தமிழினப் பகை போக்கில் காங்கிரசு ஆட்சிக்கும், பா.ச.க ஆட்சிக்கும் இம்மி அளவும் வேறுபாடில்லை என்பதை இன்னொரு முறை மோடி ஆட்சி மெய்ப்பித்துள்ளது.

கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிரான பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விவாதத்திற்கு வந்த போது இந்திய அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட உறுதி உரை (பிரமாணப்பத்திரம்) “கச்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய கடற்பரப்பு இந்தியாவின் ஆட்சி எல்லையில் இருந்ததே இல்லை. 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல் எல்லை வரையறுப்புச் செய்ய வழி வகுத்தன.

இவ்வொப்பந்தங்கள் இறுதியானவை. இக்கடற்பரப்பில் இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி உரிமை கோரமுடியாது’’ என்று கூறியது. கச்சத்தீவும், அதைத் தொடர்ந்த கடற்பரப்பும் பன்னெடுங்காலமாக தமிழர்களின் தாயகப்பரப்பாக இருந்ததை அப்பட்டமாக மறுக்கும் பொய்யுரையை நரேந்திர மோடி அரசும் முன்வைத்துள்ளது. (இச்சிக்கல் குறித்து விரிவான விவரங்களுக்கு காண்க: தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம், 2013 செப் 16-30 இதழ்)

எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆண்டு தவறாமல் இராமேசுவரம் வந்து மீனவர்களைக் கட்டித் தழுவி ‘கச்சத்தீவை மீட்டுத் தருவோம், மீன்பிடி உரிமையைப் பாதுகாப்போம்’ என பா.ச.க உயர்மட்டத் தலைவர்கள் சுஷ்மா சுவராஜும், வெங்கையா நாயுடுவும் அளித்த உறுதிமொழியெல்லாம் வெறும் நடிப்புத்தான் என்பது உறுதியாகி விட்டது.

கச்சத்தீவு ஒப்பந்தம் என்று பொது வழக்கில் நாம் பேசுகிற 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி - செரிமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தம் பாக் நீரிணை கடல் எல்லை வரையறுப்பு ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரானது என்பதை ஏற்கெனவே விளக்கி இருக்கிறோம்.

தெளிவான சிறப்புக் காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் 1958, கடல் பரப்புக் குறித்த ஐ.நா ஒப்பந்த விதிகள் மீறப்பட்டுள்ளன. இவ்விதிகளில் கூறப்பட்டுள்ள சம தொலைவு கோட்பாடு (Equidis tance Principle) வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளது. கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்து விட வேண்டும். அதன் மூலம் அந் நாட்டை இந்திய அரசியல் செல்வாக்கு மண்டலத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சூதான நோக்கம் தவிர வேறெதுவும் இதில் இல்லை.

இது குறித்தெல்லாம் ஏற்கெனவே விரிவாகப் பார்த்து விட்டோம்.

எப்படி இருப்பினும் 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் மாற்றப் பட முடியாதவை என்றும் இவ் ஒப்பந்தங்கள் மூலம் எட்டப்பட்ட இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லை வரையறுப்பு மாற்ற எண்ணாத இறுதி நிலைப்பாடு என்று கூறுவது சட்டப்படி சரியானது தானா எனப் பார்க்க வேண்டும்.

பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக இரண்டு நாடுகளோ, அதற்கு மேற்பட்ட நாடுகளோ தங்களுக்கு இடையிலான கடல் எல்லைகளை வரையறுத்துக் கொண்டால் அது செல்லத்தக்கதல்ல என்பதே கடல் எல்லைக் குறித்த பன்னாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புரையாகும். ஏனெனில் தரை எல்லையில் இரண்டு நாடுகள் ஒப்பந்தம் மூலம் வரையறுப்பு செய்துக் கொள்வதற்கும், கடல் எல்லையில் வரையறுப்பு ஒப்பந்தம் காண்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு.

பன்னாட்டுக் கடற்பரப்பு என்பது பொருளியல் வகையிலும், பாதுகாப்பு நிலையிலும், கடல் வணிகப்பாதை என்ற வகையிலும் பல நாடுகளைப் பாதிக்கும் ஒன்றாகும். இதில் இரண்டு அண்டை நாடுகள் தங்கள் விருப்பப்படி செய்துக் கொள்ளும் எல்லை வரையறுப்பு ஒப்பந்தம் பன்னாட்டு விளைவுகளை உலக அரங்கில் ஏற்படுத்தக் கூடியது.

எனவே தான் இரு நாடுகளுக்கு இடையில் செய்துக்கொள்ளப்படும் கடல் எல்லை வரையறுப்பு ஒப்பந்தம் எந்த பிறழ்ச்சியும் இல்லாமல் பன்னாட்டு சட்டங்களுக்கு இசையவே அமைய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக வங்காளத் தேசத்திற்கும், மியான்மர் (பர்மா) நாட்டிற்கும் இடையில் செயிண்ட் மார்ட்டின் தீவு குறித்து செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக கடல் சட்டங்கள் குறித்த பன்னாட்டுத் தீர்ப்பாயம் அளித்தத் தீர்ப்பு இச்சிக்கல் குறித்து விளக்குகிறது.

வங்காளத் தேசமும், மியான்மாரும் 1984-இல் தங்களுக்கு இடையில் செய்துக்கொண்ட கடல் எல்லை வரையறுப்பு ஒப்பந்தம் ஐ.நா. கடல் சட்டங்களுக்கு இசைய சம தொலைவுக் கோட்பாட்டின் படி உருவாக்கப்பட்டதா என்ற வினா சர்வதேச அரங்கில் எழுப்பப்பட்டது. இதுக்குறித்து இரு நாட்டு பேராளர்களுக்கிடையில் கையொப்பம் இடப்பட்ட ஒப்பந்த குறிப்புரை (Minutes of Agreement) செல்லத்தக்கதா என்ற சிக்கலும் எழுந்தது.

இது குறித்து பன்னாட்டுத் தீர்பாயம் 2012 மார்ச் 14 அன்று தீர்ப்புரை வழங்கியது. இத்தீர்ப்புரையின் முக்கிய பகுதிகளான பத்தி 164 முதல் பத்தி 169 வரை இவ் ஒப்பந்தத்தில் சம தொலைவுக் கோட்பாடு உரிய சிறப்பு காரணங்கள் முன் வைக்கப்படாமல் மீறப்பட்டுள்ளது. எனவே அது செல்லத்தக்கதல்ல எனக் கூறியது. இதன் அடிப்படையில் செயிண்ட் மார்டின் தீவு பங்களா தேசுக்கே சொந்தமானது என ஆணையிட்டது.

இதேபோல் நிகராகுவா - எதிர் - ஹாண்டுராஸ் வழக்கில் 2007 அக்டோபர் 8-இல் தீர்ப்பளித்த பன்னாட்டு நீதிமன்றம் சமதொலைவுக் கோட்பாட்டின் படி பாபல் தீவு, சபானா தீவு, போர்ட் ராயல் தீவு, தென் தீவு, ஆகிய நான்கு தீவுகளும் ஹாண்டுராஸ் நாட்டுக்கே சொந்த மானது என தீர்ப்புரைத்தது. நிகராகுவா தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்தது.

சமதொலைவுக் கோட்பாடு பின்பற்றப்படாமல் தவறான ஒப்பந்தங்களே செய்யப் பட்டிருந்தாலும் அதனை ஒப்பந்தத்தின் ஒரு தரப்பு ஒரு தலையாக இரத்து செய்ய (Unilateral Termination) முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

அவ்வாறு ஒரு தரப்பாக இந்தியா 1974 மற்றும் 1976 ஒப்பந் தங்களை இரத்து செய்ய முடியும் என்பதே நமது விடை.

ஒப்பந்தங்கள் தொடர்பான சட்டங்கள் குறித்த வியன்னா மாநாடு ஏற்படுத்திய வரையறுப்பு இதற்கு வழிவகுக்கிறது. ஐநா சார்பில் பன்னாட்டு ஒப்பந்தங்களை கட்டுப்படுத்தும் சட்டவிதிகள் குறித்து நடைபெற்ற மாநாடு அது. வியன்னா மாநாடு 1969 மார்ச் 23 அன்று இயற்றிய தீர்மானம் இதற்கான சட்ட விதிகளை வரையறுத்தது.

இரு நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் ஒரு தரப்பு நாட்டின் உள்நாட்டு சட்டங்களுக்கு எதிராக அமையுமானால் அந்த ஒப்பந்தம் செல்லத்தக்க தல்ல என வியன்னா சட்டத்தின் விதி 46(1) வலியுறுத்துகிறது.

பெருபாரி யூனியன் தொடர் பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் ஆயம் இச்சிக்கல் தொடர்பான இந்தியா- பாகிஸ்தான் ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்கியது. இந்திய எல்லையில் வரையறுப்போ மறு வரையறுப்போ செய்ய வேண்டுமானால் அதனை அரசமைப்பு சட்டக் கூறு 1-இல் திருத்தம் செய்வதின் மூலமே நிலைநாட்ட முடியும் என அத் தீர்ப்புக் கூறியது.

கச்சத்தீவு ஒப்பந்தம் இத்தீர்ப்பின் படி சட்ட ஏற்பு பெறவில்லை. அரசமைப்புச் சட்ட கூறு 1-இல் இது தொடர்பான திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை. கச்சத்தீவும் அதை ஒட்டிய கடற்பரப்பும் இந்தியாவின் எல்லைக்குற்பட்ட பகுதியாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என இந்திய அரசு கூறுவது அப்பட்டமான பொய்யுரை என்பதை அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்து ஏற்கெனவே எடுத்துக் காட்டியிருக்கிறோம். எனவே வியன்னா சட்ட விதி 46(1)-ன் படி கச்சத்தீவு ஒப்பந்தம் சட்டப்படி செல்லாத ஒப்பந்தம் ; (Invalid Treaty) ஆகும்.

மேலும் செல்லதக்க ஒப்பந்தமே ஆனாலும் மாறியுள்ள சூழ்நிலையில் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக விரும்பும் ஒரு தரப்பு அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றினால் அவ் ஒப்பந்தத்தை திரும்பப் பெறலாம். வியன்னாச் சட்டம் இதற்கு வழி வழங்குகிறது.

வியன்னா சட்ட விதி 62(2) ஒப்பந்தத்திலிருந்து ஒரு தரப்பு ஒரு தலையாக பின்வாங்குவதற்கு உரிமை வழங்குகிறது. அவ்வாறு ஒப்பந்தத்தை இரத்து செய்ய விரும்பும் ஒரு தரப்பானது மறு தரப்பிற்கு குறைந்தது 3 மாதம் அவகாசம் அளித்து முன்னறிவிப்பு அளிக்க வேண்டும் என வியன்னா சட்ட விதி 65(2) கூறுகிறது.

இதன் படி இலங்கைக்கு 3 மாத முன்னறிவிப்பு கொடுப்பதன் மூலம் கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கு இந்திய அரசு சட்ட நடைமுறைகளை தொடங்கி விடலாம். எனவே இந்திய- இலங்கை கடல் எல்லை தொடர்பான 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் மாற்றமுடியா தவை என இந்திய அரசு கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.

ஆயினும் ஆட்சி மாறினாலும் இந்திய அரசு தொடர்ந்து இவ்வாறு கூறுவது அதுவும் வரலாற்று ஆவணங்களையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், உச்சநீதி மன்றத் தீர்ப்பையும், பன்னாட்டுச் சட்டங்களையும் காலில் போட்டு மிதித்துக்கொண்டு கூறுவது தமிழினப்பகை காரணமாகவே ஆகும்.

Pin It