கடந்த அக்டோபர் 13 அன்று, சென்னை வேளச்சேரியில் அதிவேகமாக வந்த மகிழுந்து ஒன்று, நடைபாதையின் மீது ஏறியதில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த 3 பேர் பலியாயினர். அதில் கணவனும் மனைவியுமாக இருவர் பலியானதால், அவர்களுடையக் குழந்தை அநாதையானது. மகிழுந்தை ஓட்டியவர், மது போதையில் இருந்ததே விபத்துக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது.

இதற்கு முன்பு, கடந்த சூலை மாதம் 30ஆம் நாள், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, மது குடித்து விட்டு மகிழுந்து ஓட்டி வந்தவர் மோதியதில், பள்ளி முடிந்து வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 7 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த நிகழ்வால், ஆத்திரமடைந்த பொது மக்கள், மகிழுந்துக்குத் தீ வைத்தனர். ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேற்கண்ட நிகழ்வுகள் போல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மது குடித்துவிட்டு இரு சக்கரம் மற்றும் மகிழுந்து ஊர்திகளை ஓட்டி வருவ தால் ஏற்படுகின்ற சாலை விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. உயிரிழப்பும் உடல் உறுப்புகள் இழப்பும் இதில், அடிக்கடி நடக்கிறது.

இந்தியாவிலேயே அதிகமாக, கடந்த 2013ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் இதுபோல, 14,504 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த விபத்துகளுக் கான காரணங்களை ஆராய்ந்த போது, அதில் 70 விழுக்காட்டு விபத்துகள் மது அருந்திவிட்டு ஊர்தி ஒட்டியவர்களால் நிகழ்ந்துள்ளது எனக் கண்டறியப் பட்டது. இந்தியா முழுவதிலும் எடுத்துக் கொண்டால், சற்றொப்ப 4,40,042 விபத்துகள் நடைபெற்று, அதில் 1,39,091 பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர். அதாவது, ஒரு ஆண்டுக்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வர்களை நாம், சாலை விபத்துகளின் வழியே இழந்து வருகிறோம்!

மது குடித்துவிட்டு ஊர்தி ஓட்டி வந்த ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் காவல்துறையினர், இதுபோன்ற விபத்துகளை முற்றிலு மாகத் தடுக்க முடிவ தில்லை. காரணம், கட்டற்ற அளவில், மதுவை அரசே விற்பனை செய் கின்ற அவலம் தமிழகத்தில் நிகழ்ந்து கொண் டுள்ளது.

அதிகளவில் சாலை விபத்துகள் நடைபெறுவதைக் காரணமாகக் காட்டி, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சில நெடுஞ் சாலைகளில் அவை மூடப்பட்டு விட்டன. எனினும், நெடுஞ்சா லையை ஒட்டியுள்ள எந்த ஊரில், எந்த முதன்மைச் சாலையில் மது விற்பனை நடக்கி றது என்ற ‘பொது அறிவு’ ஓட்டுநர் களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. மது விற் பனையை முழுமையாகத் தடை செய்தால்தான், சாலை விபத்து களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

பள்ளிக் கூடங்கள் கட்டுவதி லும், மருத்துவம் உள்ளிட்ட சுகாதார வசதிகளை செய்து தருவதி லும் இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டிய தமிழக அரசு, ஒவ்வொரு விழாக் காலங்களிலும் மறக்காமல் டாஸ்மாக் மது விற்பனைக்கு மட்டும் இலக்கு நிர்ணயிக்கிறது. இந்த அவலத்தைத் தடுத்து நிறுத்தி னாலே, மதுவால் ஏற்படும் விபத்து களை தடுத்து நிறுத்த முடியும். ஆனால், அரசோ கைப் புண்ணை கண்ணாடி வைத்துத் தேடுவது போல் பாசாங்கு செய்கி றது.

தமிழகத்திலேயே அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கும் மாநகரம், சென்னை. சென்னையி லேயே அதிகளவில் விபத்துகள் நடக்குமிடம் கிழக்குக் கடற்கரைச் சாலை. வேலை நாட்களை விட, காரி (சனி) - ஞாயிறுகளில் தான், இங்கு அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன என, போக்குவரத்துத் துறை சொல்கிறது. காரணம், அந்தச் சாலையில் தான், குடித்து விட்டுக் கும்மாளமிடுவதற்காக அதிகள விலான பண்ணை வீடு களும், மதுபான அரங்குகளும் இருக்கின் றன. சாலை விபத்துகளுக்கு இதுவே முதன்மைக் காரணம்.

ஆனால், தமிழக அரசு என்ன செய்துள்ளது தெரியுமா?

கடந்த சூன் மாதம், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெறும் விபத்துகளை கண் காணித்து, அதைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளைப் பரிந்துரை செய்யு மாறு ஒரு ஆஸ்திரேலிய தனியார் நிறுவனத்தை அமர்த்தியிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் நடக்கும், இந்த ஆய்வுக்கு சற்றொப்ப 272 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப் பட்டுள்ளது என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிறுவனம், இந்த சாலையில் விபத்துகள் நடப்பதைத் தவிர்க்க வழங்கும் பரிந்துரைகளை, மற்ற மாநகரங்களுக்கும் விரிவு படுத்துவார்களாம். மக்கள் பணத் தைச் சூறையாடி தனியாருக்கு வழங்க, புதிய புதிய வழிகளில் சிந்திக் கின்றனர், ஆட்சியாளர்கள். ஆஸ்தி ரேலிய நிறுவனம் எவ்வளவு வெட் டியதோ?

மது அருந்தி ஏற்படும் விபத்து கள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டி ருக்க, இன்னொரு புறத்தில் படித்த இளைஞர்களின் நுகர்விய மோக மும் மனித உயிர்களை ‘வாகன விபத்து’களின் பெயரால் குடித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு, புதிய புதிய நவீன வசதிக ளைக் கொண்டதும், அதிவேகமாக செல்லக் கூடியதுமான இரு சக்கர வாகனங்களையும், மகிழுந்துகளை யும் பன்னாட்டு - வடநாட்டு நிறுவ னங்கள் தொடர்ந்து அறிமுகப் படுத்தி வருகின்றன.

இதற்கு வசதியாக, சொந்தப் பயன்பாட்டுக்காக வாகனம் வாங்கு கின்ற நிலைமாறி, சொகுசுப் பயன் பாட்டுக்காக வாகனம் வாங்கிக் குவிக்கின்ற நுகர்விய வெறி, ஊட கங்களால் திணிக்கப்படுகிறது.

மேலும், தனி நபர் வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்தி, பொதுப் போக்குவரத்தை அனை வரும் பயன்படுத்தும் வகையில் ஈர்க்கச் செய்ய வேண்டிய அரசும், அதை வழிநடத்தும் அரசியல் வாதி களும், அதை செய்வதில்லை. காரணம், ஒவ்வொரு அரசியல்வாதி யும், தனக்கென சொந்தமாக தனி யார் பேருந்துகளை நடத்தி வந்தால், அரசுப் பேருந்துகளை கவனிக்க நேரம் இருக்குமா?

எனவே,அதிகளவிலான இளைஞர்கள் தனிநபர் வாகனப் போக்குவரத்தில் ஈடுபட தம் சக்திக்கேற்ப இரு சக்கர வாகனம் - மகிழுந்து என, புதிய வாகனங்களை வாங்கிக் குவித்து வருகின்றனர். கடந்த 2007ஆம் ஆண்டு, 82 இலட்சமாக இருந்த இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை, கடந்த 2012ஆம் ஆண்டு, 1.6 கோடி யாக அதிகரித்தது.

வேகத்துடனும் துருதுருப் புட னும் செயல்பட விரும்பும் இளைய தலைமுறையி னரின் இயல்பான மனப்பாங்கு, இந்த நவீன இரக வாகனங்களால் மேலும் வளர்க்கப் பட்டு, அது சாகசங்களாக வெளிப் படுகிறது. அந்த சாகசங்கள், விபத்து களில் முடிவடைவதுதான், வேத னையான உண்மையாக உள்ளது.

இதுபோன்ற நவீன இரக இருசக்கர - மகிழுந்து வாகனங்கள் பெரும்பாலானவை, வெளி நாடுக ளில் அந்தந்த நாடுகளில் போடப் பட்டுள்ள சாலைகளை அடிப்படை யாகக் கொண்டு தயாரிக்கப்படு பவை. சிறிய மற்றும் குறுகியத் தெருக்களும், அதிகளவில் மக்கள் நடமாட்டமும் கொண்ட தமிழகத் தெருக்களில் அவை ஓடும் போது, இங்குள்ள தரமற்றச் சாலைகளுடன் அவை பொருந்திவராமலும், வேகக் கட்டுப்பாடு மீறப்பட்டும், விபத்து கள் நடக்கின்றன.

இன்னொரு புறத்தில், தொலைப்பேசிகள் விடைபெற்றுச் சென்று, இன்றைக்குக் கைப்பேசிகள் கோலோச்சிக் கொண்டுள்ளன. இக் கைப்பேசிகளிலும் நவீனமாக, இயங்குதள வசதியான ‘ஆன்ட் ராய்டு’ வசதி கொண்ட கைப்பேசி களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டன. இன்றைக்கு பரவலாக பயன்பட்டுக் கொண்டிருக்கிற ஆன்ட்ராய்டு கைப்பேசிகளில் பெரும்பாலானவை, அதிவேகத்தில் நவீன இரக இரு சக்கர வாகனங் களை ஓட்டுவது குறித்த பல மென் பொருள் விளையாட்டு களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன.

சிறப்பான ஒளி - ஒலி காட்சிக ளோடு, கையடக்கக் கைப்பேசிகளில் கிடைக்கும் இந்த விளையாட்டில் மோகம் கொள்ளும் இளைஞர்கள், நிஜத்தில் இதுபோன்ற முயற்சிகளை செய்ய முற்படுகின்றனர். பலருடன் இணைந்து கொண்டு, மிகுவேகத் தில் இரு சக்கர வாகனங்களை இயக்கிப் போட்டியிடும் மனப் பாங்கு, இதன் வழியே வளர்ந்தது.

இதன் காரணமாகவே, சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் உள்ள இளைஞர்கள், தங்கள் இரு சக்கர வாகனங்களைக் கொண்டு நடுச்சாலையில், அதே போன்ற போட்டி(ரேஸ்)யை நிகழ்த் துகின்றனர். சென்னை மாநகரத்தில் கணிசமான அளவில், இதுபோன்ற போட்டிகள் நடந்து, ஒவ்வொரு முறையும் அதில் விபத்துகள் நிகழ்ந்து பல பேர் பலியாகியுள் ளனர். ஆனால், கைப் பேசி நிறுவ னங்களும், தனியார் வாகன உற்பத்தி நிறுவனங்களும்கோடிகளில் கொழுக்கின்றனர்.

எனவே, விபத்துகளை தடுக்க வேண்டிய தமிழக அரசு, முதலில் உடனடியாக மதுக்கடைகளை இழுத்து முட வேண்டும். அடுத்து, அரசுப் போக்குவரத்தையும், பொதுப் போக்குவரத்தையும் ஊக்கு விக்கும் வகையிலான, சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை உருவாக்கிச் செயல்படுத்த வேண் டும். இதைச் செய்தால், தமிழக சாலை விபத்துகளை ஓரளவாவது குறைக்க முடியும். ”செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?”

Pin It