சென்னை இலௌகிக சங்கத்தினரின் தத்துவச் செயல்பாட்டை தத்துவவிவேசினி இதழ்க் கட்டுரைகள்வழி பேரா.ந.முத்து மோகன் பதிவு செய்துள்ளார். பல்வேறு உரை யாடல்கள் நடந்து கொண்டிருந்த பத்தொன் பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் அதிலிருந்து விடுபட்டு, தத்துவ உரையாடல் களை மேற்கொண்டனர் சென்னை இலௌகிக சங்கத்தினர். இதனை இக்கட்டுரை சிறப் பாகவே வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.

தத்துவவிவேசினி இதழ்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னையில் ஒரு நாத்திக சங்கம் செயல்பட்டு வந்திருக்கிறது. அச்சங்கம் தத்துவ விவேசினி என்ற பெயரில் ஒரு தமிழ் இதழையும் THE THINKER என்ற பெயரில் ஓர் ஆங்கில இதழையும் வாரந்தோறும் அச்சிட்டு வெளியிட்டு வந்துள்ளது. 1882ஆம் ஆண்டிலிருந்து 1888 வரை யில் வெளிவந்துள்ள அந்த இதழ்களைச் சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் வீ. அரசு அவர்கள் பதிப்பித்து நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வழியாக ஆறு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

இந்த அரிய பணிக்காகப் பேராசிரியரையும் என்.சி.பி.எச். புத்தக நிறுவனத்தாரையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். சில வருடங்களுக்கு முன்னால் இப்படித்தான் அயோத்திதாச பண்டிதரின் அறியப்படாத எழுத்துக்கள் திடீரென அறிமுகமாயின. பண்டிதரின் எழுத்துக்கள் தமிழ் ஆய்வுகளில் சில திருப்பங்களை ஏற்படுத்தின என்பதை நாம் அறிவோம்.

இப்போது வெளிவந்துள்ள தத்துவவிவேசினி இதழ்கள், சென்னை இலௌகிக சங்கம் ஆகியவை குறித்து சில குறிப்புகள் பேராசிரியர் முப்பால் மணி போன்றோரின் நூல்களில் சொல்லப்பட்டன வெனினும், இதழ்களின் தொகுப்பும் வெளியீடும் முக்கிய நிகழ்வு களாகவே நடந்தேறியுள்ளன. சுமார் ஒரு நூறு ஆண்டு களுக்கு மேலாக இவ்வெழுத்துக்கள் நாம் அறியக்கிடைக்காமல் போயிருந் ததைப் பார்க்கும்போது, காலனி ஆட்சிக்கால தமிழ்ச் சூழல்கள் இன்னும் பல ஆச்சரியங்களை நம்மிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

சுயக்கியானிகள் சங்கம்

‘சுயக்கியானம்’, ‘சுயக்கியானிகள்’ என்ற இரண்டு சொற்கள் தத்துவவிவேசினியில் ஏராளமாகப் பேசப்பட்டுள்ளன. ‘இந்து சுயக்கியான சங்கம்’, ‘ஆங்கிலோ திராவிட சுயக்கியான பத்திரிக்கை’ என, குறிப்பிட்ட இந்த அமைப்பினர் தம்மையும் தமது பத்திரிக்கையையும் அறிமுகப்படுத்திக் கொள்ளுகின்றனர். சுயக்கியானம் என்பது குறித்த பல கட்டுரைகள் தத்துவவிவேசினி இதழ்களில் வெளிவந்துள்ளன.

சுயஅறிவு என்று பொருள்படக் கூடிய சுயஞானம் என்ற சொல்லே இந்திய உச்சரிப்பை ஏற்று சுயக்கியானம் என வழங்குகிறது. ஆக, சொந்த அறிவை முன்னிலைப்படுத்துபவர்கள் என்பதே இச்சொல்லிலிருந்து நமக்குக் கிடைக்கும் பொருளாகும். தத்துவவிவேசினி இதழ் ஒன்றில் ‘சுயக்கியானம் என்பதின் பொருள் என்னை?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டு அதற்குத் ‘தமது சுயானுபவத்தையட்டி உதிக்கும் கியானம் சுயக்கியானம் என்னப்படும்’ என்ற பதில் தரப்படுகிறது (தத்துவவிவேசினி, தொகுதி 2, ப. 50). இதனை மேலும் தெளிவுபடுத்தும் விதமாக அடுத்த கேள்வி ஒன்று கேட்கப் படுகிறது. ‘ஒருவர் கற்பிப்பதினால் வந்த ஞானம் சுயக்கியானம் ஆகுமா?’

‘ஒருவர் கற்பித்ததனால் வந்த ஞானமே ஆயினும், அது ஒருவனுடைய சுயானுபவத்தை ஒட்டியிருப்பின், அது சுயக்கியானமே ஆகும்’ (2, 50) என்ற பதிலும் தரப்படுகிறது. அறிதலில் சுய அனுபவத்தின் முதன்மையே இக்கேள்வி பதில்களில் வலியுறுத்தப்படுகிறது. இயற்கை/செயற்கை, இயல்பு/பண்பாடு (Nature/Culture) என்ற இரண்டு சொற்களுக்கு இணையாக அனுபவம்/கல்வி என்ற சொற்கள் நவீன காலத்தில் முன்னுக்கு வந்தன.

இயல்பாக அனுபவம் சார்ந்து ஈட்டப்படும் அறிவைவிட கல்வியின் மூலம் கிடைக்கும் அறிவே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நவீன கல்வித் தத்துவத்தின் ஒரு நிலைப்பாடாகும். தத்துவவிவேசினி இப்பிரச்சினையில் கறாரான அனுபவவாதத்தையே ஆதரித்திருக்கிறது என்பதைக் காணுகிறோம். நவீனக் கல்வியை அது நிராகரிக்கவில்லை யெனினும் சுய அனுபவங்களுக்கே முன்னுரிமை வழங்குகிறது.

‘உள்ளதை உள்ளபடி அறிந்து இன்னும் அறியவேண்டிய வற்றிற்குத் தாகவிடாய் கொண்டவரே சுயக்கியானிகள்’ (2, 63) என்று மற்றொரு கட்டுரை தெரிவிக்கிறது. பெரும்பாலான உலக மதங்கள், உலக சிருஷ்டியிலிருந்து சமூக அமைப்பு வரை, இன்னும் எதிர்காலத்தில் உலகம் அழியப்போவது (பிரளயம்) வரை அல்லது கடைசித்தீர்ப்பு வரை தமது ‘தெளிவான’ கருத்துக்களை முன்வைக்கின்றன. புனித நூல்களில் உலகின் இந்த ‘மொத்தக் கதையும்’ சந்தேகத்திற்கு இடமளிக்கக்கூடாது என்ற உத்தரவுடன் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

ஆயின் விஞ்ஞானங்களால் அப்படி எழுதிவைக்க முடியாது. விஞ்ஞானம் என்பது ஒரு தொடர் நிகழ்வு. சிறிது சிறிதாக அது இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றின் அறியப் படாத விடயங்களை அறிகிறது. ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்ட ஓர் உண்மை சில காலத்திற்குப் பிறகு திருத்தத்திற்கு உள்ளாகலாம். ஏன், சில வேளைகளில் முந்தியது தவறு என்று கூட ஆகிவிட லாம். எவ்வளவு அறிந்தாலும் இன்னும் அறியப்படாத பிரபஞ்ச ரகசியங்கள் இருக்கக்கூடும். எனவே விஞ்ஞானங்கள் மதங்களைப் போல எந்த முடிவான சித்திரத்தையும் இது தான் முழு உண்மை, பரிபூரண உண்மை என வரைந்து காட்டுவது கிடையாது.

இதைத்தான் தத்துவவிவேசினி இங்கு சுட்டிக்காட்டுகிறது. இன்னும் அறியவேண்டியவற்றிற்குத் தாகவிடாய் கொண்ட வர்கள் சுயக்கியானிகள் என்று அது வரையறுக்கிறது. இதே கட்டுரையில் சுயாக்கியானிகள், ‘கண்டதைக் கண்டவண்ணம் சொல்லி உண்மையாளரெனப் பேர்பெற்றுள்ளனர்’ (2, 63). பழந்தமிழில் ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ’ என்று ஒரு பாடல் வரி உண்டு. நீ விரும்பியதை எல்லாம் சொல்லாமல், கண்டதைச் சொல் என்று அந்த வரி அறிவுறுத்துகிறது. ‘எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்று வள்ளுவரும் கூறுவார். ‘காண்பது அறிவு’ என்ற அவரது சொற்கள் முக்கியமானவை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில், இருபதாம் நூற்றாண்டின் முகப்பில் ‘சுயம்’ என்ற முன்னொட்டோடு பல சொற்கள் நமக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. சுயக்கியானம், சுய அறிவு, சுயானுபவம், சுயப்பிரயோசனம், சுயராஜ் ஜியம், சுயமரியாதை என்பது போன்ற சொற்கள். வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு அரசியலை வெளிப்படுத்த இச்சொற்களைப் பயன் படுத்தியுள்ளனர் என்ற போதிலும் தமிழில் முதலாளிய மனோ பாவங்கள் வேர்கொள்ளத் தொடங்கிய அக்காலக்கட்டத்தில் சுயம் (தனிமனிதம்) என்ற சொல் அழுத்தமாகப் பதிந்திருப்பதைத் தற்செயலானதாகக் கொள்ளமுடியவில்லை.

இந்தியத் தத்துவங்களை ஆங்கிலத்தில் எழுதிய சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆன்மா என்ற சொல்லை ஆங்கிலத்தில் சுயம் என்று பொருள்வரக்கூடிய SELF என்றுதான் மொழிபெயர்த்தார். சுயம் என்ற சொல்லைப் பண்டைய இந்தியச் சிந்தனையின் மையத்தில் வைத்ததன் மூலம் ராதாகிருஷ்ணன் வேதாந்தச் சிந்தனைக்கும் நவீனச் சிந்தனை களுக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தினார்.

இது நடந்தது இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில். அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் சிறுபத்திரிக்கை இயக்கம் முன்னுக்கு வந்தபோது அதன் ஓரணியினர் தமது இலக்கியப் படைப்பாற்றலை விளக்க சுயம் என்ற சொல்லையே மீண்டும் பயன்படுத்தினர். முதலாளியம், காலனியம், நவீனம், நவீனத்துவம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டதாக சுயம் என்ற சொல் தமிழில் தொழில்பட்டு வந்திருக் கிறது என்பதை நினைவுபடுத்தவே நாம் இங்கு இவற்றைக் குறிப்பிடுகிறோம்.

தத்துவவிவேசினி பத்திரிக்கைக்காரர்கள் பயன்படுத்திய சுயக்கியானம் என்ற சொல் காலனிய முதலாளியத்தோடு தொடர்பு கொண்டதுதான் என்பதை மறுப்பதற்கில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் சென்னை யில் தொடங்கப்பட்ட சுயக்கியானியர்கள் சங்கம் பல மேற்கத்திய நாடுகளின் சிந்தனைகளை (Free Thinkers' Movement, Anti-Church Movement) ஆதாரமாகக் கொண்டு தொடங்கப்பட்டது என்பதையும் இந்நூல் தொகுப்புகளிலிருந்தே அறிகிறோம். காலனி ஆட்சிக்காலத்தில் மேற்கிலிருந்து பலதரப்பட்ட அறிவுத்தொகுதி கள் இங்கு வந்து சேர்ந்தன.

வெவ்வேறுவிதமான அறிவுத்தொகுதி கள் அவற்றின் சமூகப் பயன்பாட்டை ஒட்டி இங்குள்ள சமூகப் பிரிவினரின் ஆதரவை ஈட்டின. தத்துவவிவேசினியில் மையப்படும் சுயக்கியானம் என்பது இந்தியச் சூழல்களில் மூன்று விதமான சிந்தனைப்போக்குகளை நினைவூட்டுகிறது. ‘பூர்வத்தில் உலகாயுத மென்னுமோர் மதமிருந்ததாகவும் அஃதே பிற்காலத்தில் நாஸ்திக மானதென்றும், அதுவே இப்போது சுயக்கியானமென்று வழங்கு வதாகவும் இம்மூன்றனுட் சிற்சில பேதமிருப்பினும் மேற்படி மூன்றுமொன்றேயெனவும்’ (பக். 293, தொ:2) தத்துவவிவேசினி இதழ் ஒன்று தெரிவிக்கிறது. பேராசிரியர் வீ.அரசு அவர்கள் பதிப்பித்து வழங்கியிருக்கும் தத்துவவிவேசினி நூல்களின் முக்கியத் துவத்தை இந்த வரிகளின் ஊடாகச் சொல்லப்பட்டுள்ள செய் தியைக் கொண்டே நாம் உணருகிறோம்.

1882-1888 ஆண்டுகளில் வெளிவந்துள்ள தத்துவவிவேசினி இதழ்கள் மேற்கத்திய அனுபவ வாதச் சிந்தனைப் போக்குகளின் செல்வாக்கிற்கு உட்பட்ட தத்துவநிலைகளைக் கொண்டதாக இருப்பினும், அது தமிழ்ச் சூழல்களில் உலகாயதம், நாத்திகம், பகுத்தறிவு, விஞ்ஞானம் போன்ற சிந்தனைகளை முன்னிருத்தும் ஒரு விவாதக்களத்தை உருவாக்கியிருக்கிறது. தத்துவவிவேசினியின் வரலாற்றுப் பாத்திரத்தை இன்னும் கூடுதலாக ஒரு விடயத்தைக் கொண்டும் வலியுறுத்தியாக வேண்டும்.

நாத்திகம், பகுத்தறிவு, பொருள்முதல் வாதம் போன்ற மெய்யியல் நிலைப்பாடுகளை மேற்கத்தியச் சரக்கு களாக இல்லாமல் அவற்றை இந்திய மரபுகளிலிருந்தே மீட்டெ டுக்கும் ஒரு பணியையும் அது செய்திருக்கிறது. இவையெல்லாம் தமிழுக்குப் புதியவை அல்லது நீண்டகாலமாகப் பேசப்படாதவை. அவற்றைத் தத்துவவிவேசினி மீட்டுக்கொணர்கிறது. அவை அடுத்துவரும் தமிழ் வரலாற்று விவாதங்களில் முக்கிய இடம் ஏற்க இருப்பவை. தமிழ்ச் சூழல்களில் எது நவீனம்? என்ற மிகப்பெரிய விவாதம் ஒன்றின் ஒரு வலுவான தரப்பாக அது மாறுவதாகவும் இருக்கலாம். இவையெல்லாம் நவீனத் தமிழ்ச் சூழல்களில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.  

தத்துவவிவேசினி எழுப்பும் பிரச்சினைகள் 

பூதவாதமும் அறிவு பற்றிய விளக்கமும்

தத்துவவிவேசினி மிக முக்கியமாக பூதவாதம், பிரகிருதிவாதம் எனப்படும் இந்தியப் பொருள்முதல்வாதத் தத்துவங்களை முன்னுக்குக் கொண்டுவருகிறது. பூதங்களையும் பிரகிருதியையும் தத்துவவிவேசினி செயல்பாடு கொண்ட, இயக்கம் கொண்ட முதற்காரணங்களாகக் குறிப்பிடுகிறது. ‘இயக்கமோ பொருட்கள் என்றுண்டோ அன்றே உண்டு. இயக்கமில்லாத பொருள் அணுத்துணையும் கிடையாதென்பது அனுபவ கைவல்லியமாகிய பூதசாத்திரத் துணிபு’ (2, 40). ‘பூதங்களைத் தவிர உடலில்லை, உடலைத் தவிர உயிரில்லை.

முடிவில் உயிருமுடலும் பூதங்களில் ஒடுக்கமாகின்றன. ஆகவே பூதங்களைத் தவிர, உடலுமில்லை உயிருமில்லை. பூதங்களோ பிருதிவு, அப்பு, தேயு, வாயு, ஆகாஸம் என வைந்து, இவ்வைந்து சத்துகட் சையோகத்தானும் எடுத்ததிந்த திரிசியங்கள். எனவே சர்வமும் பஞ்சபூதமயம். இஃதுண்மை’ (2, 183). இங்கு ஒரு முரட்டு பூதவாதம் பேசப்பட்டுள்ளது உண்மையே. இருப்பினும் ஐம்பூதங்களின் சேர்க்கையிலிருந்தே உயிர் என்ற பண்பு தோன்றுகிறது என்ற வாதம் வளர்த்தெடுக் கப்பட்டுள்ளது.

பூதவாதியிடம், அறிவு என்பது பஞ்சபூதங்களிலிருந்து விலகிய தனிப்பொருளல்லவா? என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்குப் பூதவாதி, ‘கத்திக்கிருக்கும் பளபளப்பு ஒரு தனிப்பொருளா? அல்ல, அது கத்தியின் தன்மை. கத்தியை நீக்கி பளபளப்பைக் காண்பிப்பீரா? கூடாது. அதுபோல உயிர் அல்லது ஜீவனுடைய தன்மை அறிவு.

எப்படிக் கத்தியை நீக்கி பளபளப்பைக் காண்பிக்கக் கூடாதோ அப்படி உயிரை நீக்கி அறிவைக் காணப்போகிறதே இல்லை’ (2, 185) என்று பதில் கூறுகிறார். கத்தி, பளபளப்பான கத்தி, பளபளப்பை இழந்த கத்தி (உயிரை இழந்த உடல்) போன்ற உவமை தத்துவவிவேசினி இதழ்களில் வேறுசில இடங்களிலும் கையாளப்படுகின்றது(2, 178).

தத்துவவிவேசினியின் மற்றொரு கட்டுரை உயிர் என்பதை சிறிது விரிவாக விளக்குகிறது. ‘ஜீவராசியின் உருவ வகுப்பிற்கும், பருவத் தொகுப்பிற்கும் தக்கவாறமைந்துள்ள கருவிகரணாதிகளின் இயக்கமே உயிர், அவ்வியக்கத் தெரிப்பே அறிவு எனப் புலப்படும்.’ (2, 198, பார்க்க 214, 227). இக்கட்டுரைகளில் மனித அறிவுக்கு சமூகச் சூழல், மொழி ஆகியவற்றின் தேவை இன்னும் வலியுறுத்தப்படவில்லை என்பது உண்மையே. இருப்பினும் பஞ்ச பூதாதிகளிடமிருந்து அறிவு என்பது நேரடியாகத் தோன்றுவ தில்லை என்பதை தத்துவவிவேசினி ஒத்துக் கொள்ளுகிறது. ‘ஆதியிலே பூதங்களுக்கு அறிவிருந்ததென்று சொல்லக்கூடாது.

இன்னும் ஒரு கருப்பவதியான பெண்ணை ஓர் வனத்தின் மலைப் பொந்தில் வைத்து, குழந்தை பிறந்த உடனே அவளை நிர்மானி யாக்கிப் பேசாமலிருக்கச் செய்து அக்குழந்தைக்கு வேறே புசிப்பைக் கொடுத்து 10 - 15 வயசுக்குமேல் வெளியில் கொண்டு வந்தால் அது என்ன பேசும்? எப்பொருளை இன்னதென்று சொல்லும்?’ (2, 113). ‘[அக்குழந்தைகளுக்கு] பகுத்தறிவிருக்குமா?’ (2, 210-211). இங்கு பேசப்பட்டுள்ள பிரச்சினை வெறுமனே மனித உடல், புலன்கள் இருப்பதால் மனிதப்பண்புகள் உருவாகிவிடுவ தில்லை; அவை உருவாவதற்கு குறிப்பிட்ட சில சமூகச் சூழல்கள் வேண்டும் என்பதாகும்.

பிரத்தியட்சமும் பகுத்தறிவும்

பண்டைய இந்தியாவில் பூதவாதிகள் தமது பிரமாணங்களாக பிரத்தியட்சம் என்ற ஒன்றை மட்டுமே ஒத்துக் கொண்டார்கள். பிரத்தியட்சம் என்றால் புலன்களால் அறியும் அறிவு என்பது பொருளாகும். தமிழில் இதனைக் காட்சி அளவை என்பார்கள். தத்துவவிவேசினி பத்திரிக்கை, அறிவை ஈட்டுவதற்கான நம்பக மான ஆதாரமாகப் பிரத்தியட்சம் ஒன்றையே குறிப்பிடுகிறது. இந்திரியங்களுக்கு அதாவது புலன்களுக்கு அனுபவமாகாதவை பொய்யுணர்வுகள் என்று தத்துவவிவேசினி தெரிவிக்கிறது. தனது இதழ்களின் பல இடங்களில் இதனை அது வலியுறுத்தியுள்ளது (2, 45).

குறிப்பாகக் கடவுட் கருத்து, ஆன்மா குறித்த கோட்பாடு, மறுபிறப்பு, மோட்ச நரகம் ஆகியவற்றை நிராகரிப்பதற்கு பிரத்தி யட்சப் பிரமாணம் குறித்த தத்துவவிவேசினியின் கருத்துக்கள் பெரிதும் துணை நிற்கின்றன. புலனுணர்ச்சிகளை அடக்கவேண்டும், ஒழிக்கவேண்டும் எனப் பிரச்சாரம் செய்யும் யோகிகளை நோக்கிய ஒரு விவாதமும் தத்துவவிவேசினியில் முன்னெடுக்கப் பட்டுள்ளது.

இந்திரியங்களை ஒழித்தால் மனமும் ஒழிந்துவிடும் என்று தத்துவவிவேசினி வாதிடுகிறது (2, 55). எல்லா வகை உணர்ச்சிகளுக்கும் மூலாதாரமாக புலன்களே விளங்குகின்றன, புலன்களின் சகாயத்தைப் பெறாமல் எவ்வகையான உணர்ச்சி களையும் பெறமுடியாது. எனவே புலன்களை ஒழித்துவிடுபவர் களால் ‘மனத்திற்கு இயற்கையாகிய கியானம் [ஞானம், அறிவு] கிடையவே கிடையாது’ என்று (2, 74) தத்துவவிவேசினி கூறுகிறது.

தத்துவவிவேசினி அதன் கட்டுரைகளில் பயன்படுத்தும் இரண்டு சொற்கள் நம் கவனத்தைக் கவருகின்றன. ஒன்று பிரத்தி யட்சம் எனும் புலன் உணர்வுகள், மற்றது, அனுபவம் என்ற சொல். புலனுணர்வுகளை அறிவு ஈட்டுவதன் முதன்மை ஆதார மாகக் கொள்ளுதல் இந்தியத் தத்துவங்களின் வரலாற்றில் மிகப்பழங்காலந்தொட்டே பயின்று வருகிறது. ஆயின் அனுபவம் என்ற சொல் புலனுணர்வுகள் என்ற சொல்லைவிட அகலமான பொருளைக் கொண்டதாகும். சுயக்கியானியர்கள் என்ற சொல்லுக்கு விளக்கமளிக்கும்போதே அனுபவம் என்ற சொல்லின் வழியாகப் பொருள் கூறுதலைத் தத்துவவிவேசினி பின்பற்றுகிறது. எனவே அனுபவம் என்ற சொல்லின் பொருள் தத்துவ விவேசினி யின் பயன்பாட்டில் இன்னும் ஆராயப்படவேண்டிய ஒன்றாகும்.

இன்னொரு சொல்லையும் தத்துவவிவேசினி பயன்படுத்து கிறது. அது பகுத்தறிவு என்ற சொல்லாகும். மானுட ஜீவன் களுக்கு மட்டுமே பகுத்தறிவு என்ற பண்பு இருப்பதாகத் தத்துவ விவேசினி (2, 76) கூறுகிறது. பகுத்தறிவு என்ற கருத்தை தத்துவ விவேசினி தனது இதழ்களில் பெரிதும் வேறுபட்ட கோணத்தில் விளக்கியுள்ளது. ‘மானுஷீக ஒழுக்கம்’ எனும் கட்டுரையில் ‘சுகாசுகங்கள் இன்னின்ன வென்றறிதலே பகுத்தறிவாகும்’ என்று ஒரு கட்டுரை (2, 135-136) தொடங்குகிறது. பகுத்தறிவு என்பதை இக்கட்டுரை ஞானம் என்று விளக்கும் இக்கட்டுரை, ‘ஞானமென்ப தாவது நன்மை, தீமை இவை என்றும், தக்கவை, தகாதவை இவை யென்றும், சுகத்தைத் தருபவை இவையென்றும், அசுகத்தைத் தருபவை இவையென்றும் வேறுபிரித்து குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொள்ளுதலாம். ஞானம் எனினும் அறிவு எனினும் ஒக்கும். நாம் கற்றவற்றோடு மாறுபட்டுள்ள சித்தாந்தந்தங் களையும், அபிப்பிராயங்களையும் சித்தசமாதானத்தோடு அபிமான மொழித்து முற்றுமுணர்ந்து, பின் சீர்தூக்கிக் கோடலே ஞானம்’ என்று தொடருகிறது. பகுத்தறிவு என்பதற்கு இப்படி ஒரு வரையறையை நாம் எதிர்பார்த்திருக்க மாட்டோம். தமிழ்ச் சூழல்களில் பகுத்தறிவு என்ற சொல் எப்படிப் பயணித்திருக்கிறது? என்னென்ன அர்த்த பரிமாணங்களை கொண்டிருந்திருக்கிறது? என்பது போன்ற விஷயங்களை அறிய விரும்புவோர் தத்துவ விவேசினியில் அச்சொற்பயன்பாட்டை ஆராய்தல் வேண்டும்.

மனிதரின் சிறப்பிலக்கணம்

தத்துவவிவேசினி பயன்படுத்தியுள்ள பிரத்தியட்சம், அனுபவம், பகுத்தறிவு போன்ற சொற்களைத் தாண்டி இன்னும் அது அதிக தூரம் செல்லும் சில சந்தர்ப்பங்களையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ‘சங்கா நாஸ்திகம்’ என்ற தலைப்பில் எழுதப் பட்டுள்ள ஒரு கட்டுரையை (2, 102-103) இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இக்கட்டுரை மனிதரின் சிறப்பான பண்பு இன்னதென்று கணித்துக் கூறவிரும்புகிறது. விலங்குகளுக்கும் மனிதருக்கும் பொதுவாக உள்ள அமைப்புகளை அது முதலில் பேசுகிறது. இளமை, முதுமை போன்ற பருவபேதங்களும், இன்பம், துன்பம் போன்ற அவஸ்தா பேதங்களும், எலும்பு, தசை, மூளை போன்ற தாது பேதங்களும் ஞாபகம், புத்தி, மனம் போன்ற கரணபேதங்களும் விலங்குகளுக்கும் மனிதருக்கும் ஒன்றாகவே உள்ளன என்று அக்கட்டுரை முதலில் எடுத்துக்காட்டுகிறது. ஆயின் மனிதருக்கும் விலங்குகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன?

‘இப்பூவுலகிலுள்ள மாந்தரெவரும் சாதனமின்றி யாதொன்றை யும் சாதிக்க வல்லவரல்லர், ஆதலால், அச்சாதனங்களால் சாத்தியத் தைச் சாதிக்கின்ற புத்தி விசேஷமே மாந்தர்க்குட் சிறந்தது’ என்று தத்துவவிவேசினி கூறுகிறது. இவ்வரிகளில் ‘புத்தி விசேஷம்’ என்று சொல்லப்பட்டுள்ள கருத்து இதே கட்டுரையில் ‘யுத்தி’ என்றும் ‘யுத்தி சாதனை’ என்றும் பல இடங்களில் வருகிறது. தொகுதி இரண்டில், பக்கம் 70இல் ‘புத்தி யுத்திகளால்’ என்று இரண்டு சொற்களுமே இணைத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நடை முறைப் பயன்களை வழங்கக்கூடிய நவீனத் தொழில்களே அங்கு ‘புத்தி யுத்திகள்’ எனச் சொல்லப்படுகின்றன. யுத்தி சாதனைகளாக எவை குறிப்பிடப்படுகின்றன? ‘அரசத்துவம், அமாத்தியத்துவம், பாண்டித்துவம், வைத்தியம், உழவு முதலிய எத்துறை முயற்சியும்’ யுத்தி சாதனைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன (2, 102). இங்கு ‘யுத்தி’ எனப் பயன்படுத்தப்பட்டுள்ள சொல் மனிதரின் தொழில் நுட்பச் செயல்பாடுகளைக் குறிப்பதாக இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. அறிவு என்ற கருத்தின வகைமையைக் கடந்து செயல்பாட்டு அறிவு என்று பொருள்படுவதாகவும் அது அமைந் துள்ளது. சாதனங்களைக் கையாளும் திறன், கருவிகளைக் கையா ளும் திறன் என்பது போன்ற பொருளடர்த்தியைக் கொண்டதாக வும் அது அமைந்துள்ளது. ஒரு சமூக உற்பத்தித் திறன் என்ற பொருளைக்கூட அது கொண்டமைந்துள்ளது எனலாம். 

சுயக்கியானமும் மனிதநேயமும்

மனிதநேயம் என்றால் என்ன? அது எப்போது தமிழுக்கு அறிமுகமானது? இந்தக் கேள்விகளுக்குத் தத்துவவிவேசினி சில பதில்களைக் கொண்டுள்ளது. ஏற்கனவே மேலே எடுத்துக்காட்டிய ‘மானுஷீக ஒழுக்கம்’ என்ற கட்டுரையிலேயே மனித நேயம் குறித்த விளக்கங்களைக் காணுகிறோம். இது இரண்டு பக்கங்களே கொண்ட சிறிய கட்டுரையாயினும், மனித நேயம் என்பதற்கான விரிந்த வரையறையினைக் கொண்டுள்ளது.

‘இந்திரியங்களுக்கு விஷயமாகாததை உண்டென்றும், விஷயமானதை இல்லை என்றும் சொல்லுதல் அசத்தியம்’ என்று இக்கட்டுரை (2, 136-137) தொடங்குகிறது. மனித நேயம் என்ற கருத்தை விளக்க உண்மை/பொய் என்ற அடிப்படை வேறுபாட் டிலிருந்து தொடங்கிப் புலன்களுக்கு எட்டாத விஷயங்களை நம்புவதும் அதுபோன்றவற்றை மக்களிடையில் பரப்புவதும் மனித ஒழுக்கத்திற்கு மாறான செயல் என்று இக்கட்டுரை கூறுகிறது. ‘பொய்க்குப் பயப்படுதலும், பொறாமைக்கு புறம் காட்டுதலும், வசையை வழிமறித்தலும், நியாயத்தை நேசித்தலும்..மானுஷீக ஒழுக்கம்’ என்று இக்கட்டுரை அடுக்குகிறது. புலன்களால் அறிய வொண்ணாத விஷயங்களில் நம்பிக்கை வைக்காமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகத்தான் பெண்களுக்குப் பேய் பிடித்திருக்கிறது என பூசாரிகளை வைத்து பேய்களை ஓட்டு வதை இக்கட்டுரை கண்டிக்கிறது. மாறாக, தக்க வைத்தியர்களை வைத்து மருத்துவம் பார்ப்பதே மானுஷீக ஒழுக்கம் என அது வரையறுக்கிறது. ‘ஓருயிருக்கும் சிறிதாயினும் தீங்கு நினைக்காத தும் பிறருடைய பொருளைக் காஞ்சிரங்காய் போல நினைத்தலும், பிறர் செய்த நன்றியை மறவாமையும்.. பசித்தோருக்கு அன்ன மிட்டும்.. புதுமையேனும் பழமையேனும், எம்மதமேனும் எக்கொள்கையேனும்.. அவற்றில் நியாயத்திற்கும் நீதிக்கும்.. [இடமளிப்பது] மானுஷீக ஒழுக்கம்.’

பண்டைய இந்தியாவில் பொருள்முதல்வாதிகளையும் நாத்திகர்களையும் பகுத்தறிவுவாதிகளையும் அறமில்லாதவர்கள் எனச் சிறுமைப்படுத்தும் ஒரு மரபு உண்டு. ஆன்மீகவாதிகள், மதவாதிகள் ஆகியோரை இதே அளவுகோல்களின்படி அறச்சிந் தனையாளர்கள் எனச் சித்திரிக்கும் வழக்கையும் நாம் சந்தித் திருக்கிறோம். ஆயின் மானுஷீக ஒழுக்கம் எனும் தத்துவவிவேசினி யின் இக்கட்டுரை ஒழுக்கம் என்பதன் பிரமாணவியலை மிக அற்புதமாக முன்வைக்கிறது. அறியப்படாத ஆண்டவனைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதும், பேய் பிசாசுகளின் மீது நம்பிக்கை வைப்பதும் உண்மையில் அறமற்ற செயல்கள் என அது கூறுகிறது. சமயம் சாராத மானுடத்தளத்தில் அறத்தின் அடிப்படைகளை வடிவமைக்க அது முயலுகிறது. சமயம் சாராத அறம் என்ற ஒன்றை உருவாக்குவது மிகக் கடினமான, மிக முக்கியமான பணி என்பதை இங்கு நினைவூட்டுவோம்.  

பொய்யனுபவம் எனும் சொல்லாக்கம்

தத்துவவிவேசினி பத்திரிக்கை தனது கட்டுரைகளில் ‘பொய் யனுபவம்’ என்ற ஒரு சொல்லாக்கத்தைப் பயன்படுதியுள்ளது. நாத்திகம், பூதவாதம், பகுத்தறிவு போன்ற தனது கோட்பாட்டு நிலைகளிலிருந்து தத்துவவிவேசினி எதிர்த்துப் போராட வேண்டியிருந்த சமய நம்பிக்கைகள், கோட்பாடுகள், சமய உணர்வுகள் ஆகியவையே இக்கட்டுரைகளில் பொய்யனுபவங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. உண்மையான அறிவுக்கு ஆதாரம் புலனுணர்வுகளே என தத்துவவிவேசினி முன்பு குறிப்பிட்ட அந்நிலையிலிருந்தே உண்மை அனுபவம், பொய்யனுபவம் ஆகியவை வரையறுக்கப்படுகின்றன. ‘மெய் நாக்குக் கண் மூக்குச் செவி என்னும் ஐந்து இந்திரியங்களும் தமக்கு விடயமாகிய திரவியங்களை அறிய அவற்றால் விளைந்த அனுபவம் உண்மை யனுபவம். இந்திரியங்களுக்கு விடயமில்லாத திரவியங்களும் உளவெனச் சத்தமாத்திரத்தானறிந்து பாவனா வாசனையாய் விளைந்த அனுபவம் பொய்யனுபவம். இப்பொய்யனுபவத்திற்குக் காரணம் சமய சாத்திரங்களும் சமய போதனையும் சமயவொழுக்கப் பயிற்சியும் சமயிகளுடைய சகவாசமுமாம்’ (2, 43). உலகவரலாற் றில் பொய்யனுபவங்களின் அடிப்படையில் இன்றுவரை மிகப் பெரிய ஒரு கருத்தியல் நிறுவனமாக நிலவிவருவது மதமாகும். உழைக்கும் மக்கள் அவர் களைப் பீடித்துள்ள பொய்யுணர்வுகளிலிருந்து விடுதலை பெறாமல், தமது ஏழ்மைக்கும் மிடிமைக்கும் அடிப்படையாக விளங்கும் உண்மைக் காரணிகளைக் கண்டறிய முடிவதில்லை என்பதாலேயே முற்போக்கு சக்திகள் மதங்களுக்கு எதிராக அணி திரளுகின்றன.

தத்துவவிவேசினி பத்திரிக்கை மதநம்பிக்கையை ‘சுயக்கியான மாகிய மெய்யுணர்வைத் தடைசெய்யும் பாசம்’ என்று குறிப் பிடுகிறது. ‘இப்பாசத்தால் பந்திக்கப்பட்டவர்கள் ஆஸ்திகர்கள் என்று கூறப்படுவார்கள்.’ இக்கட்டுரையில் தத்துவவிவேசினியின் நுட்பமான சொற்பயன்பாடு நமது கவனத்தைக் கவருகிறது. ‘முக்தி, மோட்சம், கடவுள் போன்றவற்றை அடையவிடாமல் தடை செய்யும் பாசம், பந்தம், பற்று, அறியாமை’ என்ற மொழிப் பயன்பாட்டை நாம் அறிவோம். இந்தியச் சமயத் தத்துவங்கள் இப்படிப்பட்ட ஒரு மொழியைத்தான் பலகாலமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றன. தத்துவவிவேசினியோ மரபான சமயத் தத்துவங் களின் மொழியைத் தலைகீழாக மாற்றி, சுயக்கியானத்தை அடைய விடாமல் தடைசெய்யும் பாசம், பந்தம், அறியாமை போன்ற பொய்யனுபவங்கள் என்று எழுதுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மொழிக்குள் நிகழ்ந்து வந்த ஒரு தலைகீழ் பொருள் கொள்ளுதலை (Abuse of Language) தத்துவவிவேசினி இங்கு சரிசெய்திருப்பதைக் காணுகிறோம்.

முடிவுரை

தத்துவவிவேசினியின் கட்டுரைகள் பல மெய்யியல் விவாதங் களைத் தம்மில் கொண்டுள்ளன. அவை விரிவாகவும் நுட்பமாக வும் பேசப்படவேண்டியவை. அவை வெறுமனே மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்து சேர்ந்த ஒரு நாத்திகத்தைப் பேசுவதோடு நிறுத்திவிடவில்லை. இந்தியாவின் மிகப்பழமையான பல தத்துவ விவாதங்களை அவை சமகாலத் தன்னுணர்வுக்குக் கொண்டுவரு கின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் வளர்ச்சியடையாமல் நின்று போயிருந்த சில மிகப்பழைய தத்துவங்களுக்கு புதிய கருவிகளை அவை வழங்குகின்றன. இதே காலக்கட்டத்தில் இந்திய, தமிழ்ச் சூழல்களில் பல சமயத் தத்துவங்கள் மறு உயிர்ப்பு பெற்றதை நாம் அறிவோம். ஆயின் சமூக வரலாற்றுப் போக்கின் முன்னோடி யான சில சிந்தனைப் போக்குகளை மீட்டு வளர்ச்சியடையச் செய்த பணியைத் தத்துவவிவேசினி செய்திருக்கிறது என்பது அதன் மிகப்பெரிய சிறப்பாகும்.

(பேராசிரியர் ந.முத்துமோகன், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் குருநானக் இருக்கையின் பேராசிரியராக இருந்தவர். “தத்துவம் - சமயம் - மனிதநேய சிந்தனைப் புலம்” எனும் துறையில் பணியாற்றி இப்போது பணி நிறைவு பெற்றுள்ளார்.)

Pin It