திருக்குறளைப் பற்றி குறிப்பிடும் போது “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள்’’ என்று சொல்லப்படுகிறது. அதுபோல் சுமார் ஐயாயிரம் ஆண்டு இந்திய வரலாற்றை 143 பக்கங்களில் தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள்.

மலையாள மொழியிலிருந்து பல கட்டுரைகள் மற்றும் நூல்களை தோழர் பி.ஆர். பரமேஸ்வரன் அவர்கள் நல்ல எளிமையான தமிழில் எழுதி தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பல ஆண்டுகளாக வழங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் தோழர் பி.ஆர். பரமேஸ்வரன் அவர்கள் இந்த நூலையும் மொழிபெயர்த்து நமது பாராட்டுதலைப் பெறுகிறார்.

“பாரதிய நாகரிகம்‘‘ என்று அறியப்படுகின்ற “இந்து நாகரிகம்’’ ஆரியர்களல்லாத சமூகத்தினருடன் நடைபெற்ற ஏராளமான மோதல்களுடையவும், ஆரியர்களல்லாதவர்களுடைய தோல்விகளுடையவும், அவர்களுடன் இரண்டற இணைவதற்கு ஆரியர்கள் தாங்களாகவே செய்த உணர்வுபூர்வமான முயற்சிகளுடையவும் ஆன படைப்புதான் அது என்று ஒரு அறிவியல் ரீதியான யதார்த்தமான கருத்தை தோழர் இ.எம்.எஸ் தனது நூலில் கூறியிருப்பது சாதி மத இன உணர்வோடு வரலாற்றை பார்க்கும் எவருக்கும் ஒரு சாட்டையடியாகும். ஆனால் அதே நேரத்தில், இந்திய நாகரிகம் என்பது இந்திய மண்ணில் தோன்றியதும், பிற நாடுகளிலிருந்து வந்து காலூன்றியதுமான பிற மதங்கள், கலாசாரங்களின் கலப்புதான் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார் தோழர் இ.எம்.எஸ் அவர்கள்.

இச்சிறு நூலில் ஒரு சிந்தனையைத் தூண்டும் ஒரு கருத்தையும் முன் வைக்கிறார் தோழர் இ.எம்.எஸ். அவர்கள். வேதங்கள், உபநிடதங்கள், புராண இதிகாசங்களில் பெரும்பாலும் ஜைன, புத்த போதகர்களின் நூல்கள் அர்த்த சாஸ்திரம் முதலியவைகள் எல்லாம் எழுதப்பட்ட காலத்தில் அவைகளுக்கு சரிநிகராகக் கருதக்கூடிய ஒரு நூலும் தென்னிந்தியாவில் எழுதப் பட்டதாகத் தெரியவில்லை. அவைகளுக்கெல்லாம் பிறகு நீண்டகாலம் கடந்த பின்தான் சங்க நூல்கள் இயற்றப்பட்டன. அப்படியானால் வட இந்தியாவின் சமூக நாகரிக வாழ்க்கையின் முன்னேற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தென்னிந்தியா பின்னடைந்துதான் இருந்தது’’.

தமிழில் “தொல்காப்பியம்’’ என்கிற இலக்கண நூல் சங்க நூல்களுக்கெல்லாம் முதன்மையானது. “இலக்கியம் கண்டபிறகே இலக்கணம்’’. தொல்காப்பியத்திற்கு முன்னால், நிச்சயமாக மொழியும் மக்களும் வளர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் தொல்காப்பியம் என்கிற நூல் சாத்தியமாகும். இந்நிலையில் போதிய சான்றுகள் கிடைக்காததால், தென்னிந்திய சமூக நாகரிகத்தின் தொன்மையை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. அதன் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றால் தென்னிந்திய நாகரிகத்தின் தொன்மை நிச்சயமாக வட இந்தியாவை பிந்தியதாக இருக்காது.

தோழர் இ.எம்.எஸ். அவர்கள் புராண இதிகாசங்கள் தோன்றியதன் மூல காரணத்தை அழகாக கீழ்கண்டவாறு ஒரு சில வரிகளில் கூறும் விதம் பாராட்டுதலுக்குரியது. “..அன்னியர்கள் உட்பட பல ஆட்சியாளர்களும் அயல் நாடுகளைக் கைப்பற்றுவதும் பிடிக்கப் பட்ட பகுதிகளை மீண்டும் இழப்பதும், இழந்ததை மீண்டும் கைப்பற்றுவதற்காக மற்றவர்களுடன் கூட்டு சேருவது முதலிய பலவும் நடைபெற்றுள்ளது. இவைகளைப் பற்றியக் கதைகளை அதிசயங்களுடன் பெரிதுபடுத்தி இலக்கிய நடையிலும் இனியக் கவிதை வடிவிலும் எழுதக் கூடியக் கவிகள் இவர்களனைவருக்கும் இருந்தனர் இவ்வாறுதான் புராண இதிகாசங்களும் தோன்றின.’’

மேலும் தோழர் இ.எம்.எஸ். அவர்கள் இந்திய வரலாற்றில் “குப்தர் காலம் பொற்காலம்’’ என்கிற பார்வையை அங்கீகரிப்பவராக இருப்பது கொஞ்சம் நெருடலாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட சாதியினர் மற்றும் பல கொடுமைகள் நிறைந்த ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு சமுதாயத்தை, கலை இலக்கியத்தில் இயல்புக்கு மாறான ஒரு வளர்ச்சியை அடைந்திருந்த ஒரு காரணத்துக்காக குப்தர் காலத்தை பொற்காலமாக நிச்சயமாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவரது வார்த்தைகளில் கூறுவதென்றால் “அடிமை அமைப்பில் ஏற்பட்டது போன்ற சமூக முன்னேற்றம், ஜாதி அமைப்பிலும் ஏற்பட்டதுதான் உண்மை.’’

நானூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுடன் ஆங்கிலத்தில் இந்திய தேசிய இயக்கதைப் பற்றி எழுதிய தோழர் இ.எம்.எஸ். அவர்கள் மூன்று அத்தியாயங்களில் அவ்வியக்கத்தை சுருக்கமாக இந்நூலில் எழுதியுள்ளார். 1857_ஆம் ஆண்டின் இந்திய புரட்சிக்கு முன் தென்னிந்தியாவில் 1799 முதல் 1806 வரை நடந்தேறிய ஆங்கில அரசுக்கு எதிராக வெடித்த தென்னிந்தியபுரட்சியைப் பற்றி ஓரிரு வரிகளிலாவது குறிப்பிடாமல் தவிர்த்தது, நடுநிலையோடும் வர்க்க கண்ணோட்டத்தோடும் தேசிய உணர்வோடும் தோழர் அவர்கள் இதுகாறும் படைத்த படைப்புகளின்றும் வேறுபட்டிருப்பதாகவே இந்நூல் பயில்வோருக்குத் தோன்றும்.

இருப்பினும் இந்நூலின் கடைசி இரண்டு அத்தியாயங்கள் “போர்க்களத்தில் மக்கள்’’ மற்றும் “எந்தப் பாதையில் செல்வது’’ இப்படைப்பினை நன்கு ஊன்றிப் பயில்வேர் மேற்கொண்டு நாம் மக்கள் இயக்கங்கள் மூலமாக வரலாற்றை எங்ஙனம் மாற்றியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

மேலும் கடைசியாக இன்றைய யதார்த்தத்தை ஆணித்தரமாக எடுத்தியம்புகிறார் இந்நூலாசிரியர். வலதுசாரிக் கொள்கையுடைய எதிர்க்கட்சிகள் விரும்புவது போல “புராதன பாரதத்தின் சிறப்புக்களை’’ மீட்கவோ, முதலாளித்துவப் பாதையில் இந்தியாவைப் புனரமைப்பதோ சாத்தியமில்லை; இதற்கான எந்த முயற்சியும், நிலைமையை மேலும் சிக்கலாக்கவே செய்யும்’’

ஒவ்வொரு தமிழ் படிக்கத் தெரிந்த குடிமகனிடம் இருக்கவேண்டிய நூல் இது என்று சொன்னால் மிகையாகாது. இத்தகைய நூல்களை அளித்துக் கொண்டிருக்கும் பாரதி புத்தகாலயத்துக்கு நம் வாழ்த்துக்கள்.

Pin It