பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்ற அகில உலக கீழைத்தேயவியல் மாநாடுகளிலும் பின்னர் நடைபெற்ற ஐரோப்பிய கீழைத்தேய மாநாடுகளிலும் சமசுகிருத மொழி மற்றும் பண்பாடு தொடர்பான ஆய்வுகள் நடைபெற்ற அளவிற்குத் தமிழ்மொழி மற்றும் பண்பாடு தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வில்லை. இந்தியாவில் நடைபெற்ற கீழைத்தேய ஆய்வு மாநாடுகளிலும் தமிழியல் தொடர்பான ஆய்வுகள் மிகக் குறைவாகவே நடைபெற்றன.

இந்நிலையை 1950-1980 இடைப்பட்ட காலத்தில் முழுமையாக மாற்றி, உலகம் தழுவிய அளவில் தமிழியல் ஆய்வைப் பேரா. சேவியர் தனிநாயகம் வளர்த்தெடுத்தார். பேராசிரியர் நடத்திய Tamil Culture மூலம் இவ்வகையான, தமிழியல் ஆய்வு நடைபெற்றது. அது உலகம் தழுவிய அங்கீகாரத்தைப் பெற்றது. உலகத்தமிழ் மாநாடுகளில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இதன்மூலம் தமிழியல் என்பது உலகம் தழுவிய அறிமுகத்தைப் பெறும் சூழல் உருவானது. சமசுகிருத மரபுக்கு இணையான தமிழ் மரபை அடிகள் உருவாக்கியதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று இக்கட்டுரை பதிவு செய்கிறது.

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரை, ஐரோப்பிய நாடுகளில், கீழைத்தேயவியல் (Orientalism) குறித்துப் பேசப்பட்டது. (இன்றையச் சூழலில் இச்சொல்லாட்சி வேறுபரி மாணத்தில் பேசப்படுகிறது.) அரபுநாடுகள், ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய பல்வேறு பகுதிகளின் தன்மைகளை கீழைத் தேயவியல் எனப் புரிந்து கொண்டனர். இதில் இந்தியா என்ற நிலப்பகுதி குறித்துக் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டனர். ஜேம்ஸ் மில் எழுதிய The History of British India (1817), G.W.F.Hegel ஏழுதிய The philosophy of History (1837)ஆகிய நூல்களில் கீழைத்தேயவியல் குறித்த உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. பிரான்சு நாட்டில் இருந்த பல்வேறு தரப்பு சார்ந்த புலமையாளர்கள், பதினைந்தாம் நூற்றாண்டு முதல் இப் பொருள் குறித்துப் பேசி வந்தனர்.

இவ்வகையான உரையாடல் இன்றைக்கு இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியான கல்கத்தாவில் உருவாக்கப்பட்ட ஆசியவியல்கழகச் (1784) செயல்பாடுகளில் கூடுதல் கவனத்திற் குட்பட்டது. பிரித்தானி யர்கள் உருவாக்கிய இராயல் கழகம் ((Royal Society) பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கிச் செல்வாக்குடன் செயல்பட்டது. அவ்வகை அமைப்புகளின் தொடர்ச்சியாகவே கல்கத்தாவில் ஆசியவியல் கழகத்தைத் தொடங்கினர். இராயல் கழகத்தில் பணியாற்றிய வில்லியம் ஜோன்ஸ் (1746-1794) போன்றவர்களே ஆசியவியல் கழகத்தை யும் உருவாக்கி நடத்தினர். சமசுகிருத மொழி குறித்த விரிவான கருத்துப்பரப்பலை இவர்கள் மேற்கொண்டனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சமசுகிருதம் குறித்த புரிதல் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நடைமுறையில் இருந்தது. பாரீஸ் நகரில் உள்ள இராயல் நூலகம் 1739இல் கீழைத்தேய நூல்கள் குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டது. வீரமாமுனிவர் (1680-1746), சீகன் பால்கு (1682-1719) ஆகியோர் அறிமுகப்படுத்திய தமிழ்மொழி, பண்பாடு குறித்த புரிதலும் இருந்தது.

இவ்வகையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் செயல்பட்ட புலமையாளர்களின் சொல்லாடலில் கீழைத்தேயவியல் இடம்பெற்று வந்தது. இதன் உச்ச வளர்ச்சியாக அனைத்துலகக் கீழைத்தேயவியல் முதல் மாநாடு ((First International congress of Orientalists) 1873இல் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சமசுகிருதம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

திராவிட இயல் குறித்தும் ஓர் அமர்வு இருந்தது. பாண்டிச்சேரியைச் சேர்ந்த தமிழர்கள் இம்மாநாட்டில் பங்குகொள்ளும் வாய்ப்புப் பெற்றனர். சமசுகிருத அறிஞரான ஜுல்ஸ்பிளாக் (Jules Bloch:1880-1953) இம்மாநாட்டின் முக்கியப் புலமையாளராக இருந்தார். இவர் ஃபிலியோசாவின் (1906-82) ஆசிரியர் ஆவார். இவ் வகையில் சமசுகிருதத்தை முதன்மைப்படுத்திய அறிவுப்புல மாகக் கீழைத்தேயவியல் மேலைநாடுகளில் புரிந்துகொள்ளப் பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவ்வகையில் கீழைத்தேய வியல் மாநாடுகள் ஐரோப்பிய மண்ணிலே தொடர்ந்து நடை பெற்றன. எடின்பர்க், கேம்ப்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்களில் பணியாற்றியவர்கள் இந்த மாநாடுகளில் கலந்து கொண்டனர். ஆசிய, ஆப்பிரிக்க நிலப்பகுதிகளில் இம் மாநாடுகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் நடைபெறத்தொடங்கின. இலண்டன் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேயவியல் - ஆப்பிரிக்க ஆய்வுப்பள்ளி (School of Oriental and African Studies) 1916இல் உருவாக்கப்பட்டது. அகில உலக கீழைத்தேயவியல் முதல் பதினான்கு மாநாடுகள் மேலைநாடுகளில்தான் நடைபெற்றன. 1917இல் பண்டாரக்கர் கீழைத்தேயவியல் நிறுவனம் பூனாவில் உருவாக்கப்பட்டது. 1919இல்முதல் இந்திய - கீழைத்தேயவியல் மாநாடு (First All India Oriental congress) நடைபெற்றது. உலக அளவில் நடைபெற்ற மாநாடுகளும், இந்திய அளவில் நடைபெற்ற மாநாடுகளும் தனித்தனியே நிகழ்ந்தன.

இந்திய அளவிலான கீழைத்தேயவியல் மாநாட்டிலும் கூட 1946ஆம் ஆண்டு பேரா.ச.வையாபுரிப் பிள்ளை தலைமையுரை நிகழ்த்திய கீழைத்தேயவியல் மாநாட்டில்தான் முதன் முறையாக திராவிட மொழிகளுக்கான அமர்வுகள் நடைபெற்றன.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் (1939-45) அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகள் ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளில் பண்பாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்தத் தொடங்கினர். பழைய பாரம்பரிய முறைகளிலிருந்து மாறி, புதிய நிறுவனங் களை உருவாக்கி அதன்மூலம் நடைமுறைப்படுத்தத் திட்ட மிட்டனர். அவ்வகையில் 1945இல் உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்க கல்வி - அறிவியல் பண்பாட்டு அமைப்பு (UNESCO). இவ்வமைப்பு கீழைத்தேயம் தொடர்பான ஆய்வுகளை நிகழ்த் துவதற்குப் பொருளாதார உதவிகளை வழங்க முன்வந்தது.

இப்பின்புலத்தில் பிரித்தானிய கீழைத்தேயவியல் கழகம் (Association of British Orientalists) 1946இல் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ நிறுவன உதவியுடன் அகில உலகக் கீழைத்தேய வியல் கூட்டமைப்பு (International  Union of Orientalists) 1951இல் உருவாக்கப்பட்டது. 1953 இல் எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பிரித்தானிய கீழைத்தேயவியல் கழகத்தின் ஆறாவது மாநாடு வில்லியம் ஜோன்ஸ் அவர்களின் இருநூறாவது ஆண்டு நினைவாக நடத்தப்பட்டது. இவ்வகையில் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கம் ஆகிய காலங்களில் கீழைத்தேயவியல் ஆய்வு என்பது சமசுகிருதவியல் மற்றும் சிறிய அளவிலான திராவிடஇயல் என்ற போக்கில் நிகழ்ந்ததை அறியமுடிகிறது. தமிழுக்கான இடம்கொடுக்கப்பட்டதாகக் கூறமுடியாது. தமிழ் குறித்த புரிதல் பெரிதும் இல்லாமல் இருந்தது.

மேற்குறித்த பின்புலத்தில் தமிழ்மொழியை உள்ளடக்கிய கீழைத்தேயவியல் ஆய்வுச்சூழல் எவ்வகையில் இருந்தது என்பதைப் பின்வரும் வகையில் தொகுத்துக்கொள்ளலாம்.

  1. வில்லியம் ஜோன்ஸ் (1746-1794) கட்டமைத்த இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்திற்கு இணையாக எல்லீஸ் (1777-1819) தென்னிந்திய திராவிட மொழிகள் குறித்த கருத்தாக்கத்தை 1916இல் முன்வைத்தார்.
  2. 1956 இல் கால்டுவெல் (1838 - 1891) திராவிட மொழி களின் ஒப்பிலக்கண நூலை வெளிக்கொண்டு வந்தார். ஐரோப்பிய மரபில் அவர் பெற்ற மொழிநூல் (Philology) பயிற்சியால், திராவிட மொழிகள் குறித்த நூலை எழுத முடிந்தது.
  3. தாண்டவராயப்பிள்ளை எனும் சைவரின் மகனான சாமுவேல் பிள்ளை கிறித்தவத்தைத் தழுவினார். இவர் கிரந்த மந்தண கூடம் (Tamil Museum and Review of Philology) என்ற அமைப்பை நிறுவினார். இந்நிறுவனத் தின் மூலம் 1858இல் தொல்காப்பிய - நன்னூல் என்னும் நூலைப் பதிப்பித்தார். முதன்முதல் தொல்காப்பிய எழுத்து - சொல் அதிகாரங்களை அச்சுக்குக் கொண்டு வந்தார்.
  4. 1903இல் தமிழகத் தொல்லியல் கழகம் (The Tamil Nadu Archeological Society) என்ற அமைப்பு திருச்சியில் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின் வெளியீடுதான் The Tamilian Antiquary . இவ்வமைப்பு தமிழ் தொல் லிலக்கியம், மொழிநூல், தொல்லியல், கல்வெட்டு, காசுஇயல், இலங்கையை உள்ளடக்கிய தமிழ் வரலாறு - மொழி - இலக்கியம் - தத்துவம் ஆகியவற்றில் ஆய்வுகள் மேற்கொள்வதாக அறிவித்தனர்.
  5. மதுரைத்தமிழ்ச்சங்கம் (1901) உருவாக்கப்பட்டு, “செந்தமிழ்” (1902) மூலம் சிரத்தையான ஆய்வுகளும் பதிப்பு களும் நடைமுறைப்படுத்தப்பட்டன. 1905ல் சைவ சித்தாந்த சமாஜம் உருவாக்கப்பட்டு, தமிழியல் தொடர்பான ஆய்வுகளுக்குக் கால்கோளிட்டனர்.

மேற்குறித்த நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த காலங்களில் பிரித்தானியர்கள் மூலம் கண்டறியப்பட்ட தமிழ் தொல்லெழுத்தியல் (Paleographic), கல்வெட்டியல் (Epigraphy) காசுஇயல் (Numismatics) தொல்லியல் அகழாய்வுகள் (Excavations) ஆகியவை பல்வேறு புதிய புதிய வரலாற்றுத் தகவல்களைப் பெற அடிப்படையாக அமைந்தன. மேலும், சுவடிகளிலிருந்து தொல்பழம் இலக்கியங்கள், இலக்கணங்கள் பதிப்பிக்கப் பட்டன. அவை வெளிப்படுத்திய உலகம் புதியது. சிந்து சமவெளி அகழாய்வு புதிய உலக நாகரிக எச்சங்களை உலகுக்கு அறிவித்தது. அது திராவிட இயல் பாரம்பரியத்தைச் சார்ந்தது என்னும் கருத்து பெரும்பகுதியினரால் முன்னெடுக்கப்படுகிறது.

மேற்குறித்த பின்புலத்தில் திராவிடமொழிகள், குறிப்பாகத் தமிழ்மொழி பேசிய இனக்குழுவின் தொன்மையான வரலாறு, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய வரவாகக் கிடைத்தது. இத்தன்மைகள் 1873முதல் நடைபெற்று வரும் அகில உலக அளவிலான கீழைத்தேய மாநாடுகளிலோ, 1919 முதல் நடைபெற்றுவரும் இந்தியக் கீழைத்தேய மாநாடுகளிலோ உரையாடலுக்கு உட்பட்டதாக அமையவில்லை.

1946இல் நடைபெற்ற இந்தியக் கீழைத்தேய வியல் மாநாட்டில், பேரா.ச.வையாபுரிப்பிள்ளை தலைமை உரையில்தான் முதன்முதல் இத்தன்மை குறித்த கருத்துநிலை முன்வைக்கப்படுகிறது. கி.பி.1750-1950 என்ற இருநூறு ஆண்டுக்காலப் பின்புலத்தில் திராவிட இயலின் ஒரு சிறுபகுதி யாகத் தமிழ் குறித்த பேச்சு இருந்தது. இந்தியா எனில் சமசு கிருதம் என்னும் கருத்துநிலை ஐரோப்பிய - அமெரிக்கர்களால் கட்டமைக்கப்பட்ட கீழைத்தேயவியலின் அடிக்கருத்தாக அமைந்திருந்தது. இந்நிலையை மாற்றும் செயல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் வேறு பரிமாணம் பெறும் வாய்ப்பு உருவானது.

தமிழ்மொழி தொடர்பான புரிதல்கள் உலக ஏற்புடைமைக்கு ஒரு நூறாண்டு காலம் பிடித்தது. இந்தப் பின்புலத்தில் பேரா.சேவியர் தனிநாயகம் (1913-1980) அவர்களின் “தமிழியல்” எனும் புதிய கட்டமைப்பு குறித்த உரையாடலைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

வகையில் தொகுத்துக் கொள்ள இயலும். அதன் மூலம் தமிழியல் ஆய்வு வரலாற்றில் பேராசிரியரின் வகிபாகத்தைப் புரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் உலகம் தழுவிய அளவில் கீழைத்தேயவியல் உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதைப் போல், தமிழியல் வரலாறு உலகம் தழுவிய அளவில் அறியப்பட்ட பாங்கை அறிய உதவும். இந்தப் பின்புலத்தில் சமகாலத் தமிழியல் வரலாற்றை யும் புரிந்து கொள்ள இயலும். சமகால தமிழியல் ஆய்வு குறித்த பிரக்ஞைக்கு இவ்வுரையாடல் மிக அவசியமாகிறது.

பேராசிரியர் சேவியர் தனிநாயகம் இந்தப்பின்புலத்தில் அவர்களது தமிழியல் மற்றும் தமிழியல்ஆய்வைப் (Tamilia and Tamilology) புரிந்துகொள்ள கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்வோம். இதனை இரண்டு அடிப்படைகளில் புரிந்து கொள்வது அவசியம். அவை வருமாறு:

  1. தமிழ்ச்செவ்விலக்கியம், இலக்கணம் ஆகியவை உலக வரைபடத்தில் எத்தகைய இடத்தைப்பெறத் தகுதியுடை யவை; அவை அறியப்படாமலும் அங்கீகரிக்கப்படா மலும் இருக்கும் மரபுகள்; இதைப் போலவே தமிழர் அறமரபு, தத்துவ மரபு ஆகியவை உலகத்தில் உள்ள பிற தேசிய இனங்களின் மரபுகளோடு கொண்டிருக்கும் உறவு, உலகிற்கு அறிவிக்கப்படாமலும் அறியாமலும் இருக்கும் தன்மை.
  2. மேற்குறித்த தமிழியலை, வளர்ச்சியடைந்த காலச் சூழலில், உலக நிகழ்வாகக் கட்டமைக்கும் செயல் பாடுகள் எவை? அதனை எவ்விதம் நிகழ்த்துவது என்பதற்கான அடிப்படை வேலைத்திட்டங்கள், வெளியீடுகள், நிறுவனங்கள் ஆகிய பிற.

மேற்குறித்த இருநிலைகளிலும் பேரா.சேவியர் தனிநாயகம் அவர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவேண்டிய தேவை, அவரது நூற்றாண்டு தொடர்பான விழாக்கள், கருத்தரங்குகள், ஆய்வுகள் ஆகியவற்றின் முதன்மைப் பொரு ளாக அமைய வேண்டும். இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழலுக்கு அது ஏதோவொரு வகையில் விழிப்பூட்டுவதாக அமையலாம்.

பேரா.சேவியர் தனிநாயகம் என்னும் தனிநாயகம் அடிகள் இளமையில் கிறித்தவ சமயம் சார்ந்த படிப்பிலும் ஈடுபாட்டிலும் வாழ்ந்தவர். கிறித்தவ சமயத் தொடர்பு அவருக்கு உலகம் தழுவிய தொடர்பை உருவாக்கித் தந்தது. உலகம் முழுவதும் பயணம் செய்து அவர்பெற்ற அநுபவங்களும் பயிற்சியும் பிற்காலங்களில் தமிழியல் துறை சார்ந்த ஆய்வுப் புலத்தைக் கட்டமைக்க அடிப்படையாக அமைந்தது.

என் இருபத்தோராவது ஆண்டில் ஐரோப்பாவிற்கு நான் முதல் முதல் செல்ல நேரிட்டது. ஐந்து ஆண்டுகள் ஐரோப்பா விலும் ஈராண்டுகள் இங்கிலாந்திலும், ஓராண்டு வட அமெரிக்கா தென் அமெரிக்காவிலும், ஒன்பது ஆண்டுகள் மலேசியாவிலும் வாழ்ந்துள்ளேன். மேற்கூறிய பயணங்க ளோடு மத்திய ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா முதலிய பாகங்களில் பன்முறை சென்றிருக்கின்றேன். பல காரணங்களின் பொருட்டு உலகின் பல நாடுகளில் கல்வி பயின்றும், ஆராய்ச்சியில் ஈடுபட்டும் தமிழ்த்தூது நிகழ்த்தியும் வந்துள்ளேன். (ஒன்றே உலகம்: தனிநாயகம் அடிகள்: 2012: 18)

1945இல் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் பயிலும் மாணவரானது முதல் 1980இல் அவரது மறைவு வரை சுமார் ஐம்பது ஆண்டுகள் தமிழியல் தொடர்பான பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். இதன்மூலமே மேலே குறித்தவாறு தமிழியலை வளர்த்தெடுத் தார். 1952 இல் அவர் உருவாக்கிய Tamil culture இதழ் மூலம், அவர் கட்டமைக்க விரும்பிய தமிழியல் ஆய்வு என்பது, உலக அளவில் நடைபெற்று வரும் கீழைத்தேயவியல் எனும் சொல் லாடலில் தமிழின் இடத்தை எவ்வகையில் மதிப்பீடு செய்வது என்பதாக அமைகிறது. தமிழ் இலக்கண - இலக்கிய மரபு என்பது உலக இலக்கிய மரபில் பெறுமிடத்தைப் பதிவு செய்ய திட்டமிட்டார். இதற்கு அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பெற்ற பயிற்சி உதவியது. எம்.லிட்., பட்டம் பெறுவதற்காக, தமிழ்ச் செவ்விலக்கிய மரபில் உள்ள இயற்கை யின் இடத்தை உலக இலக்கியங்களில் பேசப்படும் இயற்கை மரபுகளோடு இணைத்து வெளிப்படுத்தும் பணியைத் தொடங்கினார்.

தமிழ்ச் செவ்விலக்கியங்கள், இயற்கை மரபை எவ்வகையில் இயல்பான வாழ்க்கை மரபாகக் காட்டுகின்றன; செவ்விலக் கியப் பாடல் மரபு என்பதே இயற்கைசார் கவிதை மரபு; காலந்தோறும் இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் செவ் விலக்கிய இயற்கை மரபாக அமைகிறது; வட்டாரம் சார்ந்த இயற்கை மரபுகள் எவை; உலக இலக்கியங்கள் காட்டும் இயற்கை மரபுகளுக்கும் தமிழ்ச் செவ்விலக்கியங்களுக்கும் உள்ள உறவு ஆகியவற்றைத் தமது ஆய்வுப் புலத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்தார். “Landscape and Poetry” என்னும் அவரது தமிழ்ச்செவ்விலக்கியம் பற்றிய ஆய்வு, உலக மரபில் தமிழ்ச் செவ்விலக்கியம் பெறுமிடத்தை மதிப்பீடு செய்வதாக அமைகிறது. இதனை அவர் வெளிப்படுத்தும் முறை பின்வரும் வகையில் அமைகிறது.

இன்று நம் தமிழ் நாட்டிற்கு வேண்டியவர் யாரெனின் ஆன்றமைந் தடங்கிய கொள்கைச் சான்றோராகிய ஆராய்ச்சியாளர் பலரே. உலகின் பல்வேறு நாடுகட்குச் சென்றதன் பயனாகவும், பிற மொழிகளையும் அவற்றின் இலக்கியங்களையும் ஒருவாறு கற்றறிந்ததன் பயனாகவும், தமிழிலக்கியம், தமிழ்ப்பண்பு, தமிழ்க் கலை, தமிழ் வரலாறு முதலியவற்றை உலகில் எவ்வளவிற்குப் பரப்பவேண்டுமென்று, ஒரு சிறிது உணர்ந்துள்ளேன்.

ஹோமரின் ஒடிசியையும், வெர்ஜிலின் இலியதையும் மக்கள் போற்றுவது போல், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை - ஒப்புயர்வற்ற முத்தமிழ்த் தொடர்நிலைச் செய்யுளை, உலகம் போற்றுமாறு நாம் செய்தல் வேண்டும். கொன்பூசியஸ், செனக்கா முதலாய நீதி நூல் ஆசிரியர்களை உலக மாந்தர் எங்ஙனம் அறிந்து படிக்கின்றனரோ, அங்ஙனமே திருவள்ளுவரையும் அவர்கள் அறிந்து படிக்குமாறு நாம் செய்வித்தல் வேண்டும். சாபோ, எலிசபெத் பிரௌனிங், ஷேக்ஸ்பியர் முதலானோரின் காதற் பாக்களை மக்கள் காதலித்துப் படித்து இன்புறுவதே போல், நம் அகத்துறை இலக்கிய நூல்களையும், அன்னார் படித்து இன்புறும்  புதிய நாள் உதிக்க வேண்டும். உலக இலக்கியத் திரட்டு (World Classics) என்னும் பெருந்தொகை நூல்களில், நம் இலக்கிய நூல்களும் கீழ்த்திசைக் கண்ணுமுள்ள பல்கலைக்கழகங்கள், தமிழ்க் கலைகளின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்துமாறு செய்வித்தல் வேண்டும். (சத்திய வேத பாதுகாவலன்: யாழ்ப்பாணம் 1951: தமிழ்த்தூது: கட்டுரைக்கொத்து: ஐந்தாம் பதிப்பு:1998:29)

பேராசிரியர் வெளிப்படுத்தும் இப்பார்வை, உலகச் செவ்விலக்கிய மரபில் தமிழின் இடத்தைப் பதிவு செய்வதாக அமைகிறது. இவ்வகையான மரபை முன்னெடுக்கும் அவசியம் உருப்பெற்றதற்கான பின்புலத்தையும் மேற்குறித்த கட்டுரை யின் தொடக்கத்தில் பேராசிரியர் கூறுவது பின்வருமாறு:

இந்திய வரலாற்று நூல்களை எடுத்து நோக்குமின். Discovery of India ஏன்றும், History of Indian Literature என்றும், பலபடப் புனைந்து வெளிவரும் ஏடுகளை விரித்துப் பார்மின். மாக்ஸ் முல்லர், வின்றர்னிட்ஸ் போன்றவர் முதலாய், வடமொழி இலக்கியத்தின் பெருமையையே விரித்துக் கூறுவர். அவ்விந்திய இலக்கியங்களின் வரலாற்றிலே தமிழ் இலக்கியத் தைப் பற்றியோ, திராவிட நாகரிகத்தைப் பற்றியோ, ஒரு சொல்லேனும், ஒரு குறிப்பேனும், ஒரு கருத்தேனும் காணக் கிடையா.

இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம், இந்தியக் கலைகள், இந்திய மொழிகள் என அவர் மொழிவனவெல்லாம் திராவிடப் பண்பு, திராவிட நாகரிகம், திராவிடக் கலைகள், திராவிட மொழிகள் இவற்றையே அடிப்படையாகக் கொண் டவை. ஆயினும், பல்லாண்டுகளாக, நடுவுநிலை கடந்தோர் பலர், இவ்வுண்மையை மறைத்தும், திரித்தும், ஒழித்தும் நூல்கள் யாத்தமையின், இன்று இவ்வுண்மையை எடுத்துக் கூறுவது தானும், மக்கள் மனத்தில் ஐயம் விளைப்பதாக இருக்கின்றது. அங்ஙனம் எடுத்துக் கூறுதற்குத் தானும் பெரிதும் மனத்துணிவு வேண்டற்பால தாயிற்று. தமிழராகிய நாமும், இந்திய மொழிகளிலே தானும், நம் தமிழை பற்றிய உண்மை களை இதுகாறும் கூறினேம் அல்லேம். (மேற்குறித்த நூல்:1998:16,17)

தமிழ்ச் செவ்விலக்கிய மரபு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் கண்டறியப்பட்டது. 1940இல் பேரா.ச. வையாபுரிப்பிள்ளை அவர்களின் Ôசங்க இலக்கியம்Õ - அகராதி முறையில் சார்ந்த பதிப்பு வெளிவந்த நிலையில், அம்மரபு நிலைபேறு கொண்டது. இதனை உலகில் பரவலாக அறியப் படும் நோக்கில் பேரா.சேவியர். தனிநாயகம் செயல்பட்டிருப் பதைக் காண்கிறோம்.

உலக இலக்கிய மரபில் தமிழ் இலக்கிய மரபின் இடத்தைப் பதிவுசெய்யும் முயற்சியாக இவரது செயல்பாட்டைப் புரிந்துகொள்ளும் தேவையுண்டு. இம்மரபு பின்னர் பேரா.க.கைலாசபதி (Tamil Heroic Poetry) போன்ற பலரின் ஆய்வுகளால் நிலைபேறு கொண்டது. இவ்வுரையாட லுக்கான தொடக்கப் புள்ளிகளைப் பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அவர்களிளின் ஆய்வில் காணலாம்.

தமிழ்ச் செவ்விலக்கிய மரபு உலக இலக்கிய மரபோடு கொள்ளும் தொடர்பைப் போல், தமிழ் நூல்கள் காட்டும் அறமரபும், தத்துவார்த்த மரபும் உலக அறம் மற்றும் தத்துவ மரபுகளோடு தொடர்பு கொண்டிருப்பதைத் தமது பல்வேறு சொற்பொழிவுகளில் வெளிப்படுத்தியுள்ளார். இவர் திருவள்ளுவர் குறித்து நிகழ்த்திய சொற்பொழிவில் இதனைப் பதிவு செய்துள்ளார். கிரேக்க ஒழுக்கவியல், உரோமிய ஒழுக்க வியல், புத்தரின் ஒழுக்கவியல் ஆகியவை திருக்குறளில் இடம் பெறுவதை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவில் பதிவு செய்துள்ளார். பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் அறம் மற்றும் தத்துவ மரபுகளோடு திருவள்ளுவரின் கருத்து களை இணைத்து வெளிப்படுத்தியுள்ளார்.

சாக்ரெட்டிஸிற்கு (கி.மு.470 - 399) முன்னிருந்த சொபிஸ்டர் (shophists) என்போர், ஒழுக்கமென்பது சமூக வாழ்வைத் தருமத்திற்கேற்றவாறு இனிது ஆற்றுப்படுத்தும் ஒரு கருவி யென்றே கருதினர். ஒவ்வொருவனும் தன்னாலியன்றவாறு தான் விரும்பிய இன்பங்களைத் துய்த்தல் கூடும் என்றும் விளம்பினர். சாக்ரெட்டின் தருணத்திற்கேற்றவாறு ஒழுக்கம் மாறும் எனும் இவர்களின் கொள்கையை ஆதரிக்கவில்லை.

இன்பமே ஒழுக்கத்தின் நோக்கமாயினும் அவ்வின்பம் மனத்தின் (பகுத்தறிவின்) இன்பமாக (Rational Pleasure) இருத்தல் வேண்டும் என்று திருத்திக் கூறினார். அரிஸ்டாட்டில் தன் மகள் நிக்கோமச்சுக்கென எழுதிய நிக்கோமக்கீயன் ஒழுக்க இயல் என்னும் நூலில் இன்பமே (Happiness) ஒழுக்கத்தின் நோக்கமென்றும், மனநலத்துடன் (Goodness) ஒன்றி இயங்க வேண்டுமென்றும் எழுதியுள்ளார். பகுத்தறிவால் மக்கள் அடையும் இன்பத்தைத் திருக்குறளும் அறத்தின் நோக்கமாக இயம்புகின்றது.

செயல்கள் இன்பம் பயப்பன என்றும் இனிது என்றும், உவப்பன என்றும் அமைவதைக் காண்க. அறத்தான் வருவதே இன்பம் - 39/ தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து/மன்னுயிர்க் கெல்லாம் இனிது - 68/ ஈத்து உவக்கும் இன்பம் அறியார் - 228/தாம் இன்புறுவது உலகின்புறக் கண்டு/காமுறுவர் கற்றறிந் தார் - 399/உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் - 394/இருள்நீங்கி இன்பம் பயக்கும் - 352/இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந்/துன்பத்துட் டுன்பங் கெடின் - 854. இக்குறட்பாக்களில் கூறப்பெறும் இன்பம், ஐம்புலன்கள் பெறும்இன்பம் ஒழிந்த இன்பம், புதல்வர் மெய்தீண்டியதால் வரும் இன்பம், அன்னாரின் சிறுகை அளாவிய கூழை உண்பதால் வரும் இன்பம், அன்னாரின் மழலைச்சொற் கேட்பதால் வரும் இன்பம் ஆகியவை புலன்களின் இன்பம்.

 தன் மகனைச் சான்றோனெனக் கேட்ட தாயின் உவகை போன்ற இன்பம், புலனிற்கும் உயிருக்கும் இன்பம். ஆயினும் மனநலம் (நிஷீஷீபீஸீமீss) அறத்தால் வரும் இன்பம், உள்ளத்தின் உவகை ஆகிய இவையே அறத்தின் நோக்கமும் பயனுமாம். (திருவள்ளுவர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்:1967)

உலகின் தொல்பழம் பண்பாடு மற்றும் நாகரிக வளர்ச்சி மரபுகள் தமிழ் மரபுகளோடு உள்ள தொடர்பு குறித்துப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் பலரும் பதிவு செய்தாலும், கிரேக்கமொழி, இலத்தீன் மொழி ஆகியவற்றைக் கற்றறிந்த பேராசிரியர். சேவியர் தனிநாயகம் அவர்களின் பதிவை வேறு கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது அவசியம். இத்தன்மைகள் குறித்து மேலும் மேலும் உறுதிப்பட்ட சான்றாதாரங்களாக இதனைக் கருதலாம்.

ஒரு தேசிய இனத்தின் தனித்த அடையாளங்களாக, அவ் வினத்தின்  இலக்கியம், அறம், தத்துவம் ஆகியவற்றைக் காண்பதோடு அவற்றை அவ்வினம் எவ்வகையில்  பதிவு செய்கிறது; அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எப்படி எடுத்துச் செல்கிறது; ஆகிய பிற உரையாடல்களை அவ்வினத்தில் காணப்படும் கல்வி தொடர்பான ஒழுகலாறுகள் வழியாகக் கண்டறிய முடியும். செவ்விலக்கிய ஆய்வைத் தமது எம்.லிட். ஆய்விற்காக மேற்கொண்ட பேராசிரியர், முனைவர் பட்ட ஆய்வில் தமிழர்களின் கல்வி மரபு குறித்த ஆய்வை மேற் கொண்டார்.

Tamil Culture இதழில் தமிழ்க்கல்வி மரபு குறித்த கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வேடு அண்மையில் நூல்வடிவம் பெற்றுள்ளது (Educational Thought in Ancient Tamil Literature : பாரதிதாசன் பல்கலைக்கழகம்:திருச்சி:2010) செவ்விலக்கியங்களில் பேசப்படும் பாணர்கள், புலவர்கள், பௌத்த- சமணத் துறவிகள் ஆகியோரை அடிப்படையாகக் கொண்டு தமிழ்க்கல்வி மரபை ஆய்வு செய்துள்ளார்.

தமிழ் மரபிற்கென உரிய கல்வியின் தனித்தன்மைகளை உலகில் உள்ள பிற தொல்மரபுகள் சார்ந்த கல்வி மரபுகளோடு இணைத்துப் பேசியுள்ளார். பேராசிரியர் சேவியர் தனிநாயகம் மட்டும் தான் தமிழர்களின் இம்மரபு குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார். உலகக் கல்வி ஒப்புமை மரபில் தமிழ்க்கல்வியின் இடத்தை மதிப்பீடு செய்துள்ளார். ஒப்பியல் கல்வி (Comparative Education) என்னும் புலத்தில் இவரது பங்களிப்பு தனித்து எண்ணத் தக்கது. பழந்தமிழ் செவ்விலக்கியங்கள் புலப்படுத்தும் கல்வி தொடர்பான அவரது பதிவு பின்வரும் வகையில் அமைந் துள்ளது.

இச்செவ்விலக்கியங்களின் மதிப்பு வரலாற்று ஆவணங் களின் பதிவு என்பது மட்டுமல்ல. இவ்விலக்கியங்களைப் புறக்கணிப்பதால் பண்டைய இந்தியா குறித்த பல்வேறு முடிவுகளும் முழுமையற்றதாகவும் ஒருதலைப்பட்சமானதாக வும் அமைந்துவிடுகிறது.

சேரோகின் (Sorokin) னின் சமூக, பண்பாட்டாய்வுகளும் சரி, சாட்விக்ஸ் (Chadwicks) இன் இலக்கிய ஆய்வுகளும், டாயன்பீ (Tonybee) யின் வரலாற்றாய்வுகளும் ப்ருபச்சர் மற்றும் வுடி (Brubac)யின் கல்வியியல் ஆய்வுகளும் கூடத் துல்லியமற்ற, முழுமையற்ற தகவல்களையே உள்ளடக் கியிருக்கின்றன. 

ஏனெனில் அவர்கள் இவ்விலக்கியங்களை யும் வேறெங்கும் காணவியலாத அதன் இலக்கிய வகைமை களையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே காரணம். பண்டைய இந்தியக் கல்வி ஆய்வுக்கான ஆதாரங்களைக் கண்டடைய பழந்தமிழ்ச் செவ்விலக்கியங்கள் வரைபடமற்ற கடலையும் அளந்தறியவியலாத ஆழங்களையும் அளிக்க வல்லன. (பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் கல்வி: மொழி யாக்கம்.ந.மனோகரன்.2009:28)

இவ்வகையில் தமிழகத்தின் செவ்விலக்கிய மரபுகள் உலகச் செவ்விலக்கிய மரபுகளோடு கொண்டுள்ள பாங்குகளை இலக்கியம், அறம், தத்துவம், கல்வி ஆகிய மரபுகள் சார்ந்து உரையாடலுக்கு உட்படுத்தி இருப்பதைக் காண்கிறோம். இம்மரபு உலக அளவில் அறியப்படவில்லை என்பதை உணர்ந்த பேராசிரியர், அதற்காக அவர் மேற்கொண்ட செயல் பாடுகள் தமிழியல் ஆய்வை உலக வரைபடத்தில் நிலைபேறு கொள்ளச் செய்தவை ஆகும். உலகப் பொது மரபிற்குள் அமைந்திருக்கும் தமிழியல், ஏன் உலக அளவிலான தமிழியல் ஆய்வாக உருப்பெறவில்லை?

கீழைத்தேயவியல் ஆய்வோடு அது ஏன் இணையாமல் போயிற்று? ஆகிய பிற உரையாடல் களை முன்னெடுத்தார். இதற்கான விளக்கத்தைப் பேராசிரியர் ஆங்கில மொழி வழியாகப் பின்வரும் வகையில் பதிவு செய்துள்ளார்.

  1. 1954-1966 காலங்களில் வெளிவந்த Tamil Culture இதழ்களில் இவரால் எழுதப்பட்ட கட்டுரைகளும் இவரது முன்னெடுப்பில் வேறுபலரால் எழுதப்பட்ட கட்டுரைகளும் இதனை வெளிப்படுத்துவதைக் காண லாம்.
  2. 1964இல் உருவாக்கிய உலகத்தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) வழியாக உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் கருத்தரங்க மாநாடுகள் (Conference – Seminar) நடத்தியமுறை மற்றும் அதன்மூலம் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைத் தொகுதிகள், அவற்றில் இவரது கட்டுரைகள் வெளிப்படுத்தும் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படை யில் புரிந்து கொள்ளமுடியும்.

இத்தன்மைகளைப் புரிந்து கொள்ள பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அவர்களைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த (Journal of Tamil Studies ) முதல் இதழில் (ஏப்ரல்:1969:1:1) பகுதி இரண்டில் உள்ள பதிவுகள் அடிப் படையான ஆவணங்களாக அமைகின்றன.  IATR  அமைப்பின், அமைப்பு விதிமுறைகள், அகில உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டமுறைகள், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்குவதற்கான அடிப்படை வரைவுகள் ஆகிய பிற அந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ளன.

 அதில் தமிழியல்ஆய்வு என்னும் தலைப்பில் அமைந்துள்ள செய்திகள், உலக வரைபடத்தில் தமிழியல் ஆய்வை நிலைபேறு கொள்ளச் செய்வதற்கான அடிப்படைகளைக் கூறுகின்றன. பதினோரு பக்கம் ஆங்கிலத்தில் அமைந்துள்ள அப்பகுதி, தமிழியல் ஆய்வில் அக்கறை உள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய பகுதி ஆகும். அதன் முதல் பகுதியின் மொழியாக்கம் கீழ்வரு மாறு அமைகிறது.

“உலகத்தில் உள்ள ஆய்வாளர்களிடத்தில் தமிழியல் ஆய்வு, அதற்குரிய கவனத்தை துரதிருஷ்டவசமாக இன்னும் பெற வில்லை. நாற்பது மில்லியன் மக்கள் பேசும் இம்மொழியின் ஈராயிரம் ஆண்டுகாலத்தொடர்ச்சியை, மிகக் குறைந்த அளவி லான பிறநாட்டு அறிஞர்கள் அறிந்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளில் பெரும் மாற்றங்கள் இல்லாமல் இம்மொழி தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வருவதின் முக்கியத்துவம் விரிவாக அறியப்படவில்லை.

மொழியில் சில மாற்றங்களை மட்டுமே உள்வாங்கியுள்ள இன்றைய தமிழ் பேசுபவரும் பழந்தமிழ் இலக்கியங்களை வாசிக்க முடியும். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஷேக்ஸ்பியர் மொழியைப் புரிந்து கொள்வதற்கு, அவர்களுக்கு ஏற்படும் சிரமம் கூட தமிழ்ச் செவ் விலக்கியங்களை வாசிப்பவர்க்கு இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் இலக்கணம், இன்று வாழும் தமிழுக்கும் பெரியமாற்றங்களின்றி ஏற்புடையதாக உள்ளது.

1786இல் வில்லியம் ஜோன்ஸ், கிரேக்கம், இலத்தீன் ஆகிய பிறமொழிகளோடு சமசுகிருதத்திற்கு உள்ள தொடர்பு குறித்துக் கூறினார். அதிலிருந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அறிஞர்கள் இந்தியவியலில் மிகுந்த ஈடுபாடு கொள்ளத் தொடங்கினர். இந்தியவியல் என்றாலே சமசுகிருத ஆய்வு என்று கருதும் மேலைநாட்டு ஆய்வாளர்களை நாம் குறைகூற முடியாது; ஏனெனில் மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களின் இந்தியவியல் என்றாலே சமசுகிருத ஆய்வுக்கான இருக்கையை உருவாக்குவதாகக் கருதுகிறார்கள். தமிழ் மற்றும் திராவிட இயல் குறித்த ஆய்வை மேலைநாட்டினர் தவிர்ப்பதற்கான காரணங்களை பிரஞ்சு நாட்டு இந்தியவியல் அறிஞர் பேரா. ஃபிலியோசா பின்வருமாறு கூறுகிறார்.

  1. 18ஆம் நூற்றாண்டு முதல் ஏற்பட்ட ஐரோப்பிய உறவுகள், கல்கத்தா நகரத்தோடு தொடர்புடையதாகவே அமை கிறது; தமிழ்நாட்டோடு தொடர்புகள் இல்லை.
  1. தமிழ் என்பது இந்தி, வங்காளம், பஞ்சாபி, மராத்தி போலஒரு வட்டார மொழி என்று ஐரோப்பிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.
  1. சமசுகிருத வழிப்பட்ட தங்கள் புலமைத் தளப் புரிதலுக் குத் தமிழும் உதவும் என்று ஐரோப்பிய அறிஞர்களுக்குத் தெரியவில்லை. இரண்டு பண்பாடுகளுடன் தமிழுக் குள்ள உறவை ஐரோப்பிய இந்தியவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளவில்லை”. (JOTS : Tamil studies Vol.No.1.Part:II.1970 P.8-9 : மொழியாக்கம் : வீ.அரசு)

தமிழியல் ஆய்வு, உலகப் பரப்பில் இடம்பெறாமைக்கான காரணங்களை மேற்காணும் பதிவு மூலம் அறிகிறோம். இத்தன்மை 1950களில் உணர்ந்து செயல்பட்டவர்களில் முதன்மையானவராக பேரா.சேவியர் தனிநாயகம் அவர்களைக் கருதமுடிகிறது. 1952-1966 காலங்களில் Tamil Culture நாற்பத்தைந்து இதழ்கள் வெளிவந்தன. அதில் சுமார் 350 கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தமிழியல் ஆய்வுகளை முதன்முதலாக ஆங்கிலமொழி வழி விரிவாகச் செய்த முதல் இதழ் இதுவே யாகும். உலகம் முழுவதும் உள்ள இந்தியவியல் அறிஞர்கள் தமிழியல் குறித்த புரிதலை உள்வாங்க இவ்விதழ் அடிப்படை யாக அமைந்தது. 

பேராசிரியர் பர்ரோ, எமனோ, கமில் சுவலெபில், ஃபிலியோசா  ஆகிய பிறர் தமிழியல் குறித்த ஆய்வில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டபோது இவ்விதழ் அப்பணியை வேறு தளத்திற்கு வளர்த்தெடுத்தது என்று கூறலாம். உலக அளவில், யுனெஸ்கோ நிறுவனம், பண்பாட்டு நடவடிக்கைக்கு உதவத் தொடங்கிய காலங்களில், தமிழியல் குறித்த கவனத்தை அவர்கள் பெறுவதற்கான வாய்ப்பு Tamil Culture இதழ் மூலம் சாத்தியமாயிற்று. இவ்விதழுக்கு அன்றைய தமிழக அரசு ஆதரவளித்த வரலாற்றையும் கவனத்தில்கொள் வது அவசியம். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பொருளுதவி இவ் விதழுக்குக் கிடைத்தது. கீழைத்தேயவியலில் சமசுகிருதம் மட்டும் அறியப்பட்ட சூழலில், தமிழியல் குறித்த புரிதலுக்கு இவ்விதழ் அடிப்படையாக அமைந்த வரலாறு, தமிழியலுக்கு பேரா.சேவியர் தனிநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட வரலாறாகக் கருதலாம்.

Tamil Culture இதழ்வழி உருவான புரிதலே 1964ஆம் ஆண்டில் புதுடெல்லியில் நடைபெற்ற உலகக் கீழைத்தேய வியல் ஆய்வு மாநாட்டில் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) உருவாக அடிப்படையாக அமைந்தது. மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறைத்தலைவராக (1961-1969) பேராசிரியர் பணியாற்றியதன் மூலம் உலக அளவிலான தமிழியல் ஆய்வை வளர்த்தெடுக்க வழிகண்டதாக அமைந்தது. தமிழியல் ஆய்வு மன்றத்தின் முதல் ஆய்வு மாநாட்டை 1966இல் கோலாலம்பூரில் நடத்தியதன் மூலம், அவ்வமைப்பிற்குச் செயல்வடிவம் கொடுக்க இவரால் முடிந்தது. அந்த மாநாட்டில் படிக்கப் பெற்ற கட்டுரைகளின் இருதொகுதிகளைப் பேராசிரியர் பதிப்பித்து கொண்டுவந்துள்ளார்.

தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா, சமூக வரலாறு, இலக்கியக் கோட்பாடுகள், இசை - நடனம் - மற்றும் சிற்பவியல், மொழி - மொழியியல், மொழியாக்கம் ஆகிய தலைப்புகளில் இரு தொகுதிகளிலும் (1968) வெளிவந்துள்ள கட்டுரைகள், உலக வரைபடத்தில் தமிழியல் ஆய்வை எடுத்துச் செல்லும் பாங்கில் அமைந்துள்ளன. இம்மாநாட்டை ஒட்டி பேரா.சேவியர் தனிநாயகம் அவர்கள் பதிப்பித்த இரு நூல்கள் முக்கியமானவை. அவை தமிழியல், உலகப் பரப்பில் பெற் றிருக்கும் இடம் குறித்த கையேடுகளாக அமைகின்றன.

உலகம் முழுவதும் தமிழியல் ஆய்வு குறித்த தரவுகளைக் கொண்டுள்ள Tamil Studies Abroad “ A Symposium (1968) எனும் நூல் ஆசிய ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழியல் ஆய்வு உருப்பெற்ற வரலாற்றைக் காட்டுவதாக அமைகிறது. 1968ஆம் ஆண்டுகளுக்குப்பின் உருவான தமிழியல் ஆய்வு குறித்த கையேடு இன்று நம்மிடையே இல்லை. இவ்வகையான ஆய்வு நிறுவனங்கள் வழி நடைபெற்ற ஆய்வுகள் A reference guide to Tamil studies : books (1966) என்று பதிப்பித்தார். இதன் தொடர்ச்சியும் கூட இன்று நம்மிடம் இல்லை. இவர் செய்துள்ள பணிகள் இன்று தொடரவில்லை என்பதன் மூலம், இவரது பணியின் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது. மலேசியப் பல்கலைக்கழகத்தில் இவரால் உருவாக்கப்பட்ட ஆய்வுகள், உலகத் தமிழியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன.

உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் இனவியல் தொடர்பு, மொழிசார்ந்த தொடர்பு, பண்பாட்டுத் தொடர்பு ஆகிய பலகூறுகளை ஆய்வு செய்வதில் பேராசிரியர் தனிக் கவனம் கொண்டிருந்தார். மூன்று உலகத்தமிழ் மாநாடுகளின் ஆய்வுக் கட்டுரைத் தொகுதிகளில் இடம்பெற்றிருக்கும் இவரது கட்டுரைகள் மேற்குறித்தப் பொருண்மைகளில் அமைந்திருப் பதைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, மூன்றாம் உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டுக் கட்டுரைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கட்டுரையின் பொருண்மை பின்வருமாறு அமைகிறது.

The study of contemporary Tamil Groups : A survey (Paris:1970)  என்னும் கட்டுரை, இன அடையாளத்தோடு உலகில் வாழும் தமிழர்கள், தாய்மொழியைத் தமிழாகக் கொண்ட வர்கள், பண்பாட்டு அடிப்படையில் தமிழர்கள், தாங்கள் வாழும் பூமியைத் தாயகமாகக் கொண்ட தமிழர்கள் ஆகிய அடிப்படைகளைக் கொண்டு, உலகில் வாழும் தமிழர்களை மதிப்பீடு செய்துள்ளார். சுமார் பதினெட்டு நாடுகளில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அவர் நிகழ்த்தியுள்ள ஆய்வு, “உலகில் தமிழர்” என்னும் வரையறையைத் துல்லியமாகத் தருகிறது. சிறுசிறு தீவுகளுக்கும் நாடுகளுக்கும் குடியேறிய 1800-1950 இடைப்பட்ட வரலாற்றை பேராசிரியர் ஆய்வு செய்துள்ளார். இதன்மூலம் தமிழர்தம் அலைவு உழல்வு வாழ்வைப் (Diaspora) புரிந்து கொள்ளமுடிகிறது. இவ்விதம் முதல் மூன்று மாநாட்டுத் தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் உலகில் தமிழர் என்ற புரிதலைப் பெறுவதற்கு அடிப்படையாக அமைகிறது.

பேரா.சேவியர் தனிநாயகம் குறித்துப் பேசும்போது, தவிர்க்க இயலாமல் பேரா.வ.அய்.சுப்பிரமணியம் (1926-2009) குறித்த நினைவுகள் வருவது இயல்பு. அவர் உருவாக்கிய அகில உலக திராவிட மொழியியல் பள்ளி, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழக புல அமைப்புகள், திராவிடப் பல்கலைக்கழகம் ஆகியவை பேரா.சேவியர் தனிநாயகம் அவர்களின் கனவை நினைவாக்க வல்லவை. 1969ஆம் ஆண்டில் மலேசியப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்த பேராசிரியர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநராகத் தொடர்ந்திருக்க வேண்டும். தமிழியல் ஆய்வுக்கு அவ்வகையான “நல்லூழ்” வாய்க்காமல் போய்விட்டது. இதனை வெளிப்படுத்தும் பேரா.வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் குறிப்போடு இக் கட்டுரையை முடிப்பது சரியாக இருக்கும்.

தமிழ் ஆய்வு நிறுவனத் திட்டம் சென்னையில் செயல் படுத்தப்பட்டது. மாறுபட்ட சூழ்நிலை காரணமாகத் தனிநாயக அடிகள் மலேசியாவிலுள்ள பேராசிரியர் பதவியை விட்டு விலகி விட்டார். அவரைப் புதிதாக அமையவிருக்கும் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தால் மிகச் சிறப்பாக நடத்துவார்” என்பது எனது உறுதியான நம்பிக்கை, “ஆய்வில் உனக்கு அடிகளை விட கூடுதல் அனுபவமும் உலகோர் ஒப்புதலும் உண்டு” என்று பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தில் பெரும் பொறுப்பு வகித்த நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு நாள் கூறினார்.

“எங்கள் நட்பு பலவாண்டுகள் நீடித்து வரும் ஒன்று, பல துறை அறிஞர்களைக் கவரும் தெய்வசக்தியும் தமிழின் ஏற்றத்தைப் பல மொழியாளர்களிடம் கூறி ஒப்புதலைப் பெறும் வல்லமையும் அடிகளிடம் உண்டு” என்று கூறி அவர்கள் சொற்களை மீண்டும் கூறக் கேட்க நான் விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டேன். மலேசியா பதவியை விட்டு அடிகள் விலகியபோது, சென்னை ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க அழைக்கப்படுவார் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. ஆனால் நாளாவட்டத்தில் அந்த நம்பிக்கை குறைந்தது. நானும் அந்த நிறுவனப் பணியிலிருந்து மெள்ள மெள்ள அகலத் துவங்கினேன். (வ.ஐ.சுப்பிரமணியம் கட்டுரைகள்:இலக்கணமும் ஆளுமைகளும், 2007:18)

சான்றாதாரங்கள்:

  • மாநாட்டு மலர்கள்
  • 1966 Thaninayagam.S.Xavier & Others (Ed.) Proceedings of the First international Conference - seminar of Tamil Studies, Kulalupur, Malaysia, April 1966, Vol. I & II IATR-1968
  • 1968 Asher.R.E (Ed.) Proceedings of the Second International Conference - Seminar - Madras - India January 1968, Vol. I & II IATR 1971
  • 1968 சுப்பிரமணியம், வ.ஐ. (பதிப்பு) இரண்டாவது உலகத்தமிழ் கருத்தரங்க நிகழ்ச்சிகள், மூன்றாம் தொகுதி, உலகத்தமிழாராய்ச்சி மன்றம், சென்னை 34, 1971,
  • 1970 Thani Nayagam X.S.& Francis Gros (Ed.) Proceedings of the Third  international Conference - seminar of Tamil Studies - Paris 1970, French Institute of Indology
  • 1974 Vithiananthan .S. (Ed.) Proceedings of the Fourth  international Conference - seminar of Tamil Studies, Jaffna - Srilanka. Vol.II January 1974 IATR -1980
  • 1974 வித்தியானந்தன்,சு.(பதி.) நான்காவது அனைத் துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகள், யாழ்ப் பாணம், சனவரி 1974, அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளை, கொழும்பு 7, 1977

இதழ்கள்

  • 1897 Nallasami pillai. J.M (Editor), The Siddhanta Deepika or the light of Truth, Vol.I.No.1, 1907 Asian Education services New Delhi. 1994
  • 1907 Savariroyan.D.Pandit (Editor) The Tamilian Antiquary, Vol.I.No:1, 1907 Asian Educational Service. NewDelhi 2004
  • 1952 Tamil Culture. X.S.Thaninayagam (Editor), A Quarterly Review dedicted to the study and diffusion of Tamiliana, February.1952.Vol.1.No.1
  • 1969 Journal of Tamil Studies : X.S.Thaninayagam. (Chief Editor). Vol.I.No:1, April.1969
  • 2012 அரசு.வீ., (சிறப்பாசிரியர்) மாற்றுவெளி, ஆய்விதழ் 11. காலின் மெக்கன்சி சிறப்பிதழ், டிசம்பர்.2012

நூல்கள்

  • 1919 Collins Mark (Ed.), Dravidic Studies, First Edition, 1919, Reprint 1974, University of Madras
  • 1922 (No Author), Eminent Orientalists, - Indian - European - American First Edition, 1922, Asian Educational Services, 1991
  • 1942 Dandekar .R.N.(Ed.) Progress of Indic Studies, 1917-1942. Bhandarkar Oriental Research Institute, Poona, India, First Edition, 1942, Second 1985
  • 1956 Raghavan.V., Sanskrit and allied indological Studies in Europe, Forward by Dr.A.L.Mudaliar, Vice-Chancellar,University of Madras,1956
  • 2010 சுப்பிரமணியம் வ.அய்., பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியம் கட்டுரைகள்: இலக்கணமும் ஆளுமை களும், தொகுதி - 2,  அடையாளம், முதற்பதிப்பு 2007
  • 2010 வையாபுரிப்பிள்ளை எஸ்., திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, அலைகள் வெளியீட்டகம்
  • 1954 Thaninayagam .X.S. Landscape and poetry - A Study of Nature in Classical Tamil Poetry, I.I.T.S., Chennai, 1997 (Reprint)
  • 1966 Thaninayagam .X.S. (Ed.) A Reference Guide to Tamil Studies: Books, Kulalumpur, University of Malaya Press, 1966
  • 1968 Thaninayagam .X.S. (Ed.) Tamil Studies Abroad: A Symposium IATR- Malaysia - 1968
  • 2010 Thaninayagam .X.S. Educational Thought in Ancient Tamil Literature (Thesis Submitted for the degree of Doctor of Philosophy (Arts) in the University of London (1957), Bharathidasan university, Trichirappalli, 620 024, First Edition.2010
  • 1950 தனிநாயகம் அடிகள்: ஒன்றே உலகம், தமிழ்ப் பேராயம், திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, 2012
  • 1999 தனிநாயகம் அடிகளாரின் சொற்பொழிவுகள், உ.த.ஆ.நி. முதல் பதிப்பு: 1999, சென்னை
  • 1967 திருவள்ளுவர், சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1967
  • 1952 தமிழ்த்தூது கட்டுரைக்கொத்து, உலகத்தமி ழாராய்ச்சி நிறுவனம், ஐந்தாம் பதிப்பு, 1998, சென்னை
  • 2009 தனிநாயகம் சேவியர் அடிகள், ந.மனோகரன் (மொழியாக்கம்), பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் கல்வி, மாற்று, டிசம்பர் 2009, முதற்பதிப்பு, சென்னை

(குறிப்பு: தமிழியல் ஆய்வு: தமிழ்ப்பண்பாடு இதழ் முதல் செம்மொழி மாநாடு வரை: வரலாறு - படிப்பினை - விளைவுகள் (1952-2010) மற்றும் ஆவணங்கள் என்னும் பொருண்மையில் எழுதப்பட உள்ள நூலின் முன்னோட்ட வரைவுக் கட்டுரை)

Pin It