ஒடுக்கப்பட்ட வகுப்பார் மீதான வன்முறைகள்

கடந்த சூன் 22 அன்று, கரூர் மாவட்டம் கே.பிச்சம் பட்டி பகுதியில், 17 அகவை தாழ்த்தப்பட்ட சமூகத்து இளம்பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குற்றவாளிகள் இன்னமும் (27.06.2014) கைது செய்யப்படவில்லை.

இவ் வன்முறை நடைபெற்றுள்ள கரூர் மாவட்டத்தில், கடந்த ஒன்றரை ஆண்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்கள் மீதும், பிறர் மீதும் தொடர்ந்து இதுபோன்ற பல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த் தப்பட்டிருக்கின்றன.

ஒருவாரத்திற்கு முன்னர், 20.06.2014 அன்று கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியிலுள்ள கோட்டைமேடு ஆதிதிராவிடர் நல அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவி, பள்ளி முடிந்து திரும்பும் போது, சாதி ஆதிக்கவெறி இளைஞன் ஒருவனால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானார். இந்நிகழ்வுக்குக் காரணமானவரை கைது செய்யக் கோரி, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கடந்த மே மாதம், தோகைமலை பகுதி பெரிய புத்தூர் அருகில், ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். சின்னதாள வாடி பகுதியில், எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியவரை பொது மக்களே பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே மாவட்டத் தில், காவல்காரன்பட்டியில் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய 3 பேரை காவல்துறை விடுதலை செய்தது. பாதிக்கப் பட்ட மாணவி, தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2013ஆம் ஆண்டு, நெய்தலூர் பகுதியில் 4 அகவைக் குழந்தை பாலியல் துன்புறுத்த லுக்கு உள்ளாக்கப்பட்டது (காண்க: தமிழ் இந்து, 25.06.2014).

கரூர் நிகழ்வுக்கு முதற் குற்றவா ளிகளாக சாதி ஆதிக்க வெறியர்கள் விளங்கினாலும், இரண்டாம் குற்ற வாளியாக காவல்துறையே விளங்கு கிறது. சாதி ஒடுக்குமுறை குறித்த புகார்கள் வரும்போது, ‘சுயசாதி’ப் பற்றோடு காவல்துறையினர் அப் புகார்களை கையாளுகிறார்கள் என்பதும், குற்றவாளிகள் குற்றம் இழைத் திருப்பது மெய்ப்பிக்கப் பட்டும் கூட முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்ய மறுக்கிறார் கள் என்பதும் நடைமுறை உண்மைகள்!

சாலை மறியல் போராட்டம் முதற்கொண்டு, உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் வரை நடத்தி தான், சில காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய முடியும் என்ற இழிநிலையும் காணப்படுகின்றது. இந்நிலை நீடிக்கும் வரை, அது சாதி ஆதிக்க வெறியர்களுக்கு ஊக்கமாகவே அமையும். இதைக் களையக் காவல் துறையில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். மேலும், காவல்துறை அரசியல்கட்சித் தலையீடுகள் இன்றி செயல்பட வேண்டும்.

ஆனால், இவற்றை முறைப் படுத்தி செயல்படுத்த வேண்டிய அரசாங்கம் என்ன செய்து கொண் டிருக்கிறது?

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்பதிவு செய்யப்படும் வழக்குகளில் மேற்கொள்ளப்படும் நட வடிக்கைகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் நிவாரணம் மற்றும் மறு வாழ்வு போன்றவற்றை ஆய்வு செய்தல் உள்ளிட்டவற்றை செயல் படுத்துகின்ற உயர்நிலைக் குழுவை 1996-ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்தது. ஒவ்வொரு மாநிலத் திலும் இக்குழு அமைக்கப்பட வேண்டும் என வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் கூறுவதினால் ஏற்பட்ட கட்டாயத்தின் காரணமாகவே இக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழு, ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் கட்டாயம் கூட்டப் பட வேண்டும் என்பது விதி. ஆனால், இதுவரை 2010-ம் ஆண்டில் ஒரு முறையும், 2012-ம் ஆண்டில் ஒரு முறையும் என மொத்தம் 2 முறை தான் இக்குழுக் கூடியிருக்கிறது. அந்தக் கூட்டங்களில்கூட குழுவின் தலைவரான தமிழக முதல்வர் பங்கேற்கவில்லை.

எனவே, இக்குழுவை ஆண் டுக்கு இருமுறை கூட்ட வேண்டு மெனக் கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பொது நலவழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (காண்க: தமிழ் இந்து, 19.04.2014) இதுதான், தமிழக அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தும் இலட்சணம்!

உலகமயப் பொருளியல் திணித்த நுகர்விய வெறிப் பண்பாடு, மக்களை பொருள் வாங்கும் கூட்டமாக மாற்றியதோடு மட்டு மின்றி, மக்கள் மனதில் காமவெறி நச்சு விதைகளையும் விதைத்து வருகிறது. ஊடகங்கள் அதற்கு துணை நிற்கின்றன. இதன் வெளிப் பாடாகவே, பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகள் இந்தியாவெங்கும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஆணாதிக்கத் திமிரோடு சமூகத்தின் பின் தங்கியப் பிரிவின ரான பெண்கள் மீது நடக்கும் இவ் வன்கொடுமைகள், அதிலும் மிகவும் பின்தங்கியுள்ள தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் நிகழ்த்தப்படுவது, வலியவர் எளிய வரைச் சூறையாடும் உலக மயப் பண்பியலில் இருந்து வருபவை. வலிய முதலாளி சிறிய முதலாளியைச் சுரண்டுவதைப் போல், ‘பெரும்பான்மை’ சாதியைச் சேர்ந்த சாதி ஆதிக்க வெறியர்கள், ‘சிறு பான்மை’யாக உள்ள ஒடுக்கப் பட்ட சாதியினரையும், அவர்களுள் மிகவும் ஒடுக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளையும் எளிய இலக்குகளாகக் கருதுகின்றனர்.

உலகமயம் வளர்த்தெடுக்கும் ஆணாதிக்க வெறிப் பண்பாடும், ஆரியப் பார்ப்பனிய சாதி வெறியும் ஒருங்கே செயல்படும் ஒரு கரு இரட்டையர்கள் ஆவர். இதை இது போன்ற பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் தொடர்ந்து நமக்கு நினைவுறுத்துகின்றன.
தமிழகத்தில் சாதி ஆதிக்க வெறி ஒழியவேண்டுமெனில், தமிழின ஓர்மை ஏற்பட்டாக வேண்டும். ஆணாதிக்க வெறி ஒழியவேண்டு மெனில், பெண்களை சமமாகக் கருதும் தமிழ்த் தேசியப் பண்பாடு வளர வேண்டும். நுகர்வியப் பண் பாட்டில் மாற்றம் வர வேண்டும். இன உணர்வுப் போராட்டங்களும் எழுச்சியுமே இதைச் செய்ய முடியும். சாதி ரீதியான அணிதிரட்டல் களுக்கும் அதுவே பதிலடியாகவும் அமையும்!

Pin It