திமுக ஆட்சியைத் தொடர்ந்து மீண்டும் சட்ட சபையில் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று த.வெ.க தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. இதில் தமிழ் முதன்மை மொழியாக நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்று நாங்கள் தான் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் பெருமையுடன் குறிப்பிட்டார்.அனைத்துக் கட்சியினரும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தார்கள்.
தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வு இது என்பதில் இரண்டு வித கருத்துக்கு இடமில்லை. அதே நாளில் மற்றொரு செய்தியும் வந்திருக்கிறது; மதுரையில் செப்டம்பர் 17-ல் நிகழ இருக்கும் மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் குறைந்தது 50 சதவீதம் நிகழ்வுகள் தமிழ் வழியில் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தமிழ் உணர்வாளர் கரூர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதுகுறித்து ஆராய ஐந்து ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட குழு இன்னும் தனது பரிந்துரையை வழங்காத காரணத்தினால் இப்போது இதற்கு உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக கூறிவிட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஒரு காலத்தில் தமிழ் சைவ மரபு வழியில் நிறுவப்பட்ட கோயில் என்றும் நாயனார், நாச்சியார், அங்கையற்கண்ணி என்று இங்குள்ள தெய்வங்கள் அழைக்கப்பட்டதற்கு கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன என்ற வரலாற்று தகவல்களும் வழக்கு மனுவில் இடம் பெற்றிருக்கின்றன.
தமிழுக்கும் இடம் உண்டு என்பதற்கு அடையாளமாக கடந்த காலங்களில் குடமுழுக்கு நிகழ்வுகளில் சில தமிழ்ப் பதிகங்கள் பாடப்பட்டன; அவ்வளவுதான்; தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட இதே முறை பின்பற்றப்படும் என்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல; அது உடலும் உயிரும் என்று சட்டமன்ற தீர்மானத்தில் கூறிய தமிழ்நாடு அரசு; கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளை எப்படி வடிவமைத்து இருக்கிறது?
தமிழையும் தமிழர்களையும் அவமதித்து இருக்கிறது. கோயில் அறங்காவலர்கள் பெயரை முழுமையாக புறக்கணித்துவிட்டு அழைப்பிதழ்களை தயாரித்திருக்கிறார்கள். இதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து குடமுழுக்கு நிகழ்ச்சியை அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறது. இது செயல் தலைவர் செய்த தவறு; அறநிலையத்துறை பொறுப்பு அல்ல என்று சமாதானம் கூறுகிறார்கள்.
அறங்காவலர் குழுத் தலைவராக திமுக ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டவர். ருக்மணி பழனிவேல் ராஜன் என்ற பெண்; முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தாயார். வேத தர்மத்திற்கு எதிராக ஒரு பெண்ணை அதுவும் கணவரை இழந்த ஒரு பெண்ணை அறங்காவலர் குழுத் தலைவராக நியமித்து புரட்சி செய்தது கடந்த கால திமுக ஆட்சி. வழக்கு தொடுத்த மற்றொரு அறங்காவலர் ஒரு பெண்; அறங்காவலர் குழுவில் மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பெயரை ஏன் கல்வெட்டில் அழைப்பிதழில் இருட்டடிக்க வேண்டும்? பெண்களின் நியமனம் பார்ப்பனிய வேத மரபுக்கு எதிரானது என்பதாலா? அது மட்டுமல்ல; தமிழ் சைவ மரபு வழி வந்த இந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பவர் காஞ்சிபுரம் பார்ப்பன சங்கராச்சாரி விஜயேந்திரன். மதுரை சைவ மடாதிபதி புறக்கணிக்கப்பட்டுள்ளார். பார்ப்பன சங்கராச்சாரி ஏற்கமாட்டார் என்பதால் இந்த மூன்று பெண்களின் பெயர்களும் இருட்டடிக்கப்பட்டதா?
இந்த விஜயேந்திரன் யார்? தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க மறுத்தவர்; சங்கர் ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்; "பிராமணர்கள்" தனியாக குடியிருப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்; பிறரோடு கலந்து வாழக்கூடாது என்று பெங்களூரில் பிராமண மகாசபையில் பகிரங்கமாக பேசியவர் (2025 ஜன.19); பிராமணர் அல்லாதவருடன் சேர்ந்து உணவு அருந்தக்கூடாது என்றும் அதில் அவர் நஞ்சு கக்கினார். இதை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகம் நாடு முழுதும் பரப்புரை இயக்கங்களையே நடத்தியது.அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் பார்ப்பனர் ஏன் சங்கராச்சாரியிடம் ஓடுகிறார்? சைவ மத ஆதீனங்கள் இவர் கண்களில் படவில்லையா? சட்டமன்றத்தில் தமிழ்பெருமைக்கு புகழ்பாடும் அமைச்சர்கள் இதை கண்டு கொள்ள மாட்டார்களா?
அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழியின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறோம். ஆனால் வழிபாடு என்று வந்துவிட்டால் சமஸ்கிருதத்துக்கு பார்ப்பனியத்துக்கு தலை வணங்குகிறோம். இந்து மதம் தமிழர் மதமா? பார்ப்பன மதமா?
- விடுதலை இராசேந்திரன்