சாதியமைப்பு முறையை உலகின் ஒவ்வொரு அறிஞர்களும் வெவ்வேறு கோணத்தில் பார்த்துள்ளார்கள். அதன் வழி போக்கில் பயனிப்பவர்கள் அனைவரும் அவ்வாறே பார்க்கிறார்கள். சாதியமைப்பு முறை பல கோணங்களில் பார்ப்பதற்கான காரணிகளையும் உள்ளடக்கிய ஒரு மிக பெரிய சிக்கல் வாய்ந்ததாகவே உள்ளது என்பதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தனது ஆய்வின் மூலம் சொல்கிறார்.

santhiyur wall

                சாதியமைப்பு முறை நான்கு வர்ணங்களாக உள்ளது. சாதியமைப்பு முறைக்கு வெளியே தீண்டாமைக் கொடுமைகள் உள்ளிட்ட சமுக புறக்கணிப்பு மற்றும் ஒடுக்குமுறைகளை அனுபவிப்பவர்களை அவ்வர்ணங்கள் என்றும் குறிப்பிட்டு இந்தியா இரட்டை இந்தியாவாக உள்ளது. மேலும் இந்த சாதிய படிநிலை மேலும் விரிவடைந்து இறுக்கமாக அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறிப்பிடுகிறார்.

சந்தையூர் கிராமத்தில் பறையர் - அருந்ததியர் என்ற இரு சாதிகளும் தீண்டத்தகாதவர்கள் என்று அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள பிரிவுகளில் உள்ளனர். இரு பிரிவுகளிடையே வாழ்வியல் முரண்கள் இயல்பாக இருக்கலாம். ஆனால் தீண்டாமைக்குள் தீண்டாமை என்ற கருத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியது. சந்தையூரில் தீண்டாமை வடிவமாக ஒரு கோவிலின் சுற்றுச்சுவர் அடையாளம் காட்டப்படுகிறது. இதற்காக இரு தரப்புக்கும் மோதல்கள், வழக்குகள், சுவர் இடிக்க நீதிமன்ற ஆணை, சுவர் இடிக்க தடை என பிரச்சனைகளும் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தப் பிரச்சனையை முடிக்க தலையிட்ட அரசியல் இயக்கங்களின் பேச்சுவார்த்தையிலும் முடிவு ஏதும் ஏற்படாத நிலையே தொடர்கிறது.

இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர ஏதேனும் வாய்ப்புகள் கிடைக்குமா? என்றும், சந்தையூரில் வாழும் மக்களின் கல்வி, தொழில், வாழ்நிலை எவ்வகையில் உள்ளது என்றும் உண்மை நிலையை அறிய ஒரு ஆய்வு குழுவை ஏற்பாடு செய்யலாம் என திட்டமிட்டு முருகன் கண்ணா (சமுகசெயற்பட்டாளர்) , விவேக் வீரசாகர் (முனைவர்பட்ட ஆய்வாளர்), மனோகரன் (வழக்கறிஞர்), சோயா காஸ்ட்ரோ (ஆய்வு மாணவி) எழுத்தாளர். பெரு.பழனிச்சாமி, ராகுல் காந்தி (பத்திரிக்கையாளர்), என்ற 6 பேர் கொண்ட குழு ஆய்வுக்காக சந்தையூர் சென்றோம். எங்கள் வாகனம் ஊருக்குள்ளே வந்தவுடன் பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினர் எங்களை விசாரித்து விட்டு அனுமதி தர மறுத்தனர். பின்னர் மேல் அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்தவுடன் அனுமதித்தனர்.

சந்தையூர் கிராமம்:

                சந்தையூர் மதுரை மாவட்டம் பேரையூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் மறவர், நாயக்கர், செட்டியார், பறையர், அருந்ததியர், முத்தரயர், வண்ணார், பிள்ளைமார் போன்ற சாதிகள் உள்ளடக்கிய 2000-க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளது. இங்கு ஒரு ஆரம்ப பள்ளி, 2 அங்கன்வாடி மையங்கள், ஒரு சமுதாயக் கூடம் (மண்டபம்) ஒவ்வொரு சாதிக்கு தனித்தனி கலையரங்கங்கள் என கட்டப்பட்டுள்ளது.

இந்திரா காலனி:

                சந்தையூர், இந்திரா காலனி குடியிருப்பு பகுதியில் மொத்தம் 1 ஏக்கர் 60 செண்ட் நிலம் உள்ளது. இதில் அருந்ததியர், பறையர் சமூகத்தினர் வாழ்கின்றார்கள். இவர்களில் காமராஜர் காலத்தில் 7 பறையர் பிரிவு குடும்பங்களுக்கும் 14 அருந்ததியர் பிரிவு குடும்பங்களுக்கும் தலா 5 செண்ட் நிலம் வழங்கியுள்ளனர். மீதமிருந்த நிலம் பொது பயன்பாட்டிற்கான புறம்போக்காக இருந்துள்ளது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது பட்டா இருந்தவர்களுக்கு காலனி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. கால ஓட்டத்தில் இனவிருத்தியின் காரணமாக பறையர் சமூகம் 30 குடும்பங்களும் அருந்ததியர் சமூகம் 70 குடும்பங்களும் உள்ளனர். இதில் இரு கலையரங்கங்கள் அருந்ததியர்களுக்கு 1, பறையர்களுக்கு 1 எனத் தனித்தனியாக உள்ளது. அருந்ததியர்கள் காளியம்மன் மற்றும் விநாயகர் என இரண்டு கோவிலை பராமரிக்கிறார்கள். பறையர்கள் இராஜகாளியம்மன் என்ற ஒரு கோவிலை பராமரிக்கிறார்கள்.

கல்வி, தொழில், பொருளாதார நிலை:

                பறையர் சமுதாயத்தை சேர்ந்தவர்களின் பெரும்பாலானோர் உயர்கல்வி பயின்றவர்களாகவும் அரசு ஊழியர், ஆசிரியர் (அரசு) என்று 10 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். அரசுப் பணி கிடைக்காதவர்கள் ஏதேனும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். கல்வி பயிலாத சிலர் சித்தாள், தோட்டவேலை போன்ற கூலி வேலைகளுக்கு செல்கிறார்கள். தோட்ட வேலைக்குச் செல்பவர்கள் மறவர் சமுகத்தினர் தோட்டங்களில் வேலைக்கு செல்கிறார்கள். இன்னும் சிலர் சொந்தமாக நிலம் வைத்துள்ளதால் தங்களது நிலத்தில் விவசாயம் செய்து வாழ்கிறார்கள். இதில் குறிப்பாக படித்த இளைஞர்களும் வேலை வாய்ப்புகளை தேடி அலையாமல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

                அருந்ததியர்கள் பகுதியில் 4 பேர் மட்டுமே உயர்கல்வி பயின்றவர்கள். தற்போது 10 பேர் பொறியியல், ஆர்ட்ஸ் போன்ற உயர்கல்வி பயின்று வருகிறார்கள். பெரும்பாலான மக்கள் கல்வியறிவற்றவர்களாக உள்ளனர். அரசு பணியில் ஒருவர் கூட இல்லை. அருந்ததியர் மக்களின் 9 பேர் தோட்டி வேலைக்கு செல்கிறார்கள் மற்றவர்கள் பட்டாசு கம்பெனி, தோட்ட வேலை, வெளி மாநில கூலி வேலை, ஆடு வளர்;ப்பது போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

                ஆரம்ப காலத்தில் பறையர் சமூகமும், அருந்ததியர் சமூகம் தற்போது செய்யும் தோட்டி வேலை பிணம் தூக்குதல், இழவு சொல்லி போதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். கல்வியில் ஏற்பட்ட மாற்றத்தால் இது போன்ற தொழில்களை விட்டுவிட்டு பிற தொழில்களை நோக்கி நகர்ந்துள்ளனர் எனலாம். சந்தையூரில் பறையர் சமூகத்தை அருந்ததியர் சமூகத்தோடு தற்போது ஒப்பிடுகையில் பறையர் சமூகம் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் கண்டவர்களாகவும் தொழில்ரீதியாக மாறுபட்டவர்களாகவும் உள்ளனர்.

வாழ்வியல் முரண்கள்:

மாட்டுக்கறி இரு சமூகமும் சாப்பிடுவதாக சொல்கிறார்கள். பறையர் சமூக விழாக்காலங்களிலும், குடும்ப நிகழ்வுகளிலும் அருந்ததியர்கள் உணவு உண்ணும் பழக்கம் வைத்துள்ளனர். ஆனால் அருந்ததியர் சமூக விழாக்களிலும், குடும்ப நிகழ்வுகளிலும் பறையர் சமூக மக்களில் அருந்ததியர்களோடு மிகவும் இணக்கமாக இருக்கும் சிலர் மட்டுமே உணவு உண்கிறார்கள், மற்றவர்கள் உணவு உண்பதில்லை என்பதை இரு பிரிவினரும் சொல்கிறார்கள். அருந்ததியர்கள் பயன்பாட்டில் இருக்கும் காளியம்மன், விநாயகர் கோவில்களுக்கு எந்த சுற்று சுவரும் இல்லை. ஆனால் பறையர் சமூக பயன்பாட்டில் இருக்கும் இராஜகாளியம்மன் கோவிலைச் சுற்றி முதலில் முள்வேலி போடப்பட்டு சிதிலமடைந்ததால் பின்னர் கம்பிவேலி போடப்பட்டள்ளது. இதற்கு அருந்ததியர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 2012-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியாளராக இருந்த உ.சகாயத்திடம் மனு கொடுத்துள்ளனர். இதனால் முள்வேலி அகற்றப்பட்டுள்ளது.

                எப்போதும் சிறியதாக இரு சமூகங்களுக்கிடையே ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாகப் பெரியவர்கள் ஒன்று கூடிப்பேசி தீர்த்துக் கொண்டு இருந்துள்ளனர். ஆனால் கம்பிவேலியை அகற்றிய பின்னர் இரு சமூகங்களுக்கிடையே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து சின்னச் சின்ன சண்டைகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்துள்ளது. சில நேரங்களில் கொஞ்சம் பெரியதாக நடந்து காவல்துறை வரை சென்று வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழலில் பறையர் தரப்பில் 3 பேர் மீதும் அருந்ததியர் தரப்பில் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு; ஏற்பட்ட தகராரில் பறையர் தரப்பில் 12 பேர் மீதும், அருந்ததியர் தரப்பில் 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

                2015-ஆம் ஆண்டு மே மாதம் கீழ்ப்பட்டி ஜமீன்தார் ஜனார்த்தனபாண்டியன் மகன் விஜய வெங்கடேஷ் பாண்டியன் முன்னிலையில் பறையர் சமூக பயன்பாட்டில் இருக்கும் இராஜகாளியம்மன் கோவிலைச் சுற்றி இருக்கும் இடத்தில் சுற்றுச் சுவர் கட்ட பறையர் - அருந்ததியர் இரு சமூகத்தினரில் சிலரால் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டு சுவர் கட்டப்பட்டுள்ளது. சுவர் கட்டிய பின்னர் அருந்தியர் தரப்பு மக்களை அந்த வழியாக செல்வதற்கு பறையர் சமூக மக்கள் இடையூறு செய்துள்ளனர். அரசு நலதிட்டங்களான சமுதாய கூடம், (மண்டபம்) பொது கழிப்பிடம் போன்றவைகள் எதுவும் சுவர் கட்டியதால் தான் வரவில்லை. எனவே பொதுப் பயன்பாட்டில் இருக்கும் இந்த இடத்தில் எப்படி சுவர் கட்டலாம் என்று அருந்ததியர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சுவரை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர், பின்னர் வழக்கும் தொடர்ந்தனர்.

                21.08.2017-ல் (W.P. (MD) No. 15363 OF 2017) கோவில் சுற்றுச் சுவரை ஆக்கிரமிப்பு சுவர் என்று கூறி சுவரை நான்கு மாதங்களில் இடிக்க மதுரை நீதி மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் இதுவரை சுவர் இடிக்கப்படவில்லை. அருந்ததியர் தரப்பினர் கோவில் சுற்றுச் சுவரை தீண்டாமைச் சுவர் என்றும் பறையர் தரப்பினர் இது தீண்டாமை சுவரல்ல எங்கள் கோவில் பாதுகாப்புச் சுற்றுச் சுவர் என்றும் கூறி இடிக்க விடமாட்டோம் என்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் சுவரை இன்னும் இடிக்க முடியாத நிலை நீடிக்கிறது.

தீண்டாமைச் சுவரா? ஆக்கிரமிப்புச் சுவரா?

                சாதி இந்துகளின் தீண்டாமை கொடுமைகளுக்கு உள்ளடக்கப்படும். பறையர் - அருந்ததியர் இரு சமூகங்களிடையே சந்தையூர் கிராமத்தில் ஏற்பட்டுள்ள இப்பிரச்சனை போன்று தமிழகத்தின் அட்டவணை சாதிகளுக்கிடையே பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ளது. சந்தையூர் கிராமத்தில் பறையர் - அருந்ததியர் இரு சாதிகளுக்கும் பயன்பாட்டில் இருந்த புறம்போக்கு நிலத்தை பறையர் சமூகம் மட்டும் ஆக்கிரமிப்பு செய்து தங்களுக்கானதாக மாற்றும் நோக்கில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. சந்தையூர் பறையர் சமூகம் கோவில் சுற்றுச் சுவர் கட்டுவதில் இருந்து ஒட்டு மொத்தமாக அனைத்து நடவடிக்கைகளும் கல்வி, பொருளாதாரம் மற்றும் சாதிய படிநிலையின் தாக்கமாகவே பார்க்க முடிகிறது.

இது போன்ற பிரச்சனைகளை புரட்சியாளர் அம்பேத்கர் சொல்வது போன்று சாதி படிநிலை மேலும் விரிவடைந்து பரிணாம வளர்ச்சியடையும் போக்காகவே பார்க்கலாம். ஆனால் தற்போதுள்ள சூழலில் இந்த சுவரை தீண்டாமை சுவர் என்று சொல்வதற்கான காரணிகள் ஏதும் இல்லை. ஆதிக்க போக்கின் காரணமாக உருவான ஆக்கிரமிப்பு சுவர் என்று மட்டுமே சொல்ல முடியும். இதுபோன்ற ஆதிக்க நிலை இனி வருங்காலங்களில் தொடருமானால் இது போன்ற சுவர்கள் தீண்டாமைச் சுவர் என்ற வடிவம் பெறவும் வாய்ப்பு உள்ளது. எனவே சுவரைத் தகர்ப்பதே நல்லதொரு தீர்வாகும்.

சாதி - தீண்டாமை:

                சந்தையூர் முத்தாலம்மன் கோவில் திருவிழாவிற்கு அனைத்து சாதியினரும் வரி கொடுக்கிறார்கள். ஆனால் சந்தையூர் முத்தாலம்மன் கோவிலுக்குள் பறையர் - அருந்ததியர் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சந்தையூர் முத்தாலம்மன் பறையர்களின் மூதாதையர் என்பதால் பறையர் சமூக மக்கள் திருவிழா காலங்களில் கோவில் வாசல் வரை சென்று கலசம் கொடுத்த பின்னரே திருவிழா நடைபெறுகிறது. கடந்த திருவிழாவில் கலசம் கொடுக்கும் போது வாசலில் ஏரி நின்றதற்காக ஒரு மூதாட்டி தள்ளி விடப்பட்டுள்ளார்.

இரட்டை டம்பளர் :

                சந்தையூரில் உள்ள டீ கடைகளில் பறையர் - அருந்ததியர் மக்கள் சென்றால் பிளாஸ்டிக் கப்பிலும் சாதி இந்துக்களுக்கு கண்ணாடி டம்பளரிலும் டீ கொடுக்கும் வழக்கம் உள்ளது.

                ஹோட்டல்களில் பறையர் - அருந்ததியர் இருவருக்கும் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. பறையர் சமூக மக்கள் சாதி தீண்டாமையை எதிர்க்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அருந்ததியர் தரப்பு மக்கள் தொழில் ரீதியாக மறவர், நாயக்கர் போன்ற சாதிகளை நம்பி இருப்பதாலும், எங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளாலும் ஒன்றிணைந்து வர மறுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

                சந்தையூரில் இருக்கும் அனைத்து சாதியினருக்கும் சுடுகாடு, ஈடுகாடு உள்ளது. ஆனால் பறையர் - அருந்ததியர் இருசமூக மக்களுக்கு சுடுகாடு, ஈடுகாடு இரண்டும் இல்லை. இரு பிரிவினரும் வீர குடும்பன் கம்மாய் செல்லும் அஞ்சமாமர ஓடை கரையில் பிணங்களைப் புதைக்கிறார்கள். பிணங்களை தரையில் போட்டு எரிக்கிறார்கள்.

ஆய்வுக் குழுவின் முடிவாக சமூக அநீதிக்கு எதிரான இயக்கங்களும், மத்திய-மாநில அரசுகளும் ஒடுக்கப்பட்ட பறையர் - அருந்ததியர் மக்களை ஒருங்கிணைத்து சந்தையூரில் நிகழும் சமூக ஒடுக்கு முறைகளைக் களைந்து சமூக ஜனநாயகத்தை உண்டாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

- ஏ.முருகன் (முருகன் கண்ணா), குழு ஒருங்கிணைப்பாளர்

உறுப்பினர்கள்:

  1.  விவேக் வீரசேகர்
  2. பழனிச்சாமி
  3. மனோகரன்
  4. ராகுல் காந்தி
  5. சோயா காஸ்ட்ரோ
Pin It