police shanasகுரால் கிராமத்து பெருமாள் கோயிலில் ஜாதிவெறி பூட்டை உடைத்துத் தள்ளி இருக்கிறார் மாவட்ட பெண் போலீஸ் அதிகாரி ஷானாஸ். முகநூலில் அவருக்கு குவியும் பாராட்டு மழை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. அரசுப் பதவி வழங்கும் அதிகாரத்தை எப்படி எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இவர் சான்றாக நிற்கிறார்.

50 ஆண்டுகளாக தலித் மக்களை கோயிலுக்குள்ளே அனுமதிக்காத கிராமங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பது அவமானம்; வெட்கக்கேடு! இந்தக் கிராமங்களில் இதற்கு நியாயம் கேட்க மனிதர்களே இல்லாமல் போய் விட்டார்களா? சமூக அவமானத்தை கண்டும் காணாமல் கடந்து போகும் மனநிலை எப்படி நீடிக்கிறது?

 தமிழகத்தின் பல கிராமங்கள் இப்படி ஜாதி வெறியிலும் ஜாதிச் சங்கப் பிடியிலும் தான் சிக்கித் தவிக்கின்றன. "நீங்க நாசமா போயிடுவீங்க"என்று ஜாதி வெறிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பெண்களும் உரிமைக்கு போராடும் பெண்களும் ஒரே தோற்றத்தில் தான் இருக்கிறார்கள்; சொல்லப் போனால் ஒரே வாழ்நிலை தான்!

ஆனால் எந்த விலை கொடுத்தும் வாங்காது இலவசமாக கிடைக்கும் இந்த ஜாதி இப்படி ஒரு கொடூர வெறியை மண்டைக்குள் திணித்து வைத்திருக்கிறது. கிராமத்து ஜாதி வெறி ஆண்கள் இந்த சட்ட விரோத செயல்பாடுகளுக்கு பெண்களைக் களத்துக்கு அனுப்புகிறார்கள்; ஆனால் பெரும்பாலான ஜாதிக் குடும்பங்களில் ஆண்களின் வன்முறையையும், ஒடுக்கு முறையையும் சந்திப்பவர்களும் இவர்கள்தான்; தன்னிலை உணராமல் ஜாதிவெறி தடுக்கிறது. இதே பெண் சமூகத்தில் பிறந்து அய்.பி.எஸ் படித்த ஒரு பெண் அதிகாரிதான் இங்கே 50 ஆண்டுகால அவமானத்திற்கு தீர்வு கண்டிருக்கிறார்.16 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்திருக்கிறார்.

"கோயில் அறநிலையத்துறையின் கீழ் வந்துவிட்டது என்பது உங்களுக்கு தெரியாதா? வழிபாட்டில் யாரும் எவருக்கும் தடை போட முடியாது" என்று ஓங்கி ஒலித்த அந்த கம்பீரமான குரல் ஆனந்தக் கூத்தாட வைத்து விட்டது. இப்படியும் காவல் துறையில் சில அதிகாரிகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கிறார். சல்யூட் மேடம்!

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.