உத்தரகாண்ட் மாநிலத்தில் நடப்பு பருவத்தில் சார்தாம் யாத்திரை மேற்கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை 37 இலட்சத்தைக் கடந்துள்ளதாம். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் சார்தாம் யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. கேதார்நாத் கோயில் ஏப்ரல் 22-ஆம் தேதியும், பத்ரிநாத் கோயில் ஏப்ரல் 23-ஆம் தேதியும் திறக்கப்பட்டன. கேதார்நாத் கோயிலுக்கு 12.61 இலட்சம் பக்தர்களும், பத்ரிநாத் கோயிலுக்கு 11.67 இலட்சம் பக்தர்களும் வருகை தந்துள்ளனர்.
கங்கோத்ரிக்கு 6.17 இலட்சம் பேரும், யமுனோத்ரிக்கு 5.83 இலட்சம் பேரும், ஹேம்குண்ட் சாஹிப்பிற்கு 1.05 இலட்சம் பக்தர்களும் சென்றுள்ளனர். கவுமுக் பனியாற்றுக்கு 5,795 பக்தர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பருவம் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 3.54 இலட்சம் வாகனங்கள் யாத்திரை பாதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநில அவசர கால செயல்பாட்டு மய்யத்தின் தரவுகளின்படி, கடந்த 17.6.2026 வரை மொத்தம் 37.35 இலட்சம் பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனராம்.
இதற்கிடையே, யாத்திரையின் போது உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது. இதில் 195 பேர் உடல்நலக் குறைவு மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாகவும், 3 பேர் இயற்கை காரணங்களாலும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கேதார்நாத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். பத்ரிநாத்தில் 59 பேரும், யமுனோத்ரியில் 26 பேரும், கங்கோத்ரியில் 18 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடவுளை நம்பியவர்கள் கைவிடப்பட்டனர்.
‘தாய்மாமன்’ திட்டம் தேவையற்றது!
"தாய் மாமன்" தங்க மோதிரம் திட்டத்துக்காக ஆண்டு ஒன்றுக்கு தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.755.83 கோடி. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்படும் இவ்வளவு பெரிய தொகையை அரசு மருத்துவக் கட்டமைப்புகளுக்காக செலவிடப்பட வேண்டும் என்பதே நமது உறுதியான கருத்து!
ஏற்கனவே "டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி" திட்டத்தின் கீழ் நலிவுற்ற பெண்களுக்கு 14,000 ரூபாய் ரொக்கமாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ரூ.4,000 மதிப்பில் சத்துணவுகளும் வழங்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 667 குழந்தைகள் பிறப்பதாக கணக்கிடப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 17,000 ரூபாய். கடும் நிதிச்சுமையை உருவாக்கும் இத்திட்டம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தையும் கேள்விக்குறியாக்குகிறது.
அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அவர்களுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்கப்படும் என்று இத்திட்டம் கூறுகிறது. தமிழ்நாடு பின்பற்றி வரும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் நோக்கத்தையே இத்திட்டம் சிதறடிக்கிறது. அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் உள் கட்டமைப்பு வசதிகள் மிகமோசமாக உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இங்கே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் குழந்தை நலபணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படுவது ரூ.4500 மட்டுமே!
அரசு மருத்துவமனைகளில் தரமான மருந்துகளை வாங்குவதற்காக 1990 இல் உருவாக்கப்பட்டது தான் அரசு மருத்துவ சேவை வாரியம்; மருந்துகளுக்கு பதிலாக தங்கம் வாங்கும் வேலை இந்த வாரியத்திடம் இப்போது ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் வீட்டில் பிரசவம் பார்த்த நிலை இப்போது மாறிவிட்டது. 99 விழுக்காடு குழந்தைப் பிறப்புகள் மருத்துவமனைகளுக்கு வந்துவிட்டன பிறகு எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் வந்திருக்கிறது? தமிழக முதலமைச்சருக்கு "தாய் மாமன்" பெருமை சேர்ப்பதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
- விடுதலை இராசேந்திரன்