1937ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சி முதன் முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு பல்வேறு மாகாணங்களில் வெற்றி பெற்றது. அதில் சென்னை மாகாணமும் ஒன்று. அப்போதைய சென்னை மாகாண முதல்வர் இராசாசி வேறு எந்த மாகாண முதல்வரும் செய்யத் துணியாத காரியமொன்றைச் செய்தார். தொடக்கப் பள்ளிகளில் இனிமேல் இந்தி கட்டாயப் பாடமாக புகுத்தப்படும் என்று அறிவித்தார். அப்போது, இந்தித்திணிப்பிற்கு எதிராக முதன்முறை யாகத் தமிழறிஞர்கள் ஒன்று கூடிப் போர்க்குரல் எழுப்பினர்.

அக்காலத்தில் முப்பத்தைந்து ஆண்டு காலமாகக் காங்கிரசுக் கட்சிக்குத் தம்மை ஒப்படைத்து இந்திய விடுதலைக்குப் போராடி வந்த தமிழறிஞர் ஒருவர் அக்கட்சியிலிருந்து வெளியேறி, தமிழறிஞர்களோடு இணைந்து போராடினார். அவர் வேறு யாருமல்லர்; நாவலர் என்றழைக்கப்படும் சோமசுந்தர பாரதியார் ஆவார். அவரின் வாழ்க்கை வரலாற்றை இனி காண் போம்.

எட்டையபுரத்து அரசரின் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்ந்தவர் சுப்பிரமணிய நாயக்கர். இவர் சென்னையிலிருந்து எட்டையபுரத்திற்குக் குடிபெயர்ந்து வந்ததால் “எட்டப்பப் பிள்ளை” என்று அழைக்கப்பட்டார். எட்டப்பப்பிள்ளை - முத்தம்மாள் இணையருக்கு மகனாக 27.07.1879 இல் பிறந்தவர்தாம் சோமசுந்தரம்.

எட்டையபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த சின்னச்சாமி ஐயரின் மகன் சுப்பிரமணியனும், அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரமும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள். தமிழ் மீதான ஆர்வமே இருவரையும் ஒன்று சேர்த்தது. இருவரும் இணைப் பறவையாய் பரந்த அரண்மனையில் பாடிப் பறந்து வலம் வந்தனர்.

எட்டையபுரம் அரண்மனைக்கு வருகை தரும் தமிழ்ப் புலவர்களின் பாடல் கேட்டு பா புனையும் ஆற்றலை இருவரும் பெற்றிருந்தனர். ஒரு முறை யாழ்ப்பாணத்திலிருந்து புலவர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவர் இருவரிடமும் சென்று ஈற்றடி கூறி, பாடலொன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். இருவரும் எழுதுகோல் பிடித்து உடனடியாக அந்த ஈற்றடிக்கு பாடல் தந்தனர். அதனைப் படித்துப் பார்த்த யாழ்ப்பாணப் புலவர் மெய்சிலிர்த்து “இதுவன்றோ, அருமைப்பாடல்.” எனக்கூறி இருவ ருக்கும் “பாரதி” பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.

அன்று முதல் சோமசுந்தரம் “சோமசுந்தர பாரதி” என்றும், சுப்பிர மணியன் “சுப்பிரமணிய பாரதி” என்றும் அழைக்கப்பட்டனர்.

1905ஆம் ஆண்டு சென்னையில் சட்டத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சோமசுந்தர பாரதியார் தூத்துக்குடிக்குச் சென்று வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். அப்போது வ.உ.சி.-யோடு நெருக்கம் கொண்டு பழகியதன் மூலம் இந்திய விடுதலை யின் மீது தீராப் பற்றுக் கொண்டார்.

வ.உ.சி. தோற்றுவித்த கப்பல் நிறுவனத் திற்குப் பொறுப்பேற்று செயல்படவும் பாரதியார் துணிந் தார். அதன் காரணமாகவே, வ.உ.சி. “இரண்டு சரக்குக் கப்பலோடு சேர்த்து மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் என்னிடமுண்டே” என்று விளையாட்டாக மற்றவரிடம் பேசு வதுண்டு - அதாவது “எஸ்.எஸ். பாரதி” என்பதை “தமிழ்க் கப்பல்” என்று வ.உ.சி. விளித்துக் கூறுவது வழக்கம்.

வ.உ.சி.யின் கப்பல் நிறுவ னத்தை விட்டு நீங்கினால் பெரும் பதவி கிடைக்குமென்று ஆசை வார்த்தைகளை ஆங்கிலேயர் கூறி வந்தனர். அவற்றுக்கு சோம சுந்தர பாரதியார் மயங்கிட மறுத்தார். மாறாக, ஆங்கிலேயர் வ.உ.சி., சுப்பிர மணிய சிவா ஆகியோர் மீது தொடுத்த இராசதுரோக வழக்கு களை எதிர் கொண்டு வாதாடி னார்.

காந்தியடிகள் சென்னைக்கு வந்த போது அவரை சோமசுந்தர பாரதியார் தூத்துக்குடிக்கு அழைத் துச் சென்று பொதுக் கூட்டங்களில் உரையாற்றும்படி செய்தார். காங் கிரசுப் பேரியக்கத்தில் தான் மட்டு மல்லாது, தம் புதல்வன் இலட்சு மிரதன் பாரதி, புதல்வி இலக்குமி பாரதி, மருமகன் கிருஷ்ணசாமி பாரதி ஆகியோரை ஈடுபடுத்தி சேவையாற்றும் படி கேட்டுக் கொண்டார்.

1933ஆம் ஆண்டு அண்ணா மலை அரசரின் வேண்டு கோளுக் கிணங்க, வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தின் தமிழ்த்து றைப் பேராசிரியராக பாரதியார் பொறுப் பேற்றார். அங்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தமிழ்ப் பணியாற்றி வந்த காலத்தில்தான் 1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு ‘தீ’ கொழுந்து விட்டெரிந்தது.

10.08.1937இல் இராமகிருஷ்ண மடம் மாணவர் இல்ல விழாவில் உரையாற்றிய முதல்வர் இராசாசி “இந்தியில் பாட நூல்கள் விரைவில் எழுதப்படும்” என்று அறிவிப் பொன்றை வெளியிட்டார்.

27.08.1937இல் கரந்தை தமிழ்ச் சங்கம் சார்பில் த.வே. உமா மகேசு வரனாரும், 29.08.1937இல் திருநெல் வேலித் தமிழ்ப் பாதுகாப்பு சங்கத் தின் சார்பில் மா.வே. நெல்லையப் பப் பிள்ளையும் இராசாசியின் இந்தித் திணிப்பைக் கண்டித்து முதல் குரல் எழுப்பினர்.

அதன் பிறகு இந்தித் திணிப் பிற்கு எதிரான குரலை சென்னை யில் தொடங்கி வைத்த பெருமை சோமசுந்தர பாரதியாரையே சாரும். 05.09.1937இல் சென்னை சௌந் தரிய மண்டபத்தில் பாரதியார் தலைமையில் நடைபெற்ற கூட்டத் திற்கு திருவாளர்கள் இரா.பி. சேதுப்பிள்ளை, சுவாமி சகஜானந் தம், ‘ஜஸ்டிஸ்’ இதழாசிரியர் டி.ஏ.வி. நாதன், உமா மகேசுவரனார், சி.என். அண்ணாதுரை, பண்டிதை நாராய ணியம்மாள் உள்ளிட்ட எண்ணற்ற தமிழ்ப் பெருமக்கள் வந்திருந்தனர்.

அக்கூட்டத்தின் தலைவராகிய பாரதியார் பின்வருமாறு உரை நிகழ்த்தினார். “இந்தி மொழி, இலக் கண இலக்கியச் சிறப்பில்லாத வெறு மொழி, அம்மொழி பயிலுவ தால் தமிழ் மொழியும், தமிழர் நாகரிகமும் கெட்டுவிடும். தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதைத் தமிழ் மக்கள் முழு வன்மையோடு கண் டித்து ஒழிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் உடனே தீவிரமாய்ச் செய்திடல் வேண்டும். அதுவே தமிழர் வீரமுடையவர் என்பதைக் காட்டும். அவ் வெதிர்ப் பினால் ஏதாவது கேடு வருமா னால் அதனை பெறத் தாம் முன்னணியில் இருப்பேன்.” என்று இரத்தம் துடிதுடிக்கப் பேசினார்.

இந்தக் கூட்டத்தின் அடுத்த படிநிலையாக 04.10.1937இல் சென்னை கோகலே மண்டபத்தில் மாபெருங் கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். தமிழ்க் கடல் மறைமலையடிகள் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் பாரதியா ரின் உரை கோடை இடியாய் அமைந்தது. காங்கிரசுத் தலைவர் களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்பதால் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதா? என்றும், முதல் மந்திரியாருக்கு தமிழ் மக்களுக்கு வாக்குறுதியளிக்க யாதொரு உரிமை யும் இல்லையென்றும் கடுஞ்சினங் கொண்டு பேசினார். இதில் பரலி சு. நெல்லையப்பப் பிள்ளை, வச்சிர வேல் முதலியார், கே.எம். பால சுப்பிரமணியம், சி.என். அண்ணா துரை, முத்தையா முதலியார் ஆகிய வர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தி னர். இக்கூட்டத்தில் சட்ட சபையி லும், நீதிமன்றங்களிலும், கல்லூரி களிலும், அரசியல் அலுவல் கூடங்களிலும், தாய்மொழியாகிய தமிழ் மொழியிலேயே எல்லாக் காரி யங்களும் நடைபெறுதல் வேண்டு மென்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

சென்னையில் நடைபெற்ற தொடர் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக மாவட்டந்தோறும் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் முளைவிடத் தொடங் கின. பல்வேறு ஊர்களுக்குப் பாரதி யாரும் பயணம் மேற் கொண்டு வீர உரையாற்றி மக்களை எழுச்சி கொள்ளும்படி செய்தார்.

26.12.1937இல் பாரதியார் தலைமையில் திருச்சியில் நடை பெற்ற சென்னை மாகாண மூன்றா வது தமிழர் மாநாடு இந்தி எதிர்ப் புப் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. 2500க்கும் மேற் பட்ட தமிழர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி முதன்முறையாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தான் பெரியாரும் முதல் முறையா கப் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை மாநாடுகள் கூட்டி யும், தீர்மானங்கள் நிறைவேற்றியும் கட்டாய இந்திப் பாட ஆணை யைத் திரும்பப் பெற முடியாது எனும் ஆணவத்தில் இராசாசி உறுதியாய் இருந்தார். மேலும், கட்டாய இந்திப் பாட ஆணை 21.04.1938இல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பும் செய்தார்.

இந்நிலையிலே, திருச்சியில் 28.05.1938இல் கூடிய மந்திராலோ சனைக் கூட்டத்தில் பாரதியார் “சத்தியாக்கிரகம் - அதில் வெற்றி கிடைக்காவிடில் சட்ட மறுப்புத் தொடங்க வேண்டியதைத் தவிர வேறில்லையென்று” போர் முரசம் கொட்டி முழங்கினார். உடனடியாக இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக் கப்பட்டது. அதன் தலைவராகப் பாரதியார் அவர்களும் செயலாள ராக கி.ஆ.பெ.விசுவநாதம் அவர் களும், உறுப்பினர்களாக ஈ.வெ.ரா., உமா மகேசுவரனார், ஊ.பு.சௌந் தர பாண்டியன், கே.எம். பால சுப்பிரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பாரதியார் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, நாள் தோறும் மறியல், நாள் தோறும் சிறை என்ற நிலைக்குப் போராட்டம் வளர்ந்தது. தொடர் போராட்டங்கள் இராசாசி அரசை கலங்கடிக்கச் செய்தது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத் தில் பெரியார் ஈ.வெ.ரா. தலைமை யும் இருந்ததால் ஏராளமான தொண்டர்கள் போராடிச் சிறை சென்றனர். பெரியார் ஈ.வெ.ரா தளைப்படுத்தப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தி எதிர்ப்புப் போரின் முடிவில் இரண்டு கோரிக்கைகள் தமிழர்களிடத்தில் வலுப்பெற்று நின்றன 1) மொழி வழித் தமிழ் மாகாணம், 2) தமிழ்நாடு தமிழ ருக்கே. இவ்விரண்டு கோரிக்கை உருவாக்கத்திலும் பாரதியாரின் பங்கு அளப்பரியது. தன் வாழ் நாளின் இறுதிவரை இக்கோரிக்கை களின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.

பாரதியார் தமிழ்மொழி, தமிழின அடையாளத்தை ஒரு போதும் விட்டுத்தர மறுத்தார். பெரியார் உருவாக்கிய ஆரியத்திற்கு எதிர்வகை குறியீட்டுச் சொல் லாகிய திராவிடத்தை நாவலர் பாரதியார் ஒப்புக் கொள்ளவில்லை. ஆரியர் ஜ் தமிழர் என்பதே அவரது கொள்கை நிலைப்பாடாகும்.

1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் நாவலர் பாரதி யார் ‘தமிழர் கழகம்’ எனும் அமைப்பை நிறுவினார். தமிழ் மொழி ஆக்கத்திற்கும், இந்தி எதிர்ப்புக்கும், தமிழர் முன்னேற்றத் திற்கும், வெவ்வேறு பெயர்களில் அமைக்கப் பெற்ற இயக்கத்தினர் களெல்லாம் ‘தமிழர் கழகக்’ கிளை களை அங்கங்கே அமைக்க வேண்டு மென்று பாரதியார் பேரழைப்புக் கொடுத்தார். பிறகு ‘தமிழர் கழகம்’ எனும் இதே பெயரில் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் அமைப்பைக் கட்டிய போதும் அதன் தலைவ ராகப் பாரதியார் பொறுப்பு வகித் தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1942ஆம் ஆண்டு பெரியாரின் திசைமாறிப் போன ‘திராவிட நாடு திராவிடருக்கே’ முழக்கம் காதைப் பிளந்து வந்த நிலையில், சி.பா. ஆதித்தனார் ‘தமிழ் ராச்சிய கட்சி’யை உருவாக்கினார். அப் போது அதனை மனமுவந்து தொடங்கி வைத்தவரும் பாரதியார் என்பது நினைவு கூரத்தக்கது.

நீதிக்கட்சியில் பெரியார், அண்ணா இருந்த போதும், தி.மு.க.வை அண்ணா உருவாக்கிய போதும் ‘திராவிடம்’ குறித்தத் தமது மறுப்புக் கருத்தை பாரதியார் வெளிப்படுத்திய தருணங்கள் பல உண்டு.

14.03.1943இல் சேலத்தில் நடந்த “கம்பராமாயண எரிப்புப் போர்” உரையாடலின் இறுதிப்பகுதியில் பாரதியார் கூறுகிறார் “தமிழன் தன்னைத் தமிழனென்று கூறிக் கொள்ளவும் வெட்கப்பட்டுத் ‘திராவிடன், திராவிடன்’ என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? ‘சுயமரியாதை, சுயமரியாதை’ என்று ஆரிய மொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் ‘தன்மானம்’ என்று தமிழாகப் பேசுகிறார்கள்” என்று இடித் துரைத்தார்.

1950ஆம் ஆண்டு மே மாதம் 27, 28 நாட்களில் கோவையில் தி.மு.க. சார்பில் முத்தமிழ் வளர்ச்சி மாநாடு நடைபெற்றது. அதில் மாநாட்டுத் திறப்பாளராக கலந்து கொண்ட பாரதியார் அவர்கள் மீண்டுமொரு முறை திராவிடத்தின் மீது குட்டு வைத்துப் பேசினார். அது வருமாறு “இந்நாளில் பலர் திராவிடர், திராவிடர் என்றே சொல்லி வருகிறார்கள். தமிழ், தமிழர் என்று சொல்ல உங்கள் வாய் ஏன் கூசுகிறது? தமிழ், தமிழர் என்று சொல்ல வெட்கப்படுகி றவன் தமிழனாயிருக்க முடியுமா? அவன் இரத்தத்திலே எப்படி தமிழ் இரத்தம் ஓடும்? இனியாவது தமிழ், தமிழர் என்று சொல்லுங்கள். தமிழருக்குத் தமிழரே பகைவர்” என்றார்.

பாரதியாருக்கும் ஒரு படி மேலே சென்று, அம்மாநாட்டிலே தூய தமிழ்க் காவலர் கு.மு.அண் ணல் தங்கோ “திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது” என்று சொன்னாரே பார்க்கலாம். அண்ணாவோ பதை பதைத்துப் போனார். முத்தமிழ் மாநாடு திராவிடத்திற்கு விளக்கம் சொல்லும் மாநாடாக மாறிப் போனது.

1953ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ தமிழக எல்லைத் தற்காப்பு மாநாட்டை நடத்தினார். கருணா நிதி, பாரதிதாசன், கி.ஆ.பெ. விசுவநாதம், கா.அப்பாதுரையார், டார்பிடோ சனார்த்தனம், திருக் குறள் முனுசாமி ஆகியோர் பங்கு கொண்ட மாநாட்டில் அதன் தலை வராகிய பாரதியார் “நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்துவிட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை! திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று!” என்று பேசிய போது கூட்டத்தில் சலசலப்பு ஏற் பட்டது. அதற்குக் காரணம் கூட்டத்திலே பங்கு பெற்றவர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம் தவிர, மற்ற ஏனையோர் திராவிடச் சார்பா ளர்கள் என்பதே உண்மையாகும்.

திராவிட இயக்கத்தவரின் ஆரிய எதிர்ப்பில் உடன்பாடு கொண்ட வராக இருந்த போதிலும், அந்த ஆரிய எதிர்ப்பையும் கூட, தாம் சுய மரியாதை இயக்கத்தால் கற்றுக் கொள்ளவில்லை என்பதை தெளிவு படுத்தி கூறவும் பாரதியார் துணிந் தார். அது வருமாறு “ஆரியருக்கு அடிமைப்படாத எண்ணம் எனக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே ஏற் பட்டது. சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இருந்தது. என்னுடைய 14 வயதில் திருமணம் நடைபெற்றது. என்னுடைய சிவ நெறி வேறு; இன்று சைவப் பண்டி தர் கூறும் சைவமல்ல. உண்மையே எனக்குச் சிவம். எனக்குத் திருமணம் பார்ப்பனரை வைத்து செய்வதாகக் கூறினார்கள். சைவ ஆகமங்களின் படி பார்ப்பனர்கள் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

“கோயில்களிலே அவர்கள் துவஜஸ்தம்பத்துக்கு (கொடி மரத் துக்கு) அப்புறம் நுழையக் கூடாது. வந்தால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப்பட்ட சண்டாளர்களைக் கொண்டு நான் கல்யாணம் செய்து கொள்ள மாட் டேன் என்றேன்.. பிறகு சைவ குருக்கள் வைத்து திருமணம் நடந்தது. எனது சிறிய வயதிலேயே எனக்கு அந்த நோக்கம் இருந்தது. சுயமரியாதை இயக்கத்தாலோ, அண்ணாதுரையாலோ அந்த நோக்கம் எனக்கு வரவில்லை. அது முதற்கொண்டு இதுவரை நான் தமிழருக்குத் தன்மானம் வர வேண்டுமென்று உழைத்து வந்திருக் கின்றேன்.”

பாரதியார் தமிழ் நூல்களிலே உள்ள ஆரியத்திற்கு வலுசேர்க்கும் கருத்துகளை புறந்தள்ள வேண்டு மென்று வற்புறுத்துவார். அதே வேளையில் அவற்றில் நல்ல கருத்து கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை போற்றிடவும் தயங்கக் கூடாது என்பார்.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர். அறிவாகிய கடவுளுக்கு 6 முகம் உள்ளது, 12 கையுள்ளது என்று கூறுவது எப்படிப் பொய்யோ அப்படித்தான் நச்சினார்க்கினியர் உரையும். நச்சினார்க்கினியன் உமிழ்ந்த எச்சில் என்றால் அதை நக்கவா வேண்டும்? என்று சாடி னார் பாரதியார். (நச்சினார்க் கினியர் பார்ப்பனர், தொல் காப்பியத்திற்கு ஆரிய மரபு சார்ந்த சில விளக்கங்கள் தந்தவர் - கதிர் நிலவன்) அதே பாரதியார்தாம் அண்ணா கம்பரா மாயணத்தை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அதை வன்மையாகக் கண்டித்தார். ஒரு சிறந்த காவியத்தை எரிப்பது நல்லதல்ல. அது தமிழ் நெறியன்று. ஆபாசக் கருத்துகளை எரிக்கச் செய்யப்படும் முயற்சிக்கு வேண்டுமானால் நான் துணை நிற்பேன். அருந்தமிழ் நூலை எரிப்பதால் ஆபாசக் கருத்தை எப்படி அழிக்க முடியும்? கம்பனைப் போல் சிறந்த கவியை கண்டதில்லை என்று கம்பனைப் போற்றிடவும் செய்தார். இன்று கம்பன் கவி நயத்தை - தமிழ் அமுதை கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்க அறிஞர்கள் பலரும் போற்றுவதைப் பார்க்கிறோம்.

தசரதன் குறையும் கைகேயி நிறையும், அழகு, சேரர் தாய முறை, சேரர் பேரூர், தமிழும் தமிழரும், திருவள்ளுவர், தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை ஆகியவை நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல்களில் மிக முக்கிய மானவையாகும்.

27.07.1959 அன்று பாரதியாரின் 80ஆவது அகவை நிறைவு விழா மதுரையில் தமிழ்ச்செம்மல் கி. பழனியப்பனார் (பழ. நெடுமாறன் அவர்கள் தந்தையார்) முயற்சியில் வெகு சிறப்பாக நடத்தப்பட்ட நிகழ்வே அவரின் நாவலர் பாரதியாரின் நிகழ் வாகும் 14.12.1959இல் அவர் தமது தமிழ் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

அவர் காட்டிய வழியில் ஆரியத்தை வீழ்த்திட, திராவிடத்தைப் புறந்தள்ளிட, தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்திட உறுதி ஏற்போம்! நாவலர் பாரதியாரை மக்களிடம் கொண்டு செல்வோம்.

நூல் உதவி

1) தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் - குன்றக்குடி பெருமாள்

2) நெஞ்சில் நிலைத்தவர்கள் - கரிகாலன்

3) ‘செந்தமிழ்ச் செல்வி’ திங்கள் வெளியீடு (1937 - 1938)

4) தமிழன் தொடுத்த போர் - மா. இளஞ்செழியன்

5) மறுமலர்ச்சி - மறுமலர்ச்சி நூல் நிலையம்

6) நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி, கட்டுரைகள் சொற்பொழிவு

7) தூய தமிழ்க் காவலர் கு.மு. அண்ணல் தங்கோ - செ. அருள் செல்வன்

Pin It