'ஆர்.எஸ்.எஸ் விழுமியங்களை தனக்கே உரிய பாணியில் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அதன் மிகச் சிறந்த பிரதிநிதியாகவும் திகழ்கிறார்' என, அந்த அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே புகழாரம் சூட்டியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச்செயலராக உள்ள தத்தாத்ரேய ஹொசபலே, அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக நல்லிணக்கம், காலனித்துவ ஆதிக்க மனப்பான்மையில் இருந்து விடுதலை, குடும்ப விழுமியங்களை வலுப்படுத்தல், சமூக நல்லொழுக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி திட்டங்கள் ஆகிய ஐந்து அம்சங்களை, அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்காக ஆர்.எஸ்.எஸ்., நிர்ணயித்துள்ளது. இந்த இலக்குகளை நோக்கி பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதே வார்த்தைகளை பிரதமர் பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், தனக்கே உரிய தனித்துவ பாணியில் ஆர்.எஸ்.எஸ், கருத்துக்களை அவர் செயல்படுத்தி வருகிறார். உதாரணமாக, ஒவ்வொருவரும் மரம் நட வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். பிரதமரோ, 'தாயின் பெயரில் ஒரு மரம் நடுங்கள்' என கூறி, இதனை நெகிழ்ச்சியான இயக்கமாக மாற்றுகிறார். சிறந்த பிரதிநிதி மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்டம், 2022ல் நடந்த சுதந்திர தின விழா உரையின் போதும், பிரதமர் குறிப்பிட்ட ஐந்து உறுதிமொழிகள் ஆர்.எஸ்.எஸ்., கொள்கையின் பிரதிபலிப்புகள் தான்.

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக , இருந்தாலும் தன் கலாசார வேர்களை அவர் மறக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நோக்கங்களையும் நன்கு உணர்ந்து இருக்கிறார். அந்த அமைப்பின் மிகச் சிறந்த பிரதிநிதியாக செயல்படுகிறார். கடந்த, 1980ல் பா.ஜ., உருவான காலத்தில் இருந்தே, ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் அதற்கு இருக்கும் தொப்புள் கொடி உறவு மாறாமல் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

திமுகவை அழிக்க விஜய் கட்சி யாகம்!

தமிழக வெற்றி கழகம் சார்பில், திருச்செந்துார் முருகன் கோவிலில் தவெக சார்பாக `சத்ரு சம்ஹார’ யாகம் நடத்தப்பட்டது. இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: விஜய் இந்து மதச் சடங்குகள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். தான் தொடங்கும் எல்லா விஷயங்களையும் ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று, அவர் குறித்து கொடுக்கும் நேரத்தில் தான் செய்வார். கட்சி தொடங்கியதில் இருந்து, ஜோதிடரின் அனுமதி இல்லாமல் விஜய் எதையுமே செய்தது இல்லை. அதனால்தான், கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில், இவ்வளவு பெரிய இடத்துக்கு விஜய் வளர்ந்து உள்ளார்.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறவும், அரசியல் எதிரிகளை வீழ்த்தவும் சில சடங்குகளை செய்ய வேண்டும் என ஜோதிடர் ஆலோசனை கூறியதை அடுத்து, விஜய் அதற்காக திட்டமிட்டார். அதன்படி, திருச்செந்துார் முருகன் கோவிலில், இன்று சத்ரு சம்ஹார யாகம் நடத்த உள்ளார். விஜய் சார்பாக, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் இந்த யாகத்தை செய்ய உள்ளார். விஜய்க்கு நெருக்கமான சிலரும் இந்த யாகத்தில் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. எதிரிகளை அழிப்பதற்கு நடத்தப்படும் `சத்ரு சம்ஹார” யாகம். இப்போது திமுகவை அழிக்க விஜய் வேதமந்திரங்களோடு யாகம் நடத்துகிறார்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.