Shwedagon Pagoda in Myanmarதென்கிழக்காசியாவிலே பௌத்த மதமானது சிறப்பாக நிலைபெற்ற ஒரு நாடாக பர்மா காணப்படுகின்றது. இதனுடைய பிரதான நகராகப் பாகன் காணப்பட்டது. இன்று மியன்மார் என்றும் அழைக்கப்படும் இந்நாடானது பௌத்த மதத்தின் மைய ஸ்தானமாக விளங்குகின்றது. ஆரம்பகால கிறிஸ்தவ சகாப்தத்தில் பௌத்தசமயம் பரவலான செல்வாக்கினைப் பெற்றுக் கொண்டது.

பாளி மொழியில் அமைந்த பௌத்த இலக்கியங்களைத் தன்னுடன் எடுத்துச் சென்ற புத்தகோசர் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அச்சமயத்தை அங்கு பரப்புரை செய்தமையை அவதானிக்க முடிகின்றது. பிற்பட்ட நூற்றாண்டுகளில் வடபர்மாவில் வஜ்ஜிராயன பௌத்தம் அறிமுகமாகியது. இங்கு இந்து சமயத்தினதும், சுதேச நாட்டார் வழிபாட்டுடனும் இணைந்த வகையில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றுக் காணப்பட்டது.

இந்நாட்டில் ஆரம்பத்தில் இந்துசமயம் பின்பற்றப்பட்டு வந்தது. கி.பி. 11ஆம் நூற்றாண்டளவில் அனுத்ரதன் என்னும் மன்னன் பர்மியநாட்டினை ஒன்றுபடுத்தி பிற சமயம் சார்ந்த அம்சங்களை மிகக் கடுமையாக அடக்கி தேரவாத பௌத்தத்தினை நிலைநாட்டினான்.

இவன் பௌத்த சமயம் சார்ந்த புனித சின்னங்களைப் பேணுவதிலும், அச்சமயம் சார்ந்த இலக்கியங்களைச் சேகரிப்பதிலும் அதீத அக்கறை காட்டினான். இம் மன்னனுடைய காலத்தில் பௌத்த சமயம் அரச சமயமாகக் கொண்டு வரப்பட்டதையடுத்து பர்மா ஒரு பௌத்த நாடாக மாறுவதற்கு வழிவகுக்கப்பட்டதென்று கூறலாம்.

இங்கு காணப்படும் பௌத்த மதக் கோயில்களான பகோடாக்கள் பௌத்தரின் சிறப்பினையும், உறுதிப்பாட்டினையும் வெளிப்படுத்துவனவாக காணப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் பகோடாக்கள் அமைக்கப்பட்டிருந்தமை பர்மியர்கள் பௌத்த மதத்தின் மீது கொண்டிருக்கும் அபிமானத்தைக் காட்டுவதாக உள்ளது.

பர்மாவின் தலைநகரான ரங்கூனிலுள்ள புத்தரின் தலைமுடி வைத்துக் கட்டப்பட்ட ஸ்வீடகான் பகோடா உலகின் மிகப்பெரிய பௌத்தக் கோயிலாகப் போற்றப்படுகின்றது. பகோடாவின் மேல் காணப்படும் கோபுரம் சிறப்பு வாய்ந்ததாகும்.

உலகில் வேறெங்கும் இதுபோல இல்லை என கிப்பளிங் என்ற அறிஞர் கூறியுள்ளார். இந்த பகோடாவைச் சூழக் காணப்படும் சுமார் 500 தங்கத் தூபங்கள் புத்தரைப் பின்பற்றிய சிறப்பு வாய்ந்த சீடர்களைக் சுட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளன. இது ரன்கூன் நகரின் ஆத்மா என்று வர்ணிக்கப்படுகின்றது.

பர்மிய நாட்டில் காணப்படும் பௌத்தம் சார்ந்த கட்டடக்கலையை அவதானிக்கின்றபோது அந்நாடு பல நாடுகளின் கலைக்கூறுகளை உள்வாங்கியிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. பாகனிலுள்ள மகாபோதியானது புத்தகாயாவிலுள்ள புனிதத்தலத்தைப் பிரதியாகக் கொண்டிருப்பதை அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கென்யா ஏரிக்கு வடக்கே சற்றுத் தொலைவில் காபாஆயி பகோடா காணப்படுகின்றது. இது உலக அமைதிக்காகக் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது.

இதனைவிட இங்குள்ள மகாமாஸன குகா என்ற ஒரு குகையிலே புத்தரின் நினைவுவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. பழைய காலப் பெருநகரிலே மாபெரும் சயனநிலை புத்தர் சிலையொன்று உள்ளது. இது 10 அடி நீளமுடையது. இங்கு ஆட்சி செய்த ஸின்ஸாடி என்ற அரசியின் காலத்திலே தர்மஸேடி, தர்மபாரா என்ற இரண்டு பௌத்த குருமார்கள் தென்னிந்தியாவிலிருந்து பர்மா வந்தனர். அரசி இவர்களில் ஒருவரை மன்னனாக்கியதன் பின்னர் பௌத்த மதத்திற்கு மாறிக் துறவி வாழ்க்கை வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.

சற்றுப் பிற்பட்ட காலத்திலே பர்மியப் பேரரசிற்கு ஆபத்து ஏற்பட்ட காலத்தில் பௌத்த சமயத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டமையால் தர்மகோடி மன்னன் 22 பிக்குகளை இலங்கைக்கு அனுப்பி பௌத்த மதம் பற்றிய வேதங்களைப் பயின்று வருவதற்காக தூதனுப்பினான்.

இலங்கையின் கல்யாணி நதிக்கரையிலுள்ள ஒரு பழம் பெரும் கோயிலின் மடத்தில் இவர்கள் வேதங்களைக் கற்றனர். பின்நாடு திரும்பி பௌத்த மதத்தினைப் பரப்பினர். இதன் ஞாபகார்த்தமாக தர்மகோடி மன்னன் கல்யாணிஸிமா என்ற ஒரு பெரிய பௌத்த மடத்தினைக் கட்டினான். இதற்கு அருகே உள்ள பாதையில் எவ்வாறு பௌத்த மதம் பரவியது என்ற செய்தி சிற்பமாகச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதைவிடப் பெருநகரில் 4கி.மீ தொலைவிலே காணப்படுகின்ற காயக்பன் பகோடா சிறப்பு வாய்ந்ததாகும். இது 147 அடி மேல் தர்மகோடி மன்னனால் கட்டப்பட்டது. இங்கு 98 அடி உயரமான 4 புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. மேலும் திஸ்ஸா என்ற மன்னன் மலைகள் மீது வியக்கத்தக்க கோயில்களைக் கட்டினான் என்ற கூறப்படுகின்றது. இவற்றின் அருகே காடுகள் காணப்படுகின்றது.

இத்துடன் இளைப்பாறும் இடங்கள், தெளிவான நீருற்றுக்கள், சிறுசிறு குடியிருப்புக்கள் என்பனவும் இங்கே காணப்படுகின்றன. இவை கோயிலின் சிறப்பை மேலும் மெருகூட்டிக் காட்டுகின்றன. மேல் பர்மாவின் தலைநகரான மாண்டலே பௌத்த கலாசார மையமாகத் தென்கிழக்காசியாவிலே போற்றப்படுகின்றது. கௌதம புத்தர் தன் சீடருடன் மாண்டலே மலைக்கு வந்து போனார் என்று கூறப்படுகின்றது.

இங்கு ஒரு பௌத்த நிலையத்தினைத் தொடங்கவும், ஒரு பௌத்தப் பள்ளியினை நிறுவவும் எண்ணினார் என்றும் அதனை மன்னன் நிறைவேற்றியதாகவும் அறியமுடிகின்றது. இவனால் தங்க நகரம் என்ற பெயரிலே ஒரு மாளிகையும் அமைக்கப்பட்டது. மாண்டலே நகருக்கு 3 கி.மீ தொலைவிலே மகதாமுனி என்ற ஒரு பகோடாவும் அமைந்துள்ளது.

இன்றுவரை பர்மாவில் புனித இடமாக ஸகாயில் கருதப்படுகின்றது. பௌத்த மத நம்பிக்கைகள் வாழும் இடமாக இது கூறப்படுகின்றது. எந்தப் புரட்சியும் இந்த நகரினது சமயத்தினைப் பாதிக்கவில்லை. இந்நகர் 600 பௌத்த மடங்களைக் கொண்டுள்ளது. மேலும் 5600க்கு மேற்பட்ட பௌத்த குருமார்கள் இங்கு வசிக்கின்றனர் என்றும் அறிந்துகொள்ள முடிகின்றது.

பர்மியப் பண்பாட்டு வளர்ச்சியின் பின்னணியில் தேரவாத பௌத்தமதம் நிலைத்து நின்று செல்வாக்குச் செலுத்தி வந்திருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் அதிகளவில் கிடைத்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. ஐராவதி நதிப் பள்ளத்தாக்கும் அதற்குத் தென்கிழக்கேயுள்ள சல்வீன் நதிக் கழிமுகப் பரப்பும் பர்மாவின் பௌத்தக் கட்டிடக்கலை வளர்ச்சியின் முக்கிய தளமாக விளங்கியது.

பருவக்காற்றுக் காலநிலைக்குரிய வாழ்விடப் பிரதேசமாக தென்கிழக்காசியா காணப்படுவதன் பின்னணியில் பர்மாவில் தோற்றுவிக்கப்பட்ட பௌத்தக் கட்டிடங்களின் மேற்கட்டுமானமும், கூரையமைப்பும் தனித்துவமான பண்புகளைக் கொண்டு விளங்குகின்றன. அத்துடன் வடகிழக்கிந்திய கட்டிடக்கலைச் செல்வாக்கினையும் அவை பிரதிபலித்து நிற்பதனையும் காணக்கூடியதாக உள்ளது.

பர்மாவில் கி.பி.1056ஆம் ஆண்டு அரச ஆதரவுடன் தேரவாத பௌத்த சமயமானது மக்கள் மதமாக்கப்பட்டது. பர்மாவின் பௌத்தக் கட்டிடக்கலை வரலாற்றில் முதலில் சிறப்பிடம் பெறுவது மன்னன் அனவரதன் என்பவனால் கட்டுவிக்கப்பட்ட ஸ்தூபிகளாகும். இம்மன்னனது ஆட்சிப்பிரதேசத்தின் தலைநகரான ப்யூ நகரிலே அந்த ஸ்தூபிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நகரில் உள்ள ஒரு மையமான ஸ்ரீஸேத்திரம் என்று அழைக்கப்பட்ட புனிதத்தலம் சுற்றிவர பாதுகாப்புச் சுவர் அமைக்கப்பட்ட நிலையில் ஒரு பெரும் கட்டிடத் தொகுதியைக் கொண்டிருந்தது. இக்கட்டிடத்தொகுதியினுள் மூன்று உயர்ந்த ஸ்தூபிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மிகவும் உயரமான ஸ்தூபி போபோ - ஹியி ஆகும்.

அதன் உயரம் 150 அடியாகும்.  உருளை வடிவில் செங்கட்டியினால் அமைக்கப்பட்ட இந்த ஸ்தூபி அடித்தளத்தில் வட்டவடிவிலான படிக்கட்டுக்களை உடையததாகவும், கவிழ்ந்த கூம்பகக் கூர்நுனிக் கோபுரம் போன்ற கூரையமைப்பினைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்தூபியைச் சுற்றி குறிப்பிட்ட எண்ணிக்கையான சிறிய சிறிய தோற்றத்தில், செங்கட்டியினால் அமைக்கப்பெற்ற வில்வளைவுக் கூரையையுடைய கோயில்களும் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் ஸ்ரீ ஸேத்திரம் என்றழைக்கப்பட்ட புனிதத் தலம் தேரவாத பௌத்த சமயத்தினைத் தழுவிய கட்டிடத் தொகுதியாக விளங்கியது.

வடகிழக்கிந்தியாவில் பீகார் மாநிலத்தில் காணப்படும் ஸ்தூபி அமைப்புமுறையை ஸ்ரீஸேத்திரக் கட்டிடத்தொகுதி கொண்டு விளங்குவதனையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆனால் இக்குறிப்பிட்ட ஸ்தூபிகளின் உச்சிமுகடு பர்மியர்களின் கட்டிடக் கலையும் சாயலைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகன் அரசின் இறுதிக்கட்டத்தில் அனவரதனுடைய தேரவாதப் பௌத்த சமயத்துக்குரிய கட்டிடக்கலைப் பங்களிப்புக்கள் குறிப்பிடத்தக்களவில் ஆற்றப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிகின்றது. கட்டிடக்கலை ரீதியிலும், சிற்ப மற்றும் ஒவியக்கலையடிப்படையிலும் இம்  மன்னனுடைய காலம் மிகச் சிறப்புப் பெற்றதாக உள்ளது.

செங்கல்லும் அரைச் சாந்துமே கட்டிடம் அமைப்பதற்குரிய மூலப்பொருளாகக் காணப்பட்டன. ஏறத்தாழ 200 வருடங்களுக்கு மேலாக பாகன் அரசிலே தேரவாத பௌத்த மதத்திற்குரிய கட்டிட அமைப்புகள் சீரும் சிறப்புடனும் காணப்பட்டன.

பர்மா மூங்கில் தாவரத்தினை இயற்கைத் தாவரமாகக் கொண்டிருந்ததன் அடிப்படையிலே பௌத்த கட்டிடக்கலை முறைகளிலும் மூங்கில் முக்கிய மூலப்பொருளாய் திகழ்ந்தது. நகரத்தினுடைய மிக நீண்ட பாதுகாப்புச் சுவரின் அடித்தளத்தில் செங்கட்டியினால் அத்திவாரமிடப்பட்டதாகவும் மேற்பகுதி மூங்கில் கழியினால் உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

பாகளிலுள்ள பௌத்தக் கட்டிடக்கலைமரபிற்குரிய கட்டிடத் தொகுதியினுள் மூன்று இங்கு குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. ஸரபா வாயிலை முகப்பில் கொண்டதாக அமைக்கப்பட்ட இரண்டு தேவாலயங்களும், பிட்டகட்டை என்று அழைக்கப்படும் விகாரை வளாகத்திற்குரிய நூலகமும் ஆகும். ஸரபா வாயில் அமைப்பானது பர்மியர்களுடைய சுதேசிய கட்டிடக்கலை மரபாகும்.

பர்மாவிலுள்ள கட்டிடக்கலை மரபில் ஸரபாவாயில் அமைப்பு ஒரு பொதுவான கூறாக அடையாளப்படுத்தும் அலகாக அமைந்துள்ளது. தட்டையான தூணைப் போன்ற அமைப்பு, சுவர்களின் மேற்பகுதியில் சுற்றிவர அமைக்கப்பட்டுள்ள திரண்ட அச்சுரு ஆகியன பர்மியக் கட்டிடக்கலை மரபினை அடையாளப்படுத்தும் அலகுகளாகத் திகழ்கின்றன.

ஸரபா வாயில்களின் இருபக்கங்களிலும் நட் என அழைக்கப்படும் வாயிற்காவலுக்குரிய தேவதைகள் அமர்த்தப்பட்டிருப்பதைக் காண முடியும். அவை நகரைக் காக்கும் தேவதைகளாகப் பர்மியரால் வழிபடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாகனிலுள்ள பிட்டகட்டை என அழைக்கப்பட்ட விகாரைத் தொகுதிக்குரிய நூலகம் அதன் அமைப்பு முறை, கூரையமைப்பு தனித்துவமான கட்டிடக்கலை முறையாக அதாவது பர்மியமுறை என அடையாளம் காணத்தக்க வகையில் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. சற்சதுரமான அடித்தளத்தினையுடைய நூலகமானது ஜந்து தட்டுக்களையுடைய கூரையமைப்பினை சாய்கோண ஒழுங்கில் பிரமிட்முறையில் கொண்டிருப்பதனைக் காணலாம்.

அதன் உச்சியில் கோபுரக் கூம்பு அமைக்கப்பட்டுள்ளது. கூரையிலுள்ள ஐந்து தட்டுக்களின் மூலைவிட்டத்திலும் தட்டுக்களைக் குறிக்கும் கபோதப் பரப்பின் நடுவண்மையத்திலும் “எரிகின்ற தீ நாக்குகள்” போன்று இந்நூலகத்தின் கூரையின் தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எண்ணிக்கையில் அதிகமானதும், மிக முக்கியத்துவம் வாய்ந்ததுமான பௌத்தக் கட்டிட வகையாக பாகனில் காணப்படுவது சேத்தியங்களாகும். இவற்றிற்கு ஒரு பரிணாம வளர்ச்சியும் வரலாறும் இணைந்து காணப்படுகிறது.

சைத்தியம் என்பது ஸ்தூபியின் வடிவமைப்பினை அடிப்படையாகக் கொண்டாலும் மிகவும் உண்மையான(புத்தரின்) போதனைகளை வெளிப்படுத்தும் ஒரு வடிவமாகும். பர்மாவில் பகோடா என்றழைக்கப்பட்ட கோவில்கள் புத்தருடைய திருவுருவங்களுடன் இணையப் பெற்ற வகையில் நேரடியாக அறுதியான நிர்வாண வடிவமாகக் கருதப்பட்டன.

பர்மாவிலுள்ள சைத்தியங்களின் வரிசையில் பாகனிலுள்ள புப்பாய சைத்தியம், லோகானந்த சைத்தியம், ஸ்வீஸன்டௌ சைத்தியம், செயின்னிற் நைய்மா சைத்தியம், ஆனந்தா சைத்தியம், கௌடிடாவ்பலின் சைத்தியம் என்பன தேரவாத பௌத்த மதத்திற்குரிய கட்டிடத் தொகுதிகளாக பரிணாமமடைந்து வளர்ச்சி பெற்றுச் சென்றமை அவதானிக்கமுடிகிறது. இவை ஒவ்வொன்றினதும் கட்டிடக்கலை ரீதியான நுட்பங்கள் தனித்தனியாக ஆராயப்பட வேண்டியவையாகும்.

கியாசித்தன் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து பல புத்தசமயத்தவர்களும், வைணவர்களும் பர்மாவில் குடியேறினர். இவ் அரசன் எட்டு இந்திய பௌத்தத் துறவிகளுக்கு மூன்று மாத காலம் தன் கைகளாலேயே உணவு படைத்து உபசரித்ததாகச் சொல்லப்படுகிறது. உதயகிரி என்னும் இடத்தில் உள்ள ஆனந்தா கோயிலைப் பற்றி பெருமையை கியசித்தனிடம் பௌத்தத் துறவிகள் கூறினார்கள். தன்னுடைய மனக்கண்ணால் அக்கோயிலை கற்பனை செய்து பார்த்து அம்மன்னன் மகிழ்ந்தான்.

நாளடைவில் அத்தகைய கோயில் ஒன்றை தன் நாட்டில் அமைக்க எண்ணி இந்திய சிற்பிகளை வரவழைத்து உள்ளத்தில் உருவெடுத்த அந்தக் கோயிலை கல்லில் கலைக் கோயிலாக அமைக்கச் செய்தார்.

ஆனந்தாவின் அழகுமிகு ஆலயம் குப்தர் காலத்திய அழகையும் நேர்த்தியையும் பர்மிய மண்ணில் புத்தொளி விட்டு பிரகாசிக்கச் செய்கிறது என்று பல அறிஞர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இக்காலக் கலை வல்லுனர்கள் இதனை ஒப்புக்கொள்ள மறுத்தனர். அதில் பர்மிய நாட்டுக் கலைப்பண்பும் விரிவான அணி அழகும் இணைந்தும் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி தென்னிந்திய கட்டமைப்பினை ஒத்ததாகக் காணப்படுகின்றது.

இம் மன்னன் வேறுபல கோயில்களையும் பர்மாவில் கட்டியுள்ளான். புரோம் நகரிலுள்ள சுவேசந்தா கோயிலில் காணப்படும் மோன் கல்வெட்டு புத்தகயாவில் உள்ள கோயிலை புதுப்பித்த செய்தியைக் கூறுகிறது. இஸ்லாமியர்களின் கொடுமைகளைப் பொறுக்கமுடியாத பௌத்தத் துறவிகள் பலர் கிழக்கு இந்தியாவிலிருந்து பர்மாவுக்கு ஓடி வந்தனர். அவர்கள் பால அரச மரபினரின் கலை பண்புகளையும், சிற்ப முறைகளையும் கொண்டுவந்து பர்மாவில் புகுத்தினர்.

களிமண்பட்டயங்களிலும், வெள்ளிப்பாத்திரங்களிலும், வெண்கலச்சிலைகளிலும் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களாலும் பழைய புரோமின் ஈனயான பௌத்த சமயத்தோடு, மகாயான பௌத்த சமயமும் செல்வாக்குப் பெற்று இருந்தமையை அறிந்து கொள்ளமுடிகிறது.

இதனை அங்கு கிடைத்துள்ள சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும் உறுதிப்படுத்துகின்றன. வெள்ளியிலான பேழை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பர்மாவில் கண்டெடுத்தனர். அப்பேழை கி.பி. ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இப்பேழையில் புத்தரின் திருஉருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வடிவம் ஈனயான பௌத்த சமயத்துக்கு உரிய வடிவமாகும்.

பொதுவாக பர்மா தேசமானது தென்னிந்தியா, இலங்கை நாடுகளுடன் பௌத்த - இந்து மதச் செல்வாக்கு அம்சங்களை நேரடியாகப் பெற்றுக்கொண்டமைக்கு அப்பால் இப்பிராந்தியத்தின் வாணிபத்தில் பெரும் பங்காற்றியிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது. இதனால் காலத்துக்குக் காலம் பல்வேறு வணிகக்கணங்கள் பர்மாவில் நிலைகொண்டிருந்து பௌத்த இந்துக்கோயில்களை அமைத்து வாணிபக் கிராமங்களை உருவாக்கிச் சென்றிருப்பதனைக் காணமுடிகின்றது.

பல்லவர் காலத்தில் வைணவமும், பௌத்தமும் பர்மாதேசத்தில் சென்று தழைத்து கட்டிட–சிற்பக்கலை மரபுகளை வளர்த்தெடுத்து விட்டிருந்தமையைக் காண்கின்றோம். கடலாதிக்கம் கொண்ட சோழப்பேரரசர்களது ஆதிக்கத்தின் கீழ் நேரடியான அரசியல் கொள்கை வகுப்புத் திட்டத்திற்குள் பர்மாவும் இணைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டமையைக் காணமுடிகின்றது. அவ்வழியே தென்னிந்திய இந்து பௌத்தக் கட்டிடக் கலைமரபுகள் பர்மாவில் நிலைகொண்டு அக்கலை மரபுகளுக்கு அணிசேர்த்தன.

- தனுஷ் மோகனதாசன்

Pin It