எழிலார்ந்த சென்னை மாநகரம் பறையர்களின் சேரிகளாகவும், மீனவர்களின் குப்பங்களாகவும் திகழ்ந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் இங்கு குடியேறினர்.19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் ஆங்கிலராட்சி சென்னைமண்டிலத்திலிருந்து தொடங்கப் பெற்றது.
அந்த ஆங்கிலர் ஆட்சியில் 1843 ஆம் ஆண்டில் அடிமை ஒழிப்புச் சட்டம் 1861 ஆம் ஆண்டில் இந்தியன் பீனல்கோடு சட்டம் ஆகியவற்றின் மூலம் சண்டாளர்கள் என அழைக்கப்பட்ட தீண்டப்படாதத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்ட பூர்வ விடுதலை கிடைத்தது என்றாலும் நடைமுறையில் விடுதலை இல்லை;சமூக ரீதியில் அவர்கள் தொடர்ந்து அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். இந்து மேல்ஜாதியக் கொடுமைகளுக்கு அவர்கள் ஆட்பட்டு அவதிக்குள்ளாகி வாழ்க்கையை நடத்திவந்தனர்.
இந்நிலையில் 1845 ஆம் ஆண்டு மே திங்கள் 20ஆம் நாள், மைலாப்பூரில் சித்த மருத்துவத் தொழில் புரிந்து வந்த தீண்டப்படாத சமூகத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகனாக அயோத்திதாசர் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் மகிமா நகரில் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன்.என்பதாகும்.
அயோத்திதாசரின் குடும்பப் பின்னணி
சென்னை மாகாண ஆட்சியராகத் தாமஸ் மன்றோ 1820 முதல் 1827வரை பணியாற்றினார். அவரிடம் கம்பனி நிர்வாகத்தின் பொறியாளராக ஜார்ஜ் ஆரிங்டன் பணியாற்றி வந்தார். அந்தப் பொறியாளரிடம் தாழ்த்தப் பட்ட சமூகத்தச் சார்ந்த கந்தப்பனார் வேலை செய்து வந்தார் இவர் அயோத்திதாசரின் பாட்டனார்.
தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்தவர்கள்.அந்த நாளில் சித்தமருத்துவத்தில் தேர்ந்தவகளாயிருந் துள்ளனர். மேலும் அவர்கள் இலக்கியம்,இசை, நாடகம் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினர். பல தமிழ் ஓலைச் சுவடிகளையும் போற்றிக் கண்ணெனக் காத்து வந்துள்ளனர்.
கந்தப்பனாரும் சித்த மருத்துவராகச் சிறந்து விளங்கி னார். அவரிடம் திருக்குறள், திருவள்ளுவமாலை, நாலடி நானூறு ஆகிய தமிழ் இலக்கிய ஓலைச் சுவடிகள் பாதுகாப்பாக இருந்தன. அவரின் சொந்த ஊர் கோவை அரசம்பாளையம் என்ற போதிலும் அவர் சென்னை மைலாப்பூரிலேயே பெரும்பாலும் வாழ்ந்து வந்தார்.
திருக்குறள் நூல் பதிப்பித்தல்
சென்னையில் 1825 ஆம் ஆண்டில் தமிழ் ஓலைச் சுவடிகளை அச்சிலேற்றிப் பதிப்பிக்கும் நோக்கில் திருவாளர் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் அவர்களால் தமிழ்ச் சங்கம், நிறுவப்பட்டது.. அவர் பொறியாளர் ஜார்ஜ் ஆரிங்டன் அவர் களுடைய உற்ற நண்பர் ஆவார். எல்லிஸ் அவர் களிடம், கந்தப்பனார் தன் னிடமிருந்த திருக்குறள், நாலடி நானூறு ஒலைச் சுவடிகளை ஒப்படைத்து அச்சேற்றி நூலாக வெளி யிடும்படி கேட்டுக்கொண் டார். அப்பொழுது எல்லிஸ் அவர்களிடம் பழகிய பிராமண நண்பர்கள், கந்தப்பன் தீண்டப்படாத வகுப்பினன்; அவன் சொல்வதையும் கொடுப்பதையும் ஏற்க வேண்டாம், என்று அறிவுரை கூறியுள்ளனர். எனினும் அக்கெடுமதியாளரின் பொய்யுரைகளைப் புறந்தள்ளி, திருக்குறளையும், நாலடி நானூறையும் நூலாக அச்சிட்டு 1831 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
கல்வி
காத்தவராயன் குருகுல முறைப்படி,சென்னை காசிமேட்டில் வசித்த வல்லக்காளத்தி வீ.அயோத்தி தாசரிடம் கல்வி பயின்றார். காத்தவராயன், தமிழ், பாலி, சம°கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெரும்புலமை பெற்றார்.சித்த மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்ற மருத்து வர் ஆக விளங்கினார்.தன் ஆசிரியர் அயோத்திதாசர் மீது கொண்ட அளப்பரிய மதிப்பினால் காத்தவராயன் தன் பெயரை அயோத்திதாசர் என்று புனைந்து கொண்டார். அயோத்திதாசப் பண்டிதர் என்றே அதன்பின் அறியப்பட்டார்
அயோத்திதாசப் பண்டிதர் பாலி மொழியில் புலமை பெற்றதால் வேத மூல நூல்களை நன்கு பயின்று ஆய்ந் தார். ஆங்கிலத்தில் பைபிளையும் ஆழ்ந்து கற்றார். இசுலாம், சீக்கிய சமய நூல்களையும் தத்துவங்களையும் ஆழமாக ஆய்வு செய்தார்.
மக்கள் வாழ்வியல் நெறிமுறைகளை ஆய்ந்தார். பறையர் இனமக்களின் அவலத்திற்கான காரணங்களை ஆய்ந்தார்.ஆசையே துன்பங்களுக்குக் காரணம் எனப் புத்தர் புகன்றார்.பறையர் வாழ்வில் உயர்வடைதல் வேண்டும் என்ற ஆசையின்மையாலும், கல்வி மறுக்கப்பட்டதாலும் வளர்ச்சி குன்றி வீழ்ச்சியுற்றனர் என்று அயோத்திதாச பண்டிதர் உணர்ந்தார்.
நீலகிரி வாழ்க்கை
அயோத்திதாசப் பண்டிதரின் தந்தை கந்தசாமி அலுவல் காரணமாகக் குன்னூருக்குக் குடி பெயர்ந்தார், அதனால் கல்வி கற்பதற்காகச் சென்னையில் வாழ்ந்து வந்த அயோத்திதாசப் பண்டிதர் தன் இளமைக்காலத்தில் நீலகிரியிலுள்ள குன்னூரில் வாழ வேண்டிய தாயிற்று. நீலகிரியில் வாழ்ந்த காலத்தில் அயோத்திதாசப் பண்டிதர், ஆங்கில அரசினரிடம், நிலமற்ற தீண்டத்தகாத மக்களுக்கு விளை நிலங்களை வழங்கி அவர்களது ஏழ்மை நிலையைப் போக்கவேண்டும் என்று கோரினார். அவருடைய கோரிக்கையை ஏற்று பஞ்சமர்களுக்கு அரசு நிலம் வழங்கியது.அவ்விதம் வழங்கிய நிலங்களைப் பஞ்சமி நிலங்கள் என்று கூறினர்.
குன்னூரில் வாழ்ந்தோர் பெரும்பாலும் தாழ்த்தப் பட்டோரும், மலைவாழ் பழங்குடி மக்களுமேயாவர். இவர்கள் வெள்ளையரின் தேயிலை, காஃபித் தோட் டங்களில் அடிமைக் கூலிகளாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் அறியாமையிலும், ஏழ்மையிலும் உழன்று வந்தனர், இந்நிலையைப் பயன்படுத்திக் கிறித்துவ சமய ஊழியர்கள் இவர்களை மதமாற்றம் செய்து வந்தனர். இதனைக்கண்டு மனம் பொறாத அயோத்திதாச பண்டிதர் மதமாற்றத்தை எதிர்த்தார். அந்த மக்களிடம், நீங்கள் இம்மண்ணின் மைந்தர்கள்; சாதியும் தீண்டாமையும் சில தன்னலக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டவை. இதன் காரணமாய் நீங்கள் மதம் மாறக் கூடாது. மதம் மாறும் தீண்டப்படாதவர் தாய் நாட்டுப் பற்றும், தம் பண்பாட்டு உணர்வும் அற்றவர்களாக ஆகிவிடுவர் என்று கூறி உணர்வு ஊட்டி மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தினார்..
1870- அத்வைதானந்த சபை
எனவே தீண்டப்படாதவர்க்கு சிறந்த சமயக் கோட் பாடுகளை வடிவமைத்து நெறிப்படுத்துவதற்காக கி.பி. 1870 இல் அத்வைதானந்த சபை எனும் அமைப் பினைத் தோற்றுவித்தார்.அவ்வமயம் அயோத்திதாச பண்டிதர் ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். (ஆதி சங்கரர் கி.பி.768 இல் கேரளத்தில் காலடியில் வைதீக நம்பூதிரி பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். காசியில் வேத விற்பன்னராகத் திகழ்ந்த விசுவநாதன் என்னும் தீன்டப்படாத இனத்தைச் சார்ந்த ஒருவரிடம் ஞானோபதேசம் பெற்று ஞானியானார். அவர் தன் குருவின் ஆணைப்படி 4 மடங்களை நிறுவினார். அவை இமயத்தில் பத்ரிநாத், குஜராத்தில் துவாரகை, ஒரிஸாவில் ஜெகந்நாதபுரி, மைசூரில் சிருங்கேரி ஆகியவை. அந்த மடங்களில் அத்வைத கோட்பாடுகள் புகட்டப்பட்டன.
நீலகிரியில் சில ஏக்கர் நிலங்களை வாங்கினார். அந்நிலங்களை ஏழை எளிய மக்களிடம் அருளி பயிரிடச் செய்தார்.அவ்விடத்தில் துளசிமடம் எனும் மடம் நிறுவி, நின்ற வடிவிலான புத்தர் சிலையை நிறுவினார் என அறியப்படுகின்றது.அந்த மடத்தில் தான் எழுதிய நூல் களுடன் பெரும் நூலகத்தை அமைத்தார் எனவும் தெரிய வருகின்றது. அவர் நீலகிரியை விட்டு அகன்ற பின்னர் அந்த மடமும் நிலங்களும் கவனிப்பாரின்றி வேறு ஒருவர் வசமாகி சீரழிந்தது என்று தெரிகிறது.
ன்னூரில் தோடர் பழங்குடிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.அவருடன் இரங்கூனுக்குச் சென்றார். அங்கு அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. தசரதராமன் என்று பெயரிட்டு அழைத்தார்.அக்குழந்தை சிறிது காலத்தில் இறந்துவிட்டது.அதன் பின் அவரது மனைவியும் இறந்துவிட்டார்.அவர் மீண்டும் குன்னூர் திரும்பிவிட்டார்.10 ஆண்டுகள் இரங்கூனிலிருந்து விட்டு குன்னூர் வந்த அயோத்திதாசப் பண்டிதர் தனது உறவினர் இரட்டைமலை சீனிவாசன் தங்கை தன லெட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.இருவரும் இணைபிரியாது கருத்தொருமித்து இல்லறம் எனும் நல்லறம் போற்றிவாழ்ந்தனர். அவ்விணையருக்கு, பட்டாபி ராமன், மாதவரம், ஜானகிராமன்,இராஜாராமன் என்ற நான்கு புதல்வர்கள் பிறந்தனர். அயோத்திதாசப் பண்டிதர் புத்த நெறியில் திளைத்த பின்னர் பிறந்த இரண்டு புதல்விகளுக்கும் அம்பிகாதேவி, மாயாதேவி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
1881 ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பு
1881 ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்புப்படி சென்னை மண்டிலத்தில் தீண்டப்படாதமக்கள் நூற்றுக்கு பதினைந்து விழுக்காடு என்ற அளவில் இருந்தனர். அவர்களைச் சாதிகளற்ற ஆதிதிராவிடர் என்றே பதிவு செய்யவேண்டும் என்று அயோத்திதாசப்பண்டிதர் கோரினார். அந்த மக்களையும் தங்களை ஆதிதிராவிடர் என்றே பதிவு செய்து கொள்ளும்படி வேண்டினார்.அந்தக் காலம் மக்களிடையே சாதிவேறுபாடு மிகவும் வேரூன்றி யிருந்தது.மக்கள் ஒருவரை ஒருவர் சாதிப்பெயரைச் சொல்லியே அழைத்துக் கொண்டனர் சாதிதான் தமிழ் நாட்டு மக்களின் அடையாளமாக இருந்து வந்துள்ளது. ஆதலால் தீண்டப்படாத மக்களை பறையர் என்றே மேட்டுக்குடியினர் அழைத்து இழிவு செய்தனர்.எனவே சாதிகளற்ற ஆதி திராவிடர் எனப் பெயர் மாற்றம் சமூகக் களத்திலும் அரசியல் களத்திலும் போராடுதற்கு அவசியமாக அமைந்திருந்தது.
1881 மக்கள் கணக்கெடுப்பின் போது தொடங்கி பின்னர் 1911 இல் மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட காலம் வரை சாதியற்ற தொல்குடி மக்களின் அடையா ளத்தைப் பேண அயோத்திதாசப்பண்டிதர் கடுமையாகப் போராடியுள்ளார்.
இந்துக்களுக்கு மத்தியில் இந்துவல்லாமல் வாழ் பவர்கள் இத்தேசத்தின் பூர்வக்குடிகளாகும்.இவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களும் பௌத்தர்களுமாவர். இவர்களே இந்த மண்ணின் மைந்தர்களாவர். இவர் களுக்கு இந்துக்கள் சத்துருக்களே யாவர். என்றார்
சென்ற குடிமதிப்பெடுத்த காலத்தில் பறையனென்னும் பெயர் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னரே தோன்றிய சாதிப் பெயரென்று சென்ற சென்சஸ் கமிஷ்னர் தன் மக்கள் கணக்கெடுப்பு அறிக்கைப் பேரேட்டில் வெளியிட்டிருக்கின்றார்கள் இவை யாவையும் தற்கால மக்கள் கணக்கெடுப்பு ஆணையர் மேன்மை தங்கிய கேய்ட் அவர்கள் கண்ணுற்று மக்கள் கணக்கெடுக்கின் போது, தங்கள் அறியாமையாலும் அச்சத்தாலும் இந்துக்களுக்குப் புறம்பான பூர்வகுடியினரில் சிலர் பறையர்களென்றும் கூறுவார்கள். அவர்கள் யாவரையும் அப்பெயரால் குறிக்காது சாதி பேதமற்ற திராவிடர்களென ஒரே பெயரால் குறிப்பது உத்தமம். பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்கள் அடையும் சுதந்திரங்களைச் சாதி பேதமற்ற திராவிடர்கள் அடையவும் ஏதுவுண்டாகவும் என அயோத்திதாசப்பண்டிதர் எழுதியுள்ளார் (17.12.1910)அதுமட்டுமல்லாது கிறித்துவர்களையும் இ°லாமி யர்களையும் தவிர்த்து பிறர் அனைவரையும் இந்து என்றே பதிவு செய்தனர் 1861 முதல் 1891 வரை. இதனையும் அயோத்திதாசப்பண்டிதர் எதிர்த்தார்.
அயோத்திதாசப்பண்டிதர் காலத்தில் இந்துத்வம் மீட்டுருவாக்கம் செய்தகாலம்.பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் இந்துத்துவத்தை இந்துக்கள் திணித்தனர்.தீண்டாமை காணாமை சாதியக் கொடுமைகளை அனுபவிக்கும் ஆதிதிராவிடர்கள் ஒரு போதும் இந்து அடையாளத்தை ஏற்கக் கூடாது என்றார், அயோத்திதாசப்பண்டிதர்.
தமிழகத்தில் அப்போது பக்தி இயக்கத்தின் மூலம் தமிழ்-சைவ மீட்டுருவாக்க முயற்சி நடந்தது.தமிழ்-சைவம் பிராமண எதிர்ப்பு பேசியது.சாதி ஒழிப்பு குறித்து மௌனம் சாதித்தது.அதனால் தமிழ்-சைவத்தோடு அயோத்திதாசப்பண்டிதர் இணையவில்லை.
ஹென்றிஸ்டில் ஆல்காட், பிளவாட்ஸ்கி சந்திப்பு
ஹென்றிஸ்டில் ஆல்காட் அமெரிக்கர்.பல்கலைப் படிப்பினை முடித்த அமெரிக்கவிவசாயி. அமெரிக்க உள் நாட்டுப்போரில் பணிபுரிந்து கர்னலாகப் பதவி பெற்றார்.. போருக்குப் பின் வழக்கறிஞராகப் பணியாற்றியவர்
பிளாவட்°கி அம்மையார் ரஸ்யர், இவர் அகவை 17 இல் திருமணம் செய்துகொண்டவர்.இல்வாழ்வில் நாட்டமின்றி தத்துவத் தேடலோடு பல நாடுகளில் சுற்றி வந்தவர்.
கர்னல் ஹென்றி °டில் ஆல்காட், பிளாவட்ஸ்கி அம்மையார் அவர்களை அமெரிக்காவில் சந்தித்தார். இருவரும் 1875இல் தியோசபிகள் சொசைட்டியை நிறுவினர்.இருவரும் 1879இல் சென்னை வந்தனர். சென்னையில் அடையாறில் 1883 இல் பிரம்ம ஞான சபையைத் தோற்றுவித்தனர். ஓய்வுக்காக நீலகிரி வந்த கர்னல் ஆல்காட் அவர்களையும், அம்மையார் பிளாவட்ஸ் கியையும் தன் மைத்துனர் இரட்டைமலை சீனிவாச னுடன் 1882 இல் அயோத்திதாசப்பண்டிதர் சந்தித்து ஆல்காட் அவர்களுடன் நட்பு பாராட்டினார். கர்னல் ஆல்காட் புத்த நெறியில் ஈடுபாடு கொண்டிருந்தவர் என்பதால் அயோத்திதாசப்பண்டிதர் அவர்கள் அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
பிரம்ம ஞான சபையின் ஆண்டுவிழா 1884 இல் கர்னல் ஆல்காட்டின் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் பல நாட்டவர்கள், பார்சிகள், வங்காளிகள் தமிழகப் பிராமணர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட னர். இவர்களுடன் இரட்டைமலை சீனிவாசனும், அயோத்திதாசப்பண்டிதரும் கலந்து கொண்டனர். அனைவரும் இணைந்து பிரிட்டிஷ் அரசுடன் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த ஓர் அமைப்பினை உருவாக்க வேண்டும் என்று எண்ணினார்கள்.அதன் விளைவாக1885 இல் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பே பின்னாளில் காங்கிரஸ் இயக்கமாக உருவாயிற்று.அயோத்திதாசப்பண்டிதர் பிரம்ம ஞான சபையின் தொடக்கமுதல் உறுப்பினர். கர்னல் ஆல்காட்டுடன் நெருங்கிய நண்பராக இருந்தார். காங்கிரசின் தொடக்க முதல் அயோத்திதாசப்பண்டிதரும் இணைந்து பணியாற்றினார்.காங்கிரஸ் பண்பாட்டு இயக்கமாகவும், பின்னர் இந்தியற்கு வேலை கோரி மனுப்போடும் இயக்கமாகவே செயல்பட்டு வந்துள்ளது.
தன்னுடைய இன இழிவு நீங்கவும், வேலை வாய்ப்புகளைப் பெற்று ஈடேறவும் காங்கிரஸ் கட்சி பயன்படும் என நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அயோத்திதாசப்பண்டிதரின் நம்பிக்கைகள் ஊமை கண்ட கனவாயிற்று காங்கிரஸ் இந்துக்களின் இயக்கமாக- பிராமணருக்கான இயக்கமாக இருப்பதை உணர்ந்தார். காங்கிரஸ் இந்து ஆசார அனுஷ்டங்களைக் காக்கப் பாடுபடும் இயக்கம் எனத் தெளிந்தார். காங்கிரசின் செயல் முறைத் திட்டங்களை ஆய்ந்து எதிர்க்கத் தலைப்பட்டார் இந்நிலையில் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தால் ஆங்கிலேயன் இடத்தில்-ஆட்சி அதிகாரத்தில் பிராமணர் களே அமர்ந்து கொள்வர் என்பதும், அவர் கையில் ஆட்சி மாறினால் ஆதிதிராவிடர் கதி என்னவாகும் என்பதும் அயோத்திதாசப்பண்டிதரின் நியாயமான அச்சமாகும். அதனால் இந்தியாவிற்கு உடனடியாக விடுதலை வேண்டாம் என்றார்- சாதிய ஆதிக்கம் சமுதாயத்தில் இருக்கும் வரை, சமுதாய ஏற்றத் தாழ்வுகள் நீங்கும் வரை விடுதலை வேண்டாம் என்றார். அதையும் மீறி சுதந்திரம் அளித்தால்,அதனை மண்ணின் மைந்தர்களிடமே வழங்கவேண்டும். நேற்று குடியேறிய வந்தேறிகளைச் (ஆரியர்கள்) சுதேசிகள் எனக்கருதி ஆட்சியை வழங்கி னால் நாடு நாடாயிராது சீரழிந்து கெட்டுவிடும் என்று எழுதினார்.
பஞ்சமர் பள்ளிகள்
கல்வி கற்க வாய்ப்பின்றி கடையர்களாக வாழ்ந்த இம்மண்ணின் மைந்தரான ஆதிதிராவிடர் ஆங்கிலேயர் .வருகைக்குப் பின் தான், தம் காலில் நிற்கத் தலைப் பட்டனர் என்பது வரலாற்று உண்மை எனக் கண்டார். கர்னல் ஆல்காட்டுடன் ஏற்பட்ட நட்பினால் அவரின் துணையோடு 1892 இல் சென்னை நகரின் சேரிப் பகுதிகளில் பள்ளிகளை நிறுவி சேரிப் பிள்ளைகளுக்குக் கல்விக் கண் நல்கினார் அயோத்திதாசப் பண்டிதர். இந்தப் பள்ளிகள் அடையாறு, செள்ளாளர், தேனாம் பேட்டை, மைலாப்பூர் கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் தோற்றுவிக்கப்பட்டன. இவை கர்னல் ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன .இப்பள்ளிகளில் 1894 லேயே மதிய உணவு வழங்கவும் அயோத்திதாசப் பண்டிதர் ஏற்பாடு செய்திருந்தார் என்றறிகிறோம்.இப் பள்ளிகள், தரத்தில் மேட்டுக்குடி மக்களுக்காகவே ஏற் பட்டிருந்த பள்ளிகளுக்கு இணையாகவே இருந்துள்ளன எனப் பாராட்டி ஆங்கில நாளிதழ்கள் செய்திவெளியிட்டன.
திராவிடர் கழகம்
ஆதிதிராவிடர் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் ஆதிதிராவிடர் தலைவர்கள், அறிவுசான்ற பெரியோர் அனைவரும் தீவிரமாக சமூகசிந்தனையோடு செயலாற்றினர். அத்தகைய சான்றோர்களில் ஒருவர் ஜான் ரத்தினம். அவர் சென்னை வெ°லியன் மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்பெருமகன் 1882 லிருந்து திராவிடர் கழகம் என்ற அமைப்பை நிறுவி சமூகப் பணியாற்றி வந்துள்ளார். அவருடன் அயோத்தி தாசப் பண்டிதர்.இணைந்து திராவிடப் பாண்டியன் என்னும் இதழை 1885 இல் தொடங்கினார்.இந்த இதழுக்கு ஜான் ரத்தினம் அவர்கள் ஆசிரியராக இருந்தார். அயோத்திதாசப் பண்டிதர் துணை ஆசிரியர் பொறுப்பை ஏற்று ஆதி திரவிடமக்களின் எழுச்சிக்காகவும், விடுதலைக் காகவும் பாடுபட்டார்.1887 வரை இவ்விதழ் நடைபெற்று வந்துள்ளது. ஜான் ரத்தினம் 1887இல் மதிப்புறு மாகாண நீதிபதியாக பதவியேற்றவுடன் இதழை நடத்த இயல வில்லை.
திராவிட மகா ஜனசபை
நீலகிரியில் அயோத்திதாசப் பண்டிதர் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்திட 1890 இல் திராவிட மகா ஜனசபையைத் தொடங்கினார்.
திராவிடர் என்ற சொல் ஆரியரல்லாத, ஆரியக் கலப்பில்லாத மண்ணின் மைந்தர்களான தமிழர்களைக் குறிப்பது என்றும், திராவிடர் என்ற சொல் ஆரியரல்லாத தூய தமிழர்களைக் குறிக்கும் தேசிய இனப் பெயர் என்றும் அயோத்தித் தாசப் பண்டிதர் குறிப்பிட்டார்.
இந்த அமைப்பின் முதல் மாநாடு 1-12-1891 இல் நீலகிரியில் நடைபெற்றது. அம்மா நாட்டில் தலைமை வகித்தவர் திராவிட மகா ஜனசபைத் தலைவர் அயோத்தி தாசப் பண்டிதர். தாழ்த்தப்பட்டோர் இந்தியாவில் நடத்திய முதல் மாநாடு. இம்மாநாட்டில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமக்களின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் ஏற்ற வழிமுறைகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்றன. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பிரிட்டிஷ் அரசினருக்கு நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டன.உடன் இந்தியக் காங்கிரஸ் இயக்கத்திற்கும் பத்து அம்சக் கோரிக்கை ஒன்றை அனுப்பியது.காங்கிரஸ் இயக்கம், அன்றிருந்த ஒரே அரசியல் இயக்கமாகும். ஆதலால் இந்தப் பத்து அம்சக் கோரிக்கையைப் பரிசீலித்து அரசிடம் விளக்கி காங்கிர°நிறைவேற்றித் தரும் என மாநாட்டினர் நம்பினர்
காங்கிரசுக்கு அனுப்பிய கோரிக்கைகள்
1. தீண்டப்படாத மக்களைப் பறையர் எனவிளித்தல் குற்றம் எனச் சட்டம் இயற்ற வலியுறுத்தியது
2. தீண்டப்படாத மக்களுக்குக் கல்வி வசதியளித்தல்
3. தீண்டப்படாத மக்களுக்குக் கல்வி உதவித் தொகை அளித்தல்
4. தீண்டப்படாத மக்களில் கற்றவர்களுக்குத் தi டயின்றி அரசுப்பணி வழங்குதல்
5. உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்கல்
6. பொதுக்குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வழங்குதல்
7. பொது இடங்களில் நுழைய உரிமை
8. அரசு அலுவலகங்களில் தங்கு தடையின்றி அனு மதித்து நீதி அளித்தல்
9. கிராம முன்சீப் அலுவலகங்களில் நியமிக்கப்படுதல்.
10. சிறைச் சாலை சட்டம் 464 பிரிவை நீக்குதல் (அக் காலத்தில் சிறைச் சாலை விதி 464 வது சட்டத்தில் பறையர்களைச் சகல தாழ்ந்த வேலைகளைச் செய்விக்கலாம் என்று இருப்பதை நீக்கவேண்டும்)
ஆகிய கோரிக்கைகளைப் பொது விண்ணப்பமாக 21-12 1891 அன்று காங்கிரஸ் செயலாளர் எம்.வீரராகவாச் சாரியார் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. காங்கிரஸ் செயலாளர் அந்த விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட தற்கான ஒப்புதல் கடிதம் தராததோடு அவ்விண்ணப் பத்தின் மீது மேல் நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. அதன் மூலம் காங்கிரஸ் அனைவருக்குமான இயக்க மன்று என்றும், ஆதிக்கச் சாதியினரின் இயக்கமென்றும் நிருபனமாயிற்று.
மேல் சாதி இந்துக்கள், திராவிட மகா ஜனசபையை, பறையர் மகா ஜன சபை என்றே அழைத்தனர். தமிழரின் இதழ்களையும் பறையன் பத்திரிக்கை என்று தொடவும் மறுத்தனர். ஆனால் அயோத்திதாசப் பண்டிதர் திராவிட மகா ஜனசபை மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆங்கில அரசினரிடம் கேட்டுப் பெறும் சலுகைகளைத் தாங்களும் திராவிடர்கள் தான் எனக் கூறிப் பயன் பெற்றனர். அதனையறிந்தஅயோத்திதாசப் பண்டிதர் ஆதி திராவிடமகா ஜனசபை எனப் பெயர் மாற்றம் செய்தார் 1892 ஆம் ஆண்டு.1928 இல் இச் சபை அகில இந்திய ஆதி திராவிட மகா ஜன சபை எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1892 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் சென்னையில் விக்டோரியா நகர அவையில் சென்னை மகாசனசபை கூடியது, அயோத்திதாசப் பண்டிதரும், நீலகிரிப் பிரதி நிதியாக வீற்றிருந்தார், அயோத்திதாசப் பண்டிதர் தெய்வம் பொது எனக் கூறக் கேட்டிருக்கிறோம். ஆதலால் எம் குலத்தினரும்சிவாலயங்களிலும் விஷ்னு ஆலயங் களிலும் நுழைந்து வணங்கிட வழிசெய்தல் வேண்டும் என்று சபைத் தலைவரை நோக்கி விண்ணப்பித்தார்.
ப்போது கூடியிருந்த அனைவரும் ஒருமனதாய் எழுந்து நின்று கூச்சலிட்டு ஆலய நுழைவு விண்ணப்பத்தை எதிர்த்தனர். அப்போது தஞ்சைப் பிரதி நிதி சிவராம சா°திரியார் எழுந்து, உங்களுக்கு மதுரை வீரன், காட்டேரி, கருப்பண்ணன் ஆகிய சாமிகளைக் கொடுத் துள்ளோம். சிவனும் விஷ்ணுவும் உங்களுக்கு உரியவை அல்ல என்றார். அதன்பின் அயோத்திதாசப் பண்டிதர், தங்கள் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியும், கிராமங்கள் தோறும் பள்ளிகளும் வேண்டும் என்றும், ஏழைகள் பயிர் செய்து பிழைத்திட நிலங்களும் வழங்கவேண்டும் என்றும் அரசினரிடம் பரிந்துரைத்து பெற்றுத் தர வேண்டும் என்று கோரினார். உடன் எல்லூர் பிரதிநிதி சங்கர் எழுந்து, இச் சமூகத்தார், நாட்டின் முதுகெலும்பு போன்று அனைவருக்கும் பயன்படுபவர் ஆனபடியால் அவர்க்கு வேண்டுவன செய்தல் வேண்டும் என்றார். அதன் பின் அனைவரின் முழு ஒப்புதலோடு ,பண்டிதரின் விண்ணப்பங்களை அரசிடம் சமர்ப்பித்தனர். அரசு அக்கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்து ஏற்று அவற்றை நிறைவேற்றியது.
பௌத்தம் ஏற்றல்
தன் சமூகமக்களைத் தீண்டப்படாதவர் என்று இழிவு படுத்துவதாலும் நால்வருணத்தைத் தூக்கிப்பிடித்துச் சாதிய வேறுபாடுகளை வற்புறுத்துவதாலும் இந்து மதத்தை அவர் ஏற்கவில்லை.ஆதிதிராவிடமக்களின் வாழ்வை மீட்டெடுப்பதற்காகவும் சுதந்திரம் சகோதரத்துவம் சம உரிமைப் பெறவும் அயோத்திதாசர் பௌத்தத்தை ஏற்க முன்வந்தார்
1898 இல் ஹென்றி ஆல்காட்டையும், அனகாரிகா தர்ம்பாலாவையும் சந்தித்துத் தானும் தம் மக்களும் பௌத்த நெறியைத் தழுவ இருப்பதாகத் தெரிவித்தார். அதனால், 1898 இல் இலங்கையில் நடைபெற்ற புத்தமா நாட்டிற்கு ஆல்காட்டுடன் அயோத்திதாசப் பண்டிதரும், அடையாறு ஆல்காட் பஞ்சமர் பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.கிருஷ்ணசாமியும் சென்றனர். இலங்கை சென்றபின்னர், அயோத்திதாசப் பண்டிதர் பௌத்த சமயத்தில் இணைந்தார். சென்னை திரும்பியதும் 1902 இல் இராயப்பேட்டையில் தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தை நிறுவினார், சென்னையில் இச்சங்கத்தின் கிளைகள் நிறுவப்பட்டன.இச் சங்க அமைப்புகளில் பல்லாயிரம் ஆதிதிராவிடர் உறுப்பினர்களாயினர்
வாரந்தோறும் இச்சங்கத்தில் அறிஞர்களைக் கொண்டு பௌத்த நெறிகளை விளக்கச் செய்தார். மதத்தை நிறுவியவர் திருவிறக்க மாந்தர் (அவதாரப் புருஷர்) என்பர்.ஆனால் புத்தர் அவதாரப் புருஷர் அல்லர். பௌத்தம் மதம் அன்று; அது வாழ்க்கை நெறி;அதுவே ஆதித் தமிழரின் நெறியாக இருந்துள்ளது.புத்த நெறியில் கடவுள் இல்லை; சிலைவழிபாடுகளும் சடங்குகளும் கிடையா என்றும் விளக்கினர். புத்த நெறியைப் பரப்பு வதற்கு நாத்திக நாயுடு என அழைக்கப்படும் பேரா. இலட்சுமிநரசு நாயுடுவும், சிந்தனைச் சிற்பி சிங்காரவே லரும் அவருக்குத் துணையாக விருந்தனர்.
பண்டிதரும் தமிழ்த் தென்றல் திரு.வி.க.வும் இராயப்பேட்டை பௌத்த சாக்கிய சங்கத்தில் ஒரு நாள் சிங்காரவேலர் உரையாற்றும் போது விவிலியம் வரலாற்றுத் தொடர்பான நூல் அல்ல என்றும் வரலாற்று அடிப்படையில் விவிலியமும் புராணப் புரட்டே என்றும் பேசி முடித்தார். திரு.வி.க. அக்கூற்றினை மறுத்து சமய நூல்கள் புனிதமானவை யென்றும், இவற்றில் வரலாற்றுக்கோ பகுத்தறிவுக்கோ இடமில்லை யென்றும் கூறிக்கொதித்தெழுந்தார்.
மற்றொரு நாள் அருங்கலைச் செப்பு என்ற தலைப்பில் அயோத்திதாசப் பண்டிதர் புத்த நெறிகளை விளக்கி உரை நிகழ்த்திய பின் பேரா. இலட்சுமி நரசு, திருவரங்கம் கோயில் ஒரு பௌத்தக் கோயிலே என்று வரலாறு, கட்டடக்கலை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பேசினார். அக்கோயிலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்க நாதன், அறவாணன் என்றும் அக்கோயிலின் மூலக் கட்டடம் புத்தர் பள்ளிக் கட்டடமே என்று சான்றுகளோடு பேசி நிறுவினார்.
திருஞான சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக மாற்றிய கதையை தருக்கமுறையில் மறுத்துரைத்தார். அப்போது திரு.வி.க மத வெறியுடன் தன் நண்பர்களுடன் கலகம் விளைவித்தார். இந்நிகழ்ச்சியைத் தன் இறுதிக்காலத்தில் எண்ணி வருந்தியதாகத் திரு.வி.க. எழுதியுள்ளார்.
முதலில் மதவெறி கொண்டிருந்த திரு.வி.க பிற்காலத்தில் அயோத்திதாசர், இலட்சுமி நரசு, சிங்காரவேலர் ஆகி யோரின் பகுத்தறிவு கொள்கைகளையும் புத்த நெறி இயக்கத்தையும் பெரிதும் மதித்துப் போற்றினார்.6-4-1928 இல் பௌத்த சங்கக் கூட்டத்தில் திரு.வி.க. தமிழ் நூல்களில் பௌத்தம் என்ற தலைப்பில் உரையாற்றி யதிலிருந்து இவருடைய காழ்ப்புணர்வு நீங்கிவிட்டதை உணரலாம்.
தமிழன் இதழ் தொடக்கம்
1906 ஆம் ஆண்டு சூன் திங்கள் 19ஆம் நாள், தன் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பரப்புதற்கென்று “ஒரு பைசாத் தமிழன்” என்ற வார இதழைச் சென்னை இராயப்பேட்டையில்தொடங்கினார்.தமிழ் மணம். பரவ விரும்பும் அனைத்துத் தமிழரும் ஆதரவு அளிக்கவேண்டும் என்று பணிவுடன் கோரினார்.26-8-1908 ஆம் ஆண்டு வாசகர்கள் விருப்பிற்கிணங்க தமிழன் என்று பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது
இவ்விதழில் பௌத்த நெறிகளைத் தெளிவாக விளக்கி எழுதினார்.புத்தரின் அறிவுரைகளைப் பூர்வத் தமிழொளி எனும் தலைப்பில் வெளியிட்டார்.இத் தொடர் 1912 இல் பூர்வத் தமிழொளியாம் புத்தரது ஆதி வேதம் என்ற பெயரில் நூலாக வெளியிடப் பட்டது.இந்த இதழில் பண்டிதரின் முக்கியப் படைப்புகள் தொடர்ந்து வெளியிடப் பெற்றன.
தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தில் உரையாற்றிய அறிஞர்களின் உரைகள் தமிழன் இதழில் வெளியிடப்பட்டன.இந்தியா, சுதேசமித்திரன் முதலான ஏடுகள் முன்னெடுத்த சுயராஜ்ஜிய அரசியலை விமரிசனம் செய்து கட்டுரைகள் வெளியாகின. இந்தியா வின் பொது மொழி இந்தி என்ற கருத்தினை எதிர்த்து பண்டிதர், இந்தி இந்து சாதிமதத்தோடு தொடர்புடையது. ஆதலால் அம்மொழிக்கு இந்தியாவின் பொதுமொழி யாகும் தகுதி கிடையாது.
ஆங்கிலமே எல்லா சார்பின ருக்கும் பொருந்தும் மொழி.ஆகவே ஆங்கிலமே பொதுமொழியாகும் தகுதி பெற்றது என்று 1911ஆம் ஆண்டு தமிழனில் எழுதினார் பண்டிதர், அதே போன்று ஈனப் பறையர்கள் என்று பாரதி எழுதியதைக் கண்டித்து எழுதினார்.பறையர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் ஆதித் தமிழர்கள். திராவிட இனத்தினர் என்றெழுதினார் இந்த இதழில் பெண்களுக்கெனத் தனியாக ஒரு பத்தியும் ஒதுக்கப்பட்டிருந்தது. அயோத்திதாசரின் ஆய்வுகள் தமிழன் இதழில் வெளிவந்து திராவிடர் இன எழுச்சிக்கு வித்திட்டது.
பௌத்த மறுமலர்ச்சியாளரான அயோத்திதாசப் பண்டிதரின் மறைவுக்குப் பின்னர் அவர் புதல்வர் பட்டாபிராமன் என்பாரை ஆசிரியராகக் கொண்டு தமிழன் 17-6-1914 முதல் 26-8-1915 வரை வெளிவந்தது.பல ஆண்டுகளுக்குப் பிறகு 7-7-1926 முதல் 27-6-1934 வரை கோலார் தங்கவயல் பண்டிதமணி. கோ.அப்பாத்துரை அவர்களை ஆசிரியராகக் கொண்டு தமிழன் வெளி வந்தது.
தீண்டப்படாத இனமக்களுக்கு சமஉரிமையும், சமநீதியும், சமவாய்ப்பும், சுதந்திரமும் கிடைத்திட அயராது பாடுபட்ட அறிவு ஆசான் அயோத்திதாசப் பண்டிதர் 1914 ஆம் ஆண்டு மே திங்கள் 5 ஆம் நாள் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.
அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகளைப் போற்றி ஏற்போம்.அவர் போற்றிய பௌத்த நெறிகளை நிலைபெறச் செய்வோம். நாம் மொழியால் தமிழர் களாகவும் இனத்தால் திராவிடர்களாகவும் வாழ்வோம்!