இந்த ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹெர்டா முல்லர் என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் யார், எத்தனைப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார், எப்படிப்பட்ட புத்தகங்கள் என்பதெல்லாம் இதுவரை சர்வதேச வாசகர்கள் பலருக்குத் தெரியாது. உலகம் நன்கறிந்த, தேர்ந்த, பல்வேறு ஆண்டுகள் எழுத்தனுபவம் உள்ள சிந்தனையாளர்கள்தான் பெரும்பாலும் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை பரிசளிக்கப்படவிருக்கும் ஹெர்டா முல்லர், ஒரு ஜெர்மன் எழுத்தாளர். இவருடைய நான்கு புத்தகங்கள் மட்டும்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘இல்லாதோரின் வாழ்க்கையை அப்பட்டமாக படம்பிடித்துக்காட்டியுள்ளன இவர் எழுத்துக்கள், எனவே இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது’ என்று கூறியுள்ளது நோபல் குழு.

இவருடைய புத்தகங்கள் யாரைப் பற்றி பேசுகின்றன என்றால், ருமேனியாவில் கம்யூனிச ஆட்சி நடந்தபோது, அங்கிருந்த வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. இவரைப் பொறுத்தவரை, உலகின் மோசமான சர்வாதிகாரி ஸ்டாலின்தான். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக மோசமான சர்வாதிகார ஆட்சி நடத்திவருபவர்கள் வட கொரிய கம்யூனிஸ்டுகள். ஸ்டாலினைக் குறை சொன்ன இவர், ஹிட்லரின் ஜெர்மனியை அதிகமாக நேசித்து, ஜெர்மனிக்கு குடிபெயர்ந்து, ஜெர்மன் மொழியில்தான் எழுதி வருகிறார்.

இவர் ருமேனியாவில் பிறந்த ஜெர்மானியர். மொழிபெயர்ப்பாளராக வாழ்க்கையைத் துவங்கினார் இவர். ருமேனியாவின் இரகசியக் காவல்துறை ஏதோ ஒரு வழக்கிற்காக இவரை விசாரித்த போது இவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். இந்த ஒத்துழையாமையை மாபெரும் வீரச்செயலாக நோபல் குழு தற்போது போற்றியுள்ளது. 1982ஆம் ஆண்டு, இவருடைய முதல் நாவலையே ருமேனிய அரசு தடைசெய்தது. இந்த நாவல் ஜெர்மனிக்கு கடத்தப்பட்டு அங்கு பிரசுரிக்கப்பட்டது. ஜெர்மனியில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவரைச் சிறப்புரையாற்ற அழைத்தன.

தன் கருத்துகளை அச்சமில்லாமல் வெளிப்படையாக எழுதியவர் என நோபல் குழு இவரைப் பாராட்டி, 8 கோடி ரூபாய் பரிசளித்துள்ளது. இவருடைய இலக்கியம்தான் அதிகதரம் வாய்ந்த இலக்கியம் என்று ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கல் பாராட்டியுள்ளார்.

இப்படிப்பட்ட எழுத்தாளருக்கு நோபல் பரிசு வழங்கினால், இவரது புத்தகங்களை உலக வாசகர்கள் படிப்பார்கள். சர்வதேச பொருளாதார மந்தத்தால் கம்யூனிசம் பற்றியும் மார்க்ஸ் பற்றியும் அறிந்துகொள்ளும் ஆர்வம் உலகளவில் அதிகரித்துள்ளது. இத்தகு தருணத்தில் ஹெர்டா முல்லரின் புத்தகங்களைப் படித்தால், கம்யூனிச ஆட்சிக்கு எதிரான சிந்தனைகள் உருவாகும் என்று இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

மிகையில் ஷொலோக்கோவ், பாப்லோ நெருடா, காப்ரியல் கார்சியா மார்க்வஸ் ஆகியோருக்கு கிடைத்த நோபல் பரிசு, ஹெர்டா முல்லருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மனிதகுலத்திற்கு தொண்டு செய்வதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒரு மகத்தான எழுத்தாளருக்கு விருது வழங்கவேண்டும் என்றுதான் அல்பிரட் நோபல் (நோபல் பரிசின் ஸ்தாபகர்) எழுதி வைத்த உயில் சொல்கிறது. இத்தருணத்தில், ஹெர்டா முல்லர் போன்ற ஒரு கம்யூனிச எதிர்ப்பு, பாசிச எழுத்தாளருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ள நடவடிக்கை, சர்வதேச முதலாளித்துவ அரசியலானது நோபல் குழுவை எந்தளவிற்கு பாதிக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

Pin It