தை அதிகப்படுத்தின.

3. நாம் பயன்படுத்தும் ஆச்சரியக்குறி, கேள்விக்குறி முதலா னவை சொற்களின் பின்னரோ அல்லது ஒரு தொடரின் பின்னரோ இருந்து அதற்கான அர்த்தத்தை விளக்ககூடியவை.  ஆனால் சித்திரக்கதைகளைப் பொருத்தளவில் இந்தக் குறியீடு கள் தனித்து நின்று பொருள் தரக்கூடியவை. அதிலும் ஓரிடத் தில் ஒரு குறியீட்டினை மட்டுமே பயன்படுத்துவது என்றில்லா மல், ஒரே சூழலிலேயே இரண்டு குறியீடுகளையும் ஒன்றாகப் பயன்படுத்துவதன் மூலம், கதாபாத்திரத்தின் உணர்ச்சி மற்றும் முகபாவனையின் அர்த்தங்களை ஒருங்கே வெளிப்படுத்து கின்றன. 

பத்திரிகைகளில் வெளிவரத்தொடங்கிய சித்திரக்கதைகள் தொடங்கி இன்று சிறுவர் இதழ்களிலும், பக்தி இதழ்களிலும், மொழிமாற்றச் சித்திரக்கதை இதழ்களிலும் வெளியாகிக் கொண்டிருக்கும் சித்திரக்கதைகள் வரை மொழி, காலத்திற்கேற்ப கையாளப்பட்டிருக்கின்றது. இதனை பத்திரிகைகளில் வெளியான சித்திரக்கதைகள் மற்றும் சித்திரக்கதை இதழ்களில் வெளியான சித்திரக்கதைகள் என்னும் இரு பிரிவின்கீழ் மதிப்பீடலாம்.

பத்திரிகைகளில் வெளியான சித்திரக்கதைகள்

அச்சு ஊடகம் வந்தபின் பத்திரிகைக் கலாச்சாரமானது வாசகத்தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கோடு உருப்பெற் றது. இவ்வாறு உருவான வாசகர் என்னும் பிரிவினருக்குத் தொடர்ச்சியான வாசிப்பு மரபில், காட்சி மூலமாக ஒன்றை வாசித்தல் என்பதைச் சித்திரக்கதைகள் அறிமுகம் செய்தன. ஒரு பிரதியைக் காட்சிகளோடு இணைத்து நகர்த்துதல் என்னும் முறையில் பத்திரிகைகளுக்குள் சித்திரக்கதைகள் நுழைகின்றன. இங்கு வாசிப்பு என்பது பார்த்தலாக மாறுகிறது. இவை வாசகர் களுக்கு ஒரு புதுவகையான வாசிப்புமுறையினை அறிமுகப் படுத்துகின்றன. இந்த வாசிப்புப் பழக்கத்திற்கு ஆட்பட்ட வாசகர் களைத் தக்க வைத்துக்கொள்ளும் நோக் கோடு வழக்கமான கதைகளாகக் கொடுக்கப்பட்டவற்றுள் விளக்கப் படங்களை வியாபார உத்தியாகப் பயன்படுத்திய பத்திரிகை நிறுவனங்கள், சித்திரக் கதை வடிவம் அறிமுக மானபின் வழக்கமான கதை களையே சித்திரக்கதை வடிவில் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட் டன. இதனால், 1950களுக்குப் பிறகு பெரும்பாலான வெகுசன பத்திரிகைகளில் சித்திரக் கதைகள் இடம்பெறத் தொடங்கின. 

இதே வேளையில், புதிதாக வாசிக்கத் தொடங்கும் சிறுவர் களுக்காக, சிறுவர் இதழ்களிலும் சித்திரக்கதைகள் பெரும் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டன. நன்மை, தீமை, அறம் எனக் கண்ணுக்குப் புலப்படாத நியதிகள் கதைகளாகச் சிறுவய தில் நம் மனதில் ஆழ வேரூன்றி, நமக்கான ஒரு நடுநிலைத் தன்மையினைத் தீர்மானிக் கின்றன. இந்தக் கருத்துக் களைச் சிறுவர்களின் மனதில் விதைக்கும் வேலையை மிக எளிதாகச் செய்ய, நாம் கையிலெடுக்கும் ஒரு வடிவம் தான் கதை. இன்றும், நம்மால் கூறப்படும் அனைத்துக் கதைகளும் ஏதோ ஒருவகை யில் நம்மையும் மீறி ஒரு அறத் தினைப் பறைசாற்றி நிற்கின்றன. கேட்பதன் மூலமாக உணர்ந்த ஒரு கதை யினைக் காட்சியாகப் பார்க்கும் போது சிறுவர்களின் மனதில் இன்னும் ஆழமாக அக்கருத்துக் கள் பதிவாகின்றன. எனவே தான் பள்ளிக்கல்வி முறையில் படங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. பத்திரிகைகளில் சித்திரக் கதைகளின் மொழி என்று பார்க்கும்போது, சிறுவர் இதழ் களில் சித்திரக்கதைகள், வெகுசனப் பத்திரிகைகளில் வெளியான சித்திரக்கதைகள் என்னும் இருநிலைகள் குறிப்பிடத் தக்கவையாக உள்ளன.

1950களில் வெளியான அனைத்துச் சிறுவர் இதழ்களும் சித்திரக்கதை வடிவத்தினைக் கையிலெடுத்தன. இவற்றில், சிறுவர்களைக் கவரும் வகையில், சிறுவர்களையே கதைமாந்தர் களாகக் கொண்டச் சித்திரக்கதைகள் வெளிவந்தன. (சித்திரக் குள்ளன் இதழ் - காட்டுச் சிறுவன் கண்ணன், கோகுலம் இதழ் - பலே பாலு, சமத்துச் சாரு), இக்கதைகள் சிறுவர்களுக்குப் புரியும் வண்ணம் சிறுசிறு உரையாடல்களும், கடினமாக இல்லாமல் வழக்கில் சிறுவர்கள் பேசிக்கொள்வது போன்ற உணர்வினை ஏற்படுத்தும் வகையிலும் படைக்கப்பட்டன. உதாரணமாக, ‘என் சொக்காயை இதன்மேல் பாய்மரம்போல் கட்டிவிடுகிறேன்’, ‘பலே ஜோர்’, ‘அட! ஏரோப்ளேன்டோய்’, ‘மிஸ்டர் ஏரோப்ளேன்! என்னை உன்முதுகில் ஏற்றிக்கொண்டு போயேன்’ (சித்திரக்குள்ளன் இதழ் - வேதாள உலகத்தில் விச்சு முதலானவற்றைச் சுட்டமுடியும்). மேலும் சிறுவர்களின் நடைமுறையோடு ஒன்றி, அவர்களுக்கு உற்சாகமூட்டுவது போன்ற சொல்லாடல்களையும் இவ்வுரையாடலில் காண லாம். சிறுவர்களைக் கதைநாயகர்களாகக் கொண்ட கதைகள் ஒருபுறம் இத்தகைய மொழியமைப்பைக் கொண்டிருந்தாலும், சிறுவர்களுக்காகக் கூறப்படும் புராண, தொன்மக் கதைகள், கடினமான எழுத்துநடை வசனங்களையே கொண்டிருந்தன. இக்கதைகளில், சிறுவர்களுக்காகக் கொடுக்கப்படும் கதைகள் என்னும் நிலையில் மொழியமைப் பில் எந்தவித மாற்றங்களும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை (உதாரணம்: கோகுலம் - ஜெய் ஹனுமான்). 

· வெகுசன பத்திரிகைகள் அவற்றின் கருத்தியலின் அடிப் படையிலேயே அப்பத்திரிகைக்கான மொழியினைக் கட்டமைக்கின்றன. எத்தகைய வாசகர்களைக் குறிவைத்து அப்பத்திரிகைகள் வெளிவருகின்றன என்பதும் இங்கு நோக்கத்தக்கது. பத்திரிகை மொழி என்பது ஒருவகையான அடையாளத்தைத் தனக்குள் ஒளித்துக்கொண்டு படைப்புக் கேற்ப நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை யினைக் கொண்டது. அந்தவகையில், தொடக்ககால பத்திரிகைகளில் அதிக மாக இருந்த பிராமணத்தன்மை சித்திரக் கதைகளிலும் எதிரொ லித்தது. சிறுவர் இதழ்களும் இதற்கு விதிவிலக்கல்ல. உதாரண மாக, அக்காவைக்கா ணோம்னு தேடறியா? யாரோ தூக்கிண்டு போயிட்டா?... அப்போ நான் போய் அக்காவைக் கூட்டிண்டு வந்துடறேன்! (கண்ணன் வெளியீடு: ராஜி - விஜி) இத்தகைய மொழிநடை பத்திரிகை சார்ந்ததாக மட்டுமல்லாமல், கதையா சிரியராலும் கட்டமைக்கப்படுகிறது. பெரும்பாலும் இக்கதை களில் உலாவரும் கதாநாயகர்களும் மேல்தட்டு வர்க்கத்தின ராக இருக்கின்றனர் என்பதும் இதற்கு ஒரு காரணமாகலாம். 

· தொடக்ககாலத் தமிழ்த்திரைப்படங்களில் பேசப்பட்ட வசனங்கள்போல் தமிழ்ச் சித்திரக்கதைகளில் உரையாடல்கள் அனைத்தும் எழுத்துநடையில் அமைந்துள்ளன. உதாரண மாக, “அடி அம்மா நிர்மலா! இந்த முரட்டுப்பிள்ளை சந்திரன் உத்தியோகம் போன ஆத்திரத்திலே நேத்து ராத்திரி எவனோ டிரைவரோடு சண்டைக்குப் போய் அடித்துப் போட்டுவிட் டானாம்! போலீஸில் பிடித்துக் கொண்டு போய் விட்டார் களாம்! நான் என்னடி செய்வேன்?” (சேற்றின் சிரிப்பு - மாலைமதி வெளியீடு).

· சித்திரக்கதைகளில், கதைமாந்தர்களுக்கேற்பவும் கதைச் சூழலுக்கேற்பவும் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. உதார ணத்திற்கு, அலுவலகத்தை மையமாக வைத்து ஒரு கதை நிகழ்த்தப்பட்டால், அவற்றில் பெரும்பான்மையாக ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. “இடியட்! ஒரேயடியா நாம் சாதிச்சா போச்சுங்கறேன்!”, “அதுக்கு ஸ்டோர் கீப்பர் ஒத்துக்கணுமே”, “அவரென்ன கோல்கீப்பரா? ஒத்துக்குவார் சமாளிச்சிக்கிறேன்” (பட் பட் பட்டாபி: கல்கி 1978). மேலும்,  தமிழல்லாத பிறமொழிச் சொற்களையும் (ரொம்ப தாங்க்ஸ்பா, டாக்டர், ஸினிமா, ஸ்டார், மாஸ்டர், எஜமான், ஜமீன், உஷார் . . .) பயன்படுத்தியிருக்கின்றனர். தமிழ்மொழியில் கலந் துள்ள பிறமொழிச் சொற்களின் அளவிற்கேற்ப சித்திரக் கதை களிலும் அப்போதைக்கு இருந்த பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டன. மொழிபெயர்ப்புச் சித்திரக்கதை களோடு ஒப்பிடுகையில் தமிழ்ச் சித்திரக்கதைகளில் இத்தன்மை குறைவாகவே காணப்படுகின்றன.

· setrin_370சித்திரக்கதைகளில் கதைமாந்தர்களிடையே காணப்படும் வர்க்கப் பாகுபாட்டினை ஓவியங்களோடு அவர்கள் பேசும் மொழியும் வெளிப்படுத்துகின்றது. கல்வியறிவு பெற்று உயர் மட்டத்தில் இருக்கும் ஒருவன் பேசும் பேச்சிற்கும், படிக்காமல் கூலித் தொழில் செய்யும் ஒருவனுடைய பேச்சிற்கும் இடையே காட்டப்படும் வேறுபாட்டினை, ஓவியங்களுடன் கூடிய உரையாடல்கள் மிகத்தெளிவாக விளக்குகின்றன. உதாரண மாக,  அட! சேகர் ஐயா சொன்னது சரியால்ல பூட்டுது?, ஸ்டேசனுக்கா போறே, கண்ணு?  உன்னைப் பார்த்துக்கிறேன் இரு! (சேற்றின் சிரிப்பு - குமுதம்).

· பொதுவாக, பிரதிகளில் கையாளப் படும் மொழியினைக் கொண்டு, அதன் வட்டார வழக்குத்தன்மையினை அறிய முடியும். ஆனால், சித்திரக்கதைகளில் ஒரு குறிப்பிட்ட வட்டார வழக்குத்தன்மை யினைக் காண முடிவதில்லை. எனினும் பரவலாகச் சென்னைத் தமிழ்ச் சொற்கள் பயன்படுத் தப்பட்டுள்ளன.

· ஒருசில கதைகளில் சித்திரக்கதை களுக்கான அடிப்படைக் கூறாகிய சுருக்க மான சிறுசிறு உரையாடல்கள் என்றில்லா மல்,  ஒரு பத்தி போன்றே வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ஒரு பத்தி அளவிற்கு வசனங்களைக் கட்டங்களுக்குள் எழுதும் போது அவை சித்திரக்கதை என்னும் தன்மையிலிருந்து விலகி, ஒரு கதையில் வரும் ஒவ்வொரு காட்சிக்குமான விளக்கப்படங்களைத்  தொடர்ச்சியாகப் பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்திவிடுகின்றன.

· பத்திரிகைகளில் வெளியான சித்திரக்கதைகளில் பெரு மளவு ஒலிக்குறிப்புச் சொற்களோ, குறியீடுகளோ காணப்பட வில்லை. இதற்கு ஒரு முக்கியமான காரணம், இவற்றில் வெளி யான கதைகள் வெகுசன ரசனை சார்ந்து அப்போது எல்லோ ராலும் விரும்பப்பட்ட துப்பறியும் கதைகள், மாயா ஜாலக் கதைகள், காதல் கதைகள், குடும்பம் சார்ந்த கதைகளாக இருந்தன. எனவே, அவற்றில் இதன் தேவை குறைவு. எனினும் “அங்கே டுமீல் டுமீல் என்று சத்தம் கேட்டது” போன்ற வசனங் கள் பரவலாக இருந்தன. 

· தினசரி நாளேடான தினத்தந்தியில் வெளியான “கருப்புக் கண்ணாடி”, “மாதவி”, “கன்னித்தீவு” முதலான கதை களும் இவற்றில் அடங்கும். இவை நாளுக்கு ஒரு பகுதியாக இடம் பெற்றதால், ஒவ்வொரு நாள் வெளியாகும் ஒவ்வொரு பகுதி யிலும் உள்ள உரையாடல்கள் அடுத்தது என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்துவதாக அமைக் கப்பட்டி ருக்கும். 1990களில் நாளேடுகளிலும் மொழிமாற்றக் கதைகள் இடம்பெறத்தொடங்கின.

சித்திரக்கதை இதழ்கள் - மொழிமாற்றக்கதைகள்

1964 தொடங்கி வெளியான சித்திரக்கதை இதழ்கள் அதுவரை வழக்கத்திலிருந்த சித்திரக்கதைகளின் உள்ளடக்கத் தினை அடியோடு மாற்றின. இக்காலகட்டத்தில்தான் தமிழுக்கு மொழிமாற்றக்கதைகள் அறிமுகமாகத் தொடங்கின. தொடர்ந்து வழக்கமான கதைகளையே சித்திரக்கதைகளாக வாசித்த வாசகர்களுக்கு ஒரு புதுவிதமான சாகசக்கதைகள் அறிமுகமாகின. தமிழில் முதன்முதலில் மேலைநாட்டுக் கதை களை மொழிபெயர்த்து வண்ணப்படங்களுடன் 1965இல் இந்திரஜால் காமிக்ஸ் வெளியானது. இதனைத் தொடர்ந்து பல சித்திரக்கதை இதழ்கள் வெளிநாட்டுக் கதைகளைத் தாங்கி வெளிவந்தன. இத்தகைய கதைகள் பெரும்பாலும் மூலத்திலி ருந்து அப்படியே சொல்லுக்குச் சொல் செய்யப்பட்ட மொழி பெயர்ப்பாக இக்கதைகள் இருந்தன. இச்சித்திரக் கதைகள் மும்பையில் வசிக்கும் தமிழ் தெரிந்தவர்களைக் கொண்டு மொழி பெயர்க்கப்பட்டதால் தமிழ்ச்சூழலோடு ஒத்துப் போகும் சாத்தியங்கள் குறைவு. எனினும் இந்திரஜால் காமிக்ஸில் அறிமுகமான கதாபாத்திரங்கள் தமிழில் பெரும் வரவேற்பினைப் பெற்றன. இந்த வரவேற்பு தமிழ்ச்சித்திரக் கதை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த ஒரு இடத்தினை இந்திரஜால் காமிக்ஸ§க்குப் பெற்றுத்தந்துள்ளது.   

மொழிமாற்றச் சித்திரக்கதைகள்தான் தமிழில் சித்திரக் கதைகளுக்கான ஒரு மொழிக்கட்டமைப்பினை உருவாக் கின. புதிய கதைக்களங்களை அறிமுகம் செய்த மொழி பெயர்ப் புக்கதைகள், அதுவரை தமிழ்ச்சூழலில் அபாயகரமானதாகப் பார்க்கப்பட்ட சில சொற்களைக் கொண்டாடத் தொடங்கின. மரணம், கொலை, பலி, பேய், பிசாசு, ஆவி, பிணம், மர்மம், கல்லறை முதலான சொற்களைத் தலைப்புகளாகக் கொண்டுச் சித்திரக்கதைகள் வெளிவரத்தொடங்கின. ‘மர்மக் கல்லறை’, ‘மரணக்குகை’, ‘தேடிவந்த தூக்குக் கயிறு’, ‘காட்டேரிக் கானகம்’, ‘துயிலெழுந்த பிசாசுகள்’, ‘மொராக்கோ மர்மம்’, ‘கொலைகாரக் கோமாளி’, ‘ரத்த பலி’, ‘சித்திரவதை’, ‘தங்கக் கல்லறை’, ‘மரணத்தின் நிறம் கருப்பு’ முதலான தலைப்புகள் சித்திரக்கதைகளுக்கு வைக்கப்பட்டன. வாசிப்புப் பழக்கத் தினை ஏற்படுத்துவதற்காகப் பெற்றோர்களால் சிறுவர்களுக்கு வாங்கிக்கொடுக்கப்பட்ட சித்திரக்கதைப் புத்தகங்கள், ஒரு கட்டத்தில், அவர்களுக்குத் தெரியாமல்  ஒளித்து வைத்துப் படிக்கவேண்டியநிலை சிறுவர்களுக்கு ஏற்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சித்திரக்கதைகள் வன்முறையை வார்த்தைகளாலும் ஓவியங்களாலும் கோர்த்துத் தோரண மாக்கி தம் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டன. இக்கதைத் தலைப்புகள், வாசகரின் ஆர்வத்தினைப் பெரிதும் தூண்டின. கதைத் தலைப்புகள் மட்டுமல்லாமல் கதைகளின் மொழி பெயர்ப்புகளும் வாசிப்பில் ஒரு புதுவகையான அனுபவத்தை ஏற்படுத்தின.  

· மொழிமாற்றக்கதைகள் சூழலுக்கு ஏற்றார்போல் மொழி பெயர்க்கப்படும்போது, அவை வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளன. உதாரணமாக, Calamity Jane - பேராபத்து, அபாயம் என்னும் பொருளுடைய Calamity என்ற சொல் தமிழில் ‘அடிதடி’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  "But this is a calamity Jane what next oh dear me! - இது விபரீதம்டி ஜேன் ...ஐயோ...அடுத்து என்ன செஞ்சு தொலைக்கப் போறியோ பயம்மா இருக்குடி!”, "I'L get in later… I like to bathe alone…--நான் அப்புறமாய் குளிச்சுக்கறேன், குளிக்கறச்சே பக்கத்திலே ஆள் இருந்தா கூச்சமாயிருக்கு!” இது போன்ற பல தொடர்கள் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. இம்மொழிபெயர்ப்புக் கதைகளைத் தமிழில் இன்று வரும் ஜாக்கிசான் படங்களோடு தொடர்பு படுத்திப் பார்க்கலாம்.

· மொழிமாற்றக்கதைகளாக இருந்தாலும், அவற்றிலும் அதன் கதைகளுக்கு ஏற்ப மொழிபெயர்ப்புத்தன்மை மாறு படுகின்றன. பெரும்பாலும், மொழிமாற்றச் சித்திரக்கதைகளில் நகைச்சுவைக் கதாப்பாத்திரங்கள் பேசும் மொழி சென்னைத் தமிழாகவே இருக்கின்றது. எனினும் இச்சித்திரக்கதைகளில் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைச் சார்ந்த மொழி என்று எதனையும் அடையாளப்படுத்த முடியவில்லை. இவற்றில் ஓரளவு பேச்சு வழக்கிலான உரையாடல்களைக் காணமுடி கின்றது. உதாரணமாக, “எவன்டா...என்னோட கண்ணாடியை ஒட்சிது?” (ஜேன் இருக்க பயமேன் - லயன் காமிக்ஸ்)

· பத்திரிகைகளில் வெளியான சித்திரக்கதைகளோடு ஒப்பிடுகையில் பிறமொழிச் சொற்களின் கலப்பு விகிதம் அதிக ரித்துள்ளது.  மொழிமாற்றக் கதைகள் என்பதால், அவற்றில் பல சொற்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரண மாக, ‘இந்த பியரிடில்ஸ் இசைக்குழுவினர் பாடு ஜாலி. எங்கே வேண்டுமானாலும் சுற்றுகிறாங்க. ஒருத்தரும் செக்கிங்கும் பண்ணறதில்லை’ (மாலைமதி காமிக்ஸ் AFI - நடிகர் கடத்தப் பட்டார்).  கதைமாந்தர்களின் பெயர், ஊரின் பெயர், சில பொருட்களின் பெயர் எல்லாம் ஆங்கிலத்தில் எவ்வாறு உச்சரிக்கப்படுகிறதோ அப்படியே தமிழிலும் பயன்படுத்தப் பட்டுள்ளன. தமிழல்லாத பிறமொழிச் சொற்கள் பல இதில் காணப்படுகின்றன. உதாரணமாக, ஜலகண்டம், ஜன நடமாட் டம், கப்ஸா, பேஷா, உஷாரா, நயினா, குஜாலா போன்ற சொற்கள் இதில் இடம்பெற்றுள்ளன.  மேலும், தற்போது வழக்கில் இல்லாத சில சொற்களும் இவற்றில் பயன் படுத்தப்படுகின்றன.

· இவ்வகைச் சித்திரக்கதைகளில் ஏசல் சொற்களின் செல்வாக்கினையும் காணமுடிகின்றது. உதாரணமாக, ‘நாயிடை மவனே’, ‘கஸ்மாலம்’, ‘கழிசடை’ போன்ற வார்த்தை கள் மிகவும் எளிதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

· மொழிமாற்றக்கதைகளின் கதைக்களமும், கதைமாந்தரும் அந்நியராக இருந்தாலும், சூழலுக்கு ஏற்றார்போன்று மரபுத் தொடர்களையும், சில இடங்களில் தமிழ்ப்பாடல்களையும், தமிழ்க் கவிதைகளையும் பயன்படுத்தியுள்ளமை அக்கதை களின் அந்நியத்தன்மையைக் குறைக்கின்றன.  உதாரணமாக, “உனக்கு பதில் சொல்ல வார்த்தைகளே அகப்படவில்லை எனக்கு . . . கவிஞர் ஒருவரின் வார்த்தைகளில் சொல்கிறேன் கேள்! வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு காதலடி நீ எனக்கு காந்தமடி நானுனக்கு”, “ஓ . . . சூப்பர் . . . உங்களை மாதிரியே!”.

· ஒலிக்குறிப்புச் சொற்களை அப்படியே ஒலிபெயர்ப்புச் செய்யாமல், புதிதாகச் சில ஒலிக்குறிப்புச் சொற்களும் பயன் படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, “Isdsan bang! Bang! Chichah (women bang bang go) - பொவ் பொவ் பிஸ்ஸா பிஸ்ஸா”, “sastee sastee sastee (kill)  அர்ரிபா கூர்ரூகூ போபோப்ப்...!” (ஜேன் இருக்க பயமேன் - லயன் காமிக்ஸ்)

· சித்திரக்கதைகளில் பயன்படுத்தப்படும் குறியீடுகள், ஒரு காட்சியில் வரும் கதாப்பாத்திரத்தின் மனநிலையினை விளக்குகின்றன. உதாரணத்திற்கு, ஒரு கட்டத்திற்குள், ஒருவன் மற்றொருவனிடம் “மேஜர் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்” என்று கூறுகிறான்.  அதற்கடுத்த கட்டத்தில், அந்த இரண்டாம் நபர் முகம் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் இருக்க, வெறும் கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் மட்டுமே பலூனுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது. இங்கே அந்த இரண்டாம் நபருக்கு ஏற்படும் வினாவும், ஆச்சர்யமும் அந்தக் குறியீடுகளால் விளக் கப்படுகின்றன. இதுபோல் மொழிமாற்றக்கதைகள் பெருவாரி யான இடங்களில் குறியீடுகளை மொழியாகப் பயன்படுத்தி யுள்ளன. இதற்கு முக்கிய காரணம் மூலக்கதை களிலேயே அவ்வாறு பயன்படுத்தப்பட்டதுதான். எனினும், இத்தகைய வழக்கம் தமிழ்ச் சித்திரக்கதைகளில் ‘அவன் ஆச்சர்யமாகப் பார்த்தான்’ என்பதற்குப் பதிலாக இவ்வாறு கையாளப்பட் டதற்கு இக்கதைகள் வழிவகுத்தன.

தமிழ்ச் சித்திரக்கதை வரலாற்றில் பத்திரிகைகளில் வெளியான சித்திரக்கதைகளுக்கும், சித்திரக்கதை இதழ்களில் வெளியான மொழிமாற்றக் கதைகளுக்குமிடையே மொழிக் கட்டமைப்பில் ஒரு வேறுபாட்டினைக் காணமுடிகிறது. இதன் அடிப்படை, தமிழ்ச்சூழலில் சித்திரக்கதைகளை உருவாக்குவ தில் காலத்தையும் பொருளையும் செலவழித்து சிரத்தையோடு செய்பவர்கள் யாரும் உருவாகவில்லை. எனவேதான் தமிழ்ச் சித்திரக்கதைகள் மொழிமாற்றக்கதைகளின் வாயிலாகவே தமது இருப்பைத் தக்கவைத்துக்கொண்டுள்ளன. உரையாடல், உணர்ச்சி, குறியீடு, ஒலி, என அனைத்துக் கூறுகளையும் உள்ள டக்கிய ஒரு மொழியமைப்பினை மொழிமாற்றக்கதைகளே கட்டமைத்தன.

Pin It