(சென்னை இலௌகிக சங்கத்தினர், காலனிய காலத்தில் வறுமையால் மக்கள் படும் துன்பங்களைக் கண்டனர். இதனை நீக்கு வதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசினர். உணவு உற்பத்தி, மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவை தொடர்பான மால்தூசியன் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு செயல்பட் டனர். இந்தப் பின்புலத்தில் குடும்பக் கட்டுப்பாடு அவசியம் எனக் கருதினர். மேலும் காலனிய கால வேளாண்மை அழிவு; கைத்தொழில் செய்யும் தொழிலாளர்கள் எவ்வகையில் நவீன ஆலைகளின் வருகையால் பாதிக்கப்படுகின்றனர் ஆகியவை குறித்தும் இவ்வமைப்பினர் பேசினர். இக்கட்டுரையில் மேல் குறித்த செய்திகள் தொடர்பான விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.)

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிமறைந்து ஆங்கில அரசின் நேரடி ஆட்சியின் கீழ் 1858இல் இந்தியா வந்து இருபது ஆண்டுகள் கழிந்து சென்னை இலௌகிக சங்கம் உருவாகி யுள்ளது. நிர்வாக அடிப்படையில் ஆங்கிலக் காலனியம் தன்னை வலுவாக நிலை நிறுத்திக் கொண்ட காலம் இது எனலாம்.

இரயத்துவாரிமுறை, ஜமீந்தாரிமுறை, மிட்டாதார்முறை என நிலஉரிமை முறைகளைக் கிழக்கிந்தியக் கம்பெனி தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியிருந்தது. ஆங்கில ஆட்சியிலும் இந்த உரிமை முறைகள் தொடர்ந்தன. இங்கிலாந்தில் ‘தொழில் புரட்சி’ ஏற்பட்டிருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு அதன்தாக்கம் காலனிய இந்தியாவில் உடனடியாக ஏற்படவில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில்தான் பருத்தியைக் கச்சாப் பொருளாகக் கொண்ட பருத்தி அரவை ஆலைகளும் நூற்பாலைகளும் சணல் ஆலைகளும் தொடங்கின; என்றாலும் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குள் இந்தியா முழுமையாக நுழையவில்லை.

தானியவடிவிலான வரிவிதிப்பை, பணவடிவிலான வரிவிதிப் பாக ஆங்கில அரசு மாற்றியமைத்தபின்னர் தமிழ்நாட்டின் உழுகுடிகள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகத் தொடங்கினர். மலைத்தோட்டங்களுக்கு உரிமையாளர்களாக விளங்கிய ஆங்கிலேயர்கள் தேயிலை, காஃபி பயிரிட்டு ஏற்றுமதி செய்ய லாயினர். கிராமப்புறங்களில் உணவு தானியப் பயிர்களைப் பயிரிடுவது படிப்படியாகக் குறைந்து, பருத்தி, நிலக்கடலை, அவுரி ஆகிய பணப்பயிர்களைப் பயிரிடுவது பரவலாகத் தொடங்கியது. இவை ஏற்றுமதிப் பொருள்களாயின.

வேளாண் பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்வதில் குடியானவன் தன் உரிமையை இழக்கலானான். இவற்றைக் கொள்முதல் செய்து விற்கும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் இந்திய வேளாண் பொருளாதாரத்தில் வலுவாகிவிட்டது. நகரமயமாதல், அரசுப்பணி, நவீனக்கல்வி என்பனவற்றின் விளைவாக உருவான மத்தியதரவர்க்கம் கிராமப்புறங்களை விட்டு வெளியேறியதால், ‘தலத்தில் இல்லாநிலவுடைமையினர்’ உருவாயினர். சிறு மற்றும் நடுத்தர நிலஉடைமையாளர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாயினர்.

நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் ‘கூலிகள்’ என்ற பெயரில் இந்தியா மற்றும் ஏனையக் காலனிய நாடுகளின் மலைத்தோட்டங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம் பெயராதோர் வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டனர்.

போதிய அரசு ஆதரவின்மையாலும் மூலப்பொருட்கள் விலையேற்றத்தாலும், இறக்குமதிப் பொருட்களுடன் போட்டி யிட முடியாமையாலும் நெசவு மற்றும் பாரம்பரியக் கைவினைத் தொழில்கள் நலிவடையத் தொடங்கின.

இத்தகைய சமூகச் சூழலில்தான் சென்னை இலௌகிக சங்கம் செயல்படத் தொடங்கியது. காலனிய ஆட்சியின் விளைவால் வளர்ச்சியடைந்த சென்னை நகரம் இவ்வமைப்பு செயல்படும் களமானது. காலனியம் உருவாக்கிய நவீனக் கல்வி பெற்ற புதிய மத்தியதரவர்க்கத்தினர், இதன் புரவலர்களாகவும் அமைப்பாளர் களாகவும் ஆயினர். இவ்வமைப்பின் அடிப்படை நோக்கம், சாதி மற்றும் கடவுள் மறுப்பு என்றாலும் காலனிய ஆட்சியின் கீழான பொருளாதார நிலைகுறித்தும் சிந்தித்துள்ளது. இது தொடர்பான பதிவுகளை இவ்வமைப்பு நடத்திய ‘தத்துவ விவேசினி’ ‘THE THINKER’ ஆகிய இதழ்களில் காணமுடிகிறது.

இப்பதிவுகளின் துணைகொண்டு காலனியப் பொருளாதாரம் குறித்து சென்னை இலௌகிக சங்கத்தின் கருத்துகளை அறிமுகப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

காலனிய இந்தியாவின் நிலை

பொருளியல் சுரண்டலும், காலனியமும் இணைந்தே செயல் படும். பொருளாதாரச் சுரண்டலை நிலை நிறுத்திக் கொள்ளும் வழிமுறையாகவே காலனிய அரசியல்அமையும். காலனியம் என்பது ஒரு நாடு குடியேற்றத்தின் மூலமாகவோ அல்லது வணிகம் போன்றவற்றின் மூலமாகவோ பிறிதொரு நாட்டின் உள்விவகாரங்களில் தனக்குச் சாதகமாக ஈடுபட்டுத் தன்வசமாக்கி அவற்றின் வளங்களைத் தனது நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதாகும் என்று பேராசிரியர் காளிமுத்து (2012:75) காலனியம் குறித்து வரையறுப்பார்.

காலனிய ஆட்சி தன் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் நிலவும் வறுமைக்குக் காரணமாக அமைகிறது. காலனிய ஆட்சியால் ஏற்பட்ட வறுமை குறித்து டிசம்பர் 1882, சனவரி 1883, ‘தத்துவ விவேசினி’, இதழில் விரிவான இரு செய்திக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

‘இந்துக்கள் நிலை’ என்ற தலைப்பிலான இவ்விரு கட்டுரை களிலும் ‘இந்து’ என்ற சொல் ‘இந்தியர்’ என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது (அரசு.வீ., 2012:42). இச்செய்திக் கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள அடிப்படைச் செய்திகள் வருமாறு:

-   இந்தியா இயற்கை வளம் நிரம்பியநாடு

-   கல்வியறிவு, கைத்தொழில் அறிவு, நுண்கலை நுட்பம் ஆகியன இங்கு இடம்பெற்றிருந்தன.

-   சாதிமதங்களால் பிளவுபட்டதால் அயலவர் படை யெடுப்புக்கு எளிதில் ஆளாகினர்.

இரும்பின் பயன்பாட்டை இந்தியர் அறிந்திருந்தமை குறித்தும், இறக்குமதிப் பொருட்கள் குறித்தும், பஞ்சு ஏற்றுமதி வாயிலாகவும், நூல் மற்றும் துணிகள் வாயிலாகவும் ஆங்கிலேயர் நிகழ்த்தும் சுரண்டல் குறித்தும் பின்வருமாறு இக்கட்டுரை குறிப்பிட்டுள்ளது. இரும்புமண் நமது தேசத்தில் கொஞ்ச மேனுமில்லை என்று சொல்லலாமா? இதரதேசத்து இரும்பு இத்தேசம் வருவதற்கு முன்னே இவ்விடத்திலிருக்கும் இரும்பு மண்ணால் இரும்பை உற்பத்திபண்ணி காரியங்களை நடத்தாமல் விட்டுவிட்டார்களா?

இவர்கள் அன்னிய தேசத்தாருடைய வேலைப்பாடுகளைக்கண்டு ஆச்சரியப்படுகிறார்களேயன்றி அவ்வித வேலைப்பாடுகளை நடத்த முயற்சி எடுத்துக் கொண்டவர்களல்லர். ஆங்கிலேய தேசத்திலிருந்து வருகின்ற இரும்பு சாமான்களத்தனையும் இந்து தேசத்திலேயே உற்பத்தி பண்ணுவார்களானால், எத்தனையோ ஏழைகள் வறுமையின் கொடுமை நீங்கி செம்மையாய் ஜீவித்து செல்வர்களாவார்களல்லவா?

நமது தேசத்திற்கு 6000 மைலுக்கு அப்புறத்திலுள்ள ஆங்கிலேயே நாட்டில் உற்பத்தி செய்யும் பீங்கான், கண்ணாடி, காகிதம் முதலிய பொருள்களைத் தாராளமாய் கொண்டுவந்து விலைப்படுத்திவிட்டு ஏராளமான திரவியத்தைக் கொண்டு போவதுடன் இத்தேசத்தில் விளையும் பருத்திப்பஞ்சை சொற்ப விலைக்குவாங்கி அவர்கள் தேசத்திற்குக் கொண்டுபோய் மீண்டும் அதைப் பலவகையான வெள்ளை நூல்களாகவும், சாயமேற்றிய நூல்களாகவும், பலவகையான துணிகளாகவும், சீட்டிகளாகவும் செய்கின்றனர்.

இவ்வாறு காலனியச் சுரண்டலுக்கு ஆட்பட்ட பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட வறுமைக்கான காரணத்தை மேலும் விரிவாக ஆராய்ந்து இரு அடிப்படைக் காரணங்களை இவ் வமைப்பு முன்வைத்துள்ளது.

வறுமைக்கான காரணம்

‘இந்துக்கள் வறுமையாளராவானேன்’ என்ற தலைப்பில் 1883 டிசம்பர் 30 இல் வெளியான கட்டுரையில் (அரசு.வீ., 2012:200-202) குடும்ப உறுப்பினர்களிடையே நிலத்தைப் பங்கீடு செய்வது கிராமப்புற வறுமைக்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது வருமாறு:

“நூறு வருஷத்திற்கு முன்னர் ஒரூரில் ஒரு சமுசாரிக்கு ஒருபங்கு நிலமிருந்தது. அதையவன் புத்திரர்களுக்கு நான்கு பாகமாகப் பிரிந்துக் கொடுத்துவிட்டான். பிறகு அவர்கள் சந்ததியில் வந்தோர். அந்நிலத்தைப் பல பங்குகளாகப் பகிர்ந்து ஜீவித்து வருகையில், இவர்களுக்கு உதித்த புத்திரர்களுக்குக் காணிபங்கு மில்லாமல் கஞ்சிக்குக் காற்றாய்ப் பறக்கின்றனர்.

நூறு வருஷத் திற்கு முன்னிருந்த சமுசாரியின் நிலம் அவன் சந்ததியில் வந்தோ ராகிய அவனது புத்திரர் பௌத்திரர்களுக்கு மிகக்குறைந்து துர்ப்பலமாய்ப்போனமைக்கு யாதுகாரணமென்று விவேகிகள் சிந்திப்பராயின் நன்கு விளங்கும்”.

“உணவைக்காட்டிலும் உண்போர் நாளுக்கு நாள் அதிகரிப்ப தால் உழுதுண்ண நிலமில்லாமல் அநேகமாயிரம் பிரஜைகள் வறுமையாளராய் வாழ்கின்றனர்” என்று குறிப்பிட்டு (மேலது:201) நிலத்தைப் பாகப்பிரிவினை செய்தலையும் மக்கள் தொகை அதிகரித்தலையும் இணைத்துக் காட்டுகிறது (மேலது 201).

இக்கருத்து மால்தூசியனிசம் என்ற கோட்பாட்டின் தாக்கத் திற்கு ஆட்பட்டதாகும். மால்தூசின் கோட்பாட்டை அறிவியல் தன்மையற்ற கோட்பாடு என்று மார்க்சியம் மறுக்கும். ஏனெனில் மூலதனம் ஒரு சிலரிடம் குவிதலும், உழைப்புச்சுரண்டலும் வறுமைக்கான காரணம் என்பதைக் கண்டுகொள்ளாது.

மக்கள்தொகைப் பெருக்கம்தான் வறுமைக்கான காரணம் என்று மால்தூசியனிசம் முன்வைக்கும். ரெவரண்ட் இராபர்ட் மால்தூஸ் (1740-1834) என்ற ஆங்கிலக் கிறித்தவ சமயக்குரு இக்கோட் பாட்டை உருவாக்கியுள்ளார். அவரது கருத்துப்படி மக்கள் தொகைப் பெருக்கமானது பெருக்கல் விகிதத்திலும் பொருள் உற்பத்தியானது கூட்டல் விகிதத்திலும் பெருகுகிறது. இதனால் இரண்டிற்கும் இடையில் பெருத்த இடைவெளி ஏற்படுகிறது. இவ்விடைவெளியே வறுமைக்கான காரணமாகிறது. இது குறித்து ‘மக்கள் தொகை’ என்ற அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது வருமாறு:

முதலாவது, மனிதவாழ்விற்கு உணவு அவசியம். இரண்டாவது, பாலினங்களுக்கிடையேயான ஈர்ப்பு அவசியம், இன்றைய நிலையிலேயே அது தொடரும். என்னுடைய வாதம் சரியென்று ஏற்றுக்கொள்ளப்படும் போது, உணவு உற்பத்தித் திறனைவிட இனப்பெருக்கத்திறன் அதிகம். எனவே, கட்டுப் பாடில்லா மக்கள் தொகை பெருக்கல் விகிதத்தில் அதிகரிக்கும். மக்கள் பெருக்கம் குறித்த ஒரு சிறிய கணக்கீடு கூட இதை உறுதி செய்யும். மக்கள் உயிர் வாழ உணவு அவசியம் என்ற இயற்கை விதி இச்சமனற்ற திறனை சமன் செய்யும். உணவுத்தட்டுப்பாடு என்ற மாறாத, உறுதியான விதி மக்கள் தொகையைக் கட்டுப் படுத்தும் என்ற பொருள் இதில் மறைந்துள்ளது. இத்தட்டுப்பாடு, யாரையாவது, எங்காவது ஏராளமான மக்களைப் பாதிக்கும் (மிக்கேல்பியுட் 2004:85)

வறுமைக்கு ஆட்பட்ட மக்களிடம் அனுதாபம் காட்டுவதற்கு மாறாக அது அவர்களுக்குக் கிட்டிய தண்டனை என்று மால்தூஸ் கருதுகிறார். அவரது கருத்துப்படி தன் உழைப்பு மற்றும் செல்வத் தின் வாயிலாக தன் குடும்பத்தை நிலை நிறுத்திக்கொள்ளமுடியும் என்ற நிலை வரும்வரை ஒருவன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. இது இயற்கையின் விதி.

இவ்விதியை மீறி மண உறவை மேற்கொள்ளும் ஏழைமனிதன் இயற்கை விதியை மீறிய குற்றத்திற்கு ஆளாகிறான் என்று கூறும் அவர் இது குறித்து மேலும் முன்வைக்கும் கருத்துக்கள் வருமாறு:

இக்குற்றத்திற்காக இயற்கை தரும் தண்டனைக்கு வறியவரை விட்டுவிட வேண்டும். அது தான் வறுமை என்ற தண்டனை. இயற்கை தந்த தெளிவான எச்சரிக்கையை கவனிக்கத் தவறி விட்டனர். எனவே இவ்வறிய நிலைக்கு அவர்களே காரணம்; வேறு யாருமில்லை. எனவே தேவாலயத்தில் வறியவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட வேண்டும்.

உறுதியற்ற தனிநபரின் தயவில் காலம் தள்ள வேண்டும். கடவுளின் விதிகள்தான் இயற்கையின் விதிகள் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் விதிகளை மீறியதற்கானத் தண்டனையை அவர்கள் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும். தகப்பனின் ஒழுக்கக்கேட்டிற்காக அப்பாவித் தாயும், பிள்ளை களும் துன்புறுவது பரிதாபம்; ஆனால் வேறு வழியில்லை (மேலது)

மால்தூசின் கருத்துக்களுக்காட்பட்டவர்கள் ‘மால்தூசியன் நூல் வெளியிட்டுக்கழகம்’ என்ற பெயரில் அமைப்பொன்றை சென்னை யில் நிறுவியுள்ளனர். Malthusian Tract என்ற தலைப்பில் சிறுநூலொன்றை இவ்வமைப்பு வெளியிட்டுள்ளது. Malthusian Tract: 8 என்ற குறிப்பு இக்குறுநூலில் இடம்பெற்றுள்ளதால் இதுபோன்ற குறுநூல் வெளியீட்டில் இவ்வமைப்பு ஆர்வம் கொண்டிருந்தமை புலனாகிறது. மேற்கூறிய குறுநூல் இவ் வமைப்பின் ஆங்கில மொழி இதழான ‘THE THINKER’ என்ற இதழில் தொடர்கட்டுரையாக வெளியாகியுள்ளது.

இக்குறுநூலில் ‘வறுமைக்கான காரணம் என்ன? என்ற வினாவையெழுப்பி அதிகமக்கள் தொகைதான் வறுமைக்கான காரணம் என்ற முடிவு கூறப்பட்டுள்ளது. (அரசு 2012 Volume 6: 188-190). அத்துடன் குடிப்பழக்கமும் வறுமைக்கான காரணங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (மேலது 252). மக்கள்தொகை அதிகரிப் பால் ஏற்படும் வறுமையைப்போக்க தாவர உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடித் தல், இடப்பெயர்ச்சி என்பனவற்றைத் தீர்வாக முன்வைப்பதை இக்குறுநூல் மறுத்துரைக்கிறது (மேலது 276).

வறுமை என்பது இயற்கை தரும் தண்டனை என்ற மால்தூசியன் கருத்தைக் குறிப்பிடாது விட்டுள்ளனர். நாத்திக இயக்கம் என்ற வகையில் எச்சரிக்கையுணர்வுடனேயே மால்தூசின் கோட்பாடு களை இவ்வியக்கம் அணுகியுள்ளது.

குடும்பக்கட்டுப்பாடு

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் வாயிலாக வறுமையைத்தடுக்க முடியும் என்ற கருத்தின் தொடர்ச் சியாக, குடும்பக்கட்டுப்பாடு இவ்வமைப்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது. 1884 ஆகஸ்ட் 17 “THE THINKER” இதழில் ‘Marital prudence, Politically and socially considered’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் குடும்பக்கட்டுப்பாட்டின் தேவையைக் குறிப்பிடுகிறது. (அரசு.வீ. 168-171). உடல் உழைப்பாளிகள் தம் உழைப்புக்குப் பேரம் பேசும் ஆற்றலை, குறைந்த மக்கள் தொகையே தரும் என்ற கருத்தும் இக்கட்டுரையில் இடம்பெற் றுள்ளது. (மேலது 169).

காலனி ஆட்சிக்கால வேளாண்மை

தொழிற்சாலைகள் பரவலாக உருவாகாத காலகட்டத்தில் அரசு ஊழியமே வேளாண் தொழிலுக்கு மாற்றாக அமைந்தது. வரையறுக்கப்பட்ட உத்திரவாதமான ஊதியம் மட்டுமல்லாது, கையூட்டு, அதிகாரம் என்பனவும் அரசு ஊழியத்தில் கிட்டும் என்று நம்பியதால் அரசு ஊழியம் என்பது சராசரி மனிதர்களின் ஈர்ப்புக்குறியதாய் விளங்கியது.

‘கால்காசு சேவகம்னாலும் கவர்ன்மெண்ட் சேவகம்’

ஆசை இருக்கு தாசில்பண்ண (தாசில்: தாசில்தார் பதவி)

அதிருஷ்டம் இருக்கு கழுதைமேய்க்க

என்ற பழமொழிகள் இவ்ஈர்ப்பின் அடிப்படையிலேயே உருவாகி யுள்ளன.

நவீனக் கல்வி கற்றவர்களிடையே அரசு வேலை குறித்து நிலவிய ஆர்வத்தால் வேளாண்தொழில் புறக்கணிக்கப்படுவதை 1884ஆம் ஆண்டு தத்துவவிவேசினி இதழில் வெளியான கட்டுரை பின்வருமாறு விமர்சிக்கிறது.

இனி, சுதேசிகளாகிய நம்மனோர்கள்! நீங்கள் வேளாண்மை யிலும் சிறந்ததொழில் இங்கிலீஷ்படித்து உத்தியோகஞ் செய்த லென்று நினைக்கின்றீர்கள். கலப்பைபிடித்து உழுதலினும் இறகு பிடித்து எழுதுதல் எவ்வாற்றான் மேம்பட்டதோ? கலப்பை பிடித்துழுது சம்பாதிக்கினென் இறகு பிடித்தெழுதிச் சம்பாதிக்கினென்?

இரண்டினாலும் வருவது பிரயோசனந்தானே யென்றாலும், இறகு பிடித்தெழுதி எல்லாக்காலத்திலும் எல்லாத்தேசத்தி லும் சுவாதீன மாயிருந்து சம்பாதித்தல் கூடாது, கலப்பைபிடித் துழும் தொழிலினாலோ எல்லாக்காலத்திலும் எல்லாத் தேசத்திலும் பயனடைதல் கூடுமே. இங்கிலீஷ்பாஷை நம்மூரில் அரிதாயிருந்தகாலத்தில் அதுபடித்த அநேகர் சன்மானிக்கப்பட்டார்கள். இங்கிலீஷ் மலிந்த இந்நாளில் அதுபடித்த பலர் தரித் திரராய் நிர்ப்பாக்கியராய் அலைவது பிரத்தியஷமே. அப்படியிருக்கவும், நுமக்குரிய தொழிலையும் நுமது தமிழ்ப்பாஷையை யும் பயிற்றாது வீணே இங்கிலீஷ்பயிற்றி ஏன் நும்பிள்ளைகளைக் கெடுக்கின்றீர்கள்”.

இவ்வாறு வேளாண்மையின் சிறப்பை வலியுறுத்துவதுடன், ஏழை உழுகுடிகள் மீதான சுரண்டல் முறை ஒன்றை வெளிப் படுத்தும் கடிதம் ஒன்றை 1884 மார்ச் 30ஆம் நாள் ‘தத்துவ விவேசினி’ இதழில் வெளியிட்டுள்ளது (மேலது 246). நிலக் கடலை பயிரிடும் விவசாயிகளுக்குக் கடன்கொடுத்துவிட்டு கடலை விளைந்தவுடன் கடலைவடிவில் பணத்தைத் திரும்ப வாங்கும் வியாபாரிகள் அதிக அளவு கொண்ட கள்ளமரக்காலைப் பயன்படுத்துவதையும் அரசு அதிகாரிகள் இதைக் கண்டுகொள்ளா ததையும் இக்கடிதம் குறிப்பிடுகிறது.

காலனிய ஆட்சியில் உழுகுடிகளின் அவலத்தை வெளிப் படுத்தும் கடிதங்களையும் ‘தத்துவவிவேசினி’ வெளியிட்டு வந்துள்ளது. அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் என்பவர் வன்னியருக்கு உரிமையான நிலங்களை, வேளாளரும், பார்ப்பனரும் பறித்துக் கொண்டமை குறித்தும், காலனிய அரசின் வருவாய்த் துறை அதிகாரிகள் இதற்குத் துணைநின்றமை, அவர்களின் ஊழல், பஞ்சத்தின் அவலம் ஆகியன குறித்தும் தத்துவ விவேசினி இதழில் ஒன்பது கடிதங்களை வெளியிட்டுள்ளார் (அரசு.2013:87-102). ஆதிக்க சாதியினரின் சுரண்டலுக்கு, காலனிய அரசு துணைநின்றமையை இக்கடிதங்கள் உணர்த்து கின்றன.

வேளாண் குடிகளிடம் நிலவரி வாங்கி வந்த காலனிய அரசு, வரிகட்டத் தவறியோரிடம், வரித் தொகையை வட்டிபோட்டு வாங்கத்தொடங்கியது மக்கள் எதிர்ப்பினால் பின்னர் அது கைவிடப்பட்டது. 1884 டிசம்பர் ஏழாம்நாள் ‘தத்துவவிவேசினி’ இதழ், வட்டிவாங்கும் வழக்கம் நிறுத்தப்பட்டதை மக்களுக்கு அறிவித்துள்ளது (அரசு.வீ., 2012:412).

காலனிய ஆட்சியில் கைத்தொழில்

அன்றையச் சென்னை மாநிலத்தின் கைத்தொழில்கள் குறித்த சில விமர்சனங்களையும் இச்சங்கம் வெளிப்படுத்தியுள்ளது. 1884 பிப்ரவரி 17ஆம் நாளிதழில் ‘சென்னை இராஜதானியின் கைத்தொழில்’ என்ற தலைப்பில், இப்பகுதியின் கைத் தொழில்கள் குறித்த சிறிய அறிமுகம் வெளிவந்துள்ளது (அரசு 2012:226-227). இவ்வறிமுகத்தின் தொடக்கத்தில் கைத்தொழில் என்பது மனிதர் தங்கள் கைகளால் புரியும் வேலைகளெனப் பொருள்படுமாயினும், யந்திரங்களால் நடத்தப்படும் வேலைகளையும் அடக்கி நிற்கும். தற்கால யந்திரங்களால் புரியாத வேலைகளுக்குப் பிடிக்கும் செலவிற்குத் தக்க வருமானமில்லாமற் போவனவாயிருக்கின்றன. இதன்காரணத்தைப் பரியாலோசிக்கில் மனிதரின் யுக்தியால் யந்திரங்கள் உண்டுபண்ணப்பட்டமையே யாமென விளங்குகின்றது.

ஒவ்வொருதேசத்தின் செல்வவிருத்தி அவ்வத்தேசங்களின் கைத்தொழிலால் விருத்தியடைகின்றமையாலும், யந்திரங்களி னுதவியை அதிகமாகக் கொள்ளும் தேசங்களில் கைத்தொழில் விசேஷமாய்ச் செய்யலாமாதலாலும், நமது தேசத்தின் உண்மை நிலைமையை யுணரவேண்டில் இத்தேசத்தின் கைத்தொழிற் சாலைகளையும், அவற்றில் நடந்துவரும் வேலைகளையும் நண்குணர்தல் ஆவசியகம்” என்ற விளக்கம் இடம்பெற்றுள்ளது. யந்திரத் தொழிலின் வளர்ச்சி குறித்த ஆதரவான நிலைப்பாட்டை இவ்வமைப்பு கொண்டிருந்ததை இதனால் உணரமுடியும்.

இதன் தொடர்ச்சி போன்று பிராட்லா என்பவரின் கருத்துக் களைத் தொகுத்து 1884 ஏப்ரல் ஆறாம் நாள் இதழில் ‘சுதேசக் கைத்தொழிற்சாலை’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர் (மேலது 250-251). இதன் இறுதியில்

“ஆங்காங்கு பற்பல தொழிற்சாலைகளை ஏற்படுத்தித் தொழில் விர்த்தி செய்து வருதல் வேண்டும். இதைப் பற்றி கனவான்களும், ஏழைகளும், சுதேசாபிமானிகளும் தீர்க்காலோசனை செய்து முயற்சிபுரிதல் வேண்டும்” என்ற வேண்டுகோள் இடம்பெற்றுள் ளது. நவீனத் தொழிற்வளர்ச்சியை வரவேற்கும் இவ்வமைப்பின் மனநிலையை இக்குறிப்பு உணர்த்தி நிற்கிறது.

அதே நேரத்தில் யந்திரத் தொழிலின் வாயிலாக காலனிய ஆட்சி ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகளையும் இவ்வமைப்பு உணர்ந்துள்ளது என்பதற்கும் சான்றுள்ளது. காலனியம் அறிமுகப்படுத்திய நவீனப் பருத்தித் தொழிலால் இந்திய நெசவாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தத்துவ விவேசினி 1884 ஆகஸ்ட் 24 இதழில் ‘கைத்தொழில்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் (மேலது 346-47).

“இப்போது மதுரைமுதலானவிடங்களில் நெய்தல் தொழிலைச் செய்திருந்தவரில் அனேகர் புருஷாளாயுள்ளவர் பிச்சை யெடுப்போராகியும் ஸ்திரிகள் வேசைத்தொழிலைப் புரிபவராயு மிருக்கின்றனரே” (மேலது 347). “கைத்தொழில் செழிக்காவிடின் தீயவகையில் தேட்டஞ் செய்த பொருள் போல் நமது திரவியத்தைப் புறத்தேயத்தார் கொள்ளை கொள்ளநேரிடும்.

மேலும் நமது தேயத்தில் நூற்றுக்குச் சராசரி ஐந்து பேர்கள்தான் படிக்கக்கற்றவரென்று குடித்தொகை கணக்கில் கூறப்பட்டிருப்ப தால் நம்தேயத்தார் பெரும்பாலும் வேலைசெய்து ஜீவிப்போராகவே யிருக்கின்றனர். கைத்தொழில் குறைவில், பணியாளர்களுக்கு வேலையின்மையால் ஜீவனத்திற் கானியுண்டாகும் அப்படிக் குண்டாவதால் திருட்டுமிகுதியாகும் திருட்டுமிகுந்தால் பயங்கரம், கொலை முதலானவை மிகுதியாகும். அவை மிகுதி யானால் நமக்குச் சுகமென்பது இல்லாமற்போமே” (மேலது 347) என்று குறிப்பிட்டுள்ளனர்.

நமது தொழில் நுட்ப அறிவு என்பது பாரம்பரியம் சார்ந்த ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. தொழில் நுட்பத்தில் வல்லவர் களாய் இருந்தாலும் ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்டவர்களாகவே, தொழிலாளர்கள் இருந்துள்ளனர். அய்ரோப்பாவில் இவ்விடை வெளி இல்லாமைக்கு தொழில்நுட்பப் பள்ளிகளின் தோற்றமே காரணம் என்பதையும், அதுபோன்று நம்மிடையே இத்தகைய பள்ளிகளைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதையும் இக்கட்டுரை யில் வலியுறுத்தியுள்ளனர் (மேலது347-348).

இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்கள் இங்கிலாந்து நாட்டின் சந்தையைப் பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில் ஆங்கில அரசு அதிக அளவிலான இறக்குமதி வரியை விதித்து வந்தது. இதனால் இந்தியப் பொருட்களின் விலை உயர்ந்து விற்பனை குறைந்தது. இது குறித்து 1883 மார்ச் பதினொன்றாம் நாள் தத்துவ விவேசினி இதழில் குறிப்பொன்று ‘வர்த்தமானம்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. (அரசு.வீ., 2012:76-77). அக்குறிப்பின் இறுதியில் இங்கிலாந்திலிருந்து இங்குவரும் சரக்குகளுக்கு தீர்வையில்லாமல் நன்றாய் செலவாகும்படிவிட்டு, இங்கிருந்து இங்கிலாந்துக்குப் போகும் சாமான்களுக்கு அவ்விடத்தில் தீர்வை அதிகமாய் விகித்து அங்கு அவற்றை செலவாகாமல் செய்வது ஓர் பெருத்த அநியாயம், அநியாயமே” என்று தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது (அரசு.வீ., 2012:77).

காலனிய ஆட்சியில் வரிமட்டுமின்றி இந்தியாவிற்குள்ளும் காலனிய அரசு பல்வேறு வரிகளை விதித்து வந்தது. காலனிய அரசின் வரிவிதிப்புக் கொள்ளை குறித்தும் அவ்வப்போது தம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. நகராட்சியின் வரிவிதிப்பு குறித்த கற்பனையான செய்தியன்று ‘கனவா! நினைவா! கண்டது பொய்யோ’ என்ற தலைப்பில் 1884 நவம்பர் 9ஆம் நாள் இதழில் வெளியாகியுள்ளது (மேலது 394-395).

இக்கட்டுரையின் எள்ளல் தன்மைக்குச் சான்றாக “மரமேறும் சான்றோர் வெந்நீர் வைத்துக் குளிக்கும் பொருட்டுப் பழுப்போலைகளை ஏதாவது ஒன்றிரண்டு கொண்டு வந்தால் அதற்குங் காலணா வரிகட்டச் சொல்கின் றார்களாம். இதைக்கண்ட அவர்கள் இதேது கிணறுவெட்டப் பூதம் புறப்பட்டதென்று வெறுத்து, ‘இதை நீங்களே உங்கள் தலைமேல்போட்டுக் கொளுத்திக் கொள்ளுங்களென்று’ ஓலையை எறிந்துவிட்டுப் போய்விட்டார்களாம்” என்ற பகுதியைக் குறிப் பிடலாம். எள்ளல் தன்மையுடன் நின்றுவிடாமல் வரிக் கொடுமையில் இருந்து விடுபடும் வழிமுறையாக ‘நீங்கள் யாவரும் ஒற்றுமையுடையவர்களாய் மாநாடுகூடி நமது இராஜப் பிரதிநிதிக்கு மனுச் செய்துகொள்ளுங்கள் வழியுண்டாகும்’ என்ற கருத்து முன்மொழியப்படுகிறது (மேலது).

1884 டிசம்பர் 21ஆம் நாள் ‘தத்துவவிவேசினி’ இதழில் வெளியான கட்டுரையில் ‘காலனியாட்சி அறிமுகப்படுத்திய பல புதியவரிகளைக் குறித்த செய்தியுள்ளது. காலனிய அரசு விதிக்கும் வரியானது பொருட் களின் விலையேற்றத்துக்குக் காரணமாய் அமைவதாய் இக் கட்டுரை குறிப்பிடுகிறது (மேலது: 418-420).

காலனிய அரசின் வரவு செலவு

தன் கட்டுப்பாட்டிற்குள் உள்ள நாடுகளில் வாங்கும் வரியின் துணையுடன் வேறு நாடுகளைக் காலனியாக்குவதும், தனக்கு ஏற்படும் எதிர்ப்புகளை அடக்குவதும் காலனியத்தின் இயல்பு. இந்தியாவில் வாங்கிய வரியை எகிப்துடனான யுத்தத்தில் செலவு செய்ததை 1884 ஜீன் 29 ஆம் நாள் தத்துவவிவேசினி விமர்சனம் செய்துள்ளது (மேலது302-205). இது போன்றே ருசியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடனான யுத்தங்களிலும் இந்திய நாட்டின் வருவாயை இங்கிலாந்து செலவழிப்பது தொடர்பான தன்கவலையையும் 1885 ஏப்ரல் 12ஆம் நாள் ‘ராவல்பிண்டி தர்பார்’ என்ற கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளது (மேலது 464-465).

முடிவுரை

இதுவரை நாம்பார்த்த செய்திகள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்துப்பார்க்கும்போது, காலனிய ஆட்சிக் கால இந்தியப் பொருளாதாரம் குறித்த சென்னை இலௌகீக சங்கத்தின் அணுகு முறையாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

-  காலனிய ஆட்சியில், நாட்டில் வறுமை நிலவியதை உணர்ந்திருந்தனர்.

-  வறுமைக்கான காரணத்தை மால்தூசின் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்ந்து, மக்கள் தொகைப் பெருக்கமே வறுமைக்குக் காரணம் என்ற தவறான முடிவுக்கு வந்தனர். அதே நேரத்தில் வறுமை என்பது கடவுள் வழங்கிய தண்டனை என்ற மால்தூசியன் கோட்பாட்டைப் புறக்கணித்துள்ளனர்.

- இதன் அடிப்படையில் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்தையும், குடும்ப உறுப்பினர்களிடையே நிலம் துண்டாடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தினர்.

- காலனிய அரசின் வேலைகளை நாடிச் செல்வதற்கு மாற்றாக, வேளாண்மையை மேற்கொள்ளுவது பயனுடை யது என்ற கருத்தை முன் வைத்தனர்.

- நவீன ஆலைத் தொழிலையும் கைத்தொழில் என்றே கருதியதுடன், காலனிய அரசின் ஏற்றுமதி இறக்குமதி வரிகள் இந்தியக் கைத்தொழிலைப் பாதிப்பதையும் சுட்டிக்காட்டினர்.

-  தொழிலாளர்களுக்கென்று பள்ளிகள் தொடங்க அறிவுறுத்தினர்.

- காலனிய அரசின் வரிகளைக் குறித்து விமர்சித்ததோடு, அவ்வரிவருவாய், காலனிய அரசின் யுத்தங்களுக்கு செலவிடப்படுவதையும் விமர்சித்துள்ளனர்.

இவ்வாறு சென்னை இலௌகிக சங்கம் தான் செயல்பட்ட காலத்தில் காலனிய ஆட்சியில் நிலவிய பொருளாதார நிலைகுறித்த தன் அணுகுமுறைகளை, தான் நடத்திய ‘தத்துவ விவேசினி’ இதழின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது. இவ் வமைப்பு உருவாகிச் செயல்படத் தொடங்கிய காலத்தில் (1878) இந்திய தேசியக் காங்கிரஸ் உருவாகவில்லை. 1885இல்தான் இந்திய தேசியக் காங்கிரஸ் அகில இந்திய அமைப்பாக உருவா னது. 1888இல் சென்னை இலௌகிக சங்கத்தின் செயல்பாடு நின்று போய்விட்டது.

இந்தியாவில் ஆங்கிலேயர் தம்மை அறியாது செய்த பணிகளில் ஒன்று இந்திய தேசியத்தை உருவாக்கியது. இவ்வாறு உருவான இந்திய தேசியத்தின் தலைமை 1880 தொடங்கி 1905 முடிய உள்ள காலத்தில் உருவாக்கிய பொருளாதாரத் திட்டங்கள் குறித்து, ‘இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் பிபின் சந்திரா நூலொன்றை 1966இல் வெளியிட்டுள்ளார்.

அந்நூலின் இறுதி இயலில், பொருளாதார தேசியம் என்பது குறித்து விவாதித்துள்ளார் (பிபின் சந்திரா 1991:736-759). அதில் இடம்பெற்றுள்ள முக்கிய கருத்துக்களின் பின்புலத்தில் சென்னை இலௌகிக சங்கம் காலனியப் பொருளாதாரம் தொடர்பாகக் கொண்டிருந்த கருத்துக்களை ஆராய இடமுள்ளது. ஆனால் விரிவஞ்சி அதை இங்கு மேற்கொள்ளவில்லை. என்றாலும் அதனையட்டி சில மதிப்பீடுகளை மட்டும் இங்கு முன் வைக்கலாம்.

-  தொடக்ககால இந்தியதேசியத்தலைவர்கள் படித்த மத்திய தரவர்க்கத்திலிருந்து வந்தவர்கள் என்றாலும் அவர்களது பொருளாதாரத் திட்டங்கள் வேலை தேடும் மத்திய தர வர்க்கத்தின் அணுகுமுறையில் உருவாகவில்லை. மத்தியதர வர்க்கத்தைப் பாதிக்கும் பல பொருளியல் கருத்துக்களை முன்வைத்தனர். (பிபின்சந்திரா 1991:751).

-  அதேநேரத்தில் பொருளாதாரநிலையில் வளமான நாடாக இந்தியா விளங்கவேண்டுமென்று விரும்பினர். படித்த அறிவாளிகள் என்ற நிலையில் மேற்கத்தியப் பொருளாதார நடைமுறைகளைப் பின்பற்றினர். இதனால் மேல்தட்டு மற்றும் மத்தியதர வர்க்கங்களின் ஆதரவை நாடியே அவர்கள் இருந்தனர். இதனால்தான் தேசிய இயக்கமானது இக்காலகட்டத்தில் செயல் அற்றதாக இருந்தது (மேலது: 754-755).

-  இக்காலத்திய இந்திய தேசியத் தலைமையானது அடிப் படையில் முதலாளித்துவக் கண்ணோட்டம் கொண்ட தாகவே இருந்தது.

இத்தகைய அரசியல் அணுகுமுறை நிலவியகாலத்தில்தான் பகுத்தறிவு வாதத்தை முன் நிறுத்தி சென்னை இலௌகீக சங்கம் செயல்பட்டுவந்துள்ளது. கற்றவர்களின் செல்வாக்கு நிரம்பிய இவ்வமைப்பு நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தியதாக காலனிய ஆட்சியைக் கருதியதில் வியப்பில்லை. என்றாலும் காலனியப் பொருளாதாரம் குறித்த சில விமர்சனங்களை முன் வைத்ததுடன் மத்தியதரவர்க்க எல்லையைத் தாண்டி தொழிலாளர்கள் கிராமப்புற உழவர்களின் மீது அனுதாபம் காட்டியுள்ளது.

இவ்வகையில் காலனியப் பொருளாதாரம் குறித்த சென்னை இலௌகிக சங்கத்தின் நிலை குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. சமூக சீர்திருத்தத்தை, குறிப்பாக நாத்திகத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட ஓர் அமைப்பு காலனியச் சுரண்டல் குறித்து இதற்குமேல் எதுவும் கூறமுடியாது என்பதும் உண்மை. ஏனெனில் அதன் முற்போக்கான நாத்திகச் சிந்தனை களை நடைமுறைப்படுத்த காலனிய அரசின் துணைதேவை யென்று நம்பியுள்ளனர்.

துணைநூற்பட்டியல்

அரசு.வீ (பதிப்பாசிரியர்) 2012 தத்துவவிவேசினி தொகுதி 4, சென்னை.

அரசு.வீ (பதிப்பாசிரியர்) 2013 அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு, சென்னை.

காளிமுத்து.ஏ.கே (2012) தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும் (1801-1947) சென்னை.

Arasu.V., Women Culture and Poverty, Collected Articles form an Atheist Journal The Thinker (1882 – 1888).

Bipan Chandra – The Rise and Growth of Economic Notionalism in Inida, Delhi, 1991.

Michel Beaud – A History of Capitalism – Delhi, 2004.

(தமிழ்ச் சூழலில் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபடும் ஆய்வறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு இணையாக இன்னொருவரைக் கூறுவது கடினம். இவர் தூத்துக்குடியில் வசிக்கும் வரலாற்று ஆய்வறிஞர்.)

Pin It