கதை, இது ஒரு மந்திரச்சொல். கேட்போரையும் படிப்போரை யும் ஒரு மாய உலகில் சஞ்சரிக்க வைக்கும் வல்லமையுள்ளது. பொதுவாகக் கதை சொல்லப்படுவது குழந்தைகளுக்காகத் தான். என்னுடைய பாட்டி எனக்கு, “ஏழுகடல் தாண்டி ஏழுமலையைத் தாண்டி இருந்த ஒரு மரத்தின் பொந்தில் வசித்துவந்த ஆந்தையின் உயிரில் இருந்தது கெட்ட மந்திரவாதி யின் சக்தி. இளவரசன் ஆந்தையை அழித்த போது மந்திர வாதியும் அழிந்தான்.” என்று சொன்னபோது எனக்கு வயது 8. நான் உண்மையில் என் மனக்குதிரையில் ஏறி ஓளியின் வேகத்தில் அந்த 7 கடலையும், மலையையும் கடந்தது போலவே உணர்ந்தேன். என் மனத்திரையில் காட்சியாகவும் கண்டேன். கதை கேட்கும் போது நிச்சயம் ஒரு குழந்தை பலவற்றைச் சிந்திக்கும் கற்பனைத்திறன் வளரும். அறிவு தானே வளர்ச்சி அடையும்.

பல சிந்தனையாளர்களும், விஞ்ஞானி களும் இக்கருத்தை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இன்றைய நவீன பாலிமர் யுகத்தில் கதை சொல்லிகளும் இல்லை கதை கேட் போரும் இல்லை. கதை சொல்லிகளான பாட்டிமார் களும் தாத்தாக்களும் பெரும்பாலும் முதியோர் இல்லங் களிலோ அல்லது தனிமையிலோ வாடுகின்றனர். இவர்களிடம் கதைகள் மூலமும், நல்ல அறிவுரைகளின் மூலமும் அன்பையும், பண்பையும் பெற வேண்டிய பேரக்குழந்தைகள் கணினி யின் மடியில் காலம் கழிக்கிறார்கள். மடிதானே வேறு என்று வாளாவிருக்க முடியவில்லையே. முன்பெல்லாம் விடுமுறைக் காவது குழந்தைகள் தங்கள் உற்றார் உறவினரைக் காண ஊருக்குப் போவார்கள். ஆனால் இன்று அவர்கள் very busy!. டான்ஸ் கிளாஸ், பாட்டு கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ், கராத்தே கிளாஸ், யோகா கிளாஸ் என்று அவர்களின் புரோகிராம் டைரி full. ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெற வேண்டும் என்பது இயற்கை நியதிதான். ஆனால் அன்பை யும் பண்பையும் இழந்து எதைப் பெற்றால்தான் என்ன?.

தற்காலத்தில் படிக்கும் வழக்கம் கழுதை தேய்ந்து கட்டெ றும்பான கதையாகி வருகிறது. அதிலும் ‘குழந்தை இலக்கியத் தின்’ நிலை கவலைக்கிடமாக உள்ளது. குழந்தைகளுக்கு எழுதுவதுதான் மிகக் கடினம் என்று பலரும் உணருவதில்லை. குழந்தை இலக்கியத்திற்கென பாடுபட்டவர்களுள் வாண்டு மாமாவின் பங்களிப்பு அளப்பரியது. (மற்றவர்களைப் பற்றி எனக்குச் சரியாகத் தெரியவில்லை எனவேதான் அவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை.) தன் வாழ்நாள் முழுவதும் குழந்தை களுக்காக நிறைய கதை, கட்டுரைகள் இன்ன பிற என்று எழுதியிருக்கிறார். நம்முடைய ராஜா, ராணி, மந்திரஜாலம், வீரம், தீரம், காதல், நட்பு, இந்திரஜாலம் என்று சகலத்தையும் இவருடைய கதைகள் வெளிப்படுத்தும். அன்பும், பண்பும் கடமையும் உள்ளூர ஊடுறுவியிருக்கும். அவர் comics என்று அழைக்கப்படும் சித்திரக்கதைகள் வாயிலாகவும் மலர்ந்து மணம் வீசியிருக்கிறார். இவருடைய “ஓநாய்க் கோட்டை”, “மூன்று மந்திரவாதிகள்”, “அவள் எங்கே?”, “‘ஷீலாவைக் காணோம்”, “வீரவிஜயன்” போன்ற படக்கதைகள் வார இதழ் களில் தொடராக வெளிவந்து சக்கை போடு போட்டன. இவரு டைய கதாபாத்திரங்கள் என்றும் நினைவில் நிற்கும் ஆற்றலு டையவை.

கதை உலகமே ஒரு மந்திர உலகம். அதனுள் ஒரு குட்டி உலகம் மந்திரஜாலக் கதைகள், நம்முடைய அம்புலிமாமாவிலும், பாலமித்ராவிலும் இல் லாத மாயாஜாலம் வேறு எங்கு இருக்கப் போகிறது? மாயா ஜாலத்தை விரும்பாதோர் யார்? அதனாலல்லவா ஹாரிபாட்டர் கதைத் தொடர் இமாலய வெற்றி அடைந்தது. உலகெங் கிலும் மக்கள் வரிசையில் நின்று (அதுவும் நடுநிசியில்) இப்புத்தகத்தை வாங்கியதும், விற்பனையில் சாதனை படைத்திட்டதும் இக்கதையின் வெற்றியின் அடையாளமின்றி வேறென்ன.

குழந்தை இலக்கியத்தில் காமிக்ஸ்களின் பங்கு அளவிட முடியாததாகும். காமிக்ஸ் என்பது சித்திரங்கள் வாயிலாகச் சொல்லப்படும் கதை யாகும். படிப்போரைக் கதை நிகழும் களத்திற்கே அழைத்துச் சென்று பரவசப்படுத்துவதில்தான் இருக்கிறது ஓவியரின் திறமை. சிறந்த கதாசிரிய ரும் தேவை. எல்லாவற்றையும்விட மிக முக்கிய மான சிறப்பம்சம் கதாபாத் திரங்கள் பேசிக்கொள்வதைப் போன்ற உணர்வை படிப் போருக்கு ஊட்டுவதுதான். நம்முடைய நாட்டில் உருவான சித்திரக்கதைகளைக் காட்டிலும் வெளிநாட்டில் உருவான சித்திரத்தொடர்கள் இங்கே பெரும் வரவேற்பைப் பெற்றன. ஏனெனில் அவை மிகச் சிறந்த ஓவியங்களுடனும் வலுவான கதையம்சத்துடனும் இருந்தன. மொழிபெயர்ப்புத் தொடர்கள் என்பதால் சிறந்த கதைகளே தெரிவுசெய்து வெளியிடப்பட் டன என்பது வேறு விஷயம். தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்து வெளிவந்துள்ள சித்திரக்கதைப் பட்டியல் பால்கன், மாலைமதி, முத்து, லயன், இந்திரஜால், பொன்னி, திகில், மினிலயன், மதி, வாசு, காக்ஸ்டன், ராஜா, சிவகாசி, அனு, கண்மணி, தினபூமி, ரேகா, சோலை இன்னும் ஏராள மாக வந்துள்ளன.

எந்தத் துறையானாலும் சரி கலை இலக்கியமானாலும் சரி அவை வெற்றி பெறவேண்டும் என்றால் தரமாகவும் இருக்க வேண்டும். யாரைப் போய்ச் சேரவேண்டுமோ அவர்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய வலுவான விளம்பரயுக்தி, மற்றும் நிர்வாக அமைப்பும் இருக்க வேண்டும். நம்முடைய நாட்டில் தொழில்முறை அடிப்படையில் இவற்றை உருவாக்கத் தேவை யான விற்பனை இல்லாததே சித்திரக்கதைகள் இங்கு பெரும்பாலும் வெற்றியடையாததின் காரணம்; இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு. மேற்கத்திய நாடுகளில் சித்திரக் கதை உருவாக்கம் பல கூறுகளாகப் பகுக்கப்பட்டு (கதாசிரியர், ஓவியர், பலூன் அமைத்து வசனம் எழுதுதல், மையிடுதல்) ஒவ்வொன்றிற்கும் தனித்தனி நபர்கள் பங்களிப்பதால் படைப்புகள் தரமாக இருக்கின்றன.

harish_370ஆனால் இங்கே வியாபார ரீதியாக இப்படி செயல்படுவது சாத்தியப்படுவதில்லை. இவ்வளவு சிரமங்களுக்கு இடையே குழந்தை இலக்கியத்திலும் சரி, சித்திரக்கதைகளிலும் சரி நம்மவர்கள் நிறைய சாதித்து இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் முல்லை தங்கராசனும், லயன் காமிக்ஸ் ஆசிரியர் விஜயனும் ஆவார்கள். அதிலும் இன்றைய சாட்டிலைட் காலகட்டத்தில் comics போன்ற வெகுஜன ஆதரவு இல்லாத பத்திரிக்கையை வெற்றிகர மாக நடத்திவரும் திரு. விஜயன் அவர்களின் பங்களிப்பைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. 2010ல் ‘இரத்தப்படலம்’ என்ற 858 பக்க காமிக்ஸை வெளியிட்டு உலக சாதனை படைத் தார். இவ்வளவு பெரிய comics கதை ஒரே புத்தகமாகத் தமிழில் இதுவரை வந்ததில்லை. இனிவரப்போவ தும் இல்லை. தமிழில் அதிகபட்சமாக சுமார் 800 இதழ்களை வெளியிட்டுள்ள நிறுவனம் ‘இந்திரஜால் காமிக்ஸ்’. இதைப் பற்றி எனக்குத் தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படு கிறேன்.

இந்திரஜால் காமிக்ஸின் தோற்றம்:

1964ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன் முதலில் ஆங்கிலப் பதிப்பாக டைம்ஸ் ஆப் இண்டியா, பென்னட் கோல்மேன் நிறுவனத்தாரால் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பதிப்பு 1965ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் முழு வண்ணத்தில் வெளிவந்தது. முதல் 24 இதழ் கள் வரை, ஒரு மாயவிளக்கு அருகே ஒரு சிறுவன் உட்கார்ந்து ஆச்சர்யமாகப் பார்ப்பது போலவும் அந்த மாயவிளக்கிலிருந்து வெளியாகும் புகை அவனைச் சுற்றுவது போலவும் (அலாவுதி னும் அற்புத விளக்கையும் போல) இவ்விதழின் லோகோ அமைக்கப்பட்டிருந்தது. 25ஆவது இதழிலிருந்து வெறும் மாயவிளக்கு மட்டுமே இருப்பதுபோன்ற லோகோவுடன் தொடர்ச்சியாக வெளிவந்தது.

வளர்ச்சி:

முதலில் மாதம் ஒருமுறை வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ் 1967ஆம் ஆண்டு ஜனவரி முதல் மாதமிருமுறை வெளிவரத் தொடங்கி 1981ஆம் ஆண்டு நவம்பர் முதல் வார இதழாக வளர்ச்சியடைந்தது. 29ஆவது இதழ் முதல் 32 பக்கங்களுடன் ஒரு நிலையான அமைப்பைப் பெற்றது. “விஞ்ஞானம்”, ரிப்பிளி யின் “நம்பினால் நம்புங்கள்”, கோவிந்தின் “குஞ்சுப் பிள்ளை யோடு உலகப்பயணம்”, “மொட்டை மணியன்” போன்ற நகைச்சுவைத்துணுக்குகள் புத்தகத்தை மெருகுகேற் றின. வான வில்லின் வர்ணஜாலம் போல ஏராளமான கதாநாய கர்களை அறிமுகம் செய்தது இந்திரஜால் காமிக்ஸ். ஆரம்பத் தில் ஏராளமாக எடிட்டிங் செய்யப்பட்ட (பக்கங்களின் பற்றாக் குறை காரணமாக இருக்கலாம்) கதைகளோடு வெளிவந்தது. பின்னர் படிப்படியாக பிற்சேர்க்கைகளின் அளவு குறைக்கப் பட்டு கதைகள் தெளிவாக எடிட்டிங் செய்யப்பட்டு வெளி வந்தன. முதலில் வேதாள மாயாத்மாவின் கதைகளோடு வெளி வந்தாலும், காலப்போக்கில் எண்ணற்ற சாகச வீரர்களை அறிமுகம் செய்தது.

கதாநாயகர்கள்:

மக்களின் பல்வேறுபட்ட ரசனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வித்தியாசமான கதாநாயகர்களை அறிமுகம் செய்தது இந்திரஜால். வேதாளன், மாண்ட்ரேக் (ஜீலை 15, 1967ஆம் ஆண்டில் மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் அறிமுகம் செய்யப்பட்டார்), பிளாஷ் கார்டன், பஸ்ஸாயர், கெர்ரி டிரேக், காரிகன், புரூஸ்லீ, மைக்நமாடி, ரிப்கெர்பி, கார்த் மற்றும் வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரங்கள், பகதூர் மற்றும் சில யுத்தக் கதைகளும் வெயிடப்பட்டுள்ளன.

வேதாள மாயாத்மா:

இந்திரஜால் காமிக்ஸின் ஆஸ்தான நாயகர். மொத்த கதைகளுள் இவருடைய சாகஸங்கள் பாதிக்கும் மேற்பட்டவை என்பதில் இருந்தே இக்கதைத் தொடரின் வெற்றியை உணரலாம்.  சிறப்பான ஓவியங்கள், தெளிவான கதையமைப்பு என பலமான கூட்டணியோடு இந்த காமிக்ஸ் விருந்து பரி மாறப்பட்டது. கடல் கொள்ளையரால் பாதிக்கப்பட்டு அழிவு, கொடுமை, கொள்ளை ஆகியவற்றிற்கு எதிராகப் போராடிய ஒரு மனிதனே முதல் வேதாளன். அவருடைய சந்ததியர் அவரைப் பின்பற்றினர். வெளி உலகிற்கு இவர் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி. உண்மையில் தந்தைக்குப் பின் மகன் பொறுப்பேற்றுக் கொள்வார். இதை அறிந்தவர் பந்தர் குள்ளர்கள். இக்கதாபாத்திரத்தை உருவாக்கிய லீபாக்கின் கற்பனை வளம்தான் என்னே! ஆழநெடுங்காடு, கபாலக்குகை, பந்தர் குள்ளர்களின் விஷ அம்புகள், பேரருவி என்ற அட்ட காசமான களத்தில் அற்புதமான கதைகள் விளையாமல் வேறென்ன விளையும்.

காட்டுக்குள்ளே ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகள், காட்டுவாசி இனத்தலைவர் களின் சச்சரவைத் தீர்த்தல் (ஐ.நா சபையின் பணியைப்போல), அதிசயப் பொருட்கள், அவை கிடைத்த விதம், முன்னோர்கள் எழுதிய குறிப்பேடு, எல்லாவித விலங்குகளும் ஒற்றுமையாய் வாழும் ஈடன் தீவு (ஸ்டெகாசரஸ் உட்பட), தங்கமணல் கடற்கரை என்று விரியும் கற்பனைவளம். மரவீடு, இரட்டைக் குழந்தைகள், மனைவி டயானா, வனக்காவல் படை என்று எல்லா துணைப்பாத்திரங்களும் மனதில் பதியும் வண்ணம் படைக்கப்பட்ட கதைகள், பறவையின் மேல் பயணம் செய்யும் குள்ளமான மனிதர்கள், கயிறு மனிதர்கள், கொள்ளைக் கழுகர் என்று அடுக்கடுக்காய் சாகஸங்கள் விரிகின்றன. கதைப்படி 22 ஆம் தலைமுறை வந்துவிட்டாலும் பெரும்பாலும் 21 ஆவது வேதாளரின் கதைகளே வெளியிடப்பட்டுள்ளன.

தற்கால பிரச்சனைகளான விமானக் கடத்தல், போதை மருந்து கடத்தல், தீவிரவாதம் போன்றவை களைக்கூட கதைக்கரு வாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். வேதாள மாயாத்மாவின் கதைத்தொடரைப் படித்த யாராலும் ஜீம்போ, ரெக்ஸ் கடீனா, வாலி மற்றும் அவருடைய வெள்ளைக் குதிரையான கேசரியை யும் மறக்க முடியாது. தீமை செய்பவர்களுக்குக் கபால முத்திரை, நன்மை செய்தவர்களுக்கு காக்கும் முத்திரை என்ற அருமையான கற்பனையும் இத்தொடரின் சிறப்பம்சங்களுள் ஒன்று. ரேமூர், வில்சன் மக்காய், சையது பேரி போன்ற உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் கைத்திறமையில் வேதாள மாயாத்மா வாசகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றார். 

பிற கதாநாயகர்கள்

பொதுவாகத் தமிழில் விஞ்ஞான கதைகளுக்கு வரவேற் பில்லை. அதையும் மீறி பிளாஷ்கார்டன், மாண்ட்ரெக் என்ற வீரர்களின் விஞ்ஞானக் கதைகள் இந்திரஜால் காமிக்ஸில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றன.

ரிப்கெர்பி, பஸ் ஸாயர் போன்ற தனியார் துப்பறியும் கதா நாயகர்களின் கதையில் வீரமும், யதார்த்தமும் விரவியிருக்கும். நீதி, நேர்மை, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் முயற்சி இருக்கும்.

group_370பிலிப் காரிகன் என்ற அமெரிக்க எஃப்.பி.ஐ உளவாளியின் கதைத்தொடரில் மர்மம், அரசியல் சாணக்கியங்கள், நம்பிக்கை துரோகம், அதிரடி என்று பல சிறப்பம்சங்கள் உண்டு.  அது போல், கெர்ரி டிரேக் என்ற அமெரிக்க போலீஸ் அதிகாரியின் கதைத் தொடரில் வீரமும், தீரமும் புத்திசாலித் தனமும் மிளிரும்.

பகதூர் இந்திய கதாநாயகன்.  ஒரு கொள்ளைக்காரனின் மகனான இவர், தன் தந்தையைக் கொன்ற போலீஸ்காரரைப் பழிவாங்க முற்பட்டு அவரால் திருத்தப்பட்டு கொள்ளைக் காரர்களுக்கு எதிராகப் போராடுபவர். அதிரடி ஆக்ஷன் கதைத்தொடர். வீரம்தான் இந்தத் தொடரின் ஜீவநாடி.

மொழிபெயர்ப்பும் கதை அம்சமும்

இந்திரஜால் காமிக்ஸின் மொழிபெயர்ப்பு சற்று கடினமான நடையில்தான் இருந்தது.  இருந்தாலும் தமிழின் இனிமையை ஆழ்ந்து படித்தால் உணரமுடியும். கதையின் தலைப்புகளே இந்திரஜால் காமிக்ஸின் தனித்தன்மையை உணர்த்தும்.

1.     பொன் மண் ஆசியில் மண்
2.     போக்கிரிகளின் புகலிடம்
3.     அடிமை விற்பனைக்கு இடி
4.     வீம்பன் ரோபன்
5.     பணம் படுத்தும் பாடு
6.     கள்ள வள்ளலின் துள்ளல்
7.     ஜீன்ஸ் பாவைக் கூத்து
8.     இன்னமொரு நெப்போலியன்
9.     அணுகுண்டு அடாவடியர்
10.    ராஜாளி ராஜாப்பயல்
11.    ரட்சகரா? ராட்சஸரா?
12.    பனித்துயில்
13.    ஆழ்கடல் அனர்த்தம்
14.    வஞ்சநெஞ்ச வனிதை
15.    பழங்கலை நகரில் பகல் மயக்கம்
16.    புதையல் தீவில் புரட்டுவேலை
17.    அதிபதி கொலை சதி
18.    வல்லாயுத சடுகுடு
19.    எட்டுக்கு குட்டு
20.    பாழான ஏழு
21.    அசுரத்தீனியன்
22.    பூதப்புரட்டு
23.    வருங்கால வாசிகள்
24.    செடிசாமி கெடுபிடி
25.    குழிபறித்த குறி
26.    கடலடி ரத்தின களவு நாடகம்
27.    கொள்ளி வைத்த கொள்ளை யர்

இந்திரஜால் காமிக்ஸில் பெரும்பாலும் kings feature படைப்புகளை வெளியிட்ட தால் அமெரிக்க மற்றும் மேற்கத் திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான அம்சங்கள் இருந்தன. காமிக்ஸில் கௌபாய் கலாச்சாரம் பிரிக்கமுடியாத ஒன்று. ஏனோ இந்திர ஜால் காமிக்ஸில் கௌபாய் கதைகள் இடம்பெறவேயில்லை. பகதூர் கதை களைக் கௌபாய் கதைவரிசையில் சேர்க்க என்மனம் இடம் தரவில்லை. போதை மருந்து, ஹிப்பி கலாச்சாரம், மேற்கத்திய வாழ்க்கை முறை, துப்பறிதல், அரசியல் தில்லுமுல்லுகள் போன்றவை சிறுவர்க ளும் புரிந்துகொள்ளும் முறையில் இருந்தன. அதிலும் குறிப்பாக போதை மருந்தின் தீமைகளைப் பகதூர் மற்றும் கெர்ரிடிரேக் கதைத் தொடர்கள் கையாண்டன. ஒரு போலீஸ் அதிகாரியின் தனிப்பட்ட விவகாரங்களும் வீரம், சோகம் மற்றும் அவர் களும் மனிதர்களே, அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதைக் கெர்ரிடிரேக் கதாபாத்திரத்தின் மூலம் உணரலாம். ‘அநீதியைக் கண்டால் பொங்க வேண்டும்’. ‘தட்டிக்கேட்க வேண்டும்’. ‘தனிமனித னுக்கும் சமூகப் பொறுப்பு உண்டு’ என்று உணர்த்தும் வகையில் கார்த், மைக்நமாடி, பகதூர் போன்ற வீரர்களின் கதைத்தொடர்கள் இருந்தன. இவர்களின் துப்பறியும் முறை அலாதியானது, யதார்த்தமானது. குறிப்பா கப் பஸ்சாயரின் கதைத்தொடரில் மனிதநேயம் சற்று தூக்க லாகவே இருக்கும். “தர்மமே வெல்லும்”, “வாய்மையே வலிமை” என்பதைப் பொதுவாக அனைத்துக் கதைகளும் உட்கருத்தாகக் கொண்டுள்ளன.

விளம்பரங்கள்

பற்பசை, சைக்கிள், பானங்கள், சேமிப்பு, பிஸ்கட்டுகள் போன்றவற்றிற்கான விளம்பரங்கள் இதில் இடம்பெற்றன. இந்த விளம்பரங்களும் காமிக்ஸ் வடிவில் தனித்தன்மையுடன் இருந்தன. சந்தாதாரர்களைச் சேர்க்க இலவசமாக காமிராக்கள் (CAMERA) கொடுக்கப்பட்டன. டிப்பே என்னும் வீரன் தோன்றும் விளம்பரம் ஒரு குட்டிக் கதை என்றே சொல்லலாம். கபில்தேவ், கவாஸ்கர் போன்ற அன்றைய முன்னணி கிரிக்கெட் வீரர்களைப் பயன்படுத்தி B.S.A. SLR சைக்கிளுக்குக்  கொடுக்கப்பட்ட விளம்பரங்களும், Fevicol-லுக்கு கொடுக்கப் பட்ட விளம்பரங்களும் மிகச் சிறப்பானவை.  Mystery on monster

Island  என்ற ஆங்கில திரைப் படத்திற்குகூட விளம்பரங்கள் வந்தன.

சிறப்பம்சங்கள்

முழுவண்ணத்தில் வெளியிடப்பட்டதே மிக முக்கியமான சிறப்பம்சமாகும். 200வது இதழாக வெளியிடப்பட்ட இராமாயணம் இதழில் ஹிந்தி மற்றும் தமிழில் வசனங்கள் அச்சிடப்பட்டன. இரண்டு மொழிகளை ஒரே இதழில் பயன்படுத்தி இதுவரை வேறு எந்த தமிழ் காமிக்ஸிலும் வெளி வந்ததாக எனக்குத் தெரியவில்லை. வசூல் சக்கரவர்த்தியும் கராத்தே மன்னனுமான புரூஸ்லீயின் கதை களும், வால்ட் டிஸ்னியின் ராப்ராய், விண்வெளி மனிதன், ராபின்ஹ§ட், புதையல் தீவு ஆகிய கதைகள் வெளியிட்டதும் சாதனை யன்றி வேறென்ன? மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம், குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளுள் இந்திர ஜால் காமிக்ஸ் வெளியானது. அதிக இதழ் களை வெளியிட்ட தும் இதுவே.

முடிவு

26 வருடங்கள் வெளியிட்டபின் இந்திரஜால் காமிக்ஸ் தன்னுடைய கடைசி இதழை (மலர் 26 இதழ் 33) 1989ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ஆம் தேதி வெளியிட்டது. ஏன் நின் றது, எதற்கு என்று ஆராய நான் விரும்பவில்லை. ஒரு காமிக்ஸ் சகாப்தம் முடிவுக்கு வந்தது என்று கனத்த மனதுடன் முடித் துக்கொள்கிறேன்

Pin It